தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை
(கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் ஆண்டிதழான இளந்தென்றலின் 2016ஆம் ஆண்டுக்கான மலரில் வெளியான கட்டுரையின் சுருக்கம்)
தலைப்பைப் படித்த பின்னும், கட்டுரையின் நீளத்தைப் பார்த்து சலித்து, கொட்டாவி விட்டு, வேறு வேலை பார்க்கக் கிளம்பி விடாமல், இந்த முதல் வரியைப் படிக்கிறீர்களென்றால்… நன்றி. நம்புகிறேன், வழக்கமான “மெல்லத் தமிழ் இனி!” என்ற அமங்கலச் சொற்றொடருக்கு முடிவுகட்டும் தலைமுறை இதோ, கைகோர்க்கிறதென்று…
கட்டுரைக்குள் நுழைய முன்பு, அருள்கூர்ந்து இந்த இரு பந்திகளையும் படிக்க வேண்டும்! :)
கட்டுரைக்குள் நுழைய முன்பு, அருள்கூர்ந்து இந்த இரு பந்திகளையும் படிக்க வேண்டும்! :)
பந்தி 01:
“தமிழ்நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டுமாயின் எல்லா வ்யவஹாரங்களும் தமிழ்ப் பாஷையில் நடத்த வேண்டும். பாண்டிதர்கள் ஐரோப்பாவில் வழங்கும் லௌகிக சாஸ்த்ரங்களைத் தமிழில் எழுத வேண்டும் என்று ஆவலோடிருக்கிறார்கள். முன்னதாகவே சாஸ்த்ர பரிபாஷையை நிச்சயப்படுத்தி வைத்தால் பிறகு மொழிபெயர்ப்புக்கு அதிக ஸங்கடமிராது. 'தமிழில் சாஸ்த்ர பரிபாஷை மாஸப் பத்ரிக்கை” என்ற சேலத்துப் பத்திரிக்கையின் முதலாவது ஸஞ்சிகை இங்கிலீஷில் வெளிப்பட்டிருக்கிறது. இக்காரியத்தை இங்கிலீஷ் பாஷையிலே தொடங்கும்படி நேரிட்டதற்கு ஸ்ரீ ராஜகோபாலாச்சார்யர் சொல்லும் முகாந்தரங்கள் எனக்கு முழு ந்யாயமாகத் தோன்றவில்லை.”(1)
பந்தி 02:
சங்ககாலத் தமிழகம் (௷:விக்கிப்பீடியா) |
“ஜார்ஜ் புஷ் என்பதை சியார்ச்சு புசு என்று எழுத வேண்டுமா, எழுத வேண்டாமா என்பதையும், அப்படி வடசொற்களைத் தூக்கி எறிவதால் தமிழ் வளர்ந்திருக்கிறதா என்பதைப் பற்றி நான் என்ன சொல்வது? வரலாறு சொல்கிறது சொல்லும். தமிழ் பரவலாய்ப் பேசப்பட்ட (முற்றிலும் அல்ல) சாதவ கன்னர் நாடும் (தென் மராட்டியம், தெலுங்கானா, வடகன்னடம்), கடம்பர் நாடும் (நடுக் கன்னடம்) இன்று தமிழ் பேசுவதில்லை. ஓரளவு தமிழ் பேசிய வேங்கி நாடு (தெலுங்கானா தவிர்த்த ஆந்திரா) இன்று தமிழ் பேசுவதில்லை. தமிழ் முற்றிலும் பேசிய நன்னனின் ஏழில் நாடு (இன்றைய கோவா, தென் கன்னடம்) தமிழ் பேசுவதில்லை. கங்கர் நாடும் (தென்கீழ் கன்னடம்), எருமை நாடும் (மைசூர்), அருகில் உள்ள சிறுசிறு நாடுகளும் (மேற்கு மலை நாடுகள்) இன்று தமிழ் பேசுவதில்லை. தமிழ் பூத்துக் குலுங்கிய சேர நாடே (கேரளா) கூடத் தமிழை மறந்து தான் போயிற்று. எங்களின் ஆயிரமாண்டு எல்லை கூடக் குறைந்து, நாங்கள் வட மாலவன் குன்றமாம் திருப்பதியையும் இழந்து, ஒடுங்கிக் கிடக்கிறோம். ஒரு நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த பேச்சுநடை தொடர்ந்திருக்குமானால், இன்றைய தமிழகத்திலும் கூட தமிழ் ஒழிந்திருக்கும். முடிவில் ஒரு மூதியத்திற்குள் (Museum) தான் இது செத்த மொழியாய்ச் சிறைப்பட்டிருக்கும். அதை வாழ வைத்தது ஒரு 60,70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்த தமிழியக்கம். அதற்கு நாங்கள் மக்களுக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்லுகிறோம்.”(2)
