தீபாவளி - ஒரு அலசல்

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். வழக்கம் போலவே ஆரியப்பண்டிகை, நரகாசுரன் தமிழன், அவனைக் கொன்ற ஐயர் ஆத்து மாமி சத்தியபாமா, வடை சுடு ஆனால் வெடி சுடாதே போன்ற வாதங்கள் சமவலைத்தளங்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கின்றன. முழு இந்தியத் தீபகற்பமுமே கொண்டாடும் தீபாவளி, உண்மையிலேயே தமிழர் மத்தியில் திணிக்கப்பட்ட விழாவா? அது ஆரியப்பண்டிகையா?
எல்லாப் பண்டிகைகளும் போலவே தீபாவளிக்கும் பல பக்கங்கள் உண்டு. மதம் – பிராந்தியம் – வரலாறு  - வானியல் – அரசியல்  சார்ந்து, இப்படி முக்கியமாக ஐந்து விதமாகப் பார்க்கலாம். ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

1. மதமும் தீபாவளியும்
மதம்  என்று நோக்கினால், தீபாவளி ஒரு பல்மதப்பண்டிகை. சைவம், வைணவம், சாக்தம், சமணம், சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களின் முக்கிய பண்டிகைகளுள் அது ஒன்று.
சீக்கியத் தீபாவளி (படம்: santabanta.com)


சமணருக்கு அவர்களது தீர்த்தங்கரர்களுள் ஒருவரான மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த தினம் அது. சீக்கியர்களால், முகலாய அரசின் சிறையிலிருந்து,  குரு கர்கோபிந்த் விடுதலையான நாளான “பந்தி சோர் திவாஸ்” அதேநாளில் கொண்டாடப்படுகின்றது. நேபாளத்து நேவார் பௌத்தர்கள், அன்று “சுவாந்தி” என்ற பெயரில் இலக்குமி பூசை செய்கிறார்கள்.

இந்துக்களைப் பொறுத்தவரை, அவர்களிடம் பிராந்தியரீதியாக பல்வேறு தொன்மங்கள் நிலவுகின்றன. அவற்றில் முக்கியமானவை இரண்டு. ஒன்று, இராமன் பதினான்காண்டு வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய நாள். இன்னொன்று, நரகாசுரனை கண்ணன் அல்லது சத்தியபாமை அல்லது காளி அழித்த நாள். இரண்டாவது தொன்மமே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.

சைவமரபில், அது கேதாரகௌரி நோன்பின் இறுதிநாள். சிவமும் சக்தியும் இரண்டறக் கலந்து அர்த்தநாரீசுவர வடிவம் கொண்டு, ஆண்மை – பெண்மை என்ற இருமையின் பிரிக்கொணாமையை உலகுக்கு உணர்த்திய நாள்!

2. பிராந்திய ரீதியில் தீபாவளி
வடநாட்டின் பெரும்பாலான பகுதிகளில், தீபாவளி ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி தேய்பிறை பதின்மூன்றாம் நாள் தொடங்கி வளர்பிறை இரண்டாம் நாள் வரை கொண்டாடப்படும் இந்த ஐந்து நாட்களும் கூட, இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. அவற்றை இப்படி வருமாறு வகைப்படுத்தலாம்:

அ. தேய்பிறை பதின்மூன்றாம் நாள்.
மராட்டியம், குஜராத் பகுதிகளில் இது “தன திரயோதசி”, “தண்டெராஸ்”  என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. அட்சய திருதியை போலவே தன திரயோதசி அன்றும் தங்கம், ஏனைய பொருட்கள் வாங்குவது சிறப்பு என்று நம்பப்படுவதுடன், வணிகர்களாலும் வியாபார நிலையங்களாலும் விசேடமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால், நேபாளத்தில் “காக் திஹார்” என்றழைக்கப்படும் இந்நாளில் காகங்களே உணவளித்துப் போற்றப்படுகின்றன.

