ஹோட்டன் சமவெளியும் கோவலன் சம்சாரமும்!

தம்பிலுவில் கண்ணகி

எங்கள் ஊர்ப்பக்கம், இப்போ கண்ணகியின் நாட்கள்… ஆண்டாண்டாய் மூடியுள்ள ஆலயங்களெல்லாம் “கதவுதிறந்து” அரிவையர் குரவை ஒலிக்க அவள் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள். “பாணக்கமு”ம் “புக்கை”யும் போதாதென்று, முகநூலில் என் முப்பாட்டிக்கு ஒரு படையல், இந்தப் பதிவு!

----------------------------------------------------------------



“எம்.குமரன்” படத்தில விவேக்குக்கு வந்த இந்த டவுட்டு, நம்மள்ல நிறையப்பேருக்கு வந்திருக்கும்!
-----
"தன்ட புருஷன பாண்டியன் கொண்டது அவள்ட தனிப்பட்ட பிரச்சினை. அதுக்காக ஏன் பொதுச்சொத்து மதுரைய கண்ணகி எரிச்சா?"

------

நியாயமான சந்தேகம் தான், இல்லையா? 

ஒருவிதத்தில் இந்தக் கேள்வியே பிழை தான். மன்னனும் அவன் ஆளும் நாடும் வேறுவேறில்லை. யுத்தத்தில் ஒரு மன்னன் வீழ்த்தப்பட்டால், அவன் நாடு சூறையாடப்படுவதும் அந்நாட்டு மகளிர், காமம்தீர் பாவைகளாவதும், அவன் மக்கள் அடிமையாக்கப்படுவதும், வெறும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட, காலனித்துவ ஆட்சியில், இந்த இலங்கை கூட சந்தித்த நிதர்சனம் தான்.

ஐநூறு ஆண்டுக்கு ஏன் போவான்,  இந்தக் கணினியுகத்திலேயே ஈழப்போர் முடிவுக்கு வந்தபோது, இத்தனை ஆயிரம் பேர்  துடிக்கத் துடிக்கச் சித்திரவதை செய்யப்பட்டதன் காரணம் வேறென்ன, “அவர்கள்” வேறு நாட்டினர், “மன்னன்” மறைந்ததும் இனி “அவர்களது” நாடு தம்முடையது என்ற பழங்குடி ஆழ்படிமம் “இவர்களது” மனத்தில் வெளிப்பட்டதே, அல்லவா?

இந்த வாதங்களை முன்வைத்து, மன்னனைத் தண்டிக்க நினைத்த ஒருத்தி, நாட்டையும் சேர்த்தே தண்டித்ததற்கு, நியாயம் கற்பிக்க முடியும். அதை விடுவோம், சிலம்பு என்ன சொல்கின்றது?

சிலப்பதிகாரம், எடுத்த எடுப்பிலேயே தான் எழுதப்பட்டதன் மூன்று நோக்கங்களைத் தெளிவாகக் கூறிவிடுகின்றது.  (சிலம்பு:பதிகம்:55-57) அதில் முக்கியமான ஒன்று:
"ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்!”

இந்தியப் பெருஞ்சமயங்கள் எல்லாவற்றிலும் முக்கியமான எண்ணக்கருக்களில் ஒன்று "ஊழ்வினை" (அல்லது நாம் சொல்லும் “தலைவிதி” / “கர்மா”). நாம் இன்று அனுபவிக்கும் பலன், என்றோ எப்போதோ செய்த செயலுக்கான அறுவடை என்று சொல்வது தான் ஊழ். “எந்த ஜென்மத்தில என்ன பாவம் செய்தனோ”, “இதென்ன கறுமம்டா!” என்ற சலிப்புச் சொல்லாடல்கள் எல்லாம் ஊழை அடிப்படையாகக் கொண்டவை தான்! "வினை விதைத்தவன் வினையறுப்பான்" என்ற பழமொழியும் ஊழையே விவரிக்கின்றது.

பொதுவாக ஒரு சமணக் காப்பியமாகச் சொல்லப்படும் சிலப்பதிகாரத்தில், ஊழ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது. (சைவ-வைணவங்களை விட, சமணமும் பௌத்தமும் ஊழை ஆழமாக நம்புபவை). கோவலன் ஏன் பொய்வழக்கில் கொலையுண்டான், மாதவிக்கு ஏன் பிரிவுத்துயர் என்று நிறைய விடயங்களுக்கு ஊழ்வினையையே பொறுப்பாளியாக சுட்டிக்காட்டும் சிலம்பு, மதுரை எரிய நேர்ந்ததற்கும் விரலைச் சுட்டுவது ஊழைத்தான்!

