தந்ததாது (பாகம் 04)

“வெண்ணெய் திரண்டுவரும் போது தாழி உடைவது என்ற தமிழ்ப்பழமொழியை அறிந்திருக்கிறேன். ஆனால் வீதிய பண்டாரனின் மறைவு பெருந்துயருக்கு உரியது. நீண்டநாள் இலட்சியமொன்றை திட்டமிட்டு, அதை அடையமுன்னரே மாண்டுபோவது போல் மாவீரர்களுக்குக் களங்கமும் பரிதாபமும் ஏற்படுத்துவது வேறொன்றுமில்லை” என்றார் அனுவ்வரத். “அதன் பின்னர் என்ன நிகழ்ந்தது? போர்த்துக்கேயர் எதிர்பார்த்தது போல சீதாவாக்கை, கோட்டை, கண்டி தெக்கண அரசுகள் ஆரியச்சக்கரவர்த்தி அரசுடன் முரண்பட்டனவா?” என்று அவர் கேட்டார். “சரியாகத் தெரியவில்லை. சம்பவம் நடந்தபோது நான் சோழ மண்டலத்துக் காயல் பட்டினத்தில் தங்கியிருந்தேன்.  ஓரிரு மாதங்களின் பின் ஊர் திரும்பிய பின்னரே செய்தி அறிந்தேன்.” என்றான் அம்பலவாணன்.

பிரமாண்டமான அந்தப் பர்மியக் கப்பல் அப்போது மலையாளக்கரையைத் தாண்டி மங்களூருக்கு வடக்கே நகர்ந்துகொண்டிருந்தது. இன்னும் இரு பெருங்கப்பல்கள் பர்மா நாட்டின் மயில் கொடி பறக்க அக்கப்பலைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தன. அனுவ்வரத்தும் அவரது சகா தென்னபதியும் கப்பலின் மேற்றளத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். அருகே கடலைப் பார்த்த வண்ணம் மேற்றள விளிம்பில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தான் மீகாமன் அம்பலவாணன்.



“வீதிய பண்டாரம் மறைந்ததும் முழு யாழ்ப்பாணாயன் பட்டணமுமே துயர்நோன்பு நோற்றது. சங்கிலி மன்னரின் ஆணையின் கீழ், வீதியரது சடலம் எரிக்கப்பட்ட சிதையில் அவருக்கு பள்ளிப்படைக் கோயில் எழுப்பப்பட்டது. பெரும் சாகசங்கள் செய்து வீரமரணத்தைத் தழுவும் மாவீரர்களின் ஆன்மா கைலாயம் சேர்ந்து சிவகணங்களுடன் இணையும் என்பது எங்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கைப்படி, வீதியரின் பள்ளிப்படையும் ‘சிவபூதராயர் கோயில்’ என்றே அழைக்கப்பட்டது. பறங்கிகளிடமிருந்து இலங்கைத் தீவைக் காப்பதற்காக இறையம்சமாக அவதரித்தவரே வீதிய பண்டாரம் என்று கதைகள் உலாவத் தொடங்கின. தன் அவதார நோக்கம் முடியும் முன்பே வீதியர் அநியாயமாகக் கொல்லப்பட்டதாகவும், இறக்கும்போது அவர் யாழ்ப்பாணாயன் பட்டணத்தை சபித்தபடி இறந்ததாகவும், அன்று சூரியன் ஒளிமங்கி மறைந்ததாகவும் காகங்கள் கரைய யாழ்ப்பாணாயன் பட்டணத்தில் சனியன் குடி புகுந்ததாகவும், தெருப்பாடகர்கள் பாடினார்கள்.  அதனால் அஞ்சிய குடிமக்கள் சிவபூதவராயரை நாளும் பொழுதும் வழிபடத் தொடங்கினார்கள். இக்கதைகளால் கவரப்பட்ட நானும் ஒருநாள் பட்டணத்துக்குச் சென்றேன்.