ஆ. தேய்பிறை பதினான்காம் நாள்.
வடநாட்டில், பொதுவாக “நரக சதுர்த்தசி” என்று அறியப்படும் இந்நாளே தமிழர்களால் தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது. அடுத்தநாள் அமாவாசையையே தீபாவளியாகக் கொண்டாடும் வடநாட்டவர், இந்நாளை "சோட்டி தீபாவளி" என்று அழைப்பதுடன், எண்ணெய்க்குளியல் செய்து, புத்தாடை புனைந்து இந்நாளில் மகிழ்வர். நேபாளிகளோ “குகுர் திஹார்” என்ற பெயரில் இந்நாளில் நாய்களுக்கு உணவிட்டு அவற்றை வழிபட்டு மகிழ்வர்.

இ.அமாவாசை.
தமிழர், மலையாளிகள், கன்னடர் தவிர்ந்த பெரும்பாலான எல்லா இந்திய இனக்குழுக்களும் இந்நாளில் தான் தீபாவளி கொண்டாடுகின்றனர். “இலக்குமி பூசை” என்று பொதுவாகச் சொல்லப்படும் இந்நாளில் புத்தாடை புனைவதும், திருமகளைப் போற்றுவதும் பட்டாசு வெடித்து வாணவேடிக்கைகள் நிகழ்த்துவதும் முக்கியமான மரபுகள். நேபாளத்தில் இலக்குமி பூசையுடன்,“.கோரு திஹாரும்”(கோமாதா பூசை) கொண்டாடுவார்கள்.
ஐவகை நேபாளத் திஹார் கொண்டாட்டங்கள்
காக், குகுர், கோரு, லக்ஷ்மிபூஜை, பௌ-பீஜ்



ஈ. வளர்பிறை முதனாள்:
நேபாளப்புத்தாண்டும், குஜராத், மராட்டியப் புத்தாண்டும் இந்நாளாக அமைகின்றது. தீபங்கள் ஏற்றுவது அன்று விசேடம்.வடநாட்டின் சில பகுதிகளில், கணவன் – மனனவியின் அன்னியோன்னியத்தை அதிகரிப்பதற்காக “பலி பிரதிபதா” எனும் நிகழ்வு கொண்டாடப்படுகின்றது. இருவரும் மாறிமாறித் திலகமிடுவதும், பரிசளிப்பதும் அன்றைய மரபுகள்.

உத்தரப்பிரதேசத்தில், இந்நாளில் “கோவர்த்தன பூசை” நிகழ்த்தப்பட்டு கண்ணன் வழிபடப்படுகின்றான். “அன்னகூடம்” என்ற பெயரில் பலவகைக் கறிகளுடன் சோறு சமைத்து மலைபோலக் குவிக்கப்பட்டு,கோவர்த்தன மலையைக் கண்ணன் தூக்கிய தொன்மம் நினைவுகூரப்படுகின்றது.

கோவர்த்தன பூசையில் அன்னகூடம்


உ. வளர்பிறை இரண்டாம் நாள்:
பௌ-பீஜ், பாய் திகா, யம துவிதியை என்றெல்லாம் கொண்டாடப்படுகின்றது. சகோதர – சகோதரியரிடையே பாசத்தை அதிகரிப்பதே இவ்விழாவின் நோக்கம்.சகோதரன், சகோதரிக்கு அன்பளிப்புகள் வழங்குவதும், சகோதரி அவனுக்கு உணவளிப்பதும் என்று பௌ-பீஜ் கொண்டாடப்படுகின்றது. பௌ-பீஜுடன் தீபாவளிக் கொண்டாட்டங்கள் இனிதே நிறைவுறுகின்றன.

ஒடியா, பீகார், அசாம் மற்றும் மேற்கு வங்கப் பகுதிகளில் மட்டும் தீபாவளி, காளி பூசையாகக் கொண்டாடப்படுகின்றது. அங்கங்குள்ள மரபுகளின் படியும் அன்று அழிந்தவன், நரகாசுரன் தான் எனும் போதும், அவனைக் கொல்பவள் பூமிதேவியோ, கண்ணன் மனைவி சத்தியபாமையோ அல்லள்; காளி! எனவே சியாமை, மகாநிசை (நிசி - இருட்டு)  போன்ற பெயர்களில் காளிக்கு விழா எடுக்கப்படுகின்றது. தேய்பிறை பதினான்காம் நாளை அவர்கள் “காளி சௌடஸ்” (காளி சதுர்த்தசி) என்று கொண்டாடுவதுடன், அமாவாசையன்று “சியாமா பூசை” என்ற பெயரில் காளிக்கு விழாவெடுக்கின்றார்கள். 

