தந்ததாது (பாகம் 01)


போதிராஜப்பெருமாள் குதிரையை மிக மெதுவாகச் செலுத்திக்கொண்டிருந்தார். மூன்று நிழல்களாக, அவர்கள் மூவரும் முன்னே சென்று கொண்டிருப்பது, நிலவொளியில் நன்றாகவே தெரிந்தது. கைக்கெட்டும் தூரத்தில் விஜயக்கோனும் வருஷப்பெருமாளும். அவர்களுக்கும் முன்னே பால்நிலவில் கருநிறப் பாம்பென அசையும் முதுகுத்தசைகளுடன் வேதியன் சென்றுகொண்டிருந்தான். அவர்கள் எல்லோருமே அவரது மனநிலையில் தான் இருக்கிறார்கள் என்பது  அவர்கள் அடிக்கடி விடும் பெருமூச்சிலும், தளர்ந்துபோய் குதிரையை நடத்திச் செல்லும் விதத்திலும் தெளிவாகவே தென்பட்டது.

வாள்வெட்டுக் காயங்களுக்கு மேலதிகமாக, புத்தளக் காட்டின் சூரைப்பற்றைகள் உடலில் கீறி ஏற்படுத்திய வடுக்களில், வியர்வையும் புழுதியும் பட்டு தாங்கமுடியாத எரிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. கடிவாளத்தைப் பிடித்திழுத்து குதிரையை நிறுத்திய போதிராஜர் பின்புறம் செவியைத் திருப்பி கூர்ந்து கேட்டார். மிக அருகில் நீரோடை ஓடும் ஒலி கேட்டது. அப்பால் உச்சுக் கொட்டிக்கொண்டிருந்த சில்லூறுகளைத் தாண்டி, பேரமைதியைச் சூடி நிமிர்ந்துநின்றது காடு. தங்களைப் பின்தொடர்ந்து வந்த படை வெகுதூரத்துக்கு முன்பேயே நின்றிருக்கவேண்டும். அல்லது யார் கண்டார், இராசபாட்டைக்கும் ஏறியிருக்கலாம்.

குதிரையை உன்னி முன்னே சென்ற போதிராஜர் வேதியனை நெருங்கி “குதிரைகள் களைத்துவிட்டன துமனி” என்றார். “அருகில் நீரோடை ஓடுகிறது. இங்கேயே கொஞ்சம் ஓய்வெடுத்துச் செல்வது நல்லது. உடனேயே இராசபாட்டையில் நுழைவது சரியில்லை. சீதாவாக்கைப் படைகள் நம்மைத் தேடிக்கொண்டிருக்கும்.” ஆமோதிப்பது போல் தலையசைத்த வேதியன், புரவியின் கடிவாளத்தைப் பிடித்திழுத்து நிறுத்தியபின், தலைப்பாகையை அவிழ்த்து கூந்தலை சிலுப்பினான். பின்னே வந்த வருஷப்பெருமாளும் விஜயக்கோனும் தங்கள் தங்கள் குதிரைகளிலிருந்து பாய்ந்திறங்கி கடிவாளத்தைப் பிடித்தபடி நெருங்கினர்.

நீருக்காக குதிரையை அவிழ்த்து விட்டு, ஓடையை நோக்கி நடந்த  அவர்கள் உடலில் நீர் தெளித்தும் தண்ணீர் குடித்தும் ஆசுவாசப்பட்டுக் கொண்டனர். நீரோடையின் கரையில், தலைவிரிகோல மூதாட்டியென, கிளைபரப்பி நின்றது ஒரு வேங்கைமரம். முகத்தை தலைப்பாகைத் துணியால் துடைத்து மரத்தடி நோக்கி நடந்த வேதியன், குதிரையின் சேணத்திலிருந்த சிறுபொதியை கழற்றி உள்ளிருந்த பொற்பேழையை எடுத்து வெளியே வைத்து கைகுவித்தான்.


