தந்ததாது (பாகம் 05)
கப்பல் ஓய்வறைக்கு வெளியே கூச்சலும் குழப்பமும் வலுத்தபடியே வந்தது. திடுக்கிட்டு விழித்துக்கொண்ட அனுவ்வரத், அறையை விட்டு வெளியே வந்தபோது, அம்பலவாணன் மேற்றளத்துக்கு வேகமாக ஏறிவருவதைக் கண்டார். “வந்துவிட்டோம். அதோ தென்படுவது தான் வாஸ்கோடகாமா முனை” என்று சொல்லி எதிர்ப்புறம் சுட்டிக்காட்டினான் அம்பலவாணன். ஏதோ அசம்பாவிதத்தை எதிர்பார்த்து பதறிப்போயிருந்த அனுவ்வரத் நிம்மதியுடன் திரும்பிப் பார்த்தார். கோவாவின் கரையோரம் கடலுக்குள் நீண்டிருந்த அந்த முனையை மூன்று பர்மியக் கப்பல்களும் மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தன. நீலவானம், வெண்ணிறப் பட்டுமணல், அதில் எறும்புகள் போல அங்குமிங்கும் ஓடித்திரியும் மனிதர்கள், அப்பால் பச்சைவிரிப்பாகப் பசுங்காடு, அங்கொன்றும் இங்கொன்றுமாக பலநாடுகளின் பெருங்கப்பல்கள் என்று கடற்கரையே மனோரம்மியமாக இருந்தது.
அம்பலவாணன் மேற்றளத்தில் ஏற்கனவே கூடிநின்ற கப்பற் பணியாளர்களுடன் இணைந்து பலவித ஆணைகளை இட்டபடியே மரக்கம்பங்களில் கட்டப்பட்டிருந்த பாய்மரச்சீலைக் கயிறுகளை அசைத்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்களிலேயே மூன்று கப்பல்களிலும் பர்மிய மயில் கொடிகளின் அருகே வெண்ணிறக் கொடிகளும் எழுந்து அவை தூதுக்கப்பல்கள் என்பதை கரைக்கு அறிவித்தன. கொஞ்ச நேரம் அமைதி காத்த பின்னர் கரையோரம் பீரங்கியில் மூன்று வேட்டுக்கள் தீர்க்கப்படுவதை அவர்கள் கண்டார்கள். “வரவேற்பும் நகருக்குள் நுழைய அனுமதியும்.” என்று புன்னகையுடன் சொன்னான் அம்பலவாணன்.
கப்பல்கள் துறைமுக மேடையை நெருங்கி நங்கூரமிட்டன. தென்னபதியும் அனுவ்வரத்தும் அம்பலவாணனிடம் விடைபெற்று சிறுவள்ளமொன்றில் ஏறி கரைக்கு வந்தனர். கரையில் அவர்களை எதிர்கொண்டு வரவேற்ற போர்த்துக்கேய சுங்க அதிகாரிகள், அனுவ்வரத் காட்டிய பர்மிய அரச முத்திரையைப் பரிசோதித்து அவர்கள் தூதர்கள் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். அச்செய்தியுடன் இரு வீரர்கள் குதிரையில் விரைய, பர்மியத் தூதர்கள் இருவரும் திராட்சை ரசம் வழங்கி உபசரிக்கப்பட்டனர். சற்று நேரத்தில் அவர்களை உள்ளூர்ப் படகோட்டிச் சிறுவன் ஒருவனுடன் வள்ளத்தில் ஏற்றிய போர்த்துக்கேயர், கோவா நகருக்கு செல்வதற்கான அனுமதிப்பட்டயத்தையும் வழங்கினர்.
கோவா நகர் கடற்கரையில் இருந்து சற்று உள்ளொதுங்கி மண்டோவி எனும் ஆற்றின் கரையில் இருக்கிறது. அங்கு செல்வதற்கு, வாஸ்கோடகாமா முனைக்கு அடுத்ததாக உள்ள தோனா பவுலா முனையைச் சுற்றிச்செல்ல வேண்டும். அந்தக் குடாவில் தான் மண்டோவி ஆறு அரபிக்கடலோடு கலக்கின்றது. மண்டோவி ஆற்றின் போக்கோடு நான்கைந்து மைல் பயணிக்கையில், நதியின் நடுவே, ஒரு ஆற்றிடைக்குறையைக் காணலாம். போர்த்துக்கேயர் அதை திவர் தீவு என்று அழைக்கிறார்கள். திவர் தீவை ஒட்டி மண்டோவியின் வலது கிளைநதி ஓரமாகச் சென்றால், போர்த்துக்கேயரின் கிழக்குலகத் தலைநகரான கோவாவைச் சென்றடைந்துவிடலாம்.