3. வரலாறும் தீபாவளியும்
தீபவரிசைகளை வீடுகள் தோறும் அடுக்கி அலங்கரித்து கொண்டாடப்படும் விழா பற்றிய வரலாற்றுக்குறிப்புகள், கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தே வடமொழியில் கிடைக்க ஆரம்பிக்கின்றன. தமிழில், பெண்கள் கொண்டாடிய கார்த்திகை விளக்கீடு பற்றிய குறிப்பை அதே நூற்றாண்டைச் சேர்ந்த சம்பந்தர் தேவாரம் தருகின்றது. அதனினும் பலநூற்றாண்டு பழைய சங்க இலக்கியமான நற்றிணையிலும் கார்த்திகை விளக்கீடு பற்றிய குறிப்பு வருகின்றது.

“கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே” என்ற பாடல்வரிகள் ஞாபகம் இருக்கின்றதா? எப்படி வெயில் சுட்டெரிக்கும் ஆடி மாதம், அம்மனுக்கு விழா எடுக்கப்பட்டதோ, அப்படி குளிரும் மழையும் வாட்டும் ஐப்பசி கார்த்திகை மாதங்களும் பல சடங்குகள்  எடுக்கப்பட்டு தெய்வங்கள் போற்றப்பட்டிருக்கின்றன.  இன்னொரு விதத்தில் அது விதைப்புக் காலம். சில இடங்களில் அறுவடை முடிந்த ஓய்வுகாலம் வேறு.  கார்கால இருளுக்கும் மழைக்கும் அஞ்சி நச்சுயிரிகள் வீட்டுள் நுழைவதைத் தடுக்க விளக்குகள் ஏந்துவதும், இறைவழிபாடு நிகழ்த்துவதும்  வழக்கமாக இருந்திருக்கின்றது. அந்த மரபே வடக்கே தீபாவளியாகவும், தெற்கே கார்த்திகை விளக்கீடாகவும் வளர்ந்திருக்கின்றது.

எனினும் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சியின் போதே தீபாவளி முதன்முதலில் கொண்டாடப்பட்டிருக்கின்றது என்பது பொதுவான கருத்தாக இருக்கின்றது. ஆரம்பத்தில் சக்தி வழிபாட்டு நாளாகவே அது இருந்திருக்கின்றது என்பதற்கு, நரகாசுரனைக் காளி கொன்ற கதைகள் சான்றாகின்றன. மெல்ல மெல்ல அது கண்ணனூடாக வைணவச்சார்பு கொண்டபோதும், அக்கதையில் சத்தியபாமைக்கு வழங்கப்படும் முன்னுரிமை மூலம் அன்னைத் தெய்வ முக்கியத்துவம் தீபாவளியில் தொடர்வதை அங்கு காணலாம். வடநாட்டில் தீபாவளியன்று நிகழும் திருமகள் வழிபாட்டையும்,  தீபத்தில் “திருவிளக்குபூசை” செய்யும் அண்மைக்கால மரபையும் இந்த “விளக்குத்” தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக இன்னும் விரித்தெடுக்க முடியும்.

4. வானியலும் தீபாவளியும்
உலகின் எந்தவொரு பண்டிகையை எடுத்தாலும், அங்கு தவிர்க்கமுடியாமல் வானியல் சம்பந்தப்படுவதைக் காணலாம். ஆண்டின் இந்த மாதம், இந்த நாள் இந்த விழா கொண்டாடப்படவேண்டும் என்பதுபோல இந்துப் பண்டிகைகளுக்கும் ஒரு விதி உண்டு. அதைத் தெரிந்துகொள்ள இந்து நாட்காட்டிகள் பற்றி ஓரளவு அறிந்திருக்கவேண்டும்.

