பௌத்தரின் கதிர்காமமும் தாய்லாந்தும்!


கதிர்காமம் கட்டுரைத் தொடர் 02

பார்வதி மாணிக்கத்துக்கு கொஞ்சம் சாப்பாடு தான் கிடைத்தது. அவளுக்கு இரு மகன்கள். கணவன் ஈஸ்வரனை பரிதாபமாகப் பார்த்தாள் அவள். ஈஸ்வரனோ புன்னகைத்தபடி, இரு மகன்மாரையும் அழைத்தார். கொஞ்சமே உணவு இருப்பதால், ஒருவருக்கே தர முடியும் செல்வங்களே! உங்களில் யார் முதன்முதலில் இந்த உவர்நீர்ப்பரப்பை வலம் வருகின்றார்களோ அவருக்கே இந்த சாப்பாடு.என்று அருகே கடலைக் காட்டினார் அவர். ஒருசொல்லும் சொல்லாமல் இளையவன் கந்தகுமாரன், தன் மயிலில் ஏறிப் பறந்தான், சமுத்திரத்தை வலம்வர! என்னடா எங்கயோ கேட்டமாதிரி…. அடேய், இது ஞானப்பழம் கதை தானே என்று முறைக்காதீர்கள். பொறுமை! முழுக்க வாசியுங்களன்!

மூத்தவன் குண்டுக் கணநாதன் யோசித்தான். கடலைச் சுற்றுவது என்ன, வீட்டிலிருந்து கடற்கரைக்குக் கூட அவனால் நடக்கமுடியாது. இரண்டு எட்டு வைத்தாலே இளைக்கும் சீனி வருத்தஉடம்பு அவனுக்கு. ஆனால் உடம்பை விடப்பெரிய மூளை. தலை வேறு யானைத்தலை இல்லையா! அப்பா உவர்நீர்ப்பரப்பை அல்லவா சுற்றிவரச் சொன்னார். உவர்நீர்…. உப்பு.. நீர்…...! அப்படியென்றால்…” அவன் முகத்தில் புன்னகை பளிச்சிட்டது. யானைச் சிரிப்பு! ஞானச்சிரிப்பு!

சமையலறையில் அம்மா உப்புக்கு நீருற்றி வைத்திருந்த சிரட்டையைத் தூக்கிக் கொணர்ந்து வைத்து அதைச் சுற்றிவந்தான்; “அப்பா, உப்புநீர்ப்பரப்பை வலம் வரச்சொன்னீர்கள். இதோ உப்புச்சிரட்டை. வலம்வந்துவிட்டேன். கொடுங்கள் சாப்பாட்டை!என்று கைநீட்டினான்.

அவன் புத்திக்கூர்மையைப் பாராட்டிய ஈஸ்வரனும் பார்வதியும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள். கஷ்டப்பட்டு கடலெல்லாம் சுற்றிவந்த கந்தகுமாரன், குடும்பமே தன்னை ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி சண்டைபிடித்து அழுதுகொண்டே கதிரைமலை உச்சியில் போய் நின்றுகொண்டான்.

ஆம்! இது தான் இலங்கையின் ஞானப்பழக்கதை! உப்புநீர் வலம்என்ற பொருளில் கரதிய வலல்லஎன்ற பெயரில், புகழ்பெற்ற சிங்கள நாட்டார் கதை இது! ஈஸ்வரதெவியோ, “பார்வதிமெணியக், “கணதெவியோ, “ஸ்கந்தகுமாரயாவெடசிதிகந்த (கதிரமலை) எல்லாம் அப்படியே வருகிறார்கள். கரதிய வலல்லவை அழகாக்குவதே, பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன் நம் வீட்டுக் குசினிகளையும் அலங்கரித்துக்கொண்டிருந்த அதே உப்புச் சிரட்டைதான்.

சரி, கதிர்காமத்துக்கும் உப்புச்சிரட்டைக்கும் என்ன சம்மந்தம்?
  
சொல்கிறேன். பொறுங்கள். சிங்களபௌத்தப் பாரம்பரியத்தில் கதிர்காமக் கந்தன், இன்று முக்கியமான இடத்தை வகிக்கிறான். முருகன் பற்றிய சுவையான பல நாட்டார் கதைகள் அவர்களிடம் நிலவுகின்றன. அவை எல்லாமே கதிர்காமத்தை அடிப்படையாக வைத்தவை. கதிர்காமம் இன்று ருகுணு மகா கதரகம தேவாலயமாக மாறியிருப்பதன் பின்னணியில் அவற்றை நோக்கினால் பல புதிர்கள் அவிழ்வதைக் காணலாம். பௌத்தருக்கும் கதிர்காமத்துக்கும் உள்ள உறவு தான் என்ன?

