கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!
ஒருவர் பேரறிஞராக இருக்கலாம், நம் பெருமதிப்புக்குரியவராக இருக்கலாம். அதற்காக, அவர் என்ன சொன்னாலும் சரி என்று ஏற்றுக்கொண்டிருக்கிறோமா? சில முரண்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்டக் கூட முயல்வோம், இல்லையா? அப்படி, என் பெருமதிப்புக்குரிய ஒருவரை, ஒரேயொரு கருத்தில் மட்டும் நான் மறுக்க நேரிட்டதுண்டு, அவர் ஆறுமுக நாவலர்!
அப்படி அவர் சொன்னது:
“சமண சமயத்துச் செட்டிச்சி விக்கிரகத்தின் இருபக்கத்தும் விநாயகக்கடவுள் விக்கிரகமுஞ் சுப்பிரமணியக் கடவுள் விக்கிரகமும் அஞ்சாது வைத்துப் பூசை உற்சவமுதலியன செய்கிற அதிபாதகர்களுஞ் சைவசமய குருமாரோ!” -யாழ்ப்பாணச் சமயநிலை, 1872, பக்.உ௬
"செட்டிச்சியும் புறச்சமயத்தவளுமாகிய கண்ணகி பரம்பொருள் எனவும், விநாயகக்கடவுள் சுப்பிரமணியக் கடவுள் இருவரும் அவளிற்றாழ்ந்தவர் எனவும் மயங்கி ----- வழிபடும் அதிபாதகர்களும் சைவசமய நிந்தகர்கள் "
- நல்லூர்க் கந்தசுவாமி கோயில் இரண்டாம் பத்திரிகை,1875)
நாவலரால் வட இலங்கையில் சைவ மறுமலர்ச்சி முன்னெடுக்கப்பட்டபோது, குடாநாட்டின் பெருமளவு கண்ணகி ஆலயங்கள், புவனேஸ்வரி – இராஜராஜேஸ்வரி ஆலயங்களாக மாற்றப்பட்டன. இதன் விளைவு எங்குவரை தாக்கம் செலுத்தியிருக்கின்றது என்றால், அப்படிப் பெயரோ தோற்றமோ மாறாமல், “கண்ணகாம்பிகை” என்ற திருப்பெயருடன் உமையவளின் இடத்தில் அருள்பாலித்த கண்ணகியை, சிவனிடமிருந்து “விவாகரத்து” (?!) பெறவைத்து தனிக்கோயில் கட்டி அமர்த்திவிட்டு, “மீனாட்சி” என்ற வேறொரு தேவியை சிவனுக்கருகே குடியமர்த்திய வினோதம், பதினான்கு ஆண்டுகளுக்கு முன், வட்டுக்கோட்டை கண்ணலிங்கேசுவரர் கோயிலில் இடம்பெற்றிருக்கின்றது. இத்தனைக்கும் அது ஆரம்பத்திலிருந்தே கண்ணகி கோயிலாக இருந்து 1882இல் சிவாலயமாக மாற்றப்பட்ட கோயில்!
புங்குடுதீவுக் கண்ணகி - இன்றைய ராஜராஜேஸ்வரி ஆலயம்
|
சைவம், இறைவனைப் பிறப்போ இறப்போ அற்றவனாகக் காணும் சமயம். எனவே “அவதாரம்” என்ற கோட்பாட்டை அது ஏற்றுக்கொள்வதில்லை. ஈசன் அன்றி, உமையவள் பூமியில் “அவதரிப்பதை”க் கூட, பெண்ணின் கருப்பை வாய்ப்படுவதாகச் சொல்லாமல், தாமரைப்பூவில் கிடைத்ததாகவோ, வேள்வித்தீயில் தோன்றியதாகவோ தான் சொல்லும். அத்தகைய சைவநெறியை மறுமலர்ச்சிக்குள்ளாக்கிய நாவலர், சிலம்பின் கதாநாயகியான கண்ணகியை – “சிலம்பு சமணக்காப்பியம்” என்ற கருத்தோடு இணைத்துச் சிந்தித்து, அவள் வழிபாட்டை மறுதலித்ததை தவறென்று சொல்லிவிட முடியாது.