மண்டோவி ஆற்றில் கடுமையான காவல் நிலவியது. ஆறு நெடுகிலும், போர்த்துக்கேயரின் காவல் வள்ளங்கள் நடமாடிக்கொண்டிருந்தன. சிலர் அவர்கள் சென்ற வள்ளத்தை நிறுத்தி விசாரித்துவிட்டே மேற்கொண்டு செல்ல அனுமதித்தார்கள். கோவா நகரின் படகுத்துறையை அந்த வள்ளம் நெருங்கியதும், படகோட்டிச் சிறுவன் கரையில் நின்ற போர்த்துக்கேய வீரர்களிடம் செல்லுமாறு அவர்களிடம் சைகை காட்டினான். அந்த வீரர்கள், இருவரையும் கைலாகு கொடுத்து வரவேற்று நகருக்கு இட்டுச் சென்றார்கள்.
கோவா நகர் அப்போது தான் வளர்ச்சியடைந்து வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்கள் இதுவரை கண்டிராத கலையம்சங்களோடு பிரமாண்டமான கட்டிடங்கள் எழுந்துகொண்டிருப்பதை பர்மியத் தூதர்கள் கண்டார்கள். வெள்ளையர்களே அதிகளவு இருந்தாலும், பெருமளவு உள்ளூர்வாசிகளையும் அங்கே காணமுடிந்தது. மேலைத்தேய ஆடை அணிகலனில் பாரத நாட்டு மக்களைக் காண்பது, அவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
கோவா நகரின் படகுத்துறையை அண்மித்து இந்தியாவின் மிகப்பெரிய மேலைத்தேய சந்தையை அமைத்திருந்தார்கள் போர்த்துக்கேயர். அதைக் கண்டதுமே, மண்டோவி ஆற்றில் நிலவிய கடுங்காவலின் காரணத்தை பர்மியத் தூதர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. சீனத்துப் பட்டும் பீங்கானும், அராபிய வெல்வெட்டுத்துணிகளும், இலங்கைக் கறுவாவும் மலையாளத்துக் கராம்பும் சாவகத்து மிளகும் இந்திய – ஆபிரிக்க அடிமைகளும் விற்கப்படும் உலகிலேயே புகழ்பெற்ற சந்தை அது. அங்கே பர்மாத்தேக்கைக் கண்டது அவர்களை இறும்பூது எய்தச் செய்தது.
பலநிறத்தில் வானவில் போலத் தோற்றமளித்தன சந்தைக் கூடாரங்கள். பலவித காய்கறிகளின் மணம். அடுக்கப்பட்டிருந்த மரத்தளபாடங்கள், துணிமணிகளின் புத்தம்புது மணம். வாசனனத்திரவியங்களின் நறுமணம். அதைமீறிப் பரந்திருந்த மெல்லிய வியர்வை மணம். கூச்சல். குழப்பம். திருவிழா ஒன்றில் கூட்டத்துக்கு நடுவே சென்றுகொண்டிருப்பது போல் அவர்கள் உணர்ந்தார்கள். அந்த உணர்வு, மனிதமனம் அங்கு கொள்ளும் குதூகலத்தை தாமும் உணர்ந்ததால் ஏற்பட்டது என்பதைக்கண்ட அனுவ்வரத் புன்னகைத்தார். எந்தவித ஒழுங்கும் இல்லாத, சீரின்மையைப் பிரதானமாகக் கொண்ட சில இடங்களில் மானுட மனம் உணரும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் எண்ணி அவர் வியந்துகொண்டார். அந்த வியப்பு வெகுவிரைவிலேயே அருவருப்பாக மாறியது. அது, பாதையோரம் ஒரு போர்த்துக்கேயன், தான் விலைகொடுத்து வாங்கிய இந்திய அடிமை ஒருத்தியை, நண்பர்களுடன் இணைந்து சில்மிஷம் செய்துகொண்டிருந்ததைக் கண்டதால் ஏற்பட்டது என்பதை அவர் நினைவுகூர விரும்பவில்லை.