“புத்தரைச் சரணடைகிறேன். தர்மத்தைச் சரணடைகிறேன். சங்கத்தைச் சரணடைகிறேன். திசாவை வேலாயுத ஆராய்ச்சியின் ஆன்மா நிர்வாணம் அடையட்டும்.”  தளபதிகள் மூவரும் அவனைச் சூழ்ந்து கைகளைக் குவித்து ‘சாது சாது சாது’ என்றனர். மீண்டும் அம்மரத்தடியைப் பேரமைதி சூழ்ந்துகொண்டது. மெல்லிய காற்று மரக்கிளையை அசைத்துச்செல்ல காய்ந்த வேங்கைப்பூக்கள், அந்தப்பேழை மீதும் அவர்கள் மேலும் உதிர்ந்தன. ஒருகணம் உணர்ச்சிவசப்பட்ட போதிராஜர் நெஞ்சு விம்மி வந்த அழுகையை அடக்கினார். ஒருதுளி கண்ணீர் கன்னத்தில் உருண்டோடியது. வெறும் ஆறு நாழிகைகளுக்கு முன் போதிரரஜர் ஒற்றர் ஓலைகளை பிரதியெடுத்தபோது உதவிக்கொண்டிருந்தவன் வேலாயுத ஆராய்ச்சி. காலம் தான் எத்தனை விசித்திரமானது!  இப்போது அவன் இல்லை! உயிரோடே இல்லை!

அந்த ஐவரிலும் வேலாயுதன் இளைஞன். சுறுசுறுப்பானவன். தேவந்துறையில் தான் வேதியனோடு இணைந்தான். கோட்டையில் போர்த்துக்கேயர் கை ஓங்கியதும், உரோகணத்துக்கு தப்பிவந்த வேதியன்,  தேவந்துறை, கண்டி, ஏழுகோரளை என்று அலைந்த போதெல்லாம் இந்த நால்வரும் அவனோடு தான் இணைந்திருந்தார்கள். குறுகிய காலத்திலேயே ஏனைய மூவரையும் மீறி, வேலாயுதன், வேதியனுக்கு நெருக்கமாகிவிட்டான். அவ்வளவு ஏன், இறுதியாக ஏழுகோரளைக்கு வந்தபோது அதன் அரசன் எதிர்மன்னசிங்கனைக் கொன்று வேதியன் ஆட்சியைக் கைப்பற்ற முன்னின்று உதவியதே வேலாயுதன் தான்.

சீதாவாக்கை மன்னன் மாயாதுன்னை, வேதியன் மீது செய்த போர்ப்பிரகடனத்தை அடுத்து, ஏழுகோரளையின் ‘எல்லே’ கிராமத்தில் இடம்பெற்ற போரில் பின்வாங்கிய வேதியனும் அவனது நான்கு தளபதிகளும் புத்தளக் காட்டில் புகுந்துகொண்டதை சீதாவாக்கைப் படைகள் நேரிடையாகவே கண்டன. சீதாவாக்கைக்குத் துணையாக வந்த போர்த்துக்கேயப் படைகள் தம் தளபதியின் கட்டளையை அடுத்து மீண்டும் கொழும்புக்கே திரும்பிவிட்டன. வேதியனின் உயிர் வேண்டாம், அவனிடம் இருக்கும் கோட்டை அரசுக்குச் சொந்தமான பொற்பேழையை மட்டுமேனும் மீட்டுத்தரும்படி, கோட்டையில் இருந்து ஆண்ட தர்மபாலன் விடுத்த கோரிக்கையை போர்த்துக்கேயரால் நிறைவேற்றமுடியவில்லை.   ஆனால் சீதாவாக்கை சேனாதிபதி, வேதியனை உடைமைகளோடும் உயிரோடும் பிடித்துச்செல்லவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தான். முடியாவிட்டால் சடலத்தையாவது கொண்டுவாருங்கள், சன்மானம் உண்டு என்று அவன் தன் படையினரிடம் ஆணையிட்டிருந்தான்.

தென்னிலங்கை முழுவதும் மாயாதுன்னையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், வேதியன் போரில் தப்பித்தால் வடக்கே யாழ்ப்பாணாயன் பட்டினத்துக்கே தஞ்சம் கோரிச்செல்லக்கூடும் என்பதை மாயாதுன்னை முன்னரே அனுமானித்திருந்தான். எனவே, புத்தளக் காட்டிலும், ஏழு கோரளையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வன்னி, புத்தளமூடான இரு பாதை நெடுகிலும் சீதாவாக்கையின் படைகள் சல்லடைபோட்டுத் தேடிக்கொண்டிருந்தன.