சூரியன், சந்திரன் இந்த இரண்டு சார்பாகவும் புவியின் இயக்கத்தை கணிக்கும் இருவகை நாட்காட்டிகள்,  முறையே கதிர்வழி (Solar) -  மதிவழி (Lunar) என்று அறியப்படுகின்றன. கதிர்வழி நாட்காட்டிகளில் முக்கியமான கிரகோரியன் நாட்காட்டி, ஞாயிற்றுத்தொகுதியில் புவியின் சார்பியக்கத்தை வைத்துக் கணிக்கின்றது. ஆனால், பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளும் இஸ்லாமிய நாட்காட்டியும் மதிவழி நாட்காட்டிகள். அதாவது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அரபு நாட்காட்டி, “பிறை காண்பது”டனும், இந்திய நாட்காட்டிகள் இந்த அமாவாசையிலிருந்து அடுத்த அமாவாசை அல்லது, இந்த முழுநிலவிலிருந்து அடுத்த முழுநிலவு வரை என்றும் மதிவழி நாட்காட்டியின் மாதங்களைக் கணிக்கின்றன.

ஆனால், தமிழ், சிங்கள, கேரள நாட்காட்டிகளின் நிலைகள் இதில் சற்று வேறுபடுகின்றன.  அவற்றை “கதிர் – மதிவழி கலப்பு நாட்காட்டிகள்” எனலாம். தமிழ் நாட்காட்டியை எடுத்துக்கொண்டால், அது மாதத்தைக் கணிக்க கதிர்வழியையும், விரதங்கள் – விழாக்களைக் கணிக்க மதிவழியையும் கைக்கொள்கின்றது. தமிழ்கூறு நல்லுலகில் இரு நாட்காட்டிகளுமே வழக்கில் இருந்து, ஏதோவொரு காலத்தில் இரண்டும் ஒன்றாகக் கலந்திருக்கவேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருக்கின்றது.

தை மாதப்பிறப்பான தைப்பொங்கல், சூரியன் கும்பத்திலிருந்து மகரத்திற்கு நகரும் நாளாகவும், சித்திரைப்பிறப்பு, சூரியன் மீனத்திலிருந்து மேடத்துக்கு நகரும் நாளாகவும் இருக்கின்றது, அல்லவா? இப்படி சூரியன் சார்ந்தே நம் பன்னிரு தமிழ் மாதங்களும் கணிக்கப்படுகின்றன.

ஆனால் விரதங்கள், விழாக்களைப் பொறுத்தவரை, கந்த”ஷஷ்டி”, விஜய”தசமி”, விநாயக”சதுர்த்தி” என்று சந்திரன் சார்ந்தே கொண்டாடப்படுகின்றன. தீபாவளிக்கும் இதேநிலைமை தான். மதிவழி சார்ந்தே கணிக்கப்படும் தீபாவளி கொண்டாடப்படுவது “ஐப்பசி மாத தேய்பிறை பதினான்காம் நாள்”! 

(புரிதலை இலகுவாக்க – ஒரு மாதம் முப்பது நாட்கள்; வளர்பிறை 14 நாள், தேய்பிறை 14 நாள்; அமாவாசை 1; பூரணை 1; மொத்தம் முப்பது நாள், மதிவழியில் ஒரு மாதம்… சரியாக வருகின்றதா? :) )

கதிர்மதிவழி கலப்பு நாட்காட்டியான தமிழ் நாட்காட்டியும், மதிவழி நாட்காட்டிகளான ஏனைய இந்திய (இந்து?) நாட்காட்டிகளும் இப்படிக் கணிப்பில் வேறுபடுவதால், பல பண்டிகைகளில் குழப்பம் ஏற்படுவதுண்டு. தீபாவளியும் அவ்வாறே.

மதிவழி நாட்காட்டிகளான ஏனைய இந்திய நாட்காட்டிகளின் மாதம் ஆரம்பிப்பது, அமாவாசையில்.  நம் சித்திரை மாத அமாவாசையில், அவர்களுக்கு “வைசாகி” (வைகாசி) பிறந்துவிடுகின்றது. அதேபோல், வைகாசி அமாவாசையில் ஜேஷ்ட மாதம் (ஆனி), ஆனி அமாவாசையில்  ஆஷாட மாதம் (ஆடி). இப்படி தமிழ் நாட்காட்டியில் ஒருமாதம் நிகழ்ந்துகொண்டு இருக்கும்போதே, ஏனைய இந்திய நாட்காட்டிகளில் அடுத்த மாதம் பிறந்துவிடும். அதனால் தான், நாம் சித்திரையில் வருடப்பிறப்பு கொண்டாட, அவர்களெல்லாம் அதேமாத இடைவேளையில் பிறக்கின்ற “வைசாகி/வௌய்சொக்” பிறப்பை வருடப்பிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.