அவர்கள் அமைதியாக சந்தையைக் கடந்தனர். உதவிக்கு வந்த போர்த்துகேயரில் ஒருவன், “அதுதான் எங்கள் செனட்” என்று கூறி, தூரத்தே பிரமாண்டமாக அமைந்திருந்த மரத்தாலான ஒரு கட்டடத்தை சுட்டிக்காட்டினான். புனித கதரீனா தேவாலயம். போர்த்துக்கேயரின் ஆட்சிக்குட்பட்ட கிழக்குலக நாடுகளின் தலைமையகம். அங்கு மேலைத்தேய வாத்திய இசை முழங்க அவர்களுக்கு பெருவரவேற்பு அளிக்கப்பட்டது. போர்த்துக்கேய இந்திய வைஸ்ரோய் கொன்ஸ்டாண்டினோ டீ பிரகன்சா அவர்களை கைலாகு கொடுத்து வரவேற்று அமரச் செய்தான்.
பர்மிய அரசர் ஸ்ரீ திரிபுவன நரேந்திர பண்டித தர்மாதியக்ஷ மகாதிபதி, தங்கோ வம்சத்து பயினவுங் கியோதின் நொரத்தாவின் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் கூறிய தூதர்கள், பர்மாத்தேக்கில் அமைந்த மயிற்சின்னத்தை வைஸ்ரோய்க்கு பரிசாக வழங்கினர். அதன்பின்னர் தம் தூதின் நோக்கத்தை விளக்கிய அனுவ்வரத், பர்மாவிலேற்பட்டுள்ள பெரும்பஞ்சத்தையும், அதை நீக்க சோதிடர்கள் திருப்பற்சின்னத்தை கொணருமாறு ஆணையிட்டதையும், இலங்கையின் ஜயவர்த்தனபுரக்கோட்டையில் இருந்த திருப்பற்சின்னத்தைக் கொணர எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையும் சுருக்கமாக விளக்கினார். யாழ்ப்பாணாயன் பட்டணத்தில் போர்த்துக்கேயர் கைப்பற்றிய திருப்பற்சின்னத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பணிவுடன் கோரிய அனுவ்வரத், இலங்கையின் போர்த்துக்கேய கேப்டன் மேஜர் பல்தஸர் கியூடஸ் டீ சௌய்சா அவ்வாறு அதை வழங்குவதற்கு ஒப்புதலளித்து வழங்கிய கடிதத்தையும் வைஸ்ரோய் முன்னிலையில் சமர்ப்பித்தார்.
புத்தரின் பற்சின்னம் கிறிஸ்தவராகிய தமக்கு ஒரு பொருட்டல்ல என்று கூறிய வைஸ்ரோய், ஆனால் அது தற்போது அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது என்பதால், குறிப்பிட்ட கப்பத்தொகையை வழங்கினாலேயே அதைப் பெற்றுத்தரமுடியும் என்று பவ்வியமாக மறுத்தான். “தாங்கள் எதிர்பார்ப்பதை விடப் பெருந்தொகையை வழங்க எங்கள் மன்னர் தயார், கனம் வைஸ்ரோய் அவர்களே. கடலோரம் நங்கூரமிட்டுள்ள எங்கள் கப்பலில் எட்டு இலட்சம் வெள்ளி கியட் பணம் தங்களுக்காகக் காத்திருக்கிறது. தவிர, ஒரு கப்பல் நிறைய பர்மாத்தேக்கு. மொத்தமாக உங்கள் கணக்கில் மூன்று இலட்சம் குருசேடோவுக்கும் மேல் தேறும். திருப்பற்சின்னம் கிடைத்ததும் நீங்கள் கேளாமலே இன்னொரு உதவியையும் செய்வதாக மன்னர் வாக்களித்திருக்கிறார். கிழக்குக் கடலில் போர்த்துக்கேயருக்குத் தலையிடியாக விளங்கும் சாவக மற்றும் மலாய சுல்தான் அரசுகளுக்கு எதிராக மலாக்காவில் தன் படைகளை நிறுத்திவைக்க அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். மலாய வளைகுடாவில் அவை என்றென்றும் உங்களுக்குத் துணைநிற்கும்”
அவர் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல வைஸ்ரோய் திக்குமுக்காடிப்போனான். தந்ததாதுவின் பிரசித்தத்தை அவன் அறியாதவன் அல்ல. என்றாலும் அதற்காக இத்தனை உதவிகளை பர்மா வழங்கத் தயாராக இருக்கும் என்று அவன் கனவிலும் கருதவில்லை. ஆனால், அதை முகத்தில் வெளிக்காட்டாமல், நீண்ட நேரம் சிந்திப்பதாகக் காட்டிக்கொண்டான். எனினும் வைஸ்ரோயின் முகத்தில் கணநேரத்தில் வந்துசென்ற மாற்றம் மூலம் அவனது நிலைப்பாட்டைப் புரிந்துகொண்ட அனுவ்வரத் தென்னபதியை நோக்கி மகிழ்ச்சிப்புன்னகை உதிர்த்தார்.