ஆயுதப்பட்டறை எரிந்து சாம்பலாகி விட்டதாலும் பள்ளிப்படைக்கு இடங்கொடுப்பதற்காகவும், பயிற்சிப் படைக்களத்தை சிங்கைநல்லூர்க் கோட்டையின் மேற்கு வாசலிலிருந்த வீரமாகாளியம்மன் கோயிலின் அருகே மாற்றிவிட்டார்கள். நான் சென்றபோது பழைய பயிற்சிப்படைக்களம் இருந்த மைதானத்தில் எள்விழ இடமின்றிப் பெருங்கூட்டம் கூடி நின்றது. சிங்கைநல்லூர் கந்தசுவாமி கோயில் ஆவணித் திருவிழாவும் தோற்கும். பொங்கல் வைப்பதும் நேர்த்திகள் செலுத்துவதும் என்று, பெருங்கூட்டம் கூடியிருக்கும் கோயிலை அன்று தான் நான் நேரில் கண்டேன்” என்றான் அம்பலவாணன். அனுவ்வரத் அவன் சொல்வது புரிந்தும் புரியாமலும் வெறுமனே உற்றுநோக்கிக் கொண்டிருந்தார்.

அவரைக் கவனிக்காமல் அம்பலவாணன் தொடர்ந்தான். “நான் வியப்பும் பயமும் கொள்வது மானுட மனம் எப்படியெல்லாம் மாறக்கூடும் என்பதை எண்ணித் தான். முன்பு தினந்தோறும் மூன்று காலவேளையும் சனநெரிசலின் மத்தியில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று வந்த சிவபூதவராயர் கோயிலில் கூட்டம் குறையத்தொடங்கியது. வழிபாடுகள், பின்பு நாளுக்கு ஒரு பொழுதாக சுருங்கியது. மெல்ல மெல்ல வாரத்துக்கு ஒருநாள் மட்டும் என்றும், பின்பு மாதத்துக்கு ஒருநாள் மட்டும் என்றும் கோயில் பூசை வரையறுக்கப்பட்டது. மக்கள் அக்கோயிலுக்கு வருவதை மெல்ல மெல்ல மறந்தனர். 

இறுதியாக, போன ஆண்டு, வீதிய பண்டாரம் கொல்லப்பட்ட நாள் அன்று மட்டும் ஒருநாள் சடங்கு நிகழ்ந்ததாகச் சொன்னார்கள். ஆரியச்சக்கரவர்த்தியால் நியமிக்கப்பட்ட ஒரு அர்ச்சகர் மாத்திரம் நாள் தவறாமல் விளக்கேற்றி வருகிறாராம். அவர் தொண்டுக்கிழவர். அவரோடு வீதிய பண்டாரம் வெறும் பழங்கதையாகி அடியோடு மறைந்துவிடுவார் என்றே கருதுகிறேன்.இரண்டு மாதங்களுக்கு முன் அந்த வழியாக கள்ளியங்காட்டுக்குச் சென்றிருந்தேன்.  பற்றைகள் வளர்ந்து சிவபூதராயர் கோயில் பாழடைந்து கிடந்தது. வீதிய பண்டாரத்தின் இறுதி எச்சத்தையும் விழுங்கி ஏப்பமிடுவதற்காக, காடு அக்கோயிலைச்சுற்றி வாய்விரித்து காத்து நிற்பது போல உணர்ந்தேன்!” அவன் பெருமூச்சுடன் சொல்லிவிட்டு அனுவ்வரத்தைப் பார்த்தான்.