இனி தீபாவளிக்கு வருவோம். தமிழர் மட்டும் தான் (அண்மைக்காலமாக மலையாளிகளும், ஈழத்தமிழரும்) ஐப்பசித் தேய்பிறை பதினான்காம் நாள், தீபாவளி கொண்டாடுகின்றோம். ஆனால், பெரும்பாலான இந்தியர்களுக்கு தீபாவளி வருவது, அடுத்தநாளான அமாவாசை தான். நாம் கொண்டாடும் பதினான்காம் நாள், அவர்கள் “நரக சதுர்த்தசி” தான் கொண்டாடுகின்றார்கள்.  அமாவாசை அவர்களுக்கு புதிய மாதப்பிறப்பு என்பதால், அந்த அமாவாசையே அவர்களுக்கு “கார்த்திகை” மாதம் பிறந்துவிடுகின்றது. குஜராத்திகளும் மராட்டியர்களும் நேபாளிகளும் ஒருபடி மேலேபோய், அன்றைக்கே தங்கள் வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றார்கள்.

5. அரசியலும் தீபாவளியும்

நீ தடுக்கில் பாய்ந்தால் நான் கோலத்தில் பாய்வேன். :)
நரகாசுரனுக்கு வைக்கப்பட்ட ஒரு வீரவணக்கச் சுவரொட்டி.

தீபாவளி ஒரு ஆரியப்பண்டிகை. தமிழனை ஆரியன் வீழ்த்திய கதை மூலம் அது இட்டுக்கட்டிச் சோடிக்கப்பட்டிருக்கிறது. எனவே தீபாவளியைக் கொண்டாடவேண்டாம் என்ற கோஷம் சமீபகாலமாக அதிகரித்துவருகின்றது.

நம்மவர் மத்தியில் பரவிவருகின்ற இந்த வியாதிக்கு இலகுவில் மருந்து கிடையாது. இராவணன் தமிழன், நரகாசுரன் தமிழன், சூரபதுமன் தமிழன்…. இன்னும் யார்யாரெல்லாம் தமிழராகப் போகின்றார்களோ, முருகா… பழக்கதோஷத்தில் இவர்கள் துரியோதனனையும் தமிழன் என்று சொல்லிவிடக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன். அவர்கள் அப்படிச்சொல்லிவிட்டால், ஓரிரு மாதங்களுக்கு முன், தருமன், வீமன், அருஞ்சுனையன், நற்குலன், சகதேவன் எனும் ஐந்து தமிழ் மன்னர்களுக்கு எதிராக, கௌரவர் எனும் ஆரியக்குழு நடத்திய தாக்குதல் தான் பாரதப்போர் என்று, தமிழ்ப்பேரறிஞர் (?!) ஒருவர் செய்து முகநூலில் வெளியிட்ட ஆய்வு (??!!) என்னாவது?

எங்கே போய் தலையை முட்டிக்கொள்வதோ தெரியவில்லை! நரகாசுரன் தமிழன் என்று தீர்ப்புச் சொல்லமுன்பு இவர்கள் இரண்டு விடயங்களை ஒப்புக்கொள்ளவேண்டும். ஒன்று நரகாசுரன் தமிழன் என்பதன் மூலம், தீபாவளி உண்மையிலேயே நரகாசுர வதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை இவர்கள் மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார்கள். இரண்டு, அவன் பிரக்ஜோதிஷபுரத்தை – அதாவது இன்றைய அசாம் பகுதியை - ஆண்ட மன்னன் என்ற குறிப்பு மகாபாரதத்தில் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கின்றது. ஆம், அதிலென்ன சந்தேகம்? அசாமை அப்போது தமிழன் தான் அசால்டாக ஆண்டுகொண்டிருந்தான் என்று இவர்கள் சொல்வார்களென்றால், தமிழ்ப்பிராமிச் சாசனங்களையே “ஆதிச்சிங்கள சாசனங்கள்” என்று சொல்லும் சிங்கள அடிப்படைவாதிகளுக்கும் இவர்களுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் கிடையாது!