-----------------
முதல் பந்தி நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழில் எழுதப்பட்ட கட்டுரை, எழுதியவன், பாட்டுக்கொரு புலவன் பாரதி! பிந்தையது இன்றைய தமிழில், தமிழறிஞர் இராம.கி என்பவரின் கூற்று! இரண்டிலும் ஏதாவது வேறுபாடு புரிந்ததா? ஆம், இந்த நூறாண்டு இடைவெளியில் நம் தமிழ் நிறையவே மாறியிருக்கிறது. வ்யவஹாரம், லௌகிக சாஸ்த்ரம், சாஸ்த்ர பரிபாஷை, ஸங்கடம், இங்கிலீஷ் இச்சொற்களை யாரும் இற்றைத் தமிழில் பயன்படுத்துவதில்லை. காரணம், புதிது புதிதாக எழுந்து கொண்டிருக்கும் தமிழ்க் கலைச் சொற்கள்.
கலைச்சொல்லாக்கம், அப்படி என்றால் என்ன?
வேற்றுமொழிக் கருத்தை அல்லது அதுசார்ந்த சிந்தனையை சொந்த மொழியில் சொல்வதற்காக, புதிய சொற்களை உருவாக்கி, அல்லது பழைய சொற்களை திருத்தியும் புதுக்கியும் பயன்பாட்டில் விடுதல், பொதுவாக கலைச்சொல் (technical term) அல்லது கலைச்சொல்லாக்கம் என்று அறியப்படுகிறது.
கீஞ்சிது போ…ஏற்கனவே உள்ள சொற்களையே பயன்படுத்த முடிவதில்லை, இதில் புதிதாக வேறு சொற்களை உருவாக்குவதா? :-)
ஆம், கொஞ்சம் சிந்தியுங்கள்! நாம் இன்று பயன்படுத்தும், மின்சாரம், தொலைக்காட்சி, கணினி எல்லாம் சங்ககாலத்திலிருந்து நாம் பயன்படுத்தி வந்த சொற்களில்லையே? ஒரு புதிய சொல் ஏழெட்டு தடவை கண்ணில் படும்போது இயல்பாகவே அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எங்கே விட்டது நம் சோம்பேறித்தனம்! பேஸ்புக் பயன்படுத்தும் நாம் எத்தனைபேர், முகநூல், உள்பெட்டி, சுவர், அரட்டை, பகிர்வு போன்ற சொற்களையெல்லாம் வெகு இயல்பாகக் கடந்து போகிறோம்! இத்தனைக்கும் அவை முகநூல் பயன்பாடு அதிகரித்த 2009களுக்குப் பின் அறிமுகமான கலைச்சொற்கள் தான்!
சரி, கலைச்சொல்லாக்கத்தின் இன்றியமையாமை தான் என்ன?
ஒரு மொழியொன்றின் நிலைத்திருக்கைக்கும் அதன் வளர்ச்சிக்கும் கலைச்சொல்லாக்கம் அத்தியாவசியமானதாகும். அறிவியல் பல திக்குகளிலும் பரந்து விரிந்து, அசுரவேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அதன் வளர்ச்சிக்கு சமாந்தரமாக, அதை உள்வாங்கி, தன்னவர்க்குக் கற்பிக்கும் ஆற்றல் மொழியொன்றுக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மொழியொன்றே விரைவில் ஒளியின் வேகத்தை எட்ட இருக்கும் எதிர்காலத் தொழிநுட்பத்தைச் சமாளித்து, நிலைத்து வாழ முடியும். இல்லாவிட்டால்… கூடிய சீக்கிரம் இறந்த மொழிகள் பட்டியலில்; அம்மொழி போய்க் குந்தவேண்டியது தான்!