புத்தளக் காட்டில் புலிந்தர்களிடம் அடைக்கலம் கோரியிருந்த வேதியனும் சகாக்களும் ஓரிரு நாட்களின் மேல் அங்கு தங்குவது உசிதமல்ல என்று உணர்ந்திருந்தார்கள். ஆனால் ஒருநாளுக்குள்ளாகவே அவர்கள் அங்கு மறைந்திருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்துகொண்ட சீதாவாக்கைப் படைகள் புலிந்தரின் குடியிருப்பை முற்றுகையிட்டன. அகப்பட்டவர்களைக் கொன்று குவித்துவிட்டு வேதியன் தப்பியோடினான். கூடவே இருந்த நால்வரில் மூவர் அவனைப் பின்தொடர இறுதியாக வெளியேறிய வேலாயுத ஆராய்ச்சி, படைநடுவே சிக்கிக்கொண்டான்.

போதிராஜப்பெருமாள் அவனைக் காப்பாற்றி அழைத்துச் செல்லத்திரும்பிய போதும், வேலாயுத ஆராய்ச்சியை அவரால் நெருங்கமுடியவில்லை. ஒரேயடியாக பதினைந்து பேரை அவன் சமாளித்துக்கொண்டிருந்தபோது காயமுற்று கீழே விழுந்த ஒருவன் அபாயச்சங்கொலி எழுப்பி மேலதிக படைவீரருக்கு தகவல் சொல்லிவிட்டான். பெரும்படையொன்று அவர்களைப் பின்தொடரத் தொடங்கியது.  ஒற்றை ஆளாக ஒன்பது பேரை வேலாயுதன் வெட்டிச்சரித்ததை பார்த்திருக்கும்போதே இன்னொருவனின் ஈட்டி அவன் கழுத்தில் பாய்ந்தது. அக்காட்சியை போதிராஜர் முற்றாக உள்வாங்கிக்கொள்ளும் முன், அவர்  வந்த  புரவி நெடுந்தூரம் விலகிவிட்டிருந்தது.

வேங்கைப்பூக்கள் முகத்தில் உதிர, திடுக்கிட்டு விழித்துக்கொண்ட போதிராஜர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார். வேதியன் பொற்பேழையைத் திறந்து, உள்ளே தங்கத்தாலான தாமரைப்பீடத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். நிலவொளியில் தூய வெண்ணிறத்தில்  மல்லிகை மொட்டு என பளபளத்துக்கொண்டிருந்தது புத்தபிரானின் புனித பற்சின்னம்.

“எத்தனை உயிர்கள்! எத்தனை இழப்புகள்! இன்னும் எத்தனை பேரின் குருதி ஓடப்போகின்றதோ” வேதியன் தனக்குத்தானே என மெதுவாகக் கூறினான், “எல்லாம் இதற்காகத் தான். எல்லா வெறியாட்டங்களும் கொடும்போர்களும் இதைக் கைப்பற்றுவதற்காகத் தான்” அவன் விஜயக்கோன் பக்கம் திரும்பினான், “விதியின் விளையாட்டைப் பார்த்தாயா? இரத்தப்பலி கேட்கின்றது அறத்தைப் போதிக்க வந்த தெய்வத்தின் திருச்சின்னம். இன்னும் இன்னும் என்று நாக்கு நீட்டித் துடிக்கின்றது கருணையின் அடையாளச் சின்னம். இம்சை செய் இம்சை செய் என்று பெருங்குரலெடுத்து ஓலமிடுகிறது அகிம்சையின் அருட்சின்னம்.” என்றபடி மீண்டும் அதை நோக்கினான். தாழ்ந்த குரலில் “அல்ல, அது அதிகாரத்தின் அடையாளச்சின்னம்” என்றான் விஜயக்கோன்.