இதை இரண்டாகப் பார்க்கலாம். ஒன்று இலங்கையில் பௌத்தருக்கும் முருகனுக்கும் உள்ள உறவு. அடுத்தது அவர்களுக்கும் கதிர்காமத்துக்கும் உள்ள உறவு. இலங்கையில் முருகன் பற்றிய முதல் குறிப்பு, கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூளவம்சத்தில் தான் வருகின்றது. இரண்டாம் காசிபனின் (கி.பி 652 - 661) மகனான மானவர்மன், குமாரனை வழிபட்ட செய்தி அதில் உண்டு. வீரபாகு, வீரப்பெருமாள் பராக்கிரமபாகு, போன்ற முருகனின் அல்லது முருகனுடன் தொடர்புபட்ட பெயர்கள், இலங்கை வரலாற்றில் அதிகம் தென்படுகின்ற காலம் இதுவே என்பது ஊன்றி நோக்கத்தக்கது. கம்பளை இலங்காதிலக விகாரையிலும், கடலாதெனிய விகாரையிலும், 16ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில், “ஸ்கந்தஎன்ற தெய்வத்தின் பெயர் வருகின்றது. அதே காலத்தில் கடலாதெனியவுக்கு அருகே அமைக்கப்பட்ட எம்பக்கே தேவாலயத்தின் மூலவரே முருகன் தான்.  

கதிர்காமத்தில் சிங்களவரின் உரித்தைச் சொல்ல இன்று இரு கதைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று, எல்லாளனை வெல்வதற்காக உரோகண மன்னன் துட்டகைமுனு கதிர்காமக் கடவுளிடம் நேர்த்திக்கடன் வைத்து, வென்றபின் இக்கோவிலைக் கட்டினான் என்பது கந்த உபாத எனும் அண்மைய கால சிங்கள நூலில் இக்கதை சொல்லப்படுகிறது. இன்னொரு கதை, மகாசேன மன்னன் இறந்தபின்னர், இங்கு அவனுக்காக அமைக்கப்பட்ட நினைவாலயமே கதிர்காமம் என்கின்றது.

ஆனால் இந்தக் கதைகள் எதுவும் பழைமையான இலங்கை வரலாற்று நூல்கள் எதிலும் காணப்படவில்லை. இத்தனைக்கும் கதிர்காமம் காஜரகாமம் என்ற பெயரில் இரு தடவை மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முதல் தடவை, சங்கமித்தை கொணர்ந்த வெள்ளரசுக்கிளையை நாட்டும் சடங்கில் காஜரகாம சந்தனகாம சத்திரியர்கள் கலந்துகொண்டதைச் சொல்கின்றது. அடுத்தது தப்புல மன்னன், காஜரகாமத்தில் பௌத்த மடம் அமைத்தது பற்றிய செய்தி. இரண்டிலுமே அங்கு முருகன் கோவில் உண்டென்றோ, அக்கோவில் பௌத்தரால் போற்றப்படுகின்றது என்ற தகவலோ இல்லை.

ஆனால், கதிர்காமத்தில் இன்றுள்ள கிரிவிகாரை உண்மையிலேயே மிகப்பழைமை வாய்ந்த ஒன்று தான் என்பதற்கு தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன. தப்புல மன்னன் அமைத்த பௌத்த மடமும் கிரிவிகாரையை அண்டிய பகுதியிலேயே அமைந்திருக்க வாய்ப்புகள் உண்டு. பேராசிரியர் சி.பத்மநாதன் இதை வைத்து ஒரு ஊகத்துக்கு வந்திருக்கிறார். கதிர்காமம் அல்லது கஜரகாமம் மிகப்பழைய பௌத்த மையம். அங்கு புத்தபிரானுக்கு பரிவார மூர்த்தியாக அல்லது காவல் தெய்வமாக அமர்ந்திருந்தவனே முருகன். கிரி விகாரை கைவிடப்பட்டு சிதைந்தொழிந்து சூரன் கோட்டையாக மாற, அவனே கதிர்காமத்தெய்வமாக உயர்ந்திருக்கிறான்.

புத்தருக்குப் பரிவாரமாக முருகன் இருந்தானா? அதுவும் பரிவாரமாக வீற்றிருந்த தெய்வம் முதன்மைத் தெய்வமாக மாறியதா? இதென்ன விசர்க்கதை?

