அரச மானியம் பெற்ற பள்ளிவாசல்! விகாரை ஊழியம் செய்த தமிழர்!
நாடுகாடுப் பரவணிக் கல்வெட்டிலிருந்து….
இலங்கையின் பெரும்பாலான
பகுதிகள்,
“பற்று” என்ற பெயரில் சிறுசிறு ஆட்சிப்பிரிவுகளாக
நிலவி வந்தது, உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.
இன்றும், அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று,
பாணமைப்பற்று ஆகிய பெயர்களையும், மட்டக்களப்பு
மாவட்டத்தில் எருவிற்பற்று, போரதீவுப்பற்று, மண்முனைப்பற்று முதலான பெயர்களையும் நம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.
இப்படி முன்பொருமுறை கிழக்கிலங்கையில் வழக்கிலிருந்து மறைந்து போன பற்றுப்பிரிவு
தான், நாடுகாடுப்பற்று.
1812 வரைபடமொன்றில் நாடுகாடு (Nadekadoe) |
நாடுகாடுப்பற்று
இன்றைய அம்பாறை,
இறக்காமம், தமணை பிரதேச செயலகப் பிரிவுகளையும்,
சம்மாந்துறை – அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளின்
சில பகுதிகளையும் அடக்கியதாக இருந்தது. நாடுகாடுப்பற்று என்ற
பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான சான்று கிடைக்கவில்லை. அந்தப் பற்று,
குடியிருப்புகள் உருவாகி நாடாக விளங்கி, அதே வேகத்திலேயே
பாழடைந்து காடாக மாறியதால் அதற்கு நாடுகாடுப்பற்று என்ற பெயர் வந்ததாக ஒருசாரார் கூறுவார்.
ஆனால் இலங்கை வரலாற்றில், குறிப்பாக கிழக்கிலங்கை
வரலாற்றில் அந்தப்பற்று குறிப்பிடத்தக்க இடத்தை வகித்திருக்கிறது என்பதில் யாதொரு ஐயமும்
இல்லை.
நாடுகாடுப்பற்றின்
வரலாற்று முக்கியத்துவத்தை உணர்த்துவதாக நமக்குக் கிடைத்துள்ள முக்கியமான ஆவணம், நாடுகாடு
பரவணிக் கல்வெட்டு. “பரவணிக் கல்வெட்டுகள்” கிழக்கிலங்கையின் தனித்துவமான இலக்கிய வடிவங்களில் முக்கியமானவை. பரவணி என்றால் தமிழில் பரம்பரை, சந்ததி என்று பொருள்.
அதே தமிழ் அர்த்தத்திலேயே இச்சொல் சிங்களத்தில் “பரவேனி” என்று வழக்கில் இருக்கிறது. கண்டிச்சட்டத்தில் பரம்பரைச் சொத்தான “பரவேனிப்பங்குவ”
பற்றிய விவரணங்களைக் காணலாம்.
பரவணி இலக்கியங்கள், ஏனைய கல்வெட்டு
இலக்கியங்கள் போலவே, கல்லில் பதிக்கப்படாமல், ஓலைச்சுவடியிலேயே எழுதிப்பேணப்பட்டன. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி
ஆலயத்தில் “பண்டு பரவணிக் கல்வெட்டு” இருந்ததாக
அறியமுடிகின்றது. திருக்கோவிலின்
வண்ணக்கர், நிலமைப்போடி (இன்று தலைவர்)
முதலான பதவிகள், அந்தப் பதவிகளுக்கான தகைமைகள்
முதலான மரபுகளைக் கூறிய அந்தப் பரவணிக் கல்வெட்டு, இன்று காணாமல்
போயிற்று. இன்னொரு பரவணிக் கல்வெட்டான “குலம் கோத்திரப் பரவணிக் கல்வெட்டை” மட்டக்களப்புப் பூர்வ
சரித்திரத்தில் காணலாம்.
நாடுகாடு பரவணிக்கல்வெட்டானது, முதன்முதலாக,
1887இல் “தப்ரபேனியன்” எனும் ஆங்கில இதழில் வெளியானது.
இதை வெளியிட்ட “ஹியூஜ் நெவில்” எனும் பிரித்தானிய அதிகாரி, அதைத் திருக்கோவில் சித்திரவேலாயுத
சுவாமி ஆலயத்தின் வண்ணக்கர் தன்னிடம் தந்ததாகவும், அது ஆரம்பத்தில்
சிங்களத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் மொழிமாற்றப்பட்டு அவர்களால் பேணப்பட்டு
வந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
இந்தத் தமிழ் வடிவத்தின்
பிரதியொன்றை,
பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள்,
1967இல் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் கண்டெடுத்தார். அது
அவரது குறிப்புகளுடன், பின்னாளில் அச்சுப்பதிப்பிலும் வந்தது.