“ஆயிரமாண்டுகளாக இலங்காத்துவீபத்தின் அதிகாரத்தின் சின்னம் அது, துமனி. அதை யார் வைத்திருக்கிறாரோ அவரே இலங்கையின் அரசர்.  மாயாதுன்னையும் தர்மபாலனும் இதை அடைய எடுத்துக்கொண்டிருக்கும் பெருமுயற்சி அதிகாரத்துக்கன்றி  வேறெதற்கு? . திருப்பற்சின்னத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்காமல், முடிக்கு உரிமை கோரும் எவனும் இந்நாட்டின் அரசனாக முடியாது.” என்றான் விஜயக்கோன் முதலி. “ஆனால், பற்சின்னத்தைப் பாதுகாக்காத மாயாதுன்னை, இன்றும் இலங்கையரசன் தான், முதலி. இன்று இதைக் கையில் வைத்திருக்கும் நான், எந்நேரமும் மரணதண்டனைக்கு உள்ளாகக்கூடிய தேசத்துரோகி.” சொன்ன வேதியன் விரக்தியுடன் சிரித்தான்.

வருஷப்பெருமாள் குறுக்கிட்டான், “காலம் மாறும், துமனி! இன்றும் மக்களின் ஆதரவு உங்களுக்கே. விரைவிலேயே நீங்கள் கோட்டை அரியணையில் அமர்வீர்கள். அப்போது மாயாதுன்னை தலை தரையில் கிடக்கும் – போரில் அறுபட்டோ அல்லது திறைசெலுத்த கீழே விழுந்தோ.” வேதியன் அலட்சியமாகக் கையை அசைத்தான். “விஜயக்கோன் சொன்னதை சரியாகக் கேட்டீரா? இலங்கையின் மன்னன் முதலில் திருப்பற்சின்னத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டும்." அவன் எழுந்து நின்று கைகளைக் கட்டிக்கொண்டான் “இப்போது என் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதல்ல. திருப்பற்சின்னத்தை எவ்வாறேனும் காப்பாற்றுவது.” அந்த இருட்டில் வேட்டை நாயின் கண்களென அவன் கண்கள் மின்னின.

“திருப்பற்சின்னத்துக்கான போராட்டம் இன்று நேற்று என்று அல்ல. முந்நூறு ஆண்டுகளாக நடந்து வருகின்றது. அது நிலைத்திருக்கும் இடத்தில் செல்வமும் பெருஞ்செழிப்பும் ஏற்படும் என்ற செய்தி கிழக்கே சீனத்திலிருந்து மேற்கே பாரசீகம் வரை பரந்திருக்கின்றது. அதைக் கைப்பற்ற சீனக்கப்பல்கள் போட்டுவந்த திட்டங்கள் நீங்கள் யாரும் அறியாததல்ல. தகுதியற்றவர்கள் கையில் இதைச் சிக்கவிடமாட்டேன். அதற்காகப் பகீரதப் பிரயத்தனம் செய்யும் மாயாதுன்னையையும் தர்மபாலனையும் துரத்துவேன். அந்தப் பற்சின்னத்தின் பெருமையை அழித்து  பௌத்தத்தை சீர்குலைப்பதற்காக சிங்களத்தீபத்தைச் சுற்றி வட்டமிடும் பறங்கியரைப் புறமுதுகிட்டு ஓடச்செய்வேன்.”

“ஆம். என் வாழ்நாள் இலட்சியம் அதுவே. தென்கரையில் நூற்றுக்கணக்கான இயேசு கோவில்களை எரித்தழித்ததும் கிறிஸ்தவர்களைக் கொன்றொழித்ததும் அதற்குத் தான். நண்பனாகத் தோளில் கைபோட்ட எதிர்மன்னசிங்கனைக் கொன்று வீசியதும் அதற்காகத்தான். இதோ, என் ஆருயிர்த்தோழன் வேலாயுத ஆராய்ச்சியை இன்று இழந்துநிற்பதும் அதற்காகவே! கேளுங்கள் தளபதிகளே. அவர்களுக்குத் தலை பணியும் எந்த உறவையும் முறித்துக்கொள்ளவும் தயங்கமாட்டேன்,  மாமனாயினும் சரி, பெற்ற மகனே ஆயினும் சரி! அவர்களின் உயிரைப் பறிக்கவும் தயங்கமாட்டேன். வந்தேறிப் பறங்கிகள் இங்கு ஆடும் ஆட்டத்துக்கு முடிவுகட்டுவேன். இது இந்த இலங்கை மண்ணின் மீது ஆணை! திருப்பற்சின்னம் மீது ஆணை! ஆம், கட்டிய மனைவியையே கொன்றவனின் ஆணை!” அவன் பாய்ந்து தரையில் தன் கையை ஓங்கி அடித்தான். சுற்றியிருந்த மூவருக்கும் மெய்சிலிர்த்தது.

“உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம் துமனி.. இலங்கை மண் பெற்றெடுத்த மாவீரனுக்காக, அவனது தூய நோக்கத்துக்காக எங்களையே தியாகம் செய்யவும் தயங்கோம். உயிருள்ள வரை திருப்பற்சின்னத்தைப் பாதுகாப்போம் என ஆணையிடுகிறோம்.” கையை உயர்த்தி வருஷப்பெருமாள் ஓங்கிய குரலில் கூவினான். அவனோடு மற்றைய இருவரும் சேர்ந்துகொண்டு கையை உயர்த்தினர். சில நிமிடங்கள் திருப்பற்சின்னத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்த வேதியன் மெல்லத் தரையில் உட்கார்ந்தான். ஏதோ எண்ணம் வந்தவனாக பெருமூச்செறிந்து தலையசைத்தான்.

“ஆனால், ஏனோ மனம் தவிக்கின்றது. திருப்பற்சின்னத்தை உரியமுறையில் என்னால் காப்பாற்றமுடியாமலே போய்விடுமோ என அஞ்சுகிறேன். கணநேர வீராவேசத்தோடு நான் எடுக்கும் வஞ்சினங்களை என்னால் உண்மையிலேயே நிறைவேற்றமுடியுமா?” வேதியன் முழங்காலைக் கட்டி ஏக்கத்தோடு தந்ததாதுவைப் பார்த்தான். “போரிலும் அரசியலிலும் இதுவரை நான் இழந்த எவருமே என்னை இப்படி இடிந்துவிழச் செய்ததில்லை. ஆனால் வேலாயுத ஆராச்சியின் வீரச்சாவு அவ்வாறல்ல. இளைஞன். பெருவீரன். என் அரசவையில் கோல் பிடித்து வலப்புறம் நிற்பேன் என்று புன்னகையோடு அடிக்கடி சொல்பவன். அவனே மறைந்தபின்…” வேதியனின் தொண்டை அடைத்தது. போதிராஜர் ஆதூரத்துடன் அவன் தோள்மீது கை வைத்தார் “வேலாயுதன் புத்தபிரானின் அறச்சக்கரத்தைக் காக்கவே உயிர்நீத்தான் எனக் கொள்ளுங்கள் துமனி. கோட்டைச் சிம்மாசனத்தில் நீங்கள் அமரப்போவது உறுதி. அப்போது அருகிலிருக்கும் தலதா மாளிகையில் இந்தத் திருப்பற்சின்னம் எழுந்தருளப்போவதும் உறுதி. வீணாக மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.”

“இல்லை திசாவை. இயற்கையின் பொருளற்ற செயல்களில் ஒன்றை இயல்பாகச் செய்துகொண்டிருப்பது போல் எனக்குப் படுகின்றது. ஒருவேளை, நான் மரிக்கநேர்ந்தால்? யாரிடம் சேரக்கூடாது என்று துடிக்கிறேனோ அவர்கள் கைக்கே திருப்பற்சின்னம் போய்ச் சேர்ந்தால்? இன்று நாம் படும் துன்பங்களுக்கு துளிப்பயன் கூட கிடைக்காமலே போய்விட்டால்?” வருஷப்பெருமாள் தன் வாளை உருவி முன்னே வந்தான். “அப்படி நேர்ந்தால் அதற்குக் காரணமான ஒவ்வொருவரையும் தேடித்தேடிக் கொல்வோம், துமனி. திருப்பற்சின்னத்தை நல்ல ஆட்சியாளன் ஒருவனிடம் ஒப்படைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.”

