மட்டக்களப்பின் தலைநகராகும் காரைதீவு!
வான்கூன்சின்
அறிக்கையிலிருந்து.....
இதென்ன புதுக்கதை! எப்போது
நிகழ்ந்தது இது? யார் காரைதீவை மட்டக்களப்பின் தலைநகர் ஆக்கியது?
என்றெல்லாம் பதற்றம் கொள்ள வேண்டாம். கொஞ்சம் மூச்சை
இழுத்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். என்ன ஏதென்று
போய் ஆறுதலாக விசாரிப்போம்.
இலங்கை ஒல்லாந்தரின்
ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலப்பகுதி அது. அப்போது (1664 - 1675) இலங்கையின் இடச்சு ஆளுநராக பதவி வகித்தவர், ரைக்லொவ்
வொல்கேர்ட்ஸ் வான்கூன்ஸ் (Rijcklof Volckertsz. van Goens). அவர்
பதவியா என்று அழைக்கப்பட்ட இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு, 1675இல் ஆளுநர் நாயகமாக இடமாற்றம் பெற்றுச்
சென்றார். அப்போது அவர் எழுதிச் சென்ற இலங்கை பற்றிய அறிக்கையில்
மட்டக்களப்பு பற்றிய விரிவான சித்திரம் வருகின்றது.
அதில் சில குறிப்புகள் வரலாற்று ரீதியாக முக்கியமானவை.
“மட்டக்களப்பில், காலம் காலமாக, மூன்று திசாவைகள் அல்லது மூன்று பண்டாரங்கள் ஆண்டு வந்த மூன்று பெரும் பிரிவுகள்
இருக்கின்றன. நாங்கள் இன்று வசதிக்காக ஒரு பிரிவாக ஆண்டாலும்,
அவை மூன்றும் இன்றும் வழக்கில் இருக்கின்றன. கல்லாறு,
சம்மாந்துறை, அக்கரைப்பற்று என்பன அவை.
கல்லாற்றின் கீழ், போரைதீவு, எருவில், மண்முனை, ஏறாவூர் எனும்
நான்கு பற்றுகளும், சம்மாந்துறையின் கீழ் சம்மாந்துறை,
கரைவாகு எனும் இரு பற்றுகளும், அக்கரை ஒரு பற்று
என்றும், மொத்தம் ஏழு பற்றுகளாலானது மட்டக்களப்பு.” என்கிறார் வான்கூன்ஸ். தொடர்ந்து, ஏறாவூரின் வட எல்லை நட்டூர் ஆறு (இன்று கல்குடாவில் கடலில்
கலக்கும் மாதுரு ஓயா), அக்கரைப்பற்றின் தென் எல்லை சங்கமன்கண்டி
என்று அவர் எல்லை வகுக்கும் பாங்கு, பழைய மட்டக்களப்புத் தேசத்தின்
“பற்று” நிர்வாக முறைமை, அதன் வடக்கு - தெற்கு எல்லைகள் எப்படியெல்லாம் மாற்றம்
கண்டிருக்கக் கூடும் என்பது பற்றி நம்மை மேலும் சிந்திக்கவைக்கின்றது.
நாம்
இனி முக்கியமாகக் கவனிக்கவேண்டிய வான்கூன்சின் வரிகளை கீழே அப்படியே தருகிறோம்.
“புலியனின் தீவும் அதற்கு அருகிலுள்ள தீவும், மண்முனைப்
பிரிவில் அடங்குபவை. புலியனின் தீவின் உட்புறமாக, ஆற்றிலிருந்து பீரங்கி சுடும் தூரத்தில் பழைய போர்த்துக்கேயரின் கோட்டை அமைந்துள்ளது.
தற்போது வெளிப்புறம் சேர்த்துக்கட்டப்பட்டு, அது
திருத்தி அமைக்கப்பட்டுள்ளது………..ஆனால் இங்குள்ள காற்று உலர்வாக
இல்லை. அருகிலுள்ள சதுப்புநிலங்கள், குளங்களால்,
காற்று கெடுமணம் கொண்டதாக இருக்கிறது. எரிபொருளும்
நீரும் வெளியிலிருந்து தான் கொண்டு வர வேண்டும். இதெல்லாம் ஒரு
மாகாணத்தின் தலைநகராக இருப்பதற்கு இக்கோட்டையைப் பொருத்தமற்றதாக ஆக்குகின்றன.