தீயவனான நரகாசுரன் தன் மகன் என்றபோதும், அவனைப் பெற்ற பூமிதேவியே - அவன் தாயே - சத்தியபாமை வடிவெடுத்து அவனைக் கொன்றாள் எனும் கதையும், நரகாசுரனை இருளாக – அஞ்ஞானமாக - தீமையாக உருவகித்து, அவன் அழிந்த நாளில் விளக்கேற்றி ஒளியை – ஞானத்தை – நன்மையைப் பரப்புதல் எனும் கோட்பாடும், அக்கதையைக் கருத்துத்தளத்தில் சிந்திக்கும்போது, பல்வேறுவிதமாகப் புரிந்துகொள்ள இடமளிப்பவை. நரகாசுர வதத்தை வெறும் குறியீட்டுக்கதையாகவே கொண்டு அப்படி விவாதிக்க, ஏன் நாம் தொடர்ந்தும் மறுக்கிறோம்?

இன்னொன்றை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். பண்டிகைகளோ விழாக்களோ, ஒருவர் அல்லது ஒருசிலர் வலுக்கட்டாயமாகத் திணித்தோ புகுத்தியோ கொண்டாடப்படமுடியாது. அந்தப் பண்டிகையை குறித்த சமூகத்தின் கூட்டு ஆழ்மனம் முழுமனதோடு வரவேற்கவேண்டும் – முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். சமகாலத்தையே பாருங்களேன், ஹோலி, இரக்ஷாபந்தன், அட்சய திருதியை எல்லாம் நாம் சிறுவயதில் கூட கண்டுகேட்டறியாத வடநாட்டுப் பண்டிகைகள். இன்றைக்கு சிறுகுழந்தைகளுக்குக் கூட அவற்றின் பெயர் தெரிந்திருக்கின்றது.

அவற்றைப் பண்பாட்டுமேலாதிக்கம் என்று புரிந்துகொண்டாலும் அமைதியாக ஏற்றுக்கொண்டிருக்கிறோமே தவிர, எங்காவது அவற்றுக்கு எதிர்க்குரல் எழும்பிக் கண்டிருக்கிறீர்களா? தமிழ்க் கலியாண வீட்டில் தமிழ் மந்திரம் ஒலிக்கவேண்டும் என்று ஆவேசப்பட்டுக்கொண்டு, மாப்பிள்ளை வடநாட்டுச் சேர்வாணியும் குர்த்தாவும் அணிந்து புன்னகை பூக்கும் போது பல்லைக் காட்டும் நமக்கு, பண்பாடு பற்றி வருத்தப்பட என்ன தகுதி இருக்கின்றது?

உண்மையில், மகிழ்ச்சிக்காக ஏங்கித் தவிப்பவர்கள் இன்றைய தலைமுறையினர். இந்த இயந்திர உலகில், ஒரு அரைமணிநேரம் ஓய்வு கிடைத்தால் எவ்வளவு குதூகலித்துப் போகிறோம்? அப்படியிருக்க மனவழுத்தம், சோகம் எல்லாவற்றுக்கும் மருந்துகள் பண்டிகைகள் தானே! எனவே தான் விரும்பியோ விரும்பாமலோ அவற்றை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றோம். அது காலத்தின் நியதி. அவற்றில் அகத்தார் – புறத்தார் என்று பாகுபாடு தேடி என்ன இன்பம் காணப்போகின்றோம்?