உண்மையில், நாவலர் காலத்துக்கு முன்வரை, “கண்ணகியின் மண்” என்று இன்று வியந்து கூறப்படும் கிழக்கிலங்கையை விட, அதிகப்படியான கண்ணகி ஆலயங்களும் பக்தர்களும் கொண்டு விளங்கிய பூமி யாழ்ப்பாணம். கண்ணகி வழிபாட்டின் எச்சசொச்சங்களை இன்றும் அங்கு மட்டுவில், புங்குடுதீவு, மாதகல், அங்கணாக்கடவை முதலான இடங்களில் காணமுடிகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் பெரும்பாலும் கண்ணகியின் அடியவர்கள். அவ்வளவு ஏன், கிழக்கில் வைகாசிச் சடங்கில் பாடப்படும் “வழக்குரை காவியமே” செயவீர சிங்கையாரியன் என்ற யாழ்ப்பாண மன்னனால் பாடப்பட்டது தான்!
சைவப்பார்வையில் கண்ணகியை மறுதலிப்பது சரியா தவறா என்ற வாதங்களுக்குள் இறங்கமுன்பு, தமிழர் நாட்டாரியலைப் பற்றி, நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும்.
நம் கிராமியத்தெய்வங்கள் யாரை எடுத்தாலுமே, அவர்கள் சாதாரண மனிதராய்ப் பிறந்து செயற்கரும் செயல்கள் செய்தவர்கள் தான் என்பதைக் கண்டுகொள்ளலாம். அதிலும் பெண் தெய்வங்கள், பெரும்பாலும் துரோகமிழைக்கப்பட்டவர்கள், வசதி படைத்தவர்களின் காமப்பசிக்கு இரையானவர்கள் – அல்லது குடும்பக் கௌரவத்தைக் காக்க உயிரோடு எரிக்கப்பட்டவர்கள், இப்படிப் பட்டியல் நீள்கின்றது. தமிழ்நாட்டின் கன்னியம்மன், பேச்சியம்மன், இசக்கியம்மன், நாச்சிமார், நீலி என்று நீளும் நாட்டார் தெய்வங்கள் யாரின் வரலாற்றைப் புரட்டினாலும் இறுதியில் இப்படி அவலமாக இறந்த பேதைப்பெண்ணொருத்தியின் உண்மைக்கதையில் தான் போய் முட்டிநிற்கின்றது.
இன்றைய காலகட்டத்தில், இந்த நாட்டார் தெய்வங்களெல்லாம் மெல்ல மெல்ல உயர்நிலைக்கு உயர்த்தப்படுவதைக் காணலாம். அங்கு உயிர்ப்பலி தவிர்க்கப்படுகிறது. தெய்வமாடுதல், தீமிதித்தல் போன்றன அருகி வருகின்றன. மடாலயங்களாகவும், மரத்தடிக் கோயில்களாகவும் இருந்த அவை, இன்று விமானம், கோபுரம் எழுந்து அழகான வண்ணப்பூச்சுகளுடன் பேராலயங்களாகக் காட்சியளிக்கின்றன. அகோரமாகக் காட்சியளித்த அத்தெய்வங்களின் சிலைகள் நீக்கப்பட்டு, அம்சமான திருவுருவங்கள் செய்யப்பட்டு “அருள்மிகு ***** சுவாமி/அம்மன் ஆலயம்” என்று பெயர் கூட மாற்றப்படுகின்றன. இது தமிழ்நாட்டின் இன்றைய பொதுவான நிலை.
இசக்கியம்மனின் மேனிலையாக்கம் - அகோரமும் (இடது) அம்சமும் (வலது)
இவை குறிப்பிட்ட சிலரின் திட்டமிட்ட செயற்பாடுகள் என்று கருதி, ஆரம்பத்தில் இதை “சமஸ்கிருதமயமாக்கம்” அல்லது “வைதிகமயமாக்கம்” என்ற சொற்களால் குறிப்பிட்ட நாட்டாரியல் அறிஞர்கள், இன்று அது ஒரு இயல்பான நிகழ்வு என்பதை உணர்ந்து இச்செயற்பாட்டை “மேல்நிலையாக்கம்” என்று அழைக்கின்றார்கள்.
