கதிர்காமப் பெருமாளே!


கதிர்காமம் கட்டுரைத் தொடர்  01
வைகாசி, ஆனி மாதங்கள் வரை சாப்பிட்டையா?” “குளிச்சியா?” என்பது போல எப்போதாவது சந்தித்துக்கொள்ளும் போது, கிழக்கிலங்கைத் தமிழ்க் கிராமங்களில் சாதாரணமாகக் கேட்கப்படும் இரு கேள்விகள் இருக்கின்றன. “எப்பயாம் சடங்கு தொடங்குது?”, “எப்பயாம் கதிராமக் கொடியேத்தம்? நீ நடக்கிறதா?” முன்னையது கண்ணகி அம்மனோடு தொடர்பு கொண்டது. பின்னையது எதனோடு தொடர்புடையது என்று சொல்லத்தேவையில்லை. 
 
கதிர்காமக் கந்தன் ஆலயம்
கதிர்காமத்துக்கும் கிழக்கிலங்கைக்கும் உள்ள உறவு எந்த விதத்திலும் மறைக்க முடியாதது. அங்குள்ள பெரும்பாலான புகழ்பெற்ற கோவில்களுக்கும், அவற்றைச் சுற்றி உருவான ஊர்களுக்கும் காரணமாக இருந்தவர்கள் கதிர்காமப் பாதயாத்திரிகர்கள் தான். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலரும் கதிர்காமம் வருகை தந்தாலும் அங்கு செல்லும் யாத்திரிகர்களில் எண்ணிக்கையில் முறியடிக்க முடியாதவர்கள், கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர்களே. “கதிர்காமம் நடந்து போதல்என்பதை, வருடத்துக்கொருமுறை தவறாமல் செய்யவேண்டிய காரியம் போல நியதியாக வைத்திருப்பவர்களை இங்கே காணலாம். குறிப்பிட்ட ஆண்டு நடந்து போகமுடியவில்லை என்பதற்காக கதறி அழுபவர்களையும் காணலாம்.  இக்கட்டுரையாளனின் மாற்றுமத நண்பனொருவன் அப்பிடி அங்க என்ன இருக்கெண்டுடா அள்ளி விழுந்து கதிர்காமம் நடந்து போறேல்?” என்று வியந்து கேட்டதையும் இங்கு நினைவுகூரத்தான் வேண்டும்.

இந்த மாதம் கதிர்காமம் பற்றிய சுவையான பல செய்திகளையும், வரலாற்றுத் தகவல்களையும் இத்தொடரில் காண இருக்கிறோம். எடுத்த எடுப்பிலே வரலாற்றைப் பார்க்காமல், இந்த வாரம் நாம் காண இருப்பது, பாதயாத்திரை தொடர்பான பாரம்பரிய நடைமுறைகளை!

கதிர்காம யாத்திரை போகவேண்டுமென்றால், முருகனின் அழைப்பு இருக்கவேண்டும் என்பார்கள். பலர் கனவில்அழைப்புகிடைத்தோ, அல்லது தெய்வாதீனமாக சந்தர்ப்பம் கிடைத்தோ தான் யாத்திரை சென்றிருக்கிறார்கள். போகவேண்டும் போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பலருக்கு, கடைசி நேரத்தில் வேறேதாவது தவிர்க்கமுடியாத வேலை வந்துவிடும். இப்படி ஆண்டுக்கணக்காய்வாற வருசம் கட்டாயம் நடப்பன்என்று சொல்லிக்கொண்டிருக்கும் திருநாளைப்போவார் பலரை உங்கள் நண்பர்களிலும் கண்டிருக்கலாம். உண்மையில் பிற்போடுகின்ற மனநிலை உடையவர்கள், வைராக்கியம் இல்லாதவர்கள் அந்த யாத்திரையைச் செய்யமுடியாது என்பதற்கு உளவியல் ரீதியாகச் சொல்லப்படுகின்ற காரணம் தான்அழைப்புஎன்பது. அழைப்பு இல்லாதவர்களை அல்லது அழைக்கத் தகுதி பெறாதவர்களை கிண்டல் செய்வதற்காகவேகட்டகாமக் கிழவி கதிர்காமம் பாராது செத்தது போலஎன்ற பழமொழியை சொல்வார்கள். கட்டகாமம் கதிர்காமத்துக்கு மிக அருகிலுள்ள ஒரு ஊர்.

