“வியாளை அரசியின் மட்டக்களப்பு மருமகன்”

(கோயம்பராவின் குறிப்புகளிலிருந்து..)

கதிர்காமம் நடந்து போகும் எல்லாருக்கும் “வியாளை” என்பது நன்கு அறிமுகமான பெயர். குமுக்கனாற்றுக்கும் கதிர்காமத்துக்கும் இடையில் பரந்திருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதி அது. சிங்களத்தில் அதை “யால” என்று சொல்லுவார்கள். கதிர்காம யாத்திரை செல்கின்ற பலர், வியாளையில் ‘கொள்ளி‘பொறுக்கவோ ‘கடன்‘ கழிக்கவோ அந்தப்பக்கம் இந்தப்பக்கம் செல்லும் போது, அங்கு கட்டிட இடிபாடுகளையும் சிதைந்த தொல்பொருள் எச்சங்களையும் காண்பது வழக்கம். ஏனென்றால் பழங்காலத்தில் மக்கள் செறிந்து வாழ்ந்த குடியிருப்புகளில் ஒன்றாகத் திகழ்ந்த இடம், வியாளை.

வியாளையில் பாயும் மாணிக்க கங்கை



சிங்கள வரலாற்று நூல்கள்  சொல்லும் உரோகண நாடு, தென்கிழக்கிலங்கையில் அமைந்திருந்ததாகவும், அதன் தலைநகர் மாகாமம் (இன்றைய திஸ்ஸமகாராமை– கிரிந்த பகுதி) என்றும் சொல்லுவார்கள். அந்த நாட்டின் வட எல்லை, இன்றைய அம்பாறை மாவட்டம்வரை விரிந்திருந்தது என்று கொள்வதற்கு பல சான்றுகள் உள்ளன. மாணிக்ககங்கைக்கு வடக்கே, மட்டக்களப்பின் தென்பகுதியில் அமைந்திருந்த “உன்னரசுகிரி” என்னும் இராசதானி பற்றி ‘மட்டக்களப்புப் பூர்வசரித்திரம்‘  நேரடியாகவும் ‘கோணேசர் கல்வெட்டு‘ நூல் மறைமுகமாகவும் விரிவாகச் சொல்கின்றன. ஒல்லாந்தர், தங்கள் இலங்கை வரைபடங்களில் மட்டக்களப்பின் தென்புற எல்லையாக  அக்கரைப்பற்றின் தென் அந்தமாக விளங்கிய சங்கமன்கண்டியையே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். சங்கமன் கண்டிக்குத் தெற்கே அமைந்திருந்த பாணமைப்பற்று (இன்றைய லகுகலை,பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவுகள்) மாத்திரம்,  மட்டக்களப்புத் தேசத்தின் ஏனைய பற்றுக்கள் போலன்றி, சிங்கள வன்னிமையால் பரிபாலிக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, உன்னரசுகிரி அல்லது உரோகண நாட்டின் ஒரு அரசிருக்கை, கதிர்காமத்துக்கும் சங்கமன்கண்டிக்கும் இடையே, வியாளை மற்றும் பாணமைப்பகுதியை உள்ளடக்கிய பகுதியில் இருந்திருக்கிறது என்ற முடிவுக்கே வந்துசேர முடிகின்றது.

அது இருக்கட்டும். இன்னும் தலைப்புக்கே வந்து சேரவில்லையே? யார் அந்த வியாளை அரசியின் மருமகன் என்று கேட்கிறீர்களா?
வியாளை தேசிய பூங்கா நுழைவாயில்

பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்த போர்த்துக்கேய பாதிரியாரில் குறிப்பிடத்தக்க ஒருவர் சைமாவோ டீ கோயம்பரா.  மட்டக்களப்பு பற்றிக் குறிப்பிடுகின்ற மிகப்பழைய ஆவணங்களில் ஒன்று, இவரால் போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பப்பட்ட கடிதம். அதில் தான் வியாளை அரசியின் மருமகன் பற்றிக் குறிப்பிடுகிறார் கோயம்பரா.

அந்த மடல், 1546ஆம் ஆண்டு போர்த்துக்கேய மன்னனான மூன்றாம் ஜோனுக்கு எழுதப்பட்டது. தான் இந்தியா செல்லும் போது மட்டக்களப்பு மன்னனைச் சந்தித்ததாகவும், அவன்  எழுபது வயது தொண்டுக்கிழவன் என்றும் கோயம்பரா எழுதுகிறார். “மட்டக்களப்பு மன்னன் கிறிஸ்தவத்தைத் தழுவ பெரும் ஆர்வமாக இருக்கும் போதும், அவனது மாமியின் எதிர்ப்பால் அதைச் செய்யாமல் இருந்தான்”, கோயம்பரா தொடர்ந்தும் சொல்கிறார், “ஆனால், அவனது பன்னிரண்டு வயது மகன் ‘தொம் லூயிஸ்‘ என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்றுவிட்டான். இந்த மன்னன், நமக்கு உதவவும், கண்டி இளவரசனோடு சேர்ந்து ஞானஸ்நானம் பெறவும், தயாராக இருக்கிறான். மேலும் மட்டக்களப்புத் துறைமுகங்களை நாம் பயன்படுத்துவதற்கான அனுமதியையும் அவன் வழங்கி இருக்கிறான்”. கோயம்பரா எழுதும் இந்தக் கடிதத்தில், போர்த்துக்கேய அரசனுக்கு வழங்குமாறு கூறி மட்டக்களப்பு மன்னன் தந்ததாகச் சொல்லப்படும் ஒரு கடிதப்பிரதியும் இணைக்கப்பட்டுள்ளது.
வியாளங்கள் உலவும் வியாளை நாடு