ஆனால், வரலாற்றில் தேடினால், இந்த மேல்நிலையாக்கம் என்பது, இந்திய நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழும் ஒன்று என்பதை உணர்ந்துகொள்ளலாம். சீதை, இராமன் எனும் அரச தம்பதி தம் அரும்பெரும் செயல்களால், திருமால் – திருமகளின் அவதாரங்களாக மாறியிருக்கிறார்கள். வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த கண்ணன், அனுமன், திரௌபதி, ஐயப்பன் ஆகியோரின் நிலையும் அதுவே. மீனாட்சியும் சொக்கநாதரும் கூட, சிவசக்தியாக மேல்நிலைக்குள்ளான, பாண்டியர் பரம்பரையில் தோன்றிய அரசனும் அரசியும் தான் என்ற கருத்துக் கூட நிலவுகின்றது.
இனி, ஈழத்துக் கண்ணகி இலக்கியங்களில் பரிச்சயமுள்ளவர்கள் இந்தப் பொதுத்தகவல்களோடு “கண்ணகை”யைப் பொருத்திப் பார்த்தால், உண்மையைப் புரிந்துகொள்ளமுடியும். கண்ணகி எப்படி பார்வதியின் அவதாரமாக “மேல்நிலையாக்கப்படுகின்றாள்” என்பதற்கான ஆதாரங்கள் அவற்றில் கொட்டிக்கிடக்கின்றன. சிலப்பதிகாரக் கண்ணகிக்கும் ஈழத்துக் கண்ணகைக்கும் வெகுதூரம்! புரிகிற மாதிரிச் சொன்னால், வான்மீகியின் இராமனுக்கும், கம்பனின் இராமனுக்கும் உள்ள வேறுபாடு!
ஆதி முதல் அந்தம் வரை கண்ணகையை சைவப்பெண்ணாகவே காட்டும் ஈழத்து இலக்கியங்கள், இறுதியில் அந்த ஈசனின் மனைவி - உமையவளாகவே அவளை உயர்த்தி, அந்தக் கவித்துவ உச்சியிலேயே நிறைவுறுகின்றன.
“பரம கயிலாய சிவதேவி சிவாயநம
பஞ்சாட்சரத்தின் ஒளி ஆனாய் சிவாயநம
திரையில் வந்தே கிருபை செய்தாய் சிவாயநம
திருமாலின் சோதரி செல்வி கண்ணகையே”
- தாண்டவன்வெளி அம்மன் காவியம்
“பத்தினியம்மா உனக்கோலம் ஓலம்
பார்ப்பதி அம்மா உனக்கோலம் ஓலம்
அத்தனார் பாரி உனக்கோலம் ஓலம்
அம்பிகை அம்மா உனக்கோலம் ஓலம்”
- பட்டிமேட்டு அம்மன் காவியம்
“அக்கரரவிந்த அரனார் இடம் இருந்தநீ
அம்மையென அன்பருக் கருளது கொடுத்தநீ
சக்கரக்கரத்தவன் தங்கையென வந்தநீ
மலையரசன் மகளனைய மாது கண்ணகையே”
- தம்பிலுவில் அம்மன் காவியம்
“பாற்கடலில் பள்ளிகொளும் பச்சைவண்ணன் தங்கையே
வேல்முருகன் தாயே வினாயகனை யீன்றவளே
மயிடாசுரன் சிரசில் வாது நடம் கொண்டவளே
கயிலைகிரி மேவிவளர் காரணி பூரணியே”
- கண்ணகை அம்மன் பிரார்த்தனை
கண்ணகி மட்டுமல்ல, எந்தவொரு நாட்டார் தெய்வத்தின் கதையைக் கிளறினாலும், அவற்றில் சிவனுக்குத் தவிர்க்கமுடியாத இடமொன்று இருப்பதைக் காணலாம். அவர்களின் தோற்றம் பெரும்பாலும் திருக்கயிலாய மலையிலேயே ஆரம்பமாகும். பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் சிவனின் அல்லது உமையின் அம்சமாகவோ, சிவனின் மகனாகவோ - மகளாகவோ தான் இன்றும் வழிபடப்படுகின்றார்கள் என்பது நாட்டாரியல் ஆய்வுகள் தெரிவிக்கும் சுவாரசியமான உண்மை! “திருமருவு கயிலாய மலையின்மிசை நிலவுபுனை” எனத் துவங்கி, “ஆயன் சகோதரி ஆதி கண்ணகையே” என்று முடிவுறும் கண்ணகியின் ஒரு காவியப் பாடல், இந்தப் பொதுவிதிகளை, ஒரு நாட்டார் தெய்வமாக, கண்ணகியும் மீறவில்லை என்பதற்கான கட்டியம்.