மதுரை எரியும் அந்தப்புள்ளியில் தான் சிலம்பின் மூன்று நோக்கங்களும் ஒன்றாகின்றன. அங்கு பாண்டியனின் அரசியல் பிழைத்திருக்கின்றது; எனவே அறம் கூற்றாகின்றது; மதுரை அழியவேண்டுமென்ற ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுகின்றது; அந்த ஊழுக்குக் கருவியாகித் தான் அதை நிகழ்த்துவதால், ஒரு சாதாரணப் பெண், “உரைசால் பத்தினி”யாகி உயர்ந்தோரால் ஏற்றப்படுகின்றாள்.

மதுரை அழிவது ஊழா? சிலம்பு எங்கே அப்படிச் சொல்கின்றது?

1. கண்ணகி முன் வரும் அக்கினி தேவன் “இந்நகரை எரிக்க, எனக்கு முன்பே ஆணை உள்ளது" (வஞ்சினமாலை 51-52;) என்கிறான்.

2. மதுரை எரியும்போது, "இந்நகர் செங்கோல் பிழைக்கும்போது, அதைத் தீயுண்ணும் வழக்கம் உண்டு" (வஞ்சினமாலை:103-105) என்று தமக்குள் சொல்லி மதுரையிலிருந்து வெளியேறுகின்றன அதன் காவற்பூதங்கள்.

3. “மதுரையும் அதன் அரசும் அழியும் என்று ஏற்கனவே தீச்சொல் உள்ளது.” (கட்டுரை காதை 135-137) என்று கூறி கண்ணகிக்கு ஆறுதல் சொல்கிறது மதுராபதித் தெய்வம்.

 மதுரை எரியவேண்டும் என்பதை ஊழ் எப்போதோ தீர்மானித்துவிட்டது. கண்ணகி வெறும் கருவி தான்!” என்று காரணம் கற்பித்து, சிலம்பு இப்படி வரிசையாகச் சான்று கூறும்போது, அக்காப்பியத்தின் முப்பெரும் நோக்கங்களில் ஒன்று என்பதாலேயே அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது.


இத்தனை “ஊழ்” கதைகள் வரும்போதும், கண்ணகி என்ன செய்கிறாள் பாருங்கள், அக்கினியிடம் “அந்தணர், அறவழி நடப்போர், பசு, பத்தினிகள், குழந்தைகள், முதியோர் ஆகியோரை விட்டுவிட்டு, தீயவரை மட்டும் அழி” என்கிறாள்.


விதிவிலக்குகள் கொஞ்சம் போட்டுவிட்டு, “மிஞ்சியதை மொத்தமாக அழி” என்று சொல்லவில்லை, தெளிவாகச் சொல்கிறாள், “தீத்திறத்தார் பக்கமே சேர்க!” அறம்! ஊர் விட்டு ஊர் வந்து, பொய்வழக்கில் கணவனை இழந்து நின்ற ஒரு அப்பாவிப்பெண்ணைத் தெய்வமாக உயர்த்தியதே அதுதான்!
---------------------------------

காப்பியமே சொல்வதைத் தவிர, மதுரை எரிந்து அழிந்ததன் பின்னணியில், உளவியல் சொல்லும் காரணம் ஒன்று இருக்கின்றது, அதற்குச் செல்லும்முன் ஒரு கேள்வி! ஹோட்டன் சமவெளிக்குச் சுற்றுலா சென்றிருக்கிறீர்களா?   :)

அங்கு ஒரு அழகான புல்வெளிச்சரிவு உண்டு. அருகிலேயே அந்த இடத்துக்குத் துளியும் சம்பந்தமில்லாதது போல், அடர்ந்த பன்னப்புதர்கள் காட்சியளிக்கும். பக்கத்திலிருக்கும் அறிவித்தற்பலகையை வாசித்தால், அது “1998இலேற்பட்ட காட்டுத்தீயால் பொசுங்கிய புல்வெளி, பன்னங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இப்படிக் காட்சி தருகின்றது” என்று சொல்லும்.




ஹோட்டன் சமவெளியில் மட்டுமல்ல, அடிக்கடி காட்டுத்தீ பரவும் வட அமெரிக்கப் பகுதிகளில், தாவரங்கள் முன்பை விட விரைவாகவும், சற்று வித்தியாசமாகவும் அரும்பி எழுவதைக் காரணம் காட்டி, “காட்டுத்தீ, மீண்டெழுதலுக்கான ஒரு படிமுறை” என்று உரிமைகோருகின்றது “தீச்சூழியல்” (Fire Ecology) எனும் அறிவியல் துறை.