“நல்ல ஆட்சியாளன்….” வேதியன் அலட்சியத்துடன் புன்னகைத்தான். விஜயக்கோன் சற்று முன்னகர்ந்து “வருந்தவேண்டாம் துமனி. திட்டமிட்டபடி இப்போதே கிளம்பி யாழ்ப்பாணாயன் பட்டினம் செல்வோம். அதையாளும் ஆரியச்சக்கரவர்த்தி நல்ல ஆட்சியாளனே. நம்மைப்போலவே போர்த்துக்கேயர் மீது பெருங்காழ்ப்பு கொண்டிருப்பவன். அவன் நமக்கு உதவுவான்.” என்றான்.  “முன்பொருமுறை கோட்டையை ஆரியச்சக்கரவர்த்தியின் படை தாக்கியபோது அவனைப் புறமுதுகிட்டு ஓடச்செய்த கோட்டையின் சேனாதிபதி நான். அந்த வஞ்சம் இன்றும் அவனுக்கு இருக்கவே செய்யும் அல்லவா? தவிர, அவன் மாயாதுன்னையின் நண்பன்.  அதனால் தான் தயங்குகிறேன்” என்றான் வேதியன். போதிராஜர் தொண்டையைச் செருமினார். “பொது எதிரி வரும்போது, எதிரிக்கு எதிரி நண்பன் என்பது தான் அரசியல் சூத்திரம், துமனி. அரசியலில் நட்பும் பகையும் நிரந்தரம் அல்ல. தான் பட்ட அவமானத்தை விட, மாயாதுன்னையை விட, ஆரியச்சக்கரவர்த்திக்கு இப்போது தன் நாடு முக்கியம். அதைக் கைப்பற்றத் துடிக்கும் போர்த்துக்கேயரை ஒடுக்குவது அதைவிட அவனுக்கு முக்கியம். இந்தச் சந்தர்ப்பத்தில் நம் உதவி அவனுக்குக் கிட்டுமென்றால், அந்த வாய்ப்பை அவ்வளவு எளிதில் அவன் தட்டிவிடமாட்டான்.”

“உண்மை தான். சீதாவாக்கையுடனும் கண்டியுடனும் இணைந்து, வன்னியரின் துணையுடன் கொழும்பைத் தாக்கும் அவனது நீண்ட நாள் திட்டம் பற்றிய ஒற்றுச்செய்திகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டு தான் இருந்தன. கொஞ்சநாளாகப் பொங்கிவழியும் மாயாதுன்னையின் போர்த்துக்கேயப் பாசம் தான் அதைத் தள்ளிப்போட வைத்திருக்கின்றது. நாம் இணைவது அவனுக்கு நிச்சயம் பலம் சேர்க்கும்” வருஷப்பெருமாள் உறுதிகூறினான். “நல்லது. ஆனால் ஆரியச்சக்கரவர்த்தியை மட்டுமே நம்பி நாம் ஆற்றில் இறங்க இயலாது. மலையாளத்து கோழிக்கோடு சாமூத்திரியிடமும் சோழமண்டலத்து நாயக்கனிடமும் நாம் படையுதவி கோரலாம்.” என்றான் வேதியன். “அங்கெல்லாம் உதவி கிடைக்கும் என்று உறுதியாகக் கூறமுடியுமா? ஏற்கனவே மாயாதுன்னையும் புவனேகபாகுவும் சாமூத்திரியிடம் உதவிகோரி அவன் படைகளை போர்த்துக்கேயரிடம் மாட்டிவிட்டுக் கழுத்தறுத்து இருக்கிறார்கள். உதவி கேட்டுப் போகும் நம்மிடமும் அவன் நல்லபடியாக நடந்துகொள்வான் என்று சொல்வதற்கு இல்லை. தஞ்சாவூர் நாயக்கன் வேறு இப்போது விஜயநகரத்துடன் மோதிக்கொண்டிருக்கிறான்.” என்று இழுத்தான் விஜயக்கோன்.

“முதலில் கேட்போம். பிறகு கிடைக்குமா கிடைக்காதா என்று சிந்திப்போம்.” என்றபடி எழுந்த வேதியன் “இனியும் தாமதிப்பதில் பொருளில்லை. உடனே கிளம்புவோம்.” என்று சொல்லி பேழையை வணங்கி அதை மூடி பொதிக்குள் வைத்தான். “குறுக்குவழியில் கற்பிட்டித்துறைக்குச் சென்றால் முத்துவியாபாரத்துக்கு வரும் ஆரியச்சக்கரவர்த்தியின் கப்பல் ஒன்றில் ஏறி விடலாம்.” என்றான் வருஷப்பெருமாள். “நாம் அவதானமாகச் செல்லவேண்டும். இங்கிருந்து கற்பிட்டிக்கு மட்டுமே தப்பிச்செல்லமுடியும் என்பதை அனுமானிக்க முடியாத அளவுக்கு மாயாதுன்னை ஒன்றும் முட்டாள் அல்ல.” என்றார் போதிராஜர்.