தமிழ் நாட்டாரியல் சிவனை மையமாகக் கொண்டது |
இந்திய உபகண்ட கிராமியத் தெய்வங்கள் மாத்திரமல்ல, இந்தோனேசியாவில் கூட, சைவம் செழித்த பத்தாம் – பதினோராம் நூற்றாண்டுகள் வரை அது தான் நிலை. மக்கள் மன்னனைச் சிவனின் அவதாரமாகவே வழிபட்டிருக்கிறார்கள். அங்குள்ள பிராம்பணன் முதலான கோயில்களிலுள்ள சிவவடிவங்கள் அச்சொட்டாக அம்மன்னர்களின் சாயலிலேயே வடிக்கப்பட்டிருக்கின்றன. “தேவராஜ” எனும் பட்டம் சூட்டப்பட்ட தங்கள் மன்னனை சிவனின் அவதாரமாகவே மலாய மக்கள் போற்றியதை அக்கால இந்தோனேசிய நூல்கள் கூறுகின்றன.
இந்தோனேசிய பிரம்பானான் கோயில் மூலவர், அதை அமைத்த "மாதாராம்" மன்னன் பாலிதுங்கன் மகாசம்புவின் சாயலில். |
ஒருவர் உண்மையாக சைவமேன்மைக்காக உழைக்கின்றார் என்றால், சைவம் ஏற்றுக்கொள்ளும் இந்தப் பன்மைத்துவத்தைக் கண்டு வியக்கவேண்டும். வெறுமனே “இந்து வேறு - சைவம் வேறு” என்று வாதாடாமல், இந்த வாதங்களை முன்வைத்து “அட, இந்து என்றாலே உண்மையில் சைவன் தானையா” என்று நிரூபிக்கவேண்டும். இந்தப் பரந்த மனப்பான்மையின் பெருமைக்குரிய சந்ததியர் நாம் என்று கர்வப்படவேண்டும். ஆனால், நடப்பது அதுவல்லவே!
வெறுமனே வாயார “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகெலாம்” என்று சொன்னால் மட்டும் போதாது! ஒருகாலத்தில் அது எப்படி உலகெலாம் விளங்கியது என்றால் சமரசங்கள் மூலமும், அரவணைத்தல்கள் மூலமும் தான். திணித்தல்கள் மூலமோ, அடிமட்ட மக்களின் நம்பிக்கைகளை உதாசீனம் செய்தோ அது வளரவில்லை, சைவம் போன்ற மென்மையான ஒரு சமயம் அப்படி வளரவும் முடியாது!
நாவலரின் அந்தக்காலச் சூழலை உணர்ந்துகொண்டு, அவர் அப்படிச் சொன்னதை ஏற்றுக்கொள்ளமுடிகின்றது. ஆனால், இன்றைக்கும் யதார்த்தத்தை உணர்ந்துகொள்ளாமல் அவர் சொன்னதை மாத்திரமே தூக்கிப்பிடித்து, “தாம்தான் சைவத்தை வளர்க்கிறோம்!” என்று கூப்பாடு போடுபவர்களை, என்னென்று சொல்வது. அவர்களைச் சைவனாக, நான் என்ன, அந்தச் சிவமே ஏற்றுக்கொள்ளாது!