இன்னொரு விதத்தில் சொன்னால், கலைச்சொல்லாக்கம் என்பது தமிழர் மட்டும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் ஒரு விடயம் அல்ல. எல்லா மொழிகளிலும், அவ்வளவு ஏன், ஆனானப்பட்ட ஆங்கிலத்தில் கூட கலைச்சொல்லாக்கம் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆங்கிலத்தில் 98 நிமிடங்களுக்கு ஒரு சொல் அல்லது, நாளொன்றுக்கு 14.7 என்ற வீதத்தில் கலைச்சொற்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்று ஆய்வொன்று கூறுகிறது.(3) அதிகம் வேண்டாம், நாம் ஈராண்டுகளுக்கு முன்புவரை பாட்டாய்ப் பாடிக் கொண்டிருந்த “Selfie” என்பது கூட, தமிழருக்கல்ல, 2002இற்கு முன் போய்க் கேட்டிருந்தால், ஒரு ஆங்கிலேயருக்கே கூடத் தெரிந்திருக்காது(4)….ஆம்! அச்சொல்லுக்கு வயது 13இற்கும் குறைவு!
ஒப்பீட்டளவில் அறிவியல் துறையின் கிளைகளான தகவல் தொழிநுட்பம், உயிரியல், இயல்பியல் என்பவற்றில் தான் அதிக கலைச்சொற்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன – ஆங்கிலத்தில்! என்றாலும், பொருள் அல்லது விடயமொன்றின் சந்தை முக்கியத்துவம், பிரபலம் என்பவற்றைப் பொறுத்து, கலைச்சொல்லாக்கம் எல்லா மொழிகளிலுமே இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு யப்பான், ஜேர்மன் போன்ற வளர்ந்த நாடுகளை எடுத்துப் பாருங்கள்! அவர்களுக்கு ஆங்கிலத்தின் அவசியமே இருப்பதில்லை. அறிவியல் உலகில் புதிதாக கண்டறியப்படும், பெயர்சூட்டப்படும் எதுவும், அடுத்த கணமே அவர்கள் மொழிக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு கிடைக்கின்றது. அவர்களது மொழியும் வளர்ந்ததாகிறது. உலகமயமாதலை, வளர்ந்த ஒரு இனமாக அவர்கள், வெற்றிகொண்டதாகவும் ஆகிறது.
ஆக, கலைச்சொல் என்பது, ஒரு மொழியொன்றின் நிலைத்திருக்கைக்கு அத்தியாவசியமானது என்பதை இதன் மூலம் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
தமிழ்க் கலைச்சொல்லாக்கம் எந்த மட்டத்தில் இருக்கிறது?
சுமார் எழுபத்தைந்து மில்லியன் குடித்தொகையுடன், தமிழர், உலகில் 17ஆவது அல்லது 18ஆவது மிகப்பெரிய இனக்குழுமம் என்கின்றன மொழியியல் ஆய்வுகள்(5). கூகிள் போன்ற உலகையே கட்டியாளும் நிறுவனங்களிலும், தகவல் தொழிநுட்பம், அறிவியல் முதலிய துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கும் தமிழர்கள் பலர் உண்டு. ஆனால், தமிழின் நிலை இன்று என்ன? நம்மை விடக் குறைந்த குடித்தொகை கொண்ட பிரெஞ்சு, கொரியம், இத்தாலியம் முதலிய மொழிகள், அறிவியல் மொழி என்ற ரீதியில் நம்மை விட ஒப்பீட்டளவில் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் நாம்? நம் மொழி?
தமிழில் கலைச்சொல்லாக்க வீதம் மிகக்குறைவு தான். இதற்கென நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்பு இல்லாததால், தமிழகம், இலங்கை, மலேசியா போன்ற இடங்களில் வாழும் தமிழறிஞரும் பொதுமக்களும் தங்களுக்குப் பிடித்தாற் போல் கலைச்சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். நாளேடுகளிலும், புதினங்களிலும், இணையத்திலும் அவற்றின் புழக்கத்தைப் பொறுத்து, அச்சொற்கள் எல்லாத் தமிழரையும் சென்றடைகின்றன. கடந்த 2004 சுனாமியில் பயன்பட்ட “ஆழிப்பேரலை”, சனல் 4 விவகாரத்தில் பரவிய “காணொளி” (Video), 2-ஜி ஊழல் விவகாரத்தில் பிரபலமடைந்த “அலைக்கற்றை” (Spectrum) என்பன இத்தகைய கலைச்சொல்லாக்கங்களுக்கு சிறந்த உதாரணங்கள்.