“ஆற அமரச் சிந்திப்பதற்கு நேரமில்லை. நம்மைப் பின்தொடர்ந்த படைகள் இப்போது ராஜபாட்டைக்கு ஏறியிருக்கும். புத்தளம் சென்று பலாவியூடாகப் போனோம் என்றால் நிச்சயம் மாட்டிக்கொள்வோம். வண்ணாத்திவில்லுக்குச்சென்றால் வாவியைக் கடந்து இலகுவாகச் சென்றுவிடலாம். கரைத்தீவுக்கும் மட்டுத்தீவுக்கும் இடையே களப்பு அவ்வளவு ஆழமில்லை.” என்றபடியே பொதியைச் சேணத்தில் சுற்றி குதிரையில் மாட்டி துள்ளி ஏறினான் வேதியன். புது உத்வேகத்துடன் அந்தப் புரவி வரிசை வடமேற்குத் திசையில் பாய்ந்தது. குறுக்குவழிகளில் எதிரியின் கண்களில் மண்ணைத் தூவியபடி, விடிகாலைப் பொழுதில் அவர்கள் கற்பிட்டியை அடைந்தனர். நீண்ட நந்திக்கொடி பறக்க, துறையில் யாழ்ப்பாணாயன் பட்டினத்தின் சிறு கப்பலொன்று, புறப்படுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. கைகளை அசைத்துக் கூவியபடி அவர்கள் கடற்கரையை நெருங்கினார்கள்.

போர்த்துக்கேயரின் அடாவடிகளால் பெருமளவு தென்னக மக்கள் யாழ்ப்பாணாயன் பட்டினத்துக்கும் வன்னிக்கும் இடம்பெயர்ந்துகொண்டிருந்த காலம் அது. வேதியனையும் அவன் சகாக்களையும் அப்படி தெற்கிலிருந்து இடம்பெயரும் குழு என்றே எண்ணிவிட்டான் மீகாமன். “நங்கூரத்தை எடு, கிளம்பிவிடலாம். இவர்களை ஏற்றிச்சென்றால் அங்கே பட்டினத்தில் சுங்க அதிகாரிகளிடம் நம்மால் பதில் சொல்லி மாளாது.” என்று துணை மீகாமனுக்கு ஆணையிட்டான் அவன். “நில்லுங்கள். நாங்கள் அரசகுடும்பத்தினர். ஆரியச்சக்கரவர்த்தியைச் சந்திக்கவேண்டும்.” என்று வாயில் கைகுவித்துக் கூவினான் விஜயக்கோன். “முட்டாள்களே, எங்கு வந்து என்ன பேசுகிறீர்கள். நாக்கை அறுத்துவிடுவேன். ஓடுங்கள் இங்கிருந்து” என்று பதிலுக்குக் கத்தினான் மீகாமன். “பைத்தியக்காரா, இந்த வார்த்தைக்காக நீ வருந்தப்போகிறாய். இதோ இவர் அபின்ன ஸ்ரீ  ஜயவர்த்தனபுரத்தின் மன்னர் தர்மபாலனின் தந்தை, சீதாவாக்கை மகாராஜன் மாயாதுன்னையின் மருமகன், ஜயஸ்ரீ வீதிய பண்டாரம்! நாங்கள் இவரது படைவீரர்கள். அரசியல் தஞ்சம் கோரி வடக்கே செல்கிறோம்.” என்று கோபத்துடன் சத்தமிட்டான் வருஷப்பெருமாள்.

மீகாமனின் உதடுகள் ஏளனத்தில் வளைந்தன “வேறென்ன கதை அளக்கப்போகிறீர்கள்? மரியாதையாக ஓடிவிடுங்கள். இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும்.” என்று கத்திய மீகாமன் அவ்வசனத்தை முடிக்கும் முன்பே தரையில் விழுந்தான். கழுத்தில் குறுவாள் பாய்ந்து குருதி பெருகியோட, அவன் கால்கள் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்ட துணை மீகாமன் அச்சத்துடன் அவர்களை நோக்கினான். “அந்தக் குறுவாளை உருவிப்பார் ஜயவர்த்தனபுரக் கோட்டையின் சிங்கமுத்திரை  பொறித்திருக்கிறதா என்று. எங்களை கப்பலில் ஏற்றப்போகிறாயா அல்லது உன் தோழனுக்கு ஏற்பட்ட கதியையே ஏற்றுக்கொள்ளப்போகிறாயா என்று நீயே முடிவுசெய்துகொள்” என்று கத்தினார் போதிராஜர்.  

