சீலைக்குப் பின் சிலை? - ‘திரை’க்கதை சொல்லும் தெய்வானை!



....கதிர்காமம் யாருக்குச் சொந்தம் பாகம் 03



கதிர்காமம்
(படம்: kataragama.org)

போனகிழமை “கதிர்காமம் பௌத்தருக்கு சொந்தமாக இருக்கலாம்” என்று சொன்னதில் உங்களில் பலர் கெட்ட கோபத்தில் இருப்பீர்கள் என்று தெரியும். அதில் அர்த்தமே இல்லை. கோபிக்காமல், அந்தக் கட்டுரையை இன்னொரு முறை வாசியுங்களேன். அங்கு, சைவம், பௌத்தம் பற்றித்தான் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர, தமிழ் – சிங்களம் பற்றியே சொல்லப்படவில்லை. விஷ்ணுவும் முருகனும், மிகப்பழைய தமிழ்த்தெய்வங்கள். இலங்கையில் முருகன் பற்றிக்கிடைக்கும் சான்றுகள் கூட, சோழ – பாண்டிய ஆக்கிரமிப்புகளின் பின்னணியிலேயே பௌத்த நூல்களில் பதிவாகியுள்ளன என்பதை நாம் ஊன்றி நோக்கவேண்டும். முருகன் பௌத்தத் தெய்வமாக விளங்கிய முக்கியமான ஒரு சான்று, குருநாகலருகே தமிழ் விகாரையொன்றின் இடிபாட்டில் கிடைத்ததைக்கூட அங்கு நாம் பார்த்தோம். இன்று தமிழர் பௌத்தராக இல்லை என்பதற்காக, தமிழுக்கு பௌத்தம் மீதுள்ள தார்மிக உரிமையை நாம் மறுக்கமுடியாது தானே? 

வெளிக்காரணிகளால் ஒரு சமூகம் கூட்டாக மதம் மாறும் போது, தன் பழைய பாரம்பரியத்தையோ மரபுகளையோ மறக்காமல், தான் கைக்கொண்ட புதிய சமயத்திலும் அவற்றை அறிமுகம் செய்வது வரலாற்றின் இயல்பான போக்கு தான். தமிழ்ப்பௌத்தர்கள், தமக்கு கடுமையான போட்டியாக நிலவிய சைவத்தின் முழுமுதலான சிவனைத் தவிர்த்து, முருகனையும் விஷ்ணுவையும் தங்களோடு இணைத்துக்கொண்டார்கள். அவர்களை புத்தபிரானின் துணைவர்களாக, இருபுறமும் நிறுத்தி அழகுபார்த்தார்கள். பிள்ளையார், கண்ணகி கூட இப்படி அந்தப்பக்கம் போனவர்கள் தான். தமிழ்ப்பௌத்தம் அழிந்தொழிந்த பிற்காலத்தில், இவர்கள் எல்லோரும் முற்றுமுழுதாக சிங்களத்தெய்வங்களாக மாறவேண்டிய சந்தர்ப்பத்தை சரித்திரம் படைத்தளித்தது. 

அதை விடுங்கள். இந்த வாரம், கதிர்காமத்தில் சைவருக்குள்ள வகிபாகம் என்னவென்று பார்ப்போம். கதிர்காமத்தை தமிழ் முருகனின் வழிபாட்டுத்தலமாக இனங்காட்டும் மிகப்பழைய சான்று திருப்புகழ் தான். திருப்புகழை எழுதிய அருணகிரியார் ‘பிரபுட தேவராயன்’ எனும் அரசனின் காலத்தில் வாழ்ந்தவர் என்பது அவரது “அதல சேடனாராட” எனும் பிரபலமான திருப்புகழின் மூலம் தெரிகின்றது. விஜயநகர மன்னனான இரண்டாம் தேவராயனே (கி.பி 1424 - 1446) அப்பெயரில் குறிப்பாக அழைக்கப்பட்டிருக்கிறான். அந்தப்பெயருடைய வேறு மன்னர்களை ஊகிக்கும் பலரும் அருணகிரியார் 1400களில் வாழ்ந்தவர் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே, அருணகிரியார் திருப்புகழ் பாடியது 15ஆம் நூற்றாண்டு. இப்படிப் போனால், திருப்புகழ் ஜினகாலமாலியை விடப் பழைமையானது என்பது தெளிவாகும். கதிர்காமக்கந்தன் பௌத்தத் தெய்வமாக பதிவாவதற்கு நூறாண்டுகள் முன்பேயே அவன் சைவத்தெய்வமாக பதிவாகி விடுகிறான்! 