எனவே
சுத்தமான
– பொருத்தமான ஒரு இடத்தைத் தேடினால், “சொரட்ஜன்
கொண்டேவே”யை விட்டால் வேறு இடமில்லை. கடற்கரைக்கு
அருகில் இருக்கிறது. களப்புக்கும் அருகில் இருக்கிறது.
முழுப்பிராந்தியத்துக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. வற்றாத நன்னீர் ஆறு ஓடுகின்றது. எப்போதும் தூய்மையான
தண்ணீர் கிடைக்கக்கூடிய இடம். மிகப்பரந்த நன்னிலங்கள் உண்டு.
இலங்கையில் வேறெங்கும் கிடைக்கக்கூடிய
புத்துணர்வூட்டும் காற்று.……..எல்லாவற்றுக்கும் மேல்,
மோசமான தெற்குப் பருவகாலத்தில், எவ்வித சிக்கலும்
இன்றி, எத்தனை நாட்களும் இங்கு கப்பல்கள் தரித்து நிற்கலாம்.
அதுவும் பழைய யாழ்ப்பாணப்பட்டினம் போல கரையிலிருந்து துப்பாக்கி சுடும்
தூரத்தில்.”
இந்த
விவரணத்துக்குப் பின் ‘சொரட்ஜன் கொண்டேவே’யில் அமைக்க இருக்கும் கோட்டை பற்றிய விவரங்கள்,
கோட்டைக்கல்லாற்றில் இருக்கின்ற இடச்சு வீரர்களை இங்கு வரவழைப்பதற்கான
நடவடிக்கைகள் பற்றியெல்லாம் வான்கூன்ஸ் விரிவாக எழுதியிருக்கிறார்.
மட்டக்களப்பின்
தலைநகரை
“சொரட்ஜன் கொண்டேவே”க்கு இடமாற்றுகின்ற திட்டத்தை
வான்கூன்சின் இந்த அறிக்கையில் மட்டுமே நாம் அறிகிறோம். இது பற்றி
அதற்கு முன்போ, பின்போ வேறெந்த ஐரோப்பிய ஆவணங்களும் விரிவாகப்
பேசவில்லை. எனவே புளியந்தீவில் இருந்த தலைநகரை வேறொரு இடத்துக்கு
மாற்றுவது, வான்கூன்சே முன்னெடுத்த திட்டம் என்பது தெரியவருகிறது.
அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றபின்னர், அந்தத்
திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது.
புலியன்
என்ற வேடர் தலைவனின் தீவு,
பின்னாளில் புளியந்தீவு ஆனது என்று பல வாய்மொழி மரபுகள் கூறினாலும்,
அதை உறுதிப்படுத்த நம்பகமான சான்றுகள் கிடைக்கவில்லை. வான்கூன்சின் இந்த அறிக்கை அதை உறுதிப்படுத்தப் போதுமானதாக இருக்கிறது.
அடுத்து, “சொரட்ஜன் கொண்டேவே”
(Soratjan Condave) என்று வான்கூன்ஸ் குறிப்பிடும் இடம் வேறு எதுவும்
அல்ல. இன்றைய காரைதீவு தான். காரைதீவைத்
தான் மட்டக்களப்பின் தலைநகராக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் அவர்.
சொரட்ஜன் கொண்டேவே
தான் காரைதீவா?
அந்தப்பெயரே ஒழுங்காக வாய்க்குள் நுழையவில்லை. எந்த ஆதாரத்துடன் அது தான் காரைதீவு என்று அடித்துச் சொல்கிறாய் என்று நீங்கள்
கேட்பது விளங்குகின்றது.