ஆனால், அவ்வளவு மகிழ்ச்சிப்படும் அளவுக்கு தமிழ்ச் சொல்லாக்கம் இல்லை என்பதுதான் உண்மை. அப்படி தமிழ்ச் சொல்லாக்கம் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? அதிலிருந்து மீளும் வழிகள் என்ன என்ற வினாக்களுக்கு விடை காண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். தமிழ்க் கலைச்சொல்லாக்கம் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் என்று இனங்காணப்படுபவை ஐந்து:
1. ஒரே பொருளுக்கு பலபெயர் சூட்டப்படல்.
வெவ்வேறு நாடுகளில் அல்லது வெவ்வேறு பிராந்தியங்களில் ஒரே பொருளுக்கு வேறுவேறு கலைச்சொற்கள் சூட்டப்பட்டு பொதுப் புழக்கத்துக்கு வரும்போது, அவை குழப்பத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக வேறுவேறு தமிழ்வழிக் கற்பித்தல் திட்டம் கொண்ட தமிழகம், இலங்கை என்பன இதில் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன.
அ. Acceleration – ஆர்முடுகல் (இலங்கை) முடுக்கம் (தமிழகம்)
ஆ. Reaction – தாக்கம் (இலங்கை), எதிர்வினை (தமிழகம்)
இ. Chloroplast – பச்சையவுருமணி (இலங்கை), பசுங்கனிகம் (தமிழகம்)
இன்னும் சில சந்தர்ப்பங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாமலே ஒன்றுக்கு மேற்பட்ட கலைச்சொற்கள் உருவாகி விடுகின்றன.
உ-ம்: Mobile phone - கைபேசி, கையடக்கத்தொலைபேசி, நகர்பேசி, அலைபேசி, உலாபேசி, செல்பேசி, செல்லிடத்தொலைபேசி…. உஸ்ஸபா!! :-)
2. ஒரு பெயர் பலபொருளுக்கு ஆளப்படல்.
Company, Organization, Institution, Cooperation முதலான சொற்களுக்குப் பொதுவாக “நிறுவனம்” என்று மொழியாக்கம் செய்வதே பொதுவான வழக்கம்.(6) ஆனால், அவற்றுக்கிடையே உள்ள நுண்ணிய வேறுபாட்டை இனங்கண்டு அதற்கேற்றாற்போல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் கலைச்சொல்லை ஆளும் போதே, கலைச்சொல்லாக்கம் முழுமை பெறுகின்றது.
மேற்சொன்னவாறு, ஒரே பொருளுக்கு பல ஒத்தகருத்துச் சொற்கள் இருப்பதும், ஒரே சொல்லைப் பலவற்றைக் குறிக்கப் பயன்படுத்துவதும் தமிழில் ஏற்கனவே உள்ள வழக்கம் தான்; என்பதால் அதைத் தவறென்று கூறமுடியாது. ஆனால், கலைச்சொற்கள் புதிதுபுதிதாக உருவாகிக்கொண்டே இருப்பதாலும், அவற்றைத் தொகுத்து வைத்திருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கலைக்களஞ்சியம் இதுவரை இல்லாமையாலும், அவற்றால் வெறும் குழப்பமே மிஞ்சக்கூடும். கலைச்சொல் தொகுப்பகம் ஒன்று உருவாவது அதற்கு அவசியம். (இதைப் பற்றி இறுதியில் ஆராயலாம்).
3. சொல்லாக்கம் சொற்றொடராக்கம் ஆதல்.
“மொழி பொதுமக்களுக்குப் புரியாவிட்டால் பயனில்லை” என்று வாதிடும் ஒருசாரார் மூலம் உருவாக்கப்படும் சொற்கள், நீண்ட நீண்ட சொற்றொடர்களாக அமைந்து விடுகின்றன. வெறுமனே ஒரு சொல்லைச் சொல்வதை விட, ஒரு சொற்றொடராக ஒரு விடயத்தைக் கூற வரும் போது, அதன் புரிதல் தன்மை எளிது தான். ஆனால், எளிதாக இருக்கின்றது என்பதால் அது சரியாகிவிடாது. சொல்லொன்றின் எளிமை கூடும்போது, அதற்கு சிந்தனைத்திறன் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், மொழிவளர்ச்சிக்குத் தேவை சிந்தனை. எனவே தான், இத்தகைய சொற்றொடர்க் கலைச்சொற்கள் விரும்பப்படாமல், மொழிவளம் கூடிய புதுக்கலைச்சொற்களே அதிகம் புழக்கத்தில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. சொற்றொடர்க் கலைச்சொல்லாக்கத்தை இல்லாதொழிக்க பழந்தமிழ்ச் சொற்களையும் மீளப்பயன்படுத்த முடியும். அவை அளவிற் சிறியவை என்பது இன்னொரு சிறப்பு.