பதினான்குக்கு மேற்பட்ட திருப்புகழ்கள் கதிர்காமம் மீது பாடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல அருமையான தகவல்கள் உள்ளன. கருங்குரங்குகள் பலா மரத்தின் சுளைகளைக் கீறி சண்டையிட்டு உண்டபடி, மாமரங்களிலும் வாழை மரங்களிலும் பாயும் அழகிய ஈழநாட்டில் கதிர்காமம் அமைந்திருக்கிறது. அந்தக் கதிர்காமம் மிகப்பழைமையான ஊர். அதனருகே வடக்கிலிருந்து வந்து பாயும் அழகான ஆறு உள்ளது. அதன் அலைகள் கதிர்காமத்தில் வீசுகின்றன. அந்த ஆறு, மாணிக்கங்களை உருட்டியபடி சரிவாக ஓடிவருகின்றது. யானைகள் நிறைந்த மலையில் வள்ளியை மணந்த பெருமான், பொன்மாணிக்க வடிவில் கதிர்காமத்தில் அமர்ந்திருக்கிறான். அவன் வேல் தரித்தவன். அவ்விறைவனை அனுமான் வணங்கியுள்ளான். ஆயிரம் கோவில்கள் இருக்க, கோடி மலைகள் இருக்க அவற்றையெல்லாம் விடுத்து கதிர்காமத்தில் அடியவர்க்கு இரங்கி வருபவன் அவன் என்றெல்லாம் பாடுகிறார் அருணகிரியார். மெய்சிலிர்க்கிறது, அல்லவா?
கதிர்காமம் - பறவைப்பார்வை
(படம்:kataragama.org)


திருப்புகழில் கதிரகாமம், கதிர்காமம், கதிரகாம மாநகர், கதிரகாம மூதூர், கதிர்க்காமம், கதிரகாமக் கிரி, கதிரகாம வெற்பு என்றெல்லாம் இத்தலம் போற்றப்படுகிறது. மலையைக் குறிக்கும் வெற்பு, கிரி, சைலம் என்ற சொற்கள் வந்துள்ள கதிர்காமத் திருப்புகழ்கள் கதிரமலை மீதே குறிப்பாகப் பாடப்பட்டவை என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. கதிர்காமம் கூட, திருப்புகழில் பெரும்பாலும் கதிரகாமம் என்றே பாடப்படுவதையும் காணமுடியும். அது கதிர்காமத்தின் உண்மையான பெயர்க் காரணத்தைச் சொல்கின்றது. இத்தலத்தின் பழைய பெயர் கதிரை என்பதே. நம்மூர் மூதாட்டிகள் சலிப்பிலும் பயத்திலும் உதிர்க்கும் ஓலம் “எண்ட கதிரைவேலே” என்பது தான். கதிரையின் மலை, கதிரமலை என்று ஆனது. கதிரையின் கிராமம் கதிரகாமம் (காமம் = கிராமம்) ஆகி, பின் கதிர்காமம் ஆகியிருக்கிறது. 

கதிரை என்பதன் பொருள் என்ன? தமிழில் கதிர் என்பதற்கு சூரியன், வெளிச்சம் என்பவை முதன்மையான அர்த்தங்கள். “கதிர்” என்பதன் சிங்களத்திரிபான “கத்தற” என்ற சொல், வெயிலால் திரிந்த பாலை நிலம் என்று பொருள்படுகின்றது. காடு, ஆறு, மலை என்று காட்சியளித்தாலும் கதிர்காமம் அமைந்துள்ளது வறள்வலயத்தை அண்மித்துத் தான். கதிரை என்பதற்கு வேறு அர்த்தம் சிந்தித்தால், ஆடுதின்னாப்பாலை என்று இன்னொரு பொருளும் கிடைக்கின்றது. அந்தத் தாவரம் மண்டி வளர்ந்த இடமும், கதிரை என்ற பெயரைப் பெற்றிருக்கக்கூடும். 

