பட்டிமேட்டு அம்மன்! பாழடைந்த நாடுகாடு!
- நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டிலிருந்து
நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டில்
கிடைக்கின்ற சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களில் குறிப்பிடத்தக்கது, பட்டிமேட்டு கண்ணகி அம்மன் ஆலயம் பற்றிய குறிப்பு. கிழக்கிலங்கையில்
கண்ணகி வழிபாட்டின் தோற்றம், வளர்ச்சி பற்றிய தகவல்களை ஆராய,
இக்கல்வெட்டு முக்கியமான ஒரு ஆவணமாக விளங்குகின்றது. கண்ணகி வழிபாட்டைப் பொறுத்தவரை, கிழக்கிலங்கையில் தம்பிலுவில்,
பட்டிமேடு, காரைதீவு ஆகிய மூன்று இடங்களையும் முதன்மையான
இடங்களாகக் குறிப்பிடுவது மரபு. இவை மூன்றிலும், நாடுகாடுப் பரவணியில் பட்டிமேடு, காரைதீவு என்பன குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தம்பிலுவில்லுக்குப் பதிலாக கோவில்மேடு என்றோர் இடம் சொல்லப்படுகின்றது.
பட்டிமேட்டு அம்மன் கோவில் |
மதுரைக்குப் போய் கண்ணகியை
வணங்கி வந்த சின்னத்தம்பிப் போடியிடம் “நான் இங்கே இருக்க
நீ அங்கே போகவேண்டாமென்று” என்று அம்மன் சொல்லி, கோவில்மேட்டில் கோவில் கொண்டாள். வோறாகொடைக் கல்லிலிருந்து
(சடையந்தலாவையின் வீரகொட எல்ல?) பரிவார தெய்வங்களைக்
கொணர்ந்து, வழிபாட்டுக்கென சிங்களக்கட்டாடியையும் பெண்சாதியையும்
சிங்களப்பத்ததியோடு சின்னத்தம்பிப் போடி அழைத்து வருகிறார். கட்டாடியின்
பெண்சாதிக்கு பிள்ளை பிறந்தபோது தாயும் சேயும் இறக்க, சின்னத்தம்பிப்போடியின்
மகளான கந்தி அம்மையாரே அம்மனைப் பரிபாலித்து வருகிறார். கந்தி
மனுதி மழுவெடுத்த செட்டி குலத்தைச் சேர்ந்த ஒருவனை மணம் புரிந்திருந்தார். அந்த “வங்கிஷம் காலற்றுப்” போனபோது,
கோவில்மேட்டை விட்டு, அம்மனோடு பட்டிமேட்டுக்குப்
போய்க் குடியிருக்கிறார்கள். அம்மனைத் தரிசிக்க வந்த ராஜபக்ஷ முதலியார் இதை அறிந்து கோபித்து அவர்களைத் ‘தேடப்படாதென்று’
காரைக்காட்டு வேளாளன் கருணாகரக் கட்டாடியிடம் மக்களை அனுப்பி,
காரைதீவில் அம்மன் கோவில் அமைக்கிறார்.
கோவில்மேடு என்பது எங்கிருந்ததென்று
தெரியவில்லை. ஆனால், சிங்களக்கட்டாடி
பற்றிய தொன்மத்தையும், பட்டிமேட்டு நம்பிக்கையில் “அம்மாள் சீதாவாக்கையிலிருந்து
பறந்து வந்தாள்” என்று சொல்லப்படுவதையும் ஓரளவு ஒப்பிட்டு நோக்கலாம்.
கந்தியை மணந்துகொள்பவன் “மழுவெடுத்த செட்டி”
குலத்தைச் சேர்ந்த ஒருவன். பட்டிமேட்டு அம்மன்
கோவிலை இன்று பரிபாலிப்பவர்கள், மழவராயர் குடியினர். கருணாகரக்கட்டாடி பற்றி வருகின்ற வரிகளில் சில எழுத்துக்கள் சிதைந்துவிட்டன.
அவை சொல்கின்ற விடயம் என்னவென்று அனுமானிக்க முடியவில்லை. காரைதீவில் இன்று வழங்கும் “தேவந்தி அம்மையார்”
தொடர்பான தொன்மமும், “கந்தி அம்மையாருடன்”
இணைத்து ஆராயத்தக்கது.