உ-ம்:
Mobile phone - கைபேசி (“கையடக்கத் தொலைபேசி” தேவையில்லை!)
Warefall - நீர்வீழ்ச்சி – அருவி*
Sex - உடலுறவு – கலவி*
* = இவை வழக்கிழந்த தமிழ்ச்சொற்கள்.
4. அவசர மொழியாக்கங்கள்.
ஊடகங்களில் குறித்த விடயமொன்று திடீர்க் கவனம் பெறும் போது, அதைத் தமிழிலேயே கூறவேண்டுமென விரும்பும் நல்லெண்ணத்தில், போகிற போக்கில் ஒரு சொல்லை உருவாக்கிவிடுவதுண்டு. ஆனால், அது உலகப்புகழ் பெறும் போது, தவறான முன்னுதாரணம் ஆகி விடுகின்றது.
உ-ம்: “காணொளி” எனும் சொல் – Visible light என நேரடிப்பொருள் தருவது, video என்பதற்கு சிறிதும் பொருந்தாதது. இதை முன்மாதிரியாக வைத்து “audio” என்பதற்கு “கேளொலி” என்ற சொல் புழங்க ஆரம்பித்திருப்பது தான் சோகம். இத்தகைய அவசர மொழியாக்கங்கள் தவிர்க்கமுடியாதவை தான். அச்சொல் புழக்கத்தில் வந்தாலும், ஏற்ற மாற்று மொழியாக்கங்களை உடனே அறிமுகப்படுத்தினால் அத்தகைய தவறான மொழியாக்கங்களை நீக்கலாம். உதாரணமாக, காணொளி என்பதற்கான மாற்றுத்தீர்வாக முன்மொழியப்பட்ட சொற்கள் இரண்டு:
1. “a recording of a moving visual images” எனும் வரைவிலக்கணத்துக்கேற்ப “நிகழ்படம்”.
2. வீடியோவின் இலத்தீன் வேர்ச்சொல்லான videre - to see என்பதை ஒத்து “விழியம்”.
இரண்டும் பொருத்தமானதே! இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கலைச்சொற்கள் பரிந்துரைக்கப்படும் போது ஏற்படும் குழப்பங்களை நீக்குவதற்கும் முற்சொன்ன கலைச்சொல் தொகுப்பகத்தையே பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
5. திசைச்சொல் மொழியாக்கங்கள்.
தமிழில் பல திசைச்சொற்கள் உள்ளன. அதாவது தமிழில் புழங்கும் வேற்றுமொழிச் சொற்கள். அவற்றின் வேரை அறியாமல், அவற்றைப் புதுக் கலைச்சொற்களில் பயன்படுத்துவது மொழி மேம்பாட்டுக்கு எவ்விதத்திலும் துணைவராது.
உ-ம்: சக்தி என்பது energyஐக் குறிக்கப்பயன்படும் வடமொழிக் கலைச்சொல். (மாற்று: ஆற்றல்)
திசைச்சொல் மொழியாக்கங்களில் ஏற்படும் தவறுகளைத் தவிர்ப்பதற்கு,. சொல்லொன்றின் சொற்பிறப்பியலை (Etymology) தெரிந்துகொள்ள வேண்டும். இதன் இன்னொரு நன்மை என்னவென்றால், வடசொல் என்று கூறப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள, ஆனால் சொற்பிறப்பியல் படி பார்த்தால் தமிழுக்கே உரித்தான சொற்களையும் இனங்கண்டு கொள்ள முடியும்.