அவர் எதையோ சிந்தித்துவிட்டு சொன்னார். “மாவீரர்களை வரலாறு அவ்வளவு சீக்கிரம் அழியவிடாது. வீதிய பண்டாரம் மறைந்த செய்தி கோட்டை இராச்சியத்தை அடைந்தபோது, நானும் தென்னபதியும் கூட அங்கு தான் பர்மிய அரசின் தூதராக தங்கியிருந்தோம். ஜயவர்த்தனபுரக்கோட்டையின் ஒவ்வொரு குடிமகனும் அவரை எவ்வளவு நேசித்திருந்தான் என்பதை நான் அங்கு தான் கண்கூடாகக் கண்டேன். நான் எதிர்பார்த்தது போலவே, கோட்டை மன்னர் தர்மபாலனும், அமைச்சர் தம்மித சூரியனும் எவ்வித வருத்தத்தையும் வெளிக்காட்டவில்லை. ஆட்சியில் உரிமைகோரிய ஒரே காரணத்துக்காக, தந்தையின் - அண்ணனின் மரணத்தை உள்ளூரக் கொண்டாடும் கீழான மனிதர்களின் அருகே வாழ்ந்த அந்த நாட்கள் அருவருப்புக்குரியவை. மாவீரனே ஆயினும் காழ்ப்புப் படிந்த மனத்தில் அவன் எத்தனை பெறுமதியற்றவன் ஆகிவிடுகின்றான்”

“இறக்கும் போது வீதியருக்கு ஒரு நாற்பத்தைந்து வயது இருக்குமா?” அனுவ்வரத் அம்பலவாணனிடம் கேட்டார் “பாருங்கள். அவரும் நம்மைப் போல இந்த ஒவ்வொரு தருணத்தையும் இன்பம், துன்பம், விரக்தி, சோர்வு என்று கணம் கணமாக அனுபவித்துத் தான் கடந்திருப்பார். எத்தனை பேரின்பங்களை எத்தனை பெருந்துயர்களைத் கடந்திருப்பார். எத்தனை நாட்கள் அவர் உள்ளத்தில் வாழ்க்கையிலேயே சிறந்த பொன்னாட்களாகப் பதிந்திருக்கும். ஆனால், வெறும் ஒரு நாழிகைப் பொழுதில் அவர் வாழ்க்கையை என்னிடம் சொல்லி முடித்துவிட்டீர். நூறுநூறாண்டுகளுக்குப் பின் வாழும் மக்கள், ‘வீதிய பண்டாரன் என்ற மாவீரர் ஒருவர் வாழ்ந்தார்’ என்று ஒருவரியில் அவரது ஒட்டுமொத்த நாற்பத்தைந்து வருட வாழ்க்கையையும் கூறி முடித்துவிடுவார்கள். மானுட வாழ்க்கை தான் எத்தனை எளியது.” அவர் கசப்புடன் சிரித்தார்.

அம்பலவாணன் அவர் கண்களைப் பார்த்துச் சொன்னான் “மாவீரர்களின் வாழ்க்கையை விடுங்கள். நம்மைப் போன்ற எளியவர்களின் வாழ்க்கையின் பொருள் தான் என்ன? நம்மை யார் நினைவு கூரப்போகிறார்கள்? வீதிய பண்டாரத்தின் காலத்தில் அம்பலவாணன் என்ற மீகாமன் வாழ்ந்தான். யாழ்ப்பாணாயன் பட்டணத்திலிருந்து கோவாவுக்கு கவர்ந்து செல்லப்பட்ட பற்சின்னத்தை மீட்பதற்காக அனுவ்வரத், தென்னபதி எனும் இரு பர்மிய தூதர்களுக்கு அவன் உதவினான் என்று ஒருவரி எங்கேனும் சொல்லப்படுமா? தவறான புரிதலால் வீதிய பண்டாரத்தை யாழ்ப்பாணப் படைகள் கொன்றபோது அதைத் தடுக்கமுயன்று தன்னுயிரைத் தியாகம் செய்தவர்களில், அவனது தம்பியர் இருவரும் அடங்குவர் என்பதையேனும் யாராவது நினைவுகூர்வார்களா?” அனுவ்வரத் அவனை திகைப்புடன் திரும்பி நோக்கினார்.