இதற்கெல்லாம் மேல், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பு ஒன்று இங்குண்டு. கோயம்பராவின் கடிதத்தில் வருகின்ற, “வியாளை நாடு ஒருபுறம் மாயாதுன்னையின் சீதாவாக்கை நாட்டாலும், மறுபுறம் மட்டக்களப்பு நாட்டாலும் சூழப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு மன்னன் வியாளை அரசியின் மருமகன் என்பதால், அவனே தற்போது வியாளையையும் ஆண்டு வருகிறான்” என்பதே அது.  இதிலிருந்து பல வரலாற்றுத் தகவல்களை நம்மால் பெறமுடிகின்றது.

ஒன்று, வியாளை என்பது தனித்த அரசொன்றால் ஆளப்பட்ட பகுதி. உன்னரசுகிரி என்று மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் சொல்வது,  வெறும் கட்டுக்கதை அல்ல;வியாளைப் பகுதியில் உண்மையில் இருந்த ஒரு சுயாட்சி அரசு தான் என்பது கோயம்பராவின் குறிப்புகள் மூலம் உறுதியாகின்றது.
வியாளை அரசு (Jale), 1735 இடச்சு வரைபடமொன்றில்!

பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்தே, வியாளை ஒரு தனி அரசு என்பதும், அதன் பின்னர் ஏற்பட்ட தொற்றுநோயொன்று காரணமாக அங்கு மெல்ல மெல்ல குடித்தொகை எண்ணிக்கை குறையத்தொடங்கியது என்பதும், இன்னொரு போர்த்துக்கேயக் குறிப்பில் காணக்கிடைக்கின்றன். 

அடுத்தது, கோயம்பரா சொல்லும் மட்டக்களப்பு மன்னனுக்கு முன்பு, இந்த வியாளையை ஆண்டவள் ஒரு அரசி. ஒரு பெண். அவளது மகளை மணந்தே மட்டக்களப்பு மன்னன் இந்த அரசுரிமையைப் பெற்றிருக்கலாம் என்பதும், எனவே வியாளைக்கும் மட்டக்களப்புக்குமான மணத்தொடர்பும் மிகப்பழங்காலத்தொட்டே இயல்பாக இருந்திருக்கிறது என்பதும், ஊகிப்பதற்கு அத்தனை கடினமானதல்ல.

“மட்டக்களப்பு மன்னனின் அன்ரி” தூண்டிவிட்ட கலகத்துக்கு அஞ்சியே அவன் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறவில்லை என்று தான் கோயம்பரா சொல்கிறார். அவர் வியாளை அரசி பற்றி முன்பே குறிப்பிட்டிருப்பதால், அந்த ‘அன்ரி‘,அத்தையாக –  வியாளை அரசியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அவனுக்கு இப்போது எழுபது வயதாகிவிட்டது என்பதும், இப்போது மதம் மாறுவதற்கு அவன் துணிவுடன் ஒத்துக்கொள்கிறான் என்பதும் இப்போது அந்த வியாளைஅரசி உயிரோடு இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.

கோயம்பராவின் காலம், போர்த்துக்கேயர் இலங்கைக்குள் ஊடுருவி விட்ட காலம். ஒருபுறம் சீதாவாக்கை, கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என்னும் நான்கு அரசுகள் அதிகாரத்துக்காகப் போட்டியிட்டுக்கொண்டிருந்த  காலம். அப்போது வியாளை என்னும் சின்னஞ்சிறு பகுதியொன்றை  பெண்ணொருத்தி ஆண்டு வந்திருக்கிறாள். இராஜதந்திரமாக செயற்பட்டு மட்டக்களப்பு மன்னனையும் கூட்டுச் சேர்ந்திருக்கிறாள். அவன் ஆட்சியைத் தக்க வைப்பதற்காக மதம் மாற முயன்றபோது சீறியெழுந்து அவனைக் கண்டித்திருக்கிறாள். அவள் எதிர்கொண்டிருக்கக்கூடிய சவால்களை எண்ணிப் பார்க்கும் போது,  சாகசக் கதையொன்றுக்குள் உலவுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. 

ஏனோ மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் பெரும் வீராங்கனையாக வர்ணிக்கப்படும் உன்னரசுகிரியின் பேரரசி “ஆடக சௌந்தரி” நினைவில் மின்னி மறைகிறாள். கூடவே  உலகநாச்சி, தம்பதி நல்லாள்,  சீர்பாததேவி, முதலான கிழக்கிலங்கைத் தொன்மங்களின் நாயகியரும் எண்ணத்தில் தோன்றி புன்னகைக்கிறார்கள். அவர்களெல்லாம் கதைகளா, கற்பனைகளா என்பதற்கெல்லாம் மேல், அந்தக் குணாதிசயங்களுடன் இரத்தமும் சதையுமாய் வாழ்ந்த  எத்தனையோ பெண்களை இந்த மண் கண்டிருக்கிறது; அந்த மண்ணின் மீது தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணமே சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.


(அரங்கம் பத்திரிகையின் 11 மே 2018 இதழில் வெளியான ஆக்கம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)