கதிர்காமம் பற்றிய தொன்மங்களில் அதிகம் நினைவுகூரப்படுபவர் காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட கல்யாணகிரியார். அவர் தெய்வானை அம்மைக்காக முருகனை யந்திரத்தில் அடக்கி இந்தியா கொண்டு செல்லமுயன்று வள்ளியம்மையாரின் கண்ணீரிடம் தோற்றார் என்பது புகழ்பெற்ற தொன்மம். பெரும்பாலும், கதிர்காமப் பாதயாத்திரையை மறுமலர்ச்சிக்கு உள்ளாக்கியவர் என்றோ, காட்டுத்தலமாக இருந்த கதிர்காமத்தை இன்றுள்ளவாறு செப்பனிட்டுக் கட்டியெழுப்பிய முதலாவது வரலாற்று ஆளுமை என்றோ அவரை இனங்காணமுடியும். தட்சிண கைலாய புராணம், கதிர்காமக் கோவிலின் வடக்கே கல்யாண மண்டபம் இருப்பதைத் தெரிவிப்பதால், அதன் காலத்திற்கும் கல்யாணகிரியார் முற்பட்டவர் என்பது பெறப்படுகின்றது. அவர் குருவாக வீற்றிருந்த கல்யாண மடம், அவருக்குப் பின் வரிசையாக நியமிக்கப்பட்ட மடாதிபதிகள் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக நமக்குக் கிடைக்கின்றன. கதிர்காமம் பெரிய கோவிலும் இவர்களாலேயே ஆரம்பத்தில் நிர்வகிக்கப்பட்டுவந்தது என்பதற்கும் சான்றுகள் உள்ளன. 

அருணகிரிநாதர், கதிர்காமக் கந்தன் “வனமுறை வேடர் அருளிய பூசையில்” மகிழ்ந்தவன் என்று சொல்கிறார். ஆனால் வாய்கட்டிப்பூசை, திரைமறைத்த கருவறை, அருவ வழிபாடு முதலான இன்றுள்ள தனித்துவமான எந்தப் மரபுகளையும் அவர் பாடவில்லை. பழங்குடிகளான வேடர்களின் வழிபாட்டில் மெய்யியல் கண்ணோட்டத்தில் முதிர்ந்த இந்த வழிபாட்டுக்கூறுகள் காணப்படவும் முடியாது. 

ஆனால், கதிர்காமத்தானை “கனகமாணிக்க வடிவம் கொண்டவன்” என்றும், வேல் தரித்தவன் என்றும் அருணகிரிநாதர் பாடுவதால், அங்கு முன்பு முருகனின் விக்கிரகம் இருந்ததா என்ற ஐயம் எழுகிறது. தட்சிண கைலாய புராணம், சில மிகைப்படுத்திய வர்ணனைகளுடன் விவரிக்கும் போதும், “கதிர்காமத்தின் மத்தியிலுள்ள சோதி மண்டபத்தில், இந்திரநீல மாணிக்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் வள்ளி, தெய்வானை, வேல் என்பன அருகிருக்க கதிர்காம நாதர் வீற்றிருக்கிறார்” என்று சொல்வதை நாம் கவனிக்கவேண்டும். 

இந்த இரு குறிப்புகளையும் விட நம்மை அதிகம் சிந்திக்கவைப்பது ஒரு வெள்ளையரின் குறிப்பு. கதிர்காமத்துக்கு 1819இல் வருகை தந்த “சேர் ஜோன் டேர்வி” எனும் பிரித்தானியர், “கிளர்ச்சிக் காலத்தில் இங்கிருந்த விக்கிரகம் அகற்றப்பட்டு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. எனினும் இன்றும் முன்பு போலவே கருவறையை மிகக் கடுமையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.” என்கிறார். அவர் சொல்கின்ற கிளர்ச்சி, ஓராண்டுக்கு முன் 1818இல் இலங்கையையே உலுக்கிய ஊவா - வெல்லசைக்கலவரம். எனவே, டேர்வி சொல்லும் செய்தியில் தவறு இருக்க சாத்தியம் குறைவு. கலவர காலங்களில் அப்படித்தான் பெரும்பாலான இறையுருவங்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பது கோணேச்சரம் முதலான கோவில்களிலும் நாம் கண்ட உண்மை. 