ஒரு குழப்பமும் இல்லை. எந்தத் தெய்வத்துக்கு கோவில் அமைக்கப்பட்டதோ, அந்தக் கோவிலில் வீற்றிருந்த பரிவாரத் தெய்வம், பிற்காலத்தில் முதன்மைத் தெய்வத்தை விட புகழ்பெற்ற சம்பவங்கள் வழக்கமாக நடப்பது தான். தமிழகத்தின் பிள்ளையார்பட்டி ஆலயத்தின் மூலவர் சிவபெருமான். ஆனால் இன்று அது ஒரு பிள்ளையார் கோவில். திருநள்ளாறும் ஒரு சிவாலயமே. சனீஸ்வரன் திருநள்ளாறில் ஒரு பரிவாரத்தெய்வம். இன்று சனீஸ்வரன் கோவில் என்று அழைத்தபடி தமிழகச் சனமெல்லாம் எள்ளெண்ணெயோடு அங்கே ஓடிக்கொண்டு இருக்கிறது.


பத்மநாதனின் முடிவை உறுதி செய்ய அவரது இன்னொரு ஆதாரத்தையே காட்டலாம். குருநாகல் மாவட்டத்திலுள்ள நிக்கவரெட்டியவுக்குப் பக்கத்தில் புதுமுத்தாவை எனும் கிராமம் ஒன்று உள்ளது. அங்கிருந்த ஐநூற்றுவன்பள்ளி எனும் பௌத்தவிகாரையில் பொற்பெருஞ்செட்டியார் என்ற பெயரில் வீற்றிருந்த முருகன், அங்கு பரிவார தெய்வமாகவே இருந்தவர் என்று கல்வெட்டுச் சான்று மூலம் நிரூபித்துள்ளார் பத்மநாதன். தமிழ்க்கல்வெட்டு கிடைத்துள்ள அவ்விகாரம், தமிழ்ப்பௌத்தர்களால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்பது கூடுதல் தகவல்.

இலங்கையில் வெகுகாலத்துக்கு முன்பேயே முருகன் புத்தரின் காவல் தெய்வம் ஆகிவிட்டான். விஷ்ணு, முருகன், விபீஷணன், சமன் ஆகிய நான்கு பௌத்தக் காவல் தெய்வங்களையும் பற்றி 14ஆம் நூற்றாண்டு நிகாய சங்கிரகம் முதல் பல பௌத்தநூல்கள் குறிப்பிட்டுள்ளன. இன்றும் புத்தர் படிமங்களின் இருபுறமும் திருமாலும் முருகனும் அமைக்கப்படுவதை  இலங்கையில் காணலாம். ஆக, கதிர்காமம் தொடர்பில் பத்மநாதன் சேரின் ஊகம் சரியாக இருக்கலாம் என்றே கொள்ளவேண்டி இருக்கிறது.

இன்னொரு அதிர்ச்சியூட்டும் ஒரு செய்தியையும் உங்களுக்கு சொல்லவேண்டும். 
 
ஜதுகம் ரமதேப் தாயத்து
2000களின் ஆரம்பத்தில் தாய்லாந்து அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் ஜதுகம் ரமதேப்என்ற  தெய்வத்தின் உருவம் பொறித்த தாயத்து. கூட வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்பட்ட அந்தத் தாயத்து, தாய்லாந்தின் பல விகாரைகளிலும் விற்கப்பட்டது. 2006இல் ஒரு விகாரையில் ஜதுகம் ரமதேப்பை விற்றபோது ஏற்பட்ட போட்டியிலும் நெரிசலிலும் சிக்கி ஒரு பெண் இறந்தார். வசதியில்லாதவர்கள் திருட்டில் இறங்க, ஜதுகம் ரமதேப் காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் பெருகின. அதிர்ஷ்டம் வந்ததோ இல்லையோ, தாய்லாந்து அரசுக்கு ஜதுகம் ரமதேப்பால் தலையிடி கூடியது. எனவே, தாய்லாந்தின் அரச பிக்கு தலையிட்டு, ஜதுகம் ரமதேப்பைக் கட்டுப்படுத்தவேண்டி நேரிட்டது. இப்போது விடயம் அதுவல்ல. ஜதுகம் ரமதேப் யாரென்று தெரியுமா?