பரவணிக் கல்வெட்டையும் பிற்கால
கண்ணகி இலக்கியமான பொற்புறா வந்த காவியத்தையும் இந்த இடத்தில் ஒப்பிடுவது வேறு சில
செய்திகளை நமக்குத் தரலாம். பொற்புறா வந்த காவியத்தின் படி
புறாவாகப் பறந்துவந்த கண்ணகை அம்மனுக்கு, தம்பிலுவில்,
இறக்காமம், காரைதீவு, பட்டிமேடு, ஆகிய நான்கு இடங்களில் கண்ணகிக்கு
ஆலயம் அமைக்கப்பட்டது சொல்லப்படுகின்றது. இறக்காமத்தில் இன்று
கண்ணகி ஆலயமெதுவும் இல்லை. அப்படி இருக்க, பொற்புறா வந்த காவியத்தில் இறக்காமம் குறிப்பிடப்படக் காரணம் என்ன என்ற கேள்வியை
எழுப்பினால், அது பரவணிக்கல்வெட்டின் இராஜபக்ஷ முதலியாரிலேயே வந்து நிற்பதைக் காணமுடியும். கோவில்மேடும்
இராஜபக்ஷ முதலியார் வாழ்ந்த இறக்காமத்துக்கு மிக அருகிலேயே இருந்திருக்கிறது
என்று நாம் ஊகிக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்வரை, இறக்காமக் குளத்துக்கு அருகே, சிதைந்த கோவிலொன்றின் அல்லது
பழங்காலக் கட்டிடமொன்றின் இடிபாடுகள் (கோவில்மேடு?) காணப்பட்டதாகச் சொல்லப்படுவதும், இங்கு ஊன்றி நோக்கத்தக்கது.
இறக்காமக் குளம் |
பரவணிக் கல்வெட்டிலுள்ள
ஏனைய வரலாற்றுத் தகவல்களுக்குள்ள பெறுமானமும் மிகப்பெரியது. பட்டம் கட்டின முதலியார், பட்டம் கட்டாத முதலியார்,
தலைமைக்காறப்போடி, இறைகாறப்போடி, நிலைமையிறாளை முதலான பதவிப்பெயர்களும், நாம் போனகிழமை
பார்த்த கண்டி மன்னனின் கீழைக்கரை விஜயம், பௌத்த இஸ்லாமிய வழிபாட்டிடங்களுக்கு
அவன் அளித்த மானியங்கள், பட்டிமேட்டு அம்மன் தொன்மங்கள், இவையெல்லாம் நம்பகத்தன்மை
கூடியவையாகவும், ஏனைய வரலாற்றுச் சான்றுகளோடு ஒப்பிட்டு உறுதிப்படுத்தத்
தக்கவையாகவுமே விளங்குகின்றன. சங்கரவர், குண்ணறையர், ஒலியர் முதலான சாதிப்பெயர்களும் குண்ணறையரின்
சமூகத்தொழில் பாய் இழைத்தல் என்பதும் இந்தப் பரவணிக் கல்வெட்டு வழங்குகின்ற முக்கியமான
சமூகவியல் தகவல்கள்.
கோப்பி குடியார் எனும் சமூகப்பிரிவினர்
நாடுகாட்டுக்கு வந்தார்கள் என்பதும், நாடுகாட்டுக்கு
சோனகர் வந்தமையும், காரைக்காட்டு வேளாளர், திருக்கோவில் பரிவட்டம் வெளுக்கிற வண்ணார் முதலான சமூகங்களின் தகவல்களும் அதே
சமூகவியல் கண்ணோட்டத்தில் இன்றியமையாத இடங்களைப் பெற்றுக்கொள்கின்றன.
இராஜபக்ஷ முதலியார், அவர் உடன்பிறந்தார், உறவினர்கள், குடிமக்கள் ஆகியோரைச் சுற்றியே, இக்கல்வெட்டின் சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. இராஜபக்ஷ முதலியாரின் ஆயுட்காலம் முடிவதுடனேயே நாடுகாடும் பாழடைகின்றது. நாடுகாடுப்பற்றின் மறைவு பற்றிய பரவணிக்கல்வெட்டின் வரிகளும் சுவாரசியமானவை.
இராஜபக்ஷ முதலியார், அங்கு குடியேறியிருந்த இன்னொரு முதலியாரான
பேராதனை அப்புவால் பேய்களை அனுப்பிக் கொல்லப்படுகிறார். அதையறிந்த
ஏனைய முதலிமார், ஏழு வன்னியருடன் இணைந்து அவனைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
அதைப் பேய்கள், பேராதனை அப்புவிடம் சொல்ல,
அவன் அவர்களையும் கொல்லுமாறு ஏவிவிடுகிறான். நடப்பதை அறிந்த இராசகுல தெய்வம் யானையாக
மாறி பேராதனை அப்புவைக் கொன்று வயல்களை அழித்து அழிச்சாட்டியம் பண்ண, அதை அடக்கச் செல்லும் எல்லா மக்களும் தங்களுக்குள் முரண்பட்டு செத்தொழிகிறார்கள்.