உதாரணமாக, “சலம்” என்ற சொல், வடமொழி “ஜலம்” என்பதிலிருந்து வந்த சொல் என்றுதான் சொல்லப்பட்டு வருகின்றது. ஆனால், சொற்பிறப்பை ஆராய்ந்தால், அது தமிழ்ச்சொல்லே என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சலம் (நீர்), சலங்கை, சல்லாரி முதலிய சொற்களைக் கொஞ்சம் பாருங்கள், அவற்றின் வேர்ச்சொல் “சல” என்பது. “சலசல” இரட்டைக்கிளவி, ஞாபகம் வருகிறதா? சலசலத்து ஓடுவது சலம். சலசல என சத்தம் போடுபவை சலங்கையும் சல்லாரியும். அந்த “சல” “சில” என்றாகி சிலம்பு, சிலம்பம், சில்வண்டு என்று விரியும். மொழியொன்று வளர்வது இப்படித்தான்.
இப்படி வேர்ச்சொல்லைக் கண்டறிந்து அதற்கேற்ப கலைச்சொல்லைப் படைப்பதற்கு ஓரளவுக்கேனும் மொழியறிவு அவசியம்தான், ஆனால் கட்டாயம் என்றில்லை, தமிழ்(7)– ஆங்கில(8) சொற்பிறப்பியல் அகராதிகள் இணையத்திலேயே இலவசமாகக் கிடைக்கின்றன. புதிய சொல்லொன்றை உருவாக்க முன், அவற்றை ஆராய்ந்து விட்டு, புதுக்கலைச்சொற்களை உருவாக்க முயலலாம்.
சொற்பிறப்பியல் அகராதிகளை ஆராய்ந்து ஒலிப்பு ஓரளவுக்கேனும் ஒத்துப்போகும் சொற்களை உருவாக்குவது தான் தற்போதைக்குப் பொருத்தமான முறை. தமிழ் மொழியாக்கங்கள் புரியாது என்று கூறுபவர்கள், இவ்வாறு கலைச்சொற்கள் உருவாகும் போது, அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் மறுக்க முடியாது என்பதுடன், பாவனைக்கும் இலகுவாக இருக்கும். இவ்வாறு ஒலிப்பொத்து கலைச்சொல் படைப்பது ஒன்றும் புதிய முறையல்ல, பல்லாண்டுகளாக நடைமுறையில் இருப்பது தான். உதாரணமாக –
Parliament – பாராளுமன்றம்
Bank - வங்கி Guide – கையேடு
Tank - தாங்கி
இதே முறையைக் கையாண்டு, சமகாலத்தில் உருவான கலைச்சொற்கள் சில:
Petrol – பற்றல் (தீப்பற்றுவதால்)
Diesel – தீயல் (தீய்ந்து போவதால்)
Gene – ஈன் (ஈனுதல் பிறப்போடு தொடர்புடையது)
DNA – தாயனை (பிறப்புரிமைச்செய்திகளை பரம்பரை வழியே கடத்தும் தாய்+அன்ன மூலக்கூறு)
இவ்வாறே, பழைய கலைச்சொற்களைப் புதுக்குவதும், வழக்கிழந்த சொற்களை மீளப் பயன்பாட்டில் கொணர்தலும், நீளங்கூடிய சொற்களை விடுத்து, சிறிய சொற்களைப் பழக்கத்தில் கொணர்தலும் கலைச்சொல்லாக்கத்தில் முக்கியமானவை.
கலைச்சொல் தொகுப்பகம் – காலத்தின் கட்டாயம்!
உருவாகும் கலைச்சொற்கள் தமிழர் அனைவரையும் சென்றடைந்து, இலகுவாக புழக்கத்தின் கொணரப்பட்டால் அன்றி, அவற்றை உருவாக்குவதால் எவ்விதப் பயனும் இல்லல. இன்று நிகழும் கலைச்சொல்லாக்க முயற்சிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்தமானமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. முகநூல், சில வலைத்தளங்களில் அவற்றைத் தொகுத்துப் பேணும் முயற்சிகள் இடம்பெற்று வந்தாலும், அதில் சில நடைமுறைச்சிக்கல்கள் இல்லாமல் இல்லை. எனவே, கலைச்சொற்ளைத் தொகுத்துப் பேணுவதற்கு “கலைச்சொல் தொகுப்பகம்” ஒன்றைப் பேணுவது அத்தியாவசியமாகின்றது.