“உலகம் பக்கச்சார்பானது. அதன் கணக்குப்புத்தகத்தில் சாதனை படைத்த சிலருக்கு மட்டுமே பக்கங்கள் உண்டு. எப்படியோ சாதனை படைத்தவர்களை மட்டும் உலகம் காலமுள்ளவரை கொண்டாடும்.  ஆனால் நாமும் கணத்துக்குக் கணம் வெறுமனே பிறந்து மடிந்து கொண்டிருக்கும் உயிர்களும், உலகத்துக்கு ஒன்று தானே? காலத்தின் பெரும்பெருக்கில் அடித்துச்செல்லப்படும் சிற்றுயிர்கள் நாம். பொருளில்லாமல் பிறந்து உண்டு மடியும் எளிய சீவராசிகள் நாம்.” என்றான் அம்பலவாணன் அவன் சொல்வதிலுள்ள கசப்பான உண்மை பேருருவம் எடுத்து அனுவ்வரத்தை அச்சுறுத்தியது. அதைத்தவிர்க்க அவர் பேச்சை மாற்றினார். .

“ஆனால் திருப்பற்சின்னம் தங்கள் தலதா மாளிகையில் இருப்பதாக கோட்டை தர்மபாலனும் தம்மித சூரியனும் நாடகமாடியது தான் என்னால் மன்னிக்கமுடியாத குற்றம். தந்ததாது மீது பலருக்கும் கண் இருப்பதால், அதைக் காப்பாற்ற தாம் போலிப் பற்சின்னம் ஒன்றை செய்து வைத்திருந்ததாகவும், அதையே வீதிய பண்டாரம் எடுத்துச் சென்றான் என்றும் தங்களிடம் இருப்பதே உண்மையான பற்சின்னம் என்றும், அரசியல் சூழ்நிலை சரியானதும் அதை எம்மிடம் காட்டுவதாகவும் அவர்கள் வார்த்தை ஜாலம் காட்டினர். அவர்கள் செப்படிவித்தை காட்டி ஏமாற்றுவது வெறும் தூதர்களை அல்ல. கீழைக்கடலை ஆண்டு கொண்டிருக்கும் பர்மிய மகா சக்கரவர்த்தி பயினவுங்கை என்பதை அவர்கள் உணரவில்லை. அவர் படையெடுத்து வந்தால் இச்சிறுதீவு என்ன பாடுபடும் என்பதை சாடைமாடையாக சுட்டிக் காட்டிவிட்டுத் தான் அங்கிருந்து பர்மா கிளம்பினோம்.” என்றார் அனுவ்வரத்.

அதுவரை அமைதியாக இருந்து உரையாடலைக் கவனித்தபடி நின்ற தென்னபதி, அம்பலவாணனிடம் கேட்டார் “உண்மையாகவே நீயும் கண்டாயா, யாழ்ப்பாணத்தில் இருந்த திருப்பற்சின்னத்தை போர்த்துக்கேயர் கவர்ந்துசென்றதை?” அம்பலவாணன் தலையை ஆட்டிச் சொன்னான். “அதிலென்ன சந்தேகம்? போர்த்துக்கேயப்படைகள் யாழ்ப்பாணம் மீது ஓராண்டுக்கு முன் படையெடுத்தபோது நான் கொழும்புத்துறையிலேயே பணியில் இருந்தேன். பறங்கியர் படையெடுக்கும் செய்தி கிடைத்ததும் சங்கிலி மன்னர் தலைமறைவாகி விட்டார். ஆரியச்சக்கரவர்த்தி போர்த்துக்கேயரிடம் சரணடைந்து விட்டதாகவும், போர்த்துக்கேயரிடம் பிடிபட்டு கொல்லப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. அந்தச்செய்திகளைக் கேட்டதுமே யாழ்ப்பாணாயன் பட்டணப் படைகள் நிலைகுலைந்துவிட்டன.”