கண்டி அரசன் அதை அறிந்து நாடுகாட்டில் இனி யாரும் வதியக்கூடாது என்று
சங்கு சக்கரம் பொறித்து மரத்தில் சாசனம் எழுதி வைக்கிறான். நாடுகாட்டில்
வாழ்ந்த பரம்பரைகள் அதோடு மறைகின்றன.
நாடுகாடுப்பற்றின் முடிவை
விளக்குகின்ற இறுதி வரிகள் மிகைப்படுத்தப்பட்டவை தான். ஆனால்
கொஞ்சம் முயன்றால் அதிலிருந்து நம்மால் வரலாறை உருவ முடியும். நாடுகாடுப்பற்றில் பலம் வாய்ந்தவராக இராஜபக்ஷ முதலியாரின் பரம்பரை விளங்கியிருக்கிறது.
ஏதோ காரணத்தால் முரண்பட்டு, பேராதனை அப்பு இராஜபக்ஷ முதலியை வஞ்சகமாகக் கொன்றிருக்கிறான். அதனால் ஏனைய
முதலியார்கள் பேராதனை அப்புவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி அவனையும் கொன்றிருக்கிறார்கள்.
பலம் வாய்ந்த தலைமை மடிந்த பின்னர், அந்த வெற்றிடத்தை நிரப்புவது யாரென்ற
போட்டி ஏனைய முதலியார்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. விளைவு
நாடுகாடுப்பற்று சுடுகாடாக மாறியிருக்கிறது.
இத்தனை தகவல்கள் கிடைத்தாலும், நாடுகாடுப் பரவணிக் கல்வெட்டை ஒரு முழுமையான வரலாற்று ஆவணமாகக் கொள்ளலாமா?
ஒரு தலைமுறைக்காலத்தில் கல்வெட்டு விவரிக்கும் அனைத்து சம்பவங்களும்
இடம்பெற்றிருக்குமா? என்ற வினாக்களுக்கு விடை இல்லை. விடை தேடுவதற்கான விரிவான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவுமில்லை. தமிழரின் வரலாற்றுணர்வு போலவே, நாடுகாடுப்பரவணிக்கல்வெட்டும் உதாசீனங்களுடன்
மூலையில் கிடக்கிறது.
இறுதியாக, கவனிக்க சுவையான செய்தி ஒன்றுண்டு. பெற்றோருடன் சிறுவனாக
இடம்பெயர்ந்து வரும் இராஜபக்ஷ முதலியாரின் வருகையோடு பிறக்கும்
நாடுகாட்டுப்பற்று எனும் பிரிவு, அவர் இளமையைக் கடக்கும் போது,
விவசாயம் தழைத்து, குடிகள் பெருகி, அந்தப் பற்றும் வளமடைந்து செழிக்க, இறுதியில் இராஜபக்ஷ முதலியாரின் மறைவோடு நாடுகாடும் பாழடைந்து போகின்றது. நாடுகாட்டுப்பரவணிக் கல்வெட்டின் இந்த அமைப்பு, குறியீடுகளும்
படிமங்களும் நிறைந்த ஒரு அருமையான நவீன இலக்கியத்தை வாசித்த அனுபவத்தை அளிக்கிறது.
நம் கையில் கிடைக்கும் இலங்கையின் வரலாற்று ஆவணங்களில் எதிலுமே இல்லாத
சிறப்பம்சம் இது. வெறுமனே போலிப்பெருமிதங்களை, கட்டுக்கதைகளை, முன்முடிவுகளை மனதில் விதைக்கும் நம்
வரலாற்று நூல்களின் மத்தியில், நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டை
சிம்மாசனத்தில் தான் அமர்த்த வேண்டும்.
அதை எழுதியவருக்கும், மொழி பெயர்த்தவருக்கும்,
கட்டிக்காத்தவருக்கும், அதை நம் கையில் தந்த அறிஞர் பெருமக்களுக்கும்
நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம்.
(அரங்கம் பத்திரிகையின் 06 யூலை 2018 இதழில் வெளியான ஆக்கம்)
கருத்துகள்
கருத்துரையிடுக