ஆனால் அவரது மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் சம்பவம் அடுத்து நிமிடமே நிகழ்ந்தது. “தந்ததாதுப் பேழையை வழங்குவதற்கு முன் நீ கொஞ்சம் சிந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் வைஸ்ரோய்!” என்ற உரத்த குரலைக் கேட்டு செனட் மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் திரும்பிப்பார்த்தனர். வாயிலில் கோவா அதிமேற்றிராசனத்தின் மேற்றிராணியார் பேராயர் கஸ்பர் டி ஜோர்ஜ் லியோ பெரேரா நின்றுகொண்டிருந்தார். கருநிற நீளாடையும் வெண்தாடியும் திருச்சிலுவை தாங்கிய மார்பும் தங்கநிற ஆயர் தலையணியும் கனிந்த முகமும் என்று கம்பீரமாக நடந்து வந்த அவரைக் கண்டதும் ஏனென்று அறியாமல் அனுவ்வரத்தின் உள்ளம் பதறியது.
பர்மியத் தூதர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அப்போது எடுத்திருந்த வைஸ்ரோய் “திருத்தந்தையே இதில் நாம் சிந்திக்க எதுவுமில்லை. உரிய கப்பம் நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. நாம் கேளாமலேயே மலாக்காவில் நமக்கு ஆதரவாக பர்மியப் படைகள் வந்து நிற்கப்போகின்றன. வேறென்ன வேண்டும் நமக்கு? அதைக் கொடுத்துவிடலாம்.” என்றான்.
“வைஸ்ரோய், பர்மியத் தூதர் என்ன சொன்னார் என்பது உனக்குப் புரிந்ததா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டார் பேராயர் . “அதை அந்நாட்டுக்கு எடுத்துச்சென்றால் வளம் பெருகும் என்றார். அந்த வார்த்தையை சிந்திக்கும் போர்த்துக்கேயன் எவனும், அதை எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டான்!” என்றார் பேராயர். அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட வைஸ்ரோயின் முகம் சஞ்சலம் கொண்டது. அந்த மாற்றத்தைக் கண்டு குழப்பமடைந்த தென்னபதி பேராயர் பக்கம் திரும்பினார். பேராயர் புன்னகைத்தார். “ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக பர்மியத் தூதரே, மன்னிக்க வேண்டும். தாங்கள் கோரி வந்த பேழையை வழங்கப்போவதில்லை. எவ்வித சக்திகளும் இல்லாத எளிய பொருள் அது. இச்சின்னங்களை வழிபடுவது தவறு. அவற்றுக்கு மானுடத்தை மீறிய மகத்தான சக்தி இருப்பதாக நம்புவது அடுத்த தவறு. அதை அவ்வாறே நம்பி உங்களுக்கு வழங்குவது எமக்கும் பாவத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய தவறு.” என்று புன்னகை மாறாமல் சொன்னார் பேராயர்.
கைகளும் கால்களும் வியர்த்துக் குளிர்ந்தபடி அனுவ்வரத் அமர்ந்திருக்க தென்னபதி எழுந்தார் “தேவரீர் தவறாகக் கருதக்கூடாது. எங்கள் நாட்டின் சோதிடர்கள் சொன்னதையே எம் மன்னரின் தூதாக இந்த அவைக்குக் கொண்டுவந்தோம். வளம் பெருகுமா பெருகவில்லையா என்பது அங்கு கொண்டுசென்ற பின்னரே எமக்கும் தெரியவரும். தாங்கள் கருணை கூரவேண்டும். நாம் வழங்குகின்ற திறை போதாது - வேறு ஏதும் கையுறை வேண்டுமென்றால் தாராளமாக கேளுங்கள். பதிலுக்குப் போர்த்துக்கேயருக்கு என்ன பிரதியுபகாரம் செய்யவும் எங்கள் மன்னர் சித்தமாக இருக்கிறார்.” என்றார்.
