பொற்புறா அன்னை!

வைகாசி பிறந்தாலே கிழக்குக்கரையோரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுவிடும். ஊரெல்லாம் கண்ணகியின் நாட்கள் கழிந்துகொண்டிருக்கும். அந்தக் கொண்டாட்ட நாட்களில், கண்ணகி தொடர்பான அரிய தகவல்கள் எதையும் பார்ப்பதே பொருத்தமானது, இல்லையா?

சிவாகமவிதிக்கு உட்பட்டு, மேல்நிலையாக்கத்துக்கு ஆளான எல்லாக் கண்ணகி ஆலயங்களிலும் சிங்கமே அவள் வாகனமாக அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அரிதாக நந்தியும் அவள் வாகனமாகச் சொல்லப்படும். ஆனால், கிழக்கிலங்கை மரபில் கண்ணகியின் ஊர்தி எது தெரியுமா? புறா, பொன்னிறப் புறா, பொற்புறா!


கிழக்கிலங்கையில் மிகப்பழையவையாக இனங்காணப்படும் கண்ணகி ஆலயங்கள் மூன்று. பட்டிமேடு, தம்பிலுவில் மற்றும் காரைதீவு. அவற்றில் முதல் இரண்டிலும், கண்ணகிக்கும் புறாவுக்கும் உள்ள உறவு, இன்றும் விசேடமாக நினைவுகூரப்படுகிறது.

தம்பிலுவில் அம்மன் கோயிலின் தோற்றம் தொடர்பான ஒரு கதையில் புறா இணைத்துச் சொல்லப்படுகிறது.  பெண்கள் விறகு பொறுக்க வந்தபோது அவர்களை அலைக்கழித்த ஒரு வினோதமான பொன்னிறப் புறா, “கண்ணகி!” என்று குனுகியதாகவும், அது மறைந்த இடத்தில், இங்குள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டதாகவும், அக்கதை செல்லும்.

பட்டிமேட்டின் மீது பாடப்பட்ட ஒரு கண்ணகி இலக்கியத்தின் பெயரே “பொற்புறா வந்த காவியம்” என்பது தான். பொதுவாக அதைப் பட்டிமேட்டின் தலபுராணம் என்று சொல்வதுண்டு. இக்காவியம், ஒரே காலத்தில், அல்லது ஒன்றன்பின் ஒன்றாக, தம்பிலுவில், இறக்காமம், காரைதீவு, பட்டிமேடு ஆகிய இடங்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் எழுந்ததைப் பாடுகின்றது. அப்படி ஆலயங்கள் எழுவதற்குக் காரணம் ஒரு புறா. பொற்புறா. பொற்புறா வடிவில் நாகமங்கலை அம்மன் வாவிக்கரைக்கு பறந்து வந்ததாகவும், அப்புறா  மூலமே இங்கு கண்ணகி வழிபாடு நிலைபெற்றதாகவும் இக்காவியம் பாடும். 



பொற்புறா வந்த காவியத்தின் காலத்தை சரியாகக் கணிக்க முடியவில்லை. பொற்புறாவாகக் கண்ணகி வந்தது கலி பிறந்து 3300இல் (கி.பி 198) என்று இக்காவியம் சொல்கிறது. அதை உறுதிப்படுத்த வேறு எந்தச் சான்றுகளும் நமக்குக் கிடைக்கவில்லை. இன்னொரு வாய்மொழிக் கதை ஒன்றின் படி, பட்டிமேட்டுக்கு சீதாவாக்கையிலிருந்து பொற்புறா பறந்து வந்தது என்கிறார்கள். சீதாவாக்கை என்பது இன்றைய தென்னிலங்கையின் அவிசாவளைப் பகுதியில் 1521 முதல் 1594 வரை நிலவிய ஒரு சிங்கள அரசு.

பட்டிமேடு மற்றும் தம்பிலுவில் என்னும் கிழக்கின் இரு ஆதிக்கண்ணகித்தலங்களிலும் மாத்திரமல்ல; இன்னோரிடத்திலும் கண்ணகியைப் புறாவோடு இணைக்கும் தொன்மம்  விசேடமாக நினைவுகூரப்பட்டு வருகின்றது. கிழக்கில் ஊர்தோறும் வைகாசி மாதம் கண்ணகிக்காக இடம்பெறும் குளிர்த்திச்சடங்கில் முத்தாய்ப்பாக அமைவது, குளிர்த்திக் காவியம். அதில் இரண்டு இடங்களில் புறா குறிப்பிடப்பட்டிருக்கிறது. "கோலப்புறாவே கொடுவாராய் வெற்றிலையே", "ஓதாய் புறாவே ஓம் நமசிவாயமென்று".