என்றாலும் இன்றுவரை, அது வரலாற்றுரீதியாக விரிவான
விவாதத்துக்கு உள்ளாக்கப்படவில்லை.
தமிழ்ப்பிரதியானது
பெருமளவு பேச்சுவழக்கிலேயே எழுதப்பட்டிருக்கிறது. அது மொழிமாற்றத்தின் போது
இடம்பெற்றிருப்பது இயல்பே. எனினும், பல
இடங்களில் நூற்றாண்டுகள் பழைமையான பேச்சுவழக்கைப் புரிந்துகொள்வதில் நாம் சிக்கல்களை
எதிர்நோக்குகிறோம். நம் முப்பாட்டன் பேசிய மொழி எத்தனை விரைவாக
நமக்கு அந்நியமாகி விடுகிறது?
நெவில் இதன் மூலப்பிரதி
பதினான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்கிறார். சி.பத்மநாதன் அது பதினாறு, அல்லது பதினேழாம் நூற்றாண்டினது
என்கிறார். புளியந்தீவில் உலுவிசி எனும் பறங்கி வாழ்வது பற்றிய
குறிப்பு இக்கல்வெட்டில் காணப்படுவதால், பத்மநாதனின் ஐயம் வலிதாகின்றது.
பரவணிக் கல்வெட்டின் மொழிநடை, அமைப்பு,
அதில் சொல்லப்படும் செய்திகள், இவையனைத்தையும்
வைத்துப் பார்க்கும் போது, அது மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்துக்கு
முந்தையது போல் தென்படுகின்றது. பரவணிக்கல்வெட்டில் அரச மையங்களாக
“அக்கரைப்பற்று ஏழு வனம்”, “சிங்காரவத்தை”
ஆகிய சொற்களே குறிப்பிடப்பட்டுள்ளன. சிங்காரவத்தை
என்பது இன்றைய அட்டப்பள்ளம் ஆகும்.
பரவணிக்கல்வெட்டில்
சொல்லப்படுகின்ற இடங்களெல்லாம் இன்றைய இறக்காமத்தை மையமாக வைத்தவை. வரிப்பத்தன்சேனை,
கொக்குநாரை (கொக்நகர), பொன்னம்வெளி,
கல்மடு, சுங்கத்துறை, திவிளானை (திவுலான),
கொன்றைவட்டான் (கொண்டவெட்டுவான்), மாயக்காலிமலை (மாயக்கல்லி) என்பன
அவற்றில் குறிப்பிடத்தக்கவை. சில இடங்களை இன்று இன்னதென அடையாளங்காண
முடியவில்லை.
இராஜபக்ஷ முதலியார்,
அவரது பெற்றோரான நிலைமையிறாளை - கிரியெத்தனா,
சகோதரிகள், ஏனைய குடிமக்கள் ஆகியோர் சீதாவாக்கையிலிருந்து
தளவில்லுக்கு வந்து குடியேறுவதுடன் பரவணிக்கல்வெட்டு ஆரம்பமாகின்றது. சிங்கள மூலப்பிரதியில் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது என்பது தெரியாவிட்டாலும்,
“ஈசுரவருஷம் தை மாதம் 10ஆம் திகதி” என்றே தமிழ் மொழிபெயர்ப்பு ஆரம்பிக்கின்றது. அறுபது ஆண்டு
வட்டத்தில் இது மீளமீள வரும் என்பதால், இது எந்த ஈசுவர ஆண்டு
என்று தெரியவில்லை. சீதாவாக்கை இராச்சியம் நிலவிய காலம்,
கி.பி 1521 முதல்
1594 வரை ஆகும். இதற்கு முன்பின்னான அல்லது அந்த
இடைவேளைக்குள் வந்த ஒரு ஈசுவர ஆண்டு என்று இப்போதைக்கு சமாதானம் சொல்லிக்கொள்ளலாம்.
பரவணிக் கல்வெட்டில்
சொல்லப்படுகின்ற விடயங்கள் பல வரலாற்று ரீதியில் முக்கியமானவை. இராஜபக்ஷ முதலியாரும் அவர் சார்ந்த ஊழியச் சமூகங்களும் நாடுகாட்டில் இறக்காமத்தில்
குடியிருந்து விவசாயம் செய்து வரும் போது அங்கு ஏழு சோனகக்குடியினர் குடியேறுகிறார்கள்.