அவர் பதிலைக் கவனிக்காமல் பேராயர் வைஸ்ரோய் பக்கம் திரும்பினார் “பர்மிய அரசன் வழங்கும் உதவிகளைக் கருதி நீ அந்தப் பேழையை இத்தூதர்களிடம் வழங்கலாம் வைஸ்ரோய். ஆனால் ஒன்றை நீ நினைவுகூரவேண்டும். மதத்துரோக மன்றம்! அதை இங்கு நடைமுறைப்படுத்துவது நான். செயற்படுத்துவது நீ. ஒரு சிறிய மாற்றத்துக்காக குற்றவாளிக்கூண்டில் நீ நிற்கலாம்.” என்று அதே புன்னகையுடன் சொன்னார் அவர். மதத்துரோக மன்றம் என்றதும் வைஸ்ரோய் மாத்திரமன்றி அங்கு அமர்ந்திருந்தவர்களே ஒருகணம் விதிர்விதிர்த்துப் போனார்கள். போர்த்துக்கல்லுக்கும் கிறிஸ்தவத்துக்கும் மாறாக நடந்துகொள்வோரைத் தண்டிக்கும் மன்றம் அது. சில மாதங்களுக்கு முன் தான் அது போர்த்துக்கேய அரசால் கோவாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. மிக இரகசியமாக விசாரணை நிகழ்த்தப்பட்டு மிக இரகசியமாகவே தண்டனையும் வழங்கப்படும் அம்மன்றத்திலிருந்து காற்றுவாக்கில் வெளியே வந்து விழுந்த வழக்குகள், தீர்ப்புகளின் விவரங்கள் எல்லாமே வயிற்றில் புளியைக் கரைப்பவை. அந்த மன்றத்தின் இரு நீதிபதிகளில் ஒருவனான வைஸ்ரோய், இன்னொரு நீதிபதியான பேராயரால் தண்டிக்கப்படுகின்றானென்றால்?
மதத்துரோக மன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் தான் நிற்பதாகக் கற்பனை பண்ணியதும் வைஸ்ரோய்க்கு வியர்த்துக்கொட்டியது. அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு உள்ளூரப் புன்னகைத்த பேராயர், தொடர்ந்து பேசினார். “வாணிபமும் செல்வமும் முக்கியம் தான். ஆனால் இறைவிசுவாசம் அதைவிட முக்கியம். இந்த எளிய பொருளை அவர்கள் கேட்பது போலவே சக்தி வாய்ந்த ஒன்று என்று நம்பி வழங்குவதன் மூலம் நீயும் பாவியாகிறாய் வைஸ்ரோய். தீர்ப்பு நாளில் அதற்கு நீ பதில் கூறியாகவேண்டும். அதை ஆறுதலாக கூறிக்கொள். ஆனால் இப்போது வேறு வழியில்லை. மதத்துரோக மன்றம் தான்.” என்றார் பேராயர். அனுவ்வரத்திற்கு அதற்கு மேலும் இருப்புக் கொள்ளவில்லை. “சுவாமி, தங்கள் கொள்கைகளை நாங்கள் அறியோம். மீண்டும் மீண்டும் எங்கள் திருப்பற்சின்னத்தை எளிய பொருள் என்று தாங்கள் கூறுவது எங்களைப் புண்படுத்துகிறது. தங்களுக்கு அது வெறும் பொருளாகத் தென்படலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது எங்கள் தெய்வத்தின் அடையாளம். புத்தபெருமானின் தர்மச்சக்கரத்தை இன்றும் உலகில் சுழற்றுகின்ற அச்சாணி அது. உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தயைகூர்ந்து அதை எமக்கு வழங்கியருள வேண்டும்.” என்று கைகுவித்தார் அவர்.