சமணசமயந்தழுவிய கண்ணகி (அல்லது பௌத்தமத பத்தினிதேவியோ) சைவசமயத்தினால் உள்வாங்கப்பட்டாள் (absorbed), சைவப்பாடல்களில் இடம்பெற்றாள் என்பது ஸ்வாரஸ்யமான தகவலே. ஆனாலும், ஆகமவிதிப்படியே வழிபாடு செய்யவேண்டும் என்பதே ஆறுமுக நாவலப்பெருமாணார் அவர்களின் கொள்கையாம். நிபுணரல்லாதவர் யாரைவேனாலும் சைவத்திற்கு ஏற்புடையவர் என்று மனதளவில் எண்ணிக்கொள்ளலாம். கண்ணகி உமயவள் என்று எண்ணிக்கொள்ளலாம். ஆனால், ஆகமவிதிப்படி அமையும் சிவாலயத்தில் ஆகமங்களும் ஆகம நிபுணர்களும் தான் தக்கது எது தகாதது எது என்று நிர்ணயிக்க தகுதிப்பெற்றவர்கள். ஆகமத்தில்லில்லாத தேவதையை சிவனார்மக்கள் இருவரைவிட மேன்மையான இடமளிப்பது பிழையே! நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மாரியம்மன், இசக்கியம்மன், பிடாரியம்மன், சுடலைமாடன் முதலான கிராமியத்தேவதைகள் ஆகம விதிப்படி ஆலயம் அமைத்து வழிபடப்படும் ஆலயங்களில், பிள்ளையாரும் முருகனும் பரிவாரங்களாக வீற்றிருக்கவில்லையா? கணவனால் தண்டிக்கப்பட்ட முனிபத்தினி ரேணுகையின் வழிபாடு என்றாலும் பரவாயில்லை, மாரியை உமையாக ஏற்றுக்கொள்ளும் போது, கண்ணகிக்கு மட்டும் ஏன் மறுப்பு?
நீக்குசிவாலயத்தில் கண்ணகியை உமையவள் இடத்தில் அமர்த்துவது தவறாக இருக்கலாம். ஆனால் கண்ணகியைத் தனியே வழிபடும் போது - ஆகம மரபுக்கு உட்பட்டோ அல்லாமலோ - அவளை உமையவளின் அம்சமாகக் கொண்டு கணேச-கந்தர்களை அமர்த்துவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.
ஆகமங்கள் மாற்றத்தை ஏற்றுக்கொண்டு மாறிக்கொண்டு தான் இருக்கின்றன. பிள்ளையார் - முருகன் ஆலயங்களில் சிவனோ உமையோ பரிவாரமூர்த்திகள் அல்ல. ஆனால், மகாமண்டப வாயிலின் இருபுறமும் சிவனுக்கும் சக்திக்கும் சன்னதி அமைத்து வழிபடலாம் என்பது எந்த ஆகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது? இன்று நிறைய பிள்ளையார் - முருகன் கோவில்களில் அந்த அமைப்பைக் காண்கின்றோமே? இதுவரை சிவாகமத்தில் குறிப்பிடப்படாத மாரிக்கு, ஆகமப்பிரமாணங்கள் உருவாக்கப்பட்டு, அண்மையில் ஆகமநூலொன்றின் பின்னிணைப்பாக வெளியிடப்பட்டிருந்தது. ஆகமத்தில் குறிப்பிடப்படும் மூத்த அம்மை ஜ்யேஷ்டைக்கும் சண்டேசருக்கும், இன்று எங்கே தனிச்சன்னதி - தனிக்கோவில் அமைத்துக் கும்பிடுகின்றோம்?
காலமாற்றத்தோடு இயைந்துபோகாத நடைமுறைகள் விரைவிலேயே வழக்கொழிந்துபோவது உண்மை. கண்ணகி உமையின் அம்சமாக மக்கள் மனதில் பதிந்துவிட்டாள் என்பதைக் காட்டுவதே தமியேனின் இப்பதிவு. அவளருகே ஈசன்மைந்தரை வழிபடுவது ஆகமப்படி தவறு என்பதை, பாமரச் சைவ மனது ஏற்றுக்கொள்ளாது. அதன் எதிர்மறை விளைவுகள் சிவனுக்கும் அல்ல, கண்ணகிக்கும் அல்ல. சைவத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும்!