தாய்லாந்திலுள்ளநகொன் சி தம்மரத்நகரிலுள்ள விகாரையில் தான் முதலாவது ஜதுகம் ரமதேப் தயாரித்து விற்கப்பட்டது. இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகளால் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த விகாரைகளில் ஒன்று அது. அவ்விகாரையின் கதவில், ஒருபுறம் வில்லேந்திய விஷ்ணு உருவமும், இன்னொருபுறம் நான்குக்கு மேற்பட்ட முகங்களும் ஆயுதங்களும் கொண்டுள்ள தேவர் ஒருவரின் உருவமும் காணப்படுகின்றன. இன்னும் விகாரைச் சுவரில் இருபுறமும் இரண்டு மழுங்கிய சிலைகள் உள்ளன. ஒன்றின் கீழே ராமதேவ என்றும் இன்னொன்றின் கீழே காட்டுகம என்றும் பழைய தாய் எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.

இலங்கைச் சிற்பிகளால் அமைக்கப்பட்ட இவ்விகாரத்தில், ராமதேவ, காட்டுகம என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், கதவில் செதுக்கப்பட்டுள்ள இரு தேவர்கள்,  விஷ்ணுவும் முருகனும் தான் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. தாய்லாந்தில் விஷ்ணு இராமராகவே பிரசித்தம் என்பதால் அவரை ராமதேவ என்றே சித்தரித்துள்ளார்கள். என்றால் காட்டுகம? வேறு யார் கதிர்காமன் தான். “காட்டுகம் ராமதேவஎன்பதை தனக்குப் புரிந்தால் போல் புரிந்துகொண்ட பேர்வழி ஒருவர் தான்ஜதுகம் ரமதேப்என்ற புதுக்கடவுளின் பெயரில் தாயத்தை உருவாக்கி கதை பரப்பிய சூத்திரதாரி என்று சொல்கிறார்கள். இங்கிருந்து வேலை மெனக்கெட்டு தாய்லாந்து போன கதிர்காமக் கடவுள் எப்படிப்பட்ட அநியாய வேலைக்கெல்லாம் உடந்தையாக இருந்திருக்கிறான் பாருங்கள்.
 
நகொன் சி தம்மரத் விகாரை நுழைவாயில்
நீ சும்மா பழிசுமத்தாதே. இலங்கைப் பௌத்த இலக்கியங்களில்ஸ்கந்த குமாரஎன்ற பெயரே இருக்கும் போது, தாய்லாந்தில் எழுதியுள்ளகாட்டுகம்என் அப்பன் கதிர்காமக் கந்தனின் பெயர் தான் என்று எப்படிச் சொல்லுவாய்?

அஸ்கு புஸ்குஆதாரம் இருக்கிறதே! கி.பி 1547இல் மியன்மாரில் எழுதப்பட்டஜினகலாமாலிஎனும் பாளி மொழி நூலில் ஒரு கதை இருக்கிறது. சுகோதையின் (தாய்லாந்து) மன்னன், இலங்கையில் புத்தபிரானின் அரிய திருவுருவம் ஒன்று இருக்கிறது என்று கேள்விப்பட்டு அதை எடுத்துவருமாறு நகொன் சி தம்மரத்தின் ஏவலர்களை அனுப்புகிறான். அவனுக்குக் கிடைத்த பதில், “இலங்கைத்தீவை சுமண, ராம, லக்கண, காட்டுகாம என்று நான்கு தேவர்கள் காப்பதால், அந்நாட்டை வென்று அச்சிலையை எடுத்து வர முடியாது.” சிங்களவர்களின் நான்கு காவல் தெய்வங்களும் யார் யார் என்று மேலே பார்த்தோம். ராமரும் விஷ்ணுவும் ஒருவர் தான் என்றால், லக்கண (லக்ஷ்மணன்) தவிர, ஜினகலாமாலியின் பட்டியல் அப்படியே பொருந்துகிறது. பௌத்தக் கதிர்காமம் பற்றிக் குறிப்பிடுகின்ற முதலாவது எழுத்துமூல ஆதாரமும் இந்த ஜினகலாமாலி தான்.

ஆக, கதிர்காமம் பௌத்தருக்குச் சொந்தமானது, சிங்களவரின் கோவில் என்றே சொல்கிறாயா? உங்கள் பதற்றத்தைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. என்னவென்றால்…. ஊகும். அதெல்லாம் இப்போதைக்குச் சொல்லமுடியாது. நீங்கள் பல்லைக் கடித்தபடியோ நகத்தைக் கடித்தபடியோ அடுத்தவாரம் வரை காத்திருக்கத்தான் வேண்டும். பல்லு உடைந்தாலோ, அடுத்த கிழமை நகத்தைக் காணவில்லை என்றாலோ சங்கம் பொறுப்பல்ல. 😊1

(அரங்கம் பத்திரிகை ஆக்கம் - 20.03.2018)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)