பேராயர் முகத்தில் மின்னிய புன்னகை மறைந்தது. ““கல்லையும் மண்ணையும் தான் வணங்குகிறீர்கள் என்றால், இறந்த பிரேதத்தின் பல்லைக் கூடவா? மூடநம்பிக்கைகளிலும் முட்டாள்த்தனங்களிலும் மூழ்கியிருக்கும் உங்களைப் போன்றோருக்கு மீட்பின் வழியைக் காட்டுவதே என் பணி.” என்று கடுமையான குரலில் சொன்ன அவர் வைஸ்ரோய் பக்கம் திரும்பினார். உரத்த குரலில் “போர்த்துக்கேய அரசும் திருச்சபையும் எனக்குத் தந்துள்ள அதிகாரத்தின் கீழ் கட்டளையிடுகிறேன். உடனே உன் பாதுகாப்பின் கீழ் இருக்கும் தந்ததாதுவை இங்கு கொணர ஆணையிடு. கூடவே…” என்று சொல்லி கைகளால் எதையோ சைகை காட்டினார் அவர். அனுவ்வரத்தும் தென்னபதியும் செய்வதறியாமல் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்தனர். எதிர்பாராத ஏதோவொன்று நிகழப்போகின்றது என்பதை அவர்கள் உள்ளுணர்வு சொன்னது. வைஸ்ரோய் ஒன்றும் சொல்லாமல் சேவகரிடம் கைகளைக் காட்டினான். சற்றுநேரத்திலேயே சேவகர் அந்தச் சிறுபேழையைக் கொணர்ந்து பேராயரிடம் கொடுத்தனர். அதைத் திறந்து உள்ளிருந்த பற்சின்னத்தை வெளியே எடுத்தார் பேராயர்.
புத்தபிரானின் திருப்பற்சின்னத்தைக் கண்ணெதிரே கண்டதும் மெய்சிலிர்த்தபடி கைகுவித்தார் தென்னபதி. பேராயரின் விரல்களுக்கிடையே அது மூன்றங்குல நீளத்தில் வெண்ணிறத்தில் மின்னியது. பளிங்குச் சிமிழ். பளபளக்கும் முத்து. வெண்மலர் மொட்டு. “ஹஹா… இறந்த வேட்டைநாயின் பல்லைப் போல” என்ற பேராயரின் கண்கள் குரூரத்துடன் இடுங்கின. “பர்மியத் தூதரே, இது தானே உங்கள் நாட்டுக்கு வளம் கொண்டுவரும் என்று சொன்னீர்கள்? இது வெறும் பல். எந்தவித அதிசய சக்திகளும் இதற்கு இல்லை என்று இப்போதே நிரூபிக்கிறேன். இந்தப் பல்லுக்கு உண்மையிலேயே மாயசக்திகள் இருந்தால் நான் இக்கணமே மாண்டு விழுகிறேன். உங்கள் கண் முன்பாகவே” என்றபடி அண்ணாந்து கைகளை விரித்தார் அவர். கணீரென்ற குரலில் “பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, நித்தியமும் சத்தியமும் ஆனவர் நீர் ஒருவரே. உம் நாமம் அர்ச்சிக்கப்படுக. உம் இராச்சியம் எழுக. ஆமென்! ஆமென்!” என்றார் பேராயர்.
அம்மிக்கல் போன்ற ஒரு கருவி மண்டபத்தின் மத்தியில் கொணர்ந்து வைக்கப்பட்டது. பேராயர் பற்சின்னத்தை அக்கருவியில் வைத்து, வேறேதோ சக்தியால் உந்தப்பட்டவர் போல அரைக்கும் கருவியால் ஓங்கி அதில் இடித்தார். பல் தூள் தூளானது. வாய்பிளந்து திகைத்து நின்றார் தென்னபதி. அவர் தோள்மீது கைவைத்து கண்களைக் கையால் பொத்தி விம்மியழத்தொடங்கினார் அனுவ்வரத்.
சபையில் பேரமைதி நிறைந்திருந்தது. வெளியிலிருந்த மரம் செடிகளில் ஒரு இலை அசையவில்லை. தொடர்ச்சியாக குழவியால் பற்சின்னத்தை பேராயர் அரைக்கும் ஓசை செவிப்பறையையும் இதயத்தையும் தாக்கிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களிலேயே எல்லாம் முடிந்துவிட்டது. அரைத்த பற்சின்னத்தைக் கையில் அள்ளி அனைவருக்கும் தூக்கிக் காட்டினார் பேராயர். இலங்கைத்தீவில் பௌத்தரின் பெருங்கீர்த்தி, சிங்கள மன்னரின் ஆட்சியதிகாரச் சின்னம், வீதிய பண்டாரத்தின் பெருங்கனவு, சங்கிலி மன்னனின் சபதம், பர்மிய மன்னனின் வேண்டுகோள், பலநூறு பேரின் இரத்தத்தில் ஆடிய தந்ததாது, அவர் கைகளில் வெறும் தூளாகக் கிடந்தது.