தீபாவளியையே எடுத்துக்கொள்ளுங்கள். சுற்றுச்சூழல் நேசம், பட்டாசு வெடிப்பு இந்தக் கோஷங்களுக்கப்பால் நன்றாக உற்றுப்பாருங்கள். நேபாளத்தில் தீபாவளியின் மூன்று நாட்களை காகங்களும் நாய்களும் மாடுகளும் பங்குபோட்டுக்கொள்கின்றன. வடநாட்டில் தீபாவளியின் நான்காம் ஐந்தாம் நாட்கள் கொண்டாடப்படும் பௌ-பீஜும்(சகோதரர் பண்டிகை) , பலி-பிரதிபதாவும் (கணவன் – மனைவி விழா) உறவுகளுக்கிடையே அன்னியோன்னியத்தை அதிகரிக்கக் கொண்டாடப்படுபவை. உத்தரப்பிரதேசத்தில் தீபாவளியில் செய்யப்படும் “கோவர்த்தன பூசை” கால்நடை வளர்ப்புக்கு மேய்ச்சல் நிலங்களின் அத்தியாவசியத்தை நினைவூட்டுவது.

சரி, வடநாட்டுக்கு ஏன் போவான், நாமே செய்கின்ற உறவினர் வீடுகளுக்குச் செல்வது, சிற்றுண்டிகள் செய்து உண்டு மகிழ்வது, அக்கம்பக்கம் பகிர்வது, புத்தாடைகள் அணிவது – ஏழை எளியவர்க்கு வழங்குவது, இவையெல்லாம், சமூக நடத்தையியலும் உயிர்ப்பன்வகைமை மீதான கரிசனையும் மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கும் இந்நாட்களில் எவ்வளவு அத்தியாவசியமானவை? வெடி, பட்டாசு என்றெல்லாம் கண்ணீர் வடிப்பவர்களில் ஒருவராவது இவை பற்றி வாய் திறக்கின்றார்களா? குறைந்த பட்சம், பண்டிகை நாட்களை உறவினர்களோடு கொண்டாட விடாமல், விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, நம்மை வீட்டுக்குள்ளேயே கட்டிவைக்கும் வணிகநோக்கத் தொலைக்காட்சிகளையேனும்….? ஏன் இவர்கள் கண்களில் மட்டும் வெண்ணெயும் சுண்ணாம்பும்?

தீபாவளி...... இறுதியாக!
தீபாவளி சமீபகாலமாக உலக இந்துக்களின் பெருவிழாவாக மாறிவருகின்றது. தீபாவளி பத்வா என்ற பெயரில் அதிகாலையில் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நிகழ்வு அண்மைக்காலமாக வடநாட்டில் புகழ்பெற்று வருகின்றது. இலங்கைத்தமிழரும் மலையாளிகளும் வெகு அண்மைக்காலமாகத் தான் தீபாவளியைக் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றார்கள்.

நாம், தமிழர் பண்பாட்டு அடையாளமாக முன்வைக்கும் எதுவுமே – தைப்பொங்கல் – சித்திரைப்புத்தாண்டு உட்பட, நம் இனக்குழுமத்துக்கு மட்டும் உரித்தானவை என்று இன்றைக்கு உரிமைகூற முடியாதவை. நாம் கொண்டாடும் எல்லாப் பண்டிகைகளையுமே இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான இனக்குழுமங்கள் கொண்டாடுகின்றன. எஞ்சி இருக்கின்ற ஒரேயொரு பண்டிகை, கார்த்திகை விளக்கீடு. நமக்கு உண்மையிலேயே பண்பாட்டு அக்கறை இருக்கின்றதென்றால், வெறுமனே ஐயையோ ஆரியன் அடிக்கிறானே, பார்ப்பான் புடைக்கிறானே, வடுகன் வறுக்கிறானே, சிங்களன் சிதைக்கிறானே, என்று ஓலமிடாமல், தீபாவளிக்கு மாற்றாக கார்த்திகை விளக்கீட்டை நம் மரபடையாளமாக முன்வைக்கலாம் ஆனால், சர்வதேச சமூகமே உலக இந்துக்களின் பொதுவிழாவாகக் கணிக்கும் தீபாவளியின் அதே அம்சங்களைக் கொண்டிருக்கும் ஒரு விழாவை, நம் மரபடையாளமாக முன்வைப்பதிலுள்ள சிக்கல்கள் என்னென்ன, அதைச் செய்வது - பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற கேள்விகளுக்கு மட்டும் யாரும் அத்தனை இலகுவாகப் பதிலளித்துவிடப் போவதில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)