கதிர்காமப் பாதயாத்திரைக்கென்று சில மரபுகள் உள்ளன. காவிநிற ஆடை தரித்து தவக்கோலத்திலேயே யாத்திரை செய்யவேண்டும். முன்பெல்லாம், வெண்ணிறக் கதர் ஆடைகளை வாங்கிவந்து, வீதியோரங்களில் வளரும்காவிக்காய்எனும் தாவரத்தின் விதைகளை இடித்துப் பிழிந்து ஊறவைத்து, காவியாடைகளைத் தயார் செய்வார்களாம். இப்போது காவிநிற வேட்டி, ஆடைகள் கிடைப்பதால் சிக்கல் இல்லை. அடுத்து முக்கியமானவை திருநீறும் உருத்திராக்கமும். உருத்திராக்கத்தை இங்குதாவணக்க மாலைஎன்று தான் சொல்கிறார்கள். உருத்திராக்கத்தைக் குறிக்கும் தாழ்வடம், அக்கமாலை ஆகியவை இணைந்து உருவான சொல் அது. தாவணக்கம் என்பது தூய உருத்திராக்கம் அல்ல என்று சொல்லும் சிலர், அது உருத்திராக்க இனத்தைச் சேர்ந்த வேறொரு தாவரம் என்கின்றார்கள். முதியவர்களிடம் கேட்டால், கூமுனைவியாளைப் பகுதிகளில் தாவணக்கங்காய் காய்க்கும் மரங்களைக் காட்டுவார்கள். 

தாவணக்கமாலையை, நம்மோடு யாத்திரை வரும் மூத்த பெரியசாமி ஒருவர், அல்லது நம் குடும்பத்தில் பெரியவர், நமக்கு அணிவிப்பதோடே கதிர்காம யாத்திரை ஆரம்பிக்கின்றது. இதை அணிந்த பின்னர், ஒருவரை ஒருவர்சாமிஎன்றே அழைக்கவேண்டும் என்பது நியதி. அப்பாச்சாமி, அம்மாச்சாமி,  மாமாச்சாமி, தாய்மார்சாமி என்பதும் சின்னசாமி, பெரியசாமி என்பதும் யாத்திரை காலம் முழுக்க நாம் காது குளிரக் கேட்கக்கூடிய சொற்கள்.

யாத்திரையில் இளைஞர்யுவதிகள், சிறுவர்கள் பங்குகொள்வது மிக அண்மித்த கால வழக்கம் தான். முன்பெல்லாம், அறுபதை அண்மித்தவர்கள், பெரும்பாலும் தம்பதியராகத் தான் கதிர்காமம் யாத்திரை செய்வது வழக்கமாக இருந்ததாம். போக்குவரத்து வசதி இல்லை. வசதியுள்ளவர்கள் மாட்டுவண்டியில் பொருட்களைக் கட்டி, பின்னே நடந்துசெல்வார்கள். திரும்பிவரும்போது, கதிர்காமக் கடைகளில் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மாட்டுவண்டியிலேயே இலகுவாகத் திரும்பலாம்; அதற்கும் வசதியில்லாதவர்கள் திரும்பி வருவதும் பாதயாத்திரையாகத் தான்.