“ஓதாய் புறாவே, கோலப்புறாவே” என்றெல்லாம் புறா பாடப்படுவது, கண்ணகி வழிபாட்டில் அப்பறவைக்கு இருக்கும் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுவது தான். இப்படி புறாவை கண்ணகியோடு இணைத்துப் பார்க்கும் வழக்கத்துக்கு எது மூலமாக இருந்திருக்கக்கூடும்? அதை உறுதியாகக் கூற முடியவில்லை.

புவியியல் ரீதியில் இங்கு நிறைந்து வாழும் புறாக்கள் இயல்பாகவே தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கலாம். மாட்டிலிருந்து சுண்டெலி வரை நம் தெய்வங்களோடு இணைத்துச்சொல்லப்படும் எல்லாமே புவியியல் ரீதியில் நமக்கு நெருக்கமான விலங்குகள் தானே? எங்காவது கங்காருவோ தீக்கோழியோ இந்தியத் துணைக்கண்ட வழிபாட்டு மரபுகளில் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளனவா?

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் வாய்ச்சொல்லாக ஓரிடத்தில் வரும் புறா கவனிக்கத்தக்கது. “இமையவர் வியப்ப புள்ளுறு புன்கண் தீர்த்தோன்”என்று புறாவைக் காத்த சிபிச்சோழனின் நாட்டவள் நான் என்றே பாண்டியனிடம் தன்னை அறிமுகப்படுத்துகிறாள் கண்ணகி.

புறாவுக்காக தன்னையே அர்ப்பணிக்கும் சிபி
சிபிச்சக்கரவர்த்தி புறாவுக்காக இரங்கி கழுகுக்கு தன் உடலை அரிந்து கொடுத்த இப்புராணக்கதை புகழ்பெற்ற ஒன்று. சிபியைச் சோதிக்க புறாவாக வந்தவன் அக்கினி தேவன் என்று இக்கதை நீளும். நெருப்புக்கும் கண்ணகிக்கும் இடையே உள்ள உறவை இணைத்து, சிபிச்சோழன் கதையில் வரும் அக்கினிப்புறாவே பின்பு கண்ணகியையும் புறாவாகவே காண நாட்டார் மனதைத் தூண்டியதா என்று சிந்திக்கலாம்.

புறாவுக்கு கிறிஸ்தவ மரபில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. தூதுப்பறவையாகவும் செல்லப்பிராணியாகவும் புறா நீடித்தாலும்,   சைவ– வைணவத் தொன்மங்களில், பொதுவாக, புறாவை இறையூர்தியாகவோ இறையம்சமாகவோ சொல்லும் வழக்கம் இல்லை அல்லது மிகக்குறைவு. சில பௌத்த ஜாதகக் கதைகள் தவிர, சிங்களப்பண்பாட்டில்கூட புறாவுக்கு இத்தனை முக்கியத்துவம் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை. பத்தினியும் புறாவும் தொடர்பான வேறேதும் தொன்மங்கள் கிடைத்தாலன்றி, இந்த மர்மத்தைத் துலக்குவது எளிய காரியம் அல்ல. இந்தியத் துணைக்கண்ட மரபில் புறாவை இறையம்சமாகச் சொல்வது, இலங்கைத்தமிழர்க்கே – குறிப்பாக கிழக்குத் தமிழர்க்கே உரித்தான பண்பாட்டுத் தனித்துவம் எனலாம்.

புறா என்பது சமகாலத்தில், உலகெங்கும், அமைதிக்கும் சமாதானத்துக்குமான அடையாளமாக பரவலாக எடுத்தாளப்படும் குறியீடு. புறாவை கண்ணகியோடு இணைக்கும் கிழக்கிலங்கைத் தொன்மத்தை இந்த நவீன நோக்குநிலையில் அணுகும் போது நமக்கு மிகப்பெரிய தரிசனமொன்று கிட்டுகின்றது. ஒன்றோடொன்று முட்டிமோதும் சிங்கள – தமிழ் இனங்கள் பேதமின்றிக் கைகூப்பி நிற்கும் பொதுவான அன்னை பத்தினி கண்ணகி. இரு இனங்களையும் இணைக்கும் புறாவாக அவள் இலங்கை மண்ணில் சிறகடித்து எழ வேண்டும், குருதி ஈரம் காயாத ஈழதேசத்தில், அந்தப் பொற்புறாவின் நிழல் விழுந்து புதிய பொற்காலம் ஒன்று பிறக்கவேண்டும். பொற்புறவு அன்னையிடம் அப்படி வேண்டுவது தவிர, நாம் செய்யக்கூடுவது தான் யாது? 


(அரங்கம் பத்திரிகையில் 25 மே 2018இல் வெளியான கட்டுரையின் திருத்திய வடிவம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)