“வாய்ப்பை விடாமல் பிடித்துக்கொண்ட போர்த்துக்கேயர் இலகுவாக பட்டணத்தைக் கைப்பற்றினார்கள். துறைமுகத்திலிருந்த ஆரியச்சக்கரவர்த்தியின் கப்பல்களை சிறைப்பிடித்த அவர்கள், அகப்பட்ட இராஜகுடும்பத்தினரைக் கைதுசெய்து நான் பணியாற்றிய கப்பலில் தான் கோவாக்குக் கொண்டு சென்றார்கள்.   அவர்களின் ஆணைப்படி சிங்கைநல்லூர் அரண்மனைக் கஜானாவில் கவர்ந்த செல்வங்களை கப்பலில் ஏற்றும்போது தான் அந்தப் பேழையைக் கண்டேன். பாரமற்ற அந்த சிறுபேழையில் அப்படி என்ன செல்வம் இருக்கப்போகிறது என்று ஒரு போர்த்துக்கேய வீரன் திறந்து பார்த்தான். உள்ளே வெண்டாமரை இதழ் என அந்தப் பல்லைக் கண்டேன்.” என்றான் அவன். ஒருகணம் மெய்சிலிர்த்த அனுவ்வரத் கரங்களைக் குவித்தார். “மும்மணிகளே!”

“சிறைப்பிடிக்கப்பட்ட ஆரியச்சக்கரவர்த்தியின் தமக்கை மகன் இளையநயினார், அது புனித தந்ததாது என்றும், அதைப் பாதுகாக்கும் பொறுப்பு தமக்குரியது என்றும், அதை மட்டும் தன்னிடம் கொடுத்துவிடும்படியும் கதறினான். அப்போது தான் அதன் முக்கியத்தை அறிந்த அந்தப் போர்த்துக்கேய வீரன் கீழே ஓடிச்சென்று கடற்படைத் தளபதியிடம் ஏதோ கேட்டான். திருப்பற்சின்னத்தைக் கைப்பற்ற சீதாவாக்கை அரசும் கோட்டை அரசும் செய்த பகீரதப்பிரயத்தனங்கள், அவர்களின் போரில் உதவிக்குச் சென்றிருந்த போர்த்துக்கேயப் படைகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கவேண்டும். திருப்பற்சின்னம் அகப்பட்ட செய்தி, அங்கே கிளர்ச்சியுடன் மெல்லிய அலையெனப் பரவுவதைக் கண்டேன். அந்த வீரன் பின்பு புன்னகையோடு மேலே ஏறி ஏனைய செல்வங்கள் இருந்த பெட்டகத்தில் அதையும் தூக்கிப் போட்டு மூடினான். கைதிகளும் கவரப்பட்ட செல்வங்களும் கோவாவில் இறக்கப்பட்ட பின், கப்பல்கள் துறைமுக அதிகாரிகள் தவிர, நான் உட்பட்ட பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டோம்” என்றான் அம்பலவாணன்.. தென்னபதி பெருமூச்செறிந்தார்.

“ஆம். பின் திருப்பற்சின்னத்துக்காக மாயாதுன்னையிடமும் தர்மபாலனிடமும் பெருந்தொகைக் கப்பத்தைப் போர்த்துக்கேயர் பேரம் பேசியதும், அவர்கள் அவ்வளவு செல்வம் கைவசம் இல்லை என்று தெரிவித்ததால், தந்ததாதுவை கோவாவில், தம்மிடமே வைத்துக்கொண்ட செய்தியும் தான் எம் மன்னர் பயினவுங்கை வந்தடைந்தது. இப்போது இலங்கை மன்னர் யாரும் கொடுக்கமுடியாத பெருஞ்செல்வத்தோடு போர்த்துக்கேயரிடம் சென்றுகொண்டிருக்கிறோம். எது, எப்படியோ பர்மா நாட்டின் பெகு மகாசேதியை திருப்பற்சின்னம் அலங்கரிக்கப்போவது உறுதி. சாது சாது சாது!” என்று திருப்தியோடு கண்களை மூடிச் சொன்னார் அனுவ்வரத்.