இப்போது எதற்காக இந்த விஞ்ஞான வகுப்பு என்று கேட்கிறீர்களென்றால், மதுரை எரிந்ததற்கு ஒரு உளவியல் காரணம் உண்டு என்று கூறினேனல்லவா? அதற்குத் தான் இது, இப்போ திரும்ப தலைப்ப வாசிங்க!  “ஹோட்டன் சமவெளியும் கோவலன் சம்சாரமும்!” :D :D

விளங்கல்லயே?? o.O :)


தீயை மானுடவியல்  - உளவியல் ரீதியில், “அழிப்பதன் மூலமான ஆக்கம்” என்பதன் குறியீடாகச் சொல்வர். நாகரீகங்கள் எல்லாவற்றிலும், தாய்ப்பால் சுரக்கும் பெண்ணின் தனங்கள், வளத்தையும், தாய்மையின் பேரன்பையுமே குறித்து நிற்கின்றன. தன் (இட)மார்பைத் திருகிவீசி -  அந்த வளத்தை, தன் தாய்மையைத் தூக்கியெறிந்து, மதுரையை எரிக்கும் கண்ணகி, பேரழிவின் மூலம் மறுமலர்ச்சியொன்றை ஏற்படுத்துவதற்காக, தன்னைக் கருவியாக்கித் தியாகம் செய்து கொள்ளும் மானுடமனத்தின் ஒரு ஆழ்படிமம்! 

சிலம்பை ஊன்றிக்கவனித்தால், நெடுஞ்செழியனின் ஆட்சிக்காலம் அவ்வளவு மகிழ்ச்சிப்படும்படி இருக்கவில்லை என்பதை ஊகிக்கமுடியும்! செங்கோல் பிழைத்தது, நீதி வழுவியது, நகர் சாபம் பெற்றிருக்கிறது போன்ற, நாம் முன்பு பார்த்த  சிலம்பின் வரிகள் இதையே மறைமுகமாகச் சுட்டுகின்றன. பாண்டியன் அவையில் வழக்காட வந்து நிற்கும் கண்ணகி. உதிர்க்கும் முதற்சொல்லே “தேரா மன்னா!” (ஆராய்ந்தறியும் அறிவிலா மன்னனே!) என்பது தான்!

வஞ்சி, கொற்கை, உறையூர், தஞ்சை, பழையாறை, மகோதையபுரம் எல்லாப் பழந்தமிழ் நகரங்களுமே கொஞ்சக்காலமே புகழ் வீசின. ஆனால், கண்ணகி காலத்துக்கு முன்னும் பின்னும், இத்தனை ஆக்கிரமிப்புக்கள், அழிவுகளைக் கடந்து, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இன்றுவரை மதுரை மாநகர் கம்பீரமாக இயங்கி வருகின்றதே! ஏனென்று சிந்திக்க முடிகின்றதா?


சங்கத்தமிழின் இருப்பிடமாக விளங்கிய மதுரை, பத்தாம்பசலித்தனத்துக்கு அடிப்பட்டு, செயலிழந்து நலிந்து போயிருந்த காலகட்டத்தில் தோன்றி, கண்ணகியே அதை முற்றாய் “எரித்தழித்து” மீளப் பசுமையாக எழவைத்திருக்கக்கூடும்! அன்று எரிந்து மீண்டெழுந்த மதுரை, இன்று வரை பட்டுப்போகாமல் இன்னுமின்னும் வளர்ந்துகொண்டே வரக் காரணம், அவள் தன்னை இழந்து – தன் கணவனை இழந்து மூட்டிய பேரனலாகவே இருக்கமுடியும்! தீ மீண்டெழுதலுக்கான ஒரு படிமுறை! தீச்சூழியல்!


அந்தக்கோணத்தில் கண்ணகியைப் பார்ப்பது ஒரு மகத்தான அனுபவம். மதுரைக்கும், அவளுக்கு முதலில் கோயிலெடுத்த செங்குட்டுவனின் சேரநாட்டுக்கும், இங்கே இலங்கையின் ஒரு மூலையில் எங்களூரில் மூதாட்டியாய்ப் புன்னகைத்துக் கொண்டிருக்கும் அவளுக்கும் கோடிணைத்து, அந்த முக்கோண உறவில் இருந்திருக்கக் கூடிய சாத்தியங்களை கற்பனையில் இன்னும் விரித்தெடுத்துப் பார்ப்பது, மெய்சிலிர்த்துக் கண்ணீர் பெருக வைக்கும் அற்புதமான வரலாற்றுத் தரிசனம்!


அம்மம்மா கூய்! _/\_




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)