தொற்றுநோய், வனவிலங்குகளின் அச்சுறுத்தல் அதிகம் இருந்த காலம் அது. செல்பவர்கள் திரும்பி வருவர் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இறந்தால் அங்கேயே புதைத்துவிட்டு, மீதிப்பேர் யாத்திரையைத் தொடர்வார்களாம். எனவே, யாத்திரை செல்ல முதனாள் வீட்டில்அமுதுகொடுத்து உறவினர் எல்லோருக்கும் அன்னதானம் கொடுத்து தான் யாத்திரை செல்பவர்கள் பயணத்தை ஆரம்பிப்பார்களாம். இடையிலேயே இறந்துபோனால், அந்தியேட்டிக் கிரியைகள் நிகழாமல் ஆன்மா தவிக்கக்கூடாது என்பதற்குத் தான் இந்த முன்னேற்பாடு. யாத்திரைக்குச் செல்லும் அவர்களுக்கு விடைகொடுக்க ஊரே கண்ணீரும் கம்பலையுமாக திரண்டு நிற்கும். அவர்கள் வெற்றிகரமாக யாத்திரையை முடித்துத் திரும்பி வந்தால், அன்று இன்னொரு திருவிழா நாள். மீண்டும் அன்னதானம் கொடுத்து கொண்டாட்டம் பலமாக இருக்கும் என்கிறார்கள், அவற்றை அனுபவித்த முதியவர்கள்.

இன்றெல்லாம் கதிர்காமப் பருவகாலத்தில், கிழக்கின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் உகந்தை மற்றும் கதிர்காமத்துக்கு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கிறது. பாதயாத்திரையானது வடக்கே செல்வச்சந்நிதியில் ஆரம்பித்து கீழைக்கரையோரமாகவே வந்தாலும், மட்டுஅம்பாறை அடியவர்களில் பலர், உகந்தை வரை வாகனத்தில் சென்று அங்கிருந்தே பாதயாத்திரையை ஆரம்பிக்கிறார்கள். 1950களில் எல்லாம், சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து வரும் யாத்திரிகர்களுடன் இணைந்துகொள்வார்களாம்.  என் சிறுவயதில், உகந்தைக்கு பதினாறு கிலோமீற்றர் வடக்கே உள்ள பாணமைக்கிராமத்திலேயே பாதயாத்திரை ஆரம்பமானதைக் கண்டிருக்கிறேன்.

பாணமை இன்று சிங்களப்பெரும்பான்மைக் கிராமம். அதன் பழைய பெயர் பாணகை. இன்றும் முதியவர்களில் சிலர் அவ்வாறு பாணமையை அழைப்பதைக் காணலாம். அதுபாலநகைஎன்பதன் திரிபு என்கிறார்கள். அதற்கு மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது. மட்டக்களப்பின் தென்பிராந்தியமான உண்ணாசகிரியை ஆண்ட மனுநேய கயவாகு மன்னனுக்கு பிள்ளைப்பேறு இல்லை. கடலில் ஒரு பெண்குழந்தை பேழையில் வந்து அடைந்திருப்பதாக அவனுக்குச் செய்தி வருகிறது. அதைச்சென்று அவன் பார்க்க கலகலவென சிரிக்கிறாள் அந்தப்பாலகி. அந்தக்குழந்தையின் அழகிலும் இராஜகளையிலும் மயங்கும் மன்னன் அது நகைத்த அந்த இடத்துக்குபாலநகைஎன்று பெயர்சூட்டி அக்குழந்தையைஆடக சௌந்தரிஎன்றபெயரில் வளர்க்கிறாள். ஆடக சௌந்தரி பின்னாளில் கிழக்கிலங்கையின் முக்கியமான வரலாற்றுப்பாத்திரமாக வளர்கிறாள். கோணேச்சரத்துடன் தொடர்புடைய குளக்கோட்டனின் நாயகியாகச் சொல்லப்படுபவள் இவளே.