இணையத்தில் தொடரறா நிலையில் (online) அனைவராலும் இலகுவாக அணுகக்கூடியதாகவும் (easily accessible), பயனர் நேயமானதாகவும் (user-friendly), விரும்பிய ஆங்கிலச் சொற்களை உள்ளிட்டு அதற்கேற்ற தமிழ்ச் சொல்லை இனங்காணும் தேடுதல் வசதி கொண்டதாகவும், வாரத்துக்கொரு தடவை அல்லது மாதத்துக்கொரு தடவை இற்றைப்படுத்தப்படுவதாகவும் (update) ஒரு தரவுத்தளமாக (database) கலைச்சொல் தொகுப்பகம் இருக்கவேண்டும். பயனர்களே புதிய புதிய கலைச்சொற்களைப் பரிந்துரைக்கும் வசதியும், அவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்குப் பொது வாக்களிப்புக்கு விட்டு, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை தொகுப்பகத்தில் சேர்க்கும் வசதியும் அதில் காணப்படவேண்டும். இலாபநோக்கற்றதாக, அல்லது மிகக்குறைந்தளவு இலாபநோக்குடையதாக (தொகுப்பக அகராதியின் மின்னூலை pdfஆக வழங்குவதென்றால் கட்டணம் அறவிடலாம்) அவ்வலைத்தளம் சேவையை வழங்குவது விரும்பத்தக்கது.
சரி, நல்ல திட்டம் தான்… ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படும் வரை கலைச்சொற்களுக்கு எங்கே செல்வது? ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த கலைச்சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினால், விளைவு இன்னும் மோசமானதாகிவிடுமல்லவா?
உண்மைதான். தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிடும் கலைச்சொல் பேரகராதியும்(9), இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கலைச்சொல் களஞ்சியமும்(10) ஏற்கனவே இணையத்தில் அணுகக்கூடிய முறையில் தான் இருக்கின்றன. தவிர, இணையத்தில் ஏற்கனவே புதிய புதிய கலைச்சொற்களைப் உருவாக்கித் தரும் தமிழறிஞர்களின் வலைத்தளங்கள் இருக்கின்றன. பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், முதற்கட்டமாக அவற்றைப் பயன்படுத்தலாம்.
1. இராம.கி அவர்களின் கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டுள்ள தமிழ்ச்சொல்லாக்கம்(11) எனும் வலைப்பதிவு.
2. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் “அகரமுதல”(12) வலைத்தளம்.
3. ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்களின் மொழியாக்குவதற்கென கையேடு(6)
4. “ஓம்தமிழ் கலைச்சொல்” எனும் கைபேசிச் செயலி (app) : கூகுள் இயக்ககத்தில் (Google play) “omtamil kalaisol” என்று தேடுக.
5. இணையத்தில் கிடைக்கும் வேறு சில கலைச்சொற் பக்கங்கள்:
அ. இந்திய அண்ணா பல்கலைக்கழக நுட்பவியல் அகராதி(13)
ஆ. விக்கிப்பீடியா கலைச்சொல் தொகுப்பு(14)
இ. நுட்பவியல் சொற்களின் கலைக்களஞ்சியம்(15)
ஈ. எழுத்தாளர் ஜெமோவின் சில கலைச்சொற்கள்(16)
உ. ஆங்கிலம்(17); மற்றும் தமிழ்க்களஞ்சியம் (18) ஆகிய வலைத்தளங்களில் கணினி மற்றும் இயல்பியல் கலைச்சொற்கள் கிடைக்கின்றன.
முக்கியமான இன்னொரு விடயம், ஊடகவியலாளர்களும், நாளேடுகளுக்கு கட்டுரை வரைவோரும் புதுச்சொற்களை உருவாக்குவதில், அல்லது பயன்பாட்டில் விடுவதில் அதிக கவனம் எடுக்க வேண்டும். இந்த இணைய யுகத்திலும் நாளேடுகள் அதே சூட்டுடன் விற்பனையாவதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம். ஊடகவியலாளர்களைக் கொண்டு அக்கலைச்சொற்களை பொதுப் பயன்பாட்டுக்கு விடுவதில் தான் கலைச்சொல்லாக்கத்தின் உண்மையான வெற்றி தங்கியுள்ளது. முகநூல், கீச்சு முதலான சமூக வலைத்தளங்களையும் இணைய வலைத்தளங்கள் வலைப்பதிவுகளையும் இதற்கான மேலதிக ஊடகங்களாகப் பயன்படுத்தலாம். பிறகென்ன? மெல்லத் தமிழினி… வாழும் என்றெழுதி முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
உசாத்துணைகள்:
5. Top 30 Languages by Number of Native Speakers
கருத்துகள்
கருத்துரையிடுக