‘முன்பு போலவே’ என்று டேர்வி சொல்வதை, முன்பும் கருவறை மறைக்கப்பட்டிருந்தது என்று பொருள்கொள்ளலாம். ஆனால் அங்கு விக்கிரகம் இருந்தது என்றால் ஏன் அது திரையால் மறைக்கப்பட்டிருந்தது? அருணகிரியாரும் தட்சிண கைலாய புராணமும் திரைச்சீலை பற்றியே கதைக்கவில்லையே? தமிழகத்திலோ பிற வேறெந்தச் சைவக்கோவில்களிலோ இல்லாத திரைச்சீலை மூடிய பூசை வழக்கம் கதிர்காமத்திலும், அதைப் பின்பற்றும் உகந்தை, மண்டூர் போன்ற ஓரிரு கோவில்களிலும் மட்டும் கடைப்பிடிக்கப்படுவது ஏன்? 

கதிர்காமம் பற்றிய தொடர்ச்சியான வரலாற்றுப்பதிவுகள் நமக்குக் கிட்டாத நிலையில் இக்கேள்விக்கு விடை காண்பது கடினம். ஆனால் இந்தத்திசையில் போனால் விடை காணலாம் என்று சொல்லிச் சிரிக்கிறாள் ஒருத்தி. மூத்தவள் தேவகுஞ்சரி அம்மை. ஏனென்றால், அவன் நிறையவே மாறிவிட்டான், அவள் மாறவில்லை! 
கதிர்காமம் தெய்வானை அம்மன் கோவில்
(படம்: kataragama.org)

ஏனென்றால், கதிர்காமம் பெரியகோவிலில் ஏற்பட்ட எந்த வழிபாட்டு மாற்றங்களும் தெய்வானை அம்மன் கோவிலைப் பாதிக்கவில்லை என்று நாம் ஓரளவு உறுதியாகச் சொல்லலாம். பெரிய கோவிலைப் பற்றிக் கவலைப்படாது ஐந்து நாட்கள் பிந்தியே தெய்வானை அம்மனுக்குக் கொடியேறுவதும் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பதிவுசெய்யப்பட்ட குரு பரம்பரையும் என்று பல தனித்துவங்களைக் கொண்டது, அக்கோவில். (இன்று கதிர்காமப் பள்ளிவாசலின் கொடியேற்ற தினமே திருவிழா தொடங்குகிறது. தெய்வானை அம்மன் கோவிலில் கொடியேறும் நாளைக் கணக்குப் பார்த்தால், அங்கு பத்து நாட்கள் விழாக்கோலம். அது தான் கதிர்காமத்தின் பழைய கொடியேற்ற நாளா என்ற ஐயமும் வலுக்கிறது.) 


கதிர்காமம் தீமிதிப்பு
தெய்வானை அம்மன் கோவிலில் மட்டும் ஒரு அதிசயம் நிகழும். ஒரே ஒரு நாளில், தன் மணவாளன் ஆடிப்பூரணையில் தீர்த்தமாடி மகிழ முதல்நாள், தன் திரைச்சீலை விலக்கி முகம் காட்டி அருள்வாள் தெய்வானை அம்மை. அந்த ஒருநாள் தரிசனத்தையும் அடுத்து வரும் தீமிதிப்பையும் எண்ணியபோது, விழாக்காலத்தில் மட்டும் தம் ‘கதவு திறந்து’ காட்சி நல்கும், அடியவர் தீப்பாய்ந்து பணியும் கிழக்கிலங்கையின் அம்மன்கள், ஒரு கணம் நினைவில் மின்னி மறைந்தார்கள்! 