“கேட்கிறேனென்று தவறாகக் கருதாதீர்கள். அந்தப் பற்சின்னம் மீது அப்படி என்ன மோகம் உங்கள் மன்னருக்கு? கோட்டை உங்கள் நட்பு நாடு தான் என்றாலும், பற்சின்னம் அந்நாட்டின் சொத்து அல்லவா?” என்று கேட்டான் அம்பலவாணன். தென்னபதி கண்களால் துளைப்பது போல அவனை உற்றுப்பார்த்தார் “புத்தபிரான் இலங்கைத்தீவுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் பௌத்தரின் பொதுச்சொத்து. சாக்கியப் பெருமுனியின் திருச்சின்னத்தை வைத்திருக்கும் இடத்தில் செல்வம் பெருகும். செழிப்பும் வளனும் ஓங்கும். பர்மா இப்போது கொடுமையான பஞ்சம் பசியால் வாடுகிறது. எங்கள் நாட்டு சோதிடர்கள் திருப்பற்சின்னத்தைக் கொணர்ந்து வழிபட்டால் பர்மா செழிக்கும் என்று எதிர்வு கூறியிருக்கிறார்கள். அதற்காகவே நட்பின் அடையாளமாக இலங்கையிலிருந்த பற்சின்னத்தைக் கேட்டார் எங்கள் மாமன்னர்.”

“கோட்டை விரும்பினால் பஞ்சம் நீங்கியதும் தலதா சமிந்துவை மீளத்தருவதில் எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. தந்ததாது நீங்கினால் தங்கள் நாடு வளமிழந்துவிடும் என்ற அச்சத்தால் தான் கோட்டை மன்னன் தயங்குகிறான் என்று தான் நாங்களும் எண்ணினோம். ஆனால் அவனிடம் தந்ததாதுவே இல்லை என்பது தான் உண்மையான சிக்கல் என்று தாமதமாகவே எங்களுக்குப் புரிந்தது. வீதிய பண்டாரத்தால் உத்தரதேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அது தற்போது போர்த்துக்கேயர் கைவசம் இருப்பதை அண்மையில் தான் அறிந்தோம். அதை மறைத்து தந்ததாது தம்மிடம் இருப்பதாக, நாடகமாடிய கோட்டை அரசு விரைவில் பர்மிய மன்னருக்கு பதில் சொல்லும்” என்று சொல்லி மீண்டும் கடலை நோக்கிப் பார்வையைத் திருப்பினார் தென்னபதி.

கொஞ்சநேரம் ஒன்றும் பேசாது நின்றபின் மாலுமி அறைக்கு இறங்கிச்செல்லத் திரும்பினான் மீகாமன். அவன் பக்கம் திரும்பிய அனுவ்வரத் “இலங்கையின் அரசுகள் பற்சின்னத்தை போர்த்துக்கேயரிடமிருந்து மீட்பதற்கு உண்மையிலேயே எந்த முயற்சியும் எடுக்கவில்லையா?” என்று மெதுவான குரலில் கேட்டார். “எடுக்கிறார்கள். மிக இரகசியமாக. அது இனியொரு தடவை தங்கள் கையை விட்டுச்செல்லக்கூடாது என்பதில் சிங்களவர் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்” என்றான் அம்பலவாணன். “யார் கண்டார், கோவாவில் ஒருவேளை உங்களுக்கு முன்பேயே அவர்கள் முந்தியிருக்கலாம்” என்றபடி அவன் நடந்தான். பாதணிகள் மரப்படியில் தட்தட்டென்று ஒலிக்கும் ஓசை மெதுவாக மங்கி மறைந்தது. கப்பல் மேற்றளத்தின் வளைந்த முகப்பின் இருபுறமும் அனுவ்வரத்தும் தென்னபதியும் தனிமையில் நின்றுகொண்டிருந்தனர். கப்பலைச் சூழ கடல் அமைதியைச் சூடி நீலநிறத்தில் விரிந்து கிடந்தது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)