பொன்னாச்சி, வரிசைநாச்சி, முகாந்திரநாச்சி, மாலைகட்டி, கிணிக்கருதன்,
பணியவீடு என்று இந்த ஏழு குடிகளும் சொல்லப்படுகின்றன.
இவர்கள் நாடுகாட்டுக்கு
எங்கிருந்து வந்தார்கள் என்ற விவரம் சொல்லப்படவில்லை. இந்தக்
குடிப்பெயர்கள் நாடுகாட்டுக்கு வெளியே உள்ள அம்பாறை மாவட்ட முஸ்லீம்களிடம் இன்றும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்களில் பொன்னாச்சிகுடிக்கே முன்னீடு
(முதன்மை) என்கின்றது கல்வெட்டு. பொன்னாச்சி என்ற பெயர், கிழக்கிலங்கைத் தமிழ்ச்சமூகப்பிரிவொன்றின்
பெயராகவும் இருப்பதை, இந்த இடத்தில் ஆராயலாம். தமிழ்க் குடிகள் போலவே குறிப்பிட்ட சில இஸ்லாமியக் குடிகளே, சமீப காலம் வரை பள்ளிவாசல்களில் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்தமையையும்
நாம் இந்தத் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
இக்கல்வெட்டில்
வருகின்ற
“நக்கை விகாரை” இன்றைய தீகவாவி விகாரை ஆகும். இறக்காமத்துக்கு மிக அருகேயுள்ள
பழைமைவாய்ந்த விகாரை அது. திருக்கோவில், கொக்கட்டிச்சோலை, மண்டூர் போன்ற திருப்படைக்கோவில்கள் போல, ‘நாக்கை விசாரைக்கென’
குடிகள் ஊழியம் வகுக்கப்பட்டதை பரவணி விவரிக்கின்றது. நாடுகாட்டின் தலைமைக்காறப்போடிமார்,
இறைகாறப்போடிமார் ஆகியோர் நாக்கை ஊழியர்கள். மொண்டிறாமவில்
(மொறாவில்?) சனங்கள் அங்குள்ள வயல் வெளியை விதைத்து
நாக்கைக்குக் கொடுக்கவேண்டும். வட்டிவிட்டி (வட்டிபுட்டி?) ஊருக்கு ஊழியம் அரிசி குத்திக்கொடுத்தல்,
கள்ளியம்பத்தையார் நெல் விதைத்துக்கொடுத்து ஊதியமாக அதையே உண்ணவேண்டும்.
நக்கை விகாரை பற்றி விவரிக்கும் வரிகளில் பல நபர்களின் பெயர்கள் தமிழ்ப்பெயர்களாகக்
காணப்படுகின்றன. அவ்வரிகள் அவர்கள் பௌத்தத் தமிழர்கள் என்பதற்கு
கட்டியம் கூறுகின்றன. இலங்கையின் பாரம்பரியநெறியான பௌத்தத்துக்கு தமிழரும் சொந்தக்காரர்கள் தான்
என்பதை நிலைநாட்டும் பரவணிக்கல்வெட்டின் இந்த வரிகள், வரலாற்று
ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
நக்கைக்கு மாத்திரமன்றி, வரிப்பத்தான்சேனைப்பள்ளிக்கு
பெயர் குறிப்பிடப்படாத கண்டி மன்னன் ஒருவன் வருகை தந்தமையையும் சைவ – பௌத்த வழிபாட்டிடங்கள் போலவே, அதற்கும் மன்னன் மானியம்
வழங்கியமையையும் கல்வெட்டு விவரிக்கின்றது. நக்கையையும் பள்ளிவாசலையும் மையமாக
வைத்து நாடுகாட்டின் சமூகங்கள் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்துக்குள் கட்டமைக்கப்பட்டிருந்ததை
பரவணிக்கல்வெட்டு நாசுக்காக சுட்டிக்காட்டுவதைக் காணலாம்.
நாடுகாடுப்பரவணிக்
கல்வெட்டில் இன்னும் பல அரிய வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை
இன்னொரு முறை பார்க்கலாம்.
(அரங்கம் பத்திரிகையின் 29 யூன் 2018 இதழில் வெளியான கட்டுரை)
கருத்துகள்
கருத்துரையிடுக