அதற்குள் சத்தம் கேட்டு துறைமுகக் காவலர்கள் சிலர் அங்கே ஓடிவந்தார்கள். “துமனி, உடனே கப்பலில் ஏறுங்கள். இவர்களை நாங்கள் கவனிக்கிறோம்.” என்ற வருஷப்பெருமாள் வாளை உருவியபடி விஜயக்கோனுடன் அவர்கள் மீது பாய்ந்தான் நூலேணியைப் பிடித்து வேதியனும் போதிராஜரும் கப்பலில் ஏறுவதற்குள் அவர்கள் திரும்பிவிட்டனர். கலவரத்தோடு கடற்கரையைப் பார்த்த துணை மீகாமன், அங்கு சில துறைமுகக் காவலர் உயிர்பிரிந்து கிடக்க, சில வீரர்கள் குற்றுயிரோடு துடிப்பதைக் கண்டான். “உடனே நங்கூரத்தை எடு. எங்களைப் பின்தொடர்ந்துவரும் சீதாவாக்கைப் படைகள் இந்தக் கப்பலைத் தாக்க அவ்வளவு நேரம் எடுக்காது. உம். சீக்கிரம்”  என்று அவனைத் துரிதப்படுத்தினான் விஜயக்கோன். பாய்மரங்கள் விரிய கப்பல் கிளம்பியது.

கப்பலின் மேல்தளத்தில் நின்று துறைமுகத்துக்கு வரும் இராஜபாட்டையில் கிளம்பிய புழுதியை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் போதிராஜர். “அவர்கள் நெருங்கிவிட்டார்கள்” என்றான் அருகில் வந்து நின்ற வருஷப்பெருமாள். “அவர்களால் நம்மைப் பிடிக்கமுடியாது” என்றபடி பரந்த கடலின் பக்கம் தலையைத் திருப்பினார் போதிராஜர். கொஞ்சநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு “ஆரியச்சக்கரவர்த்தி நம்மை அவன் நாட்டில் அனுமதிக்க மறுத்தால் என்ன செய்வது?” என்று கேட்டான் வருஷப்பெருமாள். சிரித்தபடி “அது திருப்பற்சின்னத்தின் கையில் தான் உள்ளது” என்றார் போதிராஜர்.

“பர்மிய அனிருத்தன், சாவகத்து சந்திரபானு, பாண்டிநாட்டுக் குலசேகரன், சீனத்துக் குப்ளாய்கான், சீன மாவீரன் செங்கீ என்று, இந்தப் பற்சின்னத்தை அடைவதற்காகப் போராடியவர்களின் எண்ணிக்கை கணக்கில்லை. இவர்கள் கேட்டதெல்லாம் பற்சின்னத்தை அடைவதன் மூலம் வளத்தை – செழிப்பை மாத்திரமல்ல. முழு இலங்கையின் அதிகாரத்தையும் கூட! இன்று அமைதியாகக் கடலில் பயணிக்கும் இது இன்னும் எத்தனை திருவிளையாடல்களை நிகழ்த்தப்போகிறதோ!” போதிராஜர் தலையசைத்தார்.

வருஷப்பெருமாள் கடற்கரையில் கொல்லப்பட்டுக் கிடந்த துறைமுகக் காவலர்களைத் திரும்பிப் பார்த்துக் கேட்டான் “உண்மையிலேயே இந்தத் தந்தம் புத்தபிரானுடையது தானா? இல்லை கொலைத்தேவதை ஒன்றினதா? எத்தனை உயிர்களைக் காவுகொள்கிறது?” “நாம் அசோகனின் வழித்தோன்றல்கள்.” போதிராஜர் புன்னகைத்தபடி சொன்னார், “எப்போதும் ஆயிரம் பேரின் குருதியைக் குடித்தபின்னரே  அகிம்சை தன்னை நிலைநாட்டிக்கொள்கிறது.” 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)