கதிர்காமத்துக்கும் கிழக்கிலங்கைக்கும் உள்ள பிரிக்கொணாத உறவை அறிந்தவர்களுக்கு இங்கு ஒரு ஐயம் எழவேண்டும். ஏன் கதிர்காமமும் விழாக்காலங்களில் மட்டும் கதவு திறந்து வழிபடப்பட்ட கோவிலாக இருந்திருக்கக்கூடாது? கதவுக்கு முன் அங்கு ஏன் திரைச்சீலை இருந்திருக்கக்கூடாது? மூலவர் விக்கிரகம் கிளர்ச்சிக்காலத்தில் காட்டில் மறைக்கப்பட்டபின், ஏன் கல்யாண மடத்துக் குருதேவர் தம்மிடமிருந்த எந்திரப்பேழையை மூலவர் இடத்தில் அமர்த்தியிருக்கக்கூடாது? சிலையை மீட்கும் வரை வேறு வழியின்றியோ, அல்லது பெரிய கோவில் நிர்வாகம் கல்யாண மடத்திடமிருந்து கப்புறாளைகளால் கைப்பற்றப்பட்டபின்னோ, கருவறை ஏன் திரைச்சீலைகளால் நிரந்தரமாக மறைக்கப்பட்டிருக்கக் கூடாது? 

கருவறைத் திரைச்சீலைக்கு முன் செதுக்குவேலைப்பாடுகள் கொண்ட கல்லாலான கைப்பிடிச்சுவரை காணலாம். தொன்றுதொட்டே மூடிய கோவில் என்றால், இதெல்லாம் எதற்கு? பெரிய கோவிலுக்கு வெளியே வந்து நின்று கருவறையைப் பார்த்தால், கருவறையைச் சுற்றிச் செல்லும் கூரையிடப்பட்ட சிறு பிரகாரமும் தென்படும். அது அடியவர்கள் சுற்றிவந்து வழிபடக்கூடிய அமைப்பில் தான், கருவறை கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்று. ஆனால் இன்று சுவர் எழுப்பப்பட்டு அது நிரந்தரமாக மூடப்பட்டிருக்கிறது. அந்தப் பாதையை அடைக்க அனுமதித்தவன், திரைச்சீலையையும் என்றென்றும் மறைக்க அனுமதித்தவன், ஒருவேளை காட்டிலும் மறைந்திருப்பவன், உள்ளே அமைதியாகத் தான் அமர்ந்திருக்கிறான். எது உண்மை, என்ன நடந்தது என்று அவனுக்கு மட்டுமே தெரியும். எனவே நாமும் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசாமல் கதவை சாத்துவோம்.. 

ஏய், ஏய், கதிர்காமம் யாருக்குச் சொந்தம் என்று தலையங்கம் போட்டுவிட்டு எங்கே ஓடப்பார்க்கிறாய்? ஒழுங்கு மரியாதையாகப் பதில் சொல்லிவிட்டுப் போ என்று தானே முறைக்கிறீர்கள். கதிர்காமம் யாருக்குத் தான் சொந்தம்? மூன்று கிழமை இத்தனை விடயங்களை அறிந்த பின்னும், இன்னுமா பதில் தெரியவில்லை? இல்லை என்றால், அருணகிரி நாதரைப் பிடித்துக்கொள்ளுங்கள். அவர் வேறொரு விதத்தில் தான் பதில் சொல்கிறார். கதிரகாமக்கிரிப் பெருமாள் யார் யாருக்கு சொந்தமில்லை என்று சொல்கிறார் அவர். என்னவென்று? “சரியையாளர், கிரியையாளர், யோகர்கள் எல்லோருக்கும் எட்ட அரிதானவன், சமயபேதத்தினுக்கு அணுக ஒண்ணாத மெய்ப்பொருள்” என்கிறார் அவர். என்றால்? அவன் உண்மை அடியார்க்கு மட்டுமே சொந்தக்காரன். கதிர்காமம் அவர்களுக்கு மட்டுமே சொந்தம்! 

பிறகென்ன? “கதிரமலைல வைச்ச விளக்குப் போல வாழுங்கோ” என்று வாழ்த்தி நானும் விடைபெறுகிறேனே! பிறகு சந்திப்போமா? 

(முற்றும்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)