பேராயர் அலட்சியமான கண்களுடன் அவர்கள் இருவரையும் நோக்கினார் “இத்தூள் மீளவும் பழையபடி எழுந்தால் நம்புங்கள், இது இறைசின்னம் தானென்று. இனியும் இது எளியபொருள் என்று நீங்கள் நம்பாவிட்டால் நம்பவைக்க என்னால் முடியும். யாரங்கே, இதை அடுப்பில் இட்டு எரியுங்கள். இன்று இவர்கள் கோவாவிலிருந்து வெளியேறும் போது, மண்டோவி நதியில் இதன் எரிந்த சாம்பல் கரைவதைப் பார்த்த பின்னரே நாடு திரும்பவேண்டும்.” என்று கண்கள் இடுங்கிச் சொன்ன பேராயர், பற்சின்னத்தின் தூளை பேழைக்குள் விட்டெறிந்தார். படபடவென்று ஓசை எழும்படி கைகளைத் தட்டிய அவர், வைஸ்ரோய் பக்கமாகத் திரும்பி வெறித்துப் பார்த்துவிட்டு வெளியே நடந்தார்.
செனட் மண்டபம் மௌனமாக நின்றது. துக்கமடைத்த நெஞ்சுடன் பர்மியத் தூதர்கள் தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். அவர்களால் வாய் திறந்து பேசமுடியவில்லை. பலதடவை தொண்டையைச் செருமி தென்னபதி தன்னைத் தேற்றிக்கொண்டார் “பெருந்தவறு இழைத்துவிட்டீர்கள் கனம் வைஸ்ரோய் அவர்களே! இன்று போர்த்துக்கல் பர்மாவுக்கு அளித்த உபசாரத்துக்கு எதிர்காலத்தில் நிச்சயம் கடன் தீர்க்க வேண்டி நேரிடும்.” என்று சொல்லும்போதே அவர் குரல் இடறியது. “கோவாவில் மட்டுமில்லை, கிழக்கு நாடுகளிலேயே என்னை விட அதிகாரமும் உரிமையும் கொண்டவர் அதிமேற்றிராணியார் தான் தூதர்களே. அவர் ஆணையை மீறி நான் ஒன்றும் செய்யமுடியாது. பர்மிய மன்னருக்கு என் வணக்கங்களைச் சொல்லுங்கள். நீங்கள் கிளம்பலாம்.” என்றான் வைஸ்ரோய்.
மாலை இருள் சூழும் தருணத்தில், கோவா நகரின் படகுத்துறையில் பர்மியத் தூதர்கள் படகேறியபோது, பேராயரின் ஆணைப்படி, திருப்பற்சின்னத்தின் சாம்பல் அவர்கள் முன்னிலையில் மண்டோவி ஆற்றில் கரைக்கப்பட்டது. தாங்கொணாத துயரத்துடன் அவர்கள் படகில் கப்பலுக்குத் திரும்பினர். மெல்லிய போர்வையாக வானில் படர்ந்து வந்த இருள் உலகை மூடத் தொடங்கியது.
தந்ததாதுவின் சாம்பல் கரைந்த மண்டோவி ஆறு வெறியுடன் ஓடிவந்து கடலுடன் கலந்தது. கடல் தன் அலைக்கரங்களை ஆக்ரோஷமாக வீசி மண்டோவியை அணைத்துக்கொண்டது. கடல் மேற்பரப்பில், அலைகளின் சலனத்தில் பிரமாண்டமான ஒற்றைப்பல் என, மூன்றாம் பிறையின் பிம்பம் தோன்றியது. மேலே மெல்லிய ஒளியைப் பரப்பியபடி கிழக்கு வானில் எழுந்து, குளிர்ந்த கிரணங்களை வீசிப் புன்னகைத்தது பிறைநிலவு.
- முற்றும் –
கருத்துகள்
கருத்துரையிடுக