பாணமையைத் தாண்டி சுமார் அரைமணி நேரம் காட்டுப்பாதையில் பயணித்ததும், ஒன்பது கிலோ மீற்றர் தொலைவில் வருகின்றது சன்னியாசி மலை எனும் சிறிய குன்று. அதன் அடிவாரத்தில் பிள்ளையார் சிலை வைத்து சிற்றாலயம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வழியாகப் பயணிப்பவர்கள் அங்கு அவல் புரட்டிபடைத்து வணங்குவது வழக்கம்.

சன்னியாசி மலைக்கும் கதை இல்லாமலில்லை. வள்ளியைக் மணம் புரிந்து முருகன் கதிர்காமத்திலேயே தங்கிவிட்டதை அறிந்த தெய்வானை அம்மையார், அவரை அழைத்து வருமாறு கூறி, கோங்கட்டியார், கலியாணகிரி, சன்னியாசி என்னும் மூன்று துறவியரை அனுப்பிவைத்தாராம். வரும் வழியில் கோங்கட்டியார் கொக்கட்டிச்சோலையில் சமாதியாகிவிட, உகந்தையின் அழகில் மயங்கிய சன்னியாசியார் கதிர்காமம் போகாமல் அங்கேயே தங்கிவிட்டாராம். கலியாணகிரியார் வெற்றிகரமாகக் கதிர்காமம் போனாலும், தெய்வானையம்மையின் கோரிக்கையை நிறைவேற்றமுடியவில்லை. அவர் பகீரதப்பிரயத்தனம் செய்து அம்மையையும் கதிர்காமத்துக்கு அழைத்துவந்து முருகன், வள்ளியோடு சமாதானப்படுத்தி, குடியிருத்தினார் என்று அக்கதை நீள்கின்றது.

உகந்தையில் தங்கியிருந்த சன்னியாசியார் இம்மலைக்குகையில் தான் வாழ்ந்து வந்ததாகவும், இங்கேயே சமாதி அடைந்ததாகவும் சொல்கிறார்கள். முழுநிலவு நாட்களில் இங்கு தங்கினால், அகில், சந்தனம் மணப்பதையும், யாரோ மந்திரங்களை ஓதும் ஒலியையும் இம்மலையில் கேட்கலாம். அது சன்னியாசியார் முருகனைத் துதிக்கும் ஒலி என்கிறார்கள்.

சன்னியாசி மலையில் ஏறினால், நீர்தேங்கி நிற்கும் ஒருகச்சினையைக் காணலாம். கற்சுனை என்பதைத் தான் பேச்சுவழக்கில் கச்சினை என்கிறார்கள். அதைத்தாண்டி மேலே ஏறினால்  உச்சியில் சிதைந்த கட்டடமொன்றின் இடிபாடுகள் தென்படும்.  அந்த இடிபாடுகளின் அருகே தற்போது புத்தர் சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அந்த இடிபாடு ஒரு புத்த விகாரைக்குரியது என்று உரிமைகோரப்படுவதுடன், சன்னியாசி மலையும்வெஹெரகலஎன்று புதுப்பெயரைச் சூடி இருக்கிறது.  மலையடிவாரப் பிள்ளையார் கோயிலில் மகா சுமண சமனின் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கிறது. பாணமையிலிருந்து விசேட நாட்களில் இங்கு வந்து வழிபாடுகளைச் செய்து வைக்கும் பூசகர், சமன் தெய்வத்தையும் மும்மணிகளையும் போற்றும் சிங்கள மந்திரங்களையும் கூடவே ஓதுகிறார்.

சன்னியாசி மலையிலிருந்து 7 கி.மீ தெற்கே சென்றால் உகந்தையை அடைந்துவிடலாம். சரி, நாம் பாதயாத்திரை போகவில்லை தானே, உகந்தைக்குப் பிறகொருமுறை ஆறுதலாகப் போவோம். கதிர்காமத்தைப் பார்ப்போம் வாருங்கள்!

(அரங்கம் பத்திரிகையின் 13 யூலை 2018 இதழில் வெளியான ஆக்கத்தின் திருத்திய வடிவம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)