அதைக் கண்டுபிடிக்க
நாம், ஒல்லாந்து வரைபடங்களிடம் போகவேண்டும். யாழ்ப்பாணப்பட்டினம், கொழும்பு, காலி, சோரொட்ஜன் கொண்டேவே
ஆகிய நான்கு இடங்களையும் இலங்கையின் நான்கு திசைகளிலுமிருந்த முக்கிய கோட்டைகளாகக் குறிப்பிட்டு,
ஒல்லாந்தர் வரைந்துள்ள 1600களின் வரைபடமொன்று நமக்குக்
கிடைக்கின்றது. பதினேழாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சில இடச்சு
வரைபடங்களில் “சொரட்ஜன் கொண்டேவே” எனும்
பெயர், சாய்ந்தமருதுக்குத் தெற்கே, வம்மிமடுக்கு
வடக்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது. வம்மிமடு என்பது இன்றைய நிந்தவூரின்
பழைய பெயர். இன்னொரு வரைபடத்தில் சாய்ந்தமருதுக்கும் பனிச்சைவெட்டுவானுக்கும்
இடையில் சொரொட்ஜன் கொண்டேவே குறிக்கப்பட்டுள்ளதால், அது காரைதீவு
தான் என்பதற்கான சான்று இன்னும் வலுக்கின்றது.
“சொரொட்ஜன்
கொண்டேவே” என்ற பெயருக்கும் இன்று உள்ள காரைதீவு என்ற பெயருக்கும்
என்ன சம்பந்தம் என்பதில் தெளிவில்லை. இடச்சு நாவிலோ, அல்லது அதை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த பிரித்தானியக் கைகளிலோ சரியான பெயர்
சிதைந்திருக்க வாய்ப்புகள் அதிகம். காரைதீவைத்தான் “கோர்தீவே” என்று எழுதி அது கொண்டேவே என்று தவறாகப் படியெடுக்கப்பட்டதா
என்று எண்ணத்தோன்றுகின்றது. அதிலுள்ள “சோரொட்ஜன்”
அல்லது “சவுரட்ஜன்” என்ற
முன்னொட்டு இன்னும் குழப்பத்தை ஊட்டுவதால், அதன் சரியான தமிழ்
வடிவத்தை இனங்காண்பதற்குக் கடினமாக உள்ளது. காரைதீவிலுள்ள
“கரைச்சை” நீர்நிலையால் வரக்கூடிய “கரச்சைக் காரைதீவு” எனும் பெயருக்கும் “சொரச்சன் கொர்தீவே”க்கும் தொடர்புள்ளதா என்றும் ஆராய
வேண்டும். காரைதீவு மக்கள், அதையொத்த உச்சரிப்பைக்
கொண்ட வேறு ஏதும் இடங்கள் இன்று தம்மூரில் எஞ்சியிருக்கிறதா என்று தேடிப்பார்க்கலாம்.
சொரொட்ஜன் கொண்டேவேயின்
அமைவிடத்தை இன்னொரு விதமாகவும் சிந்தித்துப் பார்க்கலாம். காரைதீவின் வடக்கு அந்தத்திலுள்ள
ஊர், மாளிகைக்காடு. அப்பகுதியில் இருந்த
மட்டக்களப்பு வன்னிமையின் மாளிகை ஒன்று, பின் பாழடைந்து காடு
மண்டியது என்பது ஐதிகம். அது மாளிகை அல்லாமல், சொரட்ஜன் கொண்டேவே கோட்டையாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.
எது எப்படியோ, புளியந்தீவைக்
கைவிட்டு, காரைதீவைத் தலைநகராக்கும் ஒல்லாந்தரின் திட்டம் பலித்திருந்தால்,
இன்று காரைதீவே மட்டுநகர் என்று அழைக்கப்பட்டிருக்கும். இன்றைய மட்டு - அம்பாறை மாவட்டங்கள், அவற்றின் பற்றுகள், அவற்றின் பிரதேச செயலகங்கள் எல்லாம்
நாம் எண்ணியிராத படி எப்படி எப்படி எல்லாமோ மாற்றம் கண்டிருக்கும். எத்தனையோ சம்பவங்கள், சரித்திரங்கள் எதிர்பாராதபடியெல்லாம் நிகழ்ந்திருக்கும். இந்த வரலாற்றின் புன்னகை தான் எத்தனை விசித்திரமானது!
(அரங்கம் பத்திரிகையின் 18 மே 2018 இதழில் வெளியான கட்டுரை)
கருத்துகள்
கருத்துரையிடுக