தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)
தீபாவளி கொண்டாடி முடிந்த கையோடு உங்களுக்கெல்லாம் ஒரு செய்தி சொல்லவேண்டும். தமிழுலகைப் பொறுத்தவரை முக்கியமான பண்டிகைகள் மூன்று. சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி மற்றும் தைப்பொங்கல். இதைச் சொல்லத்தானா இந்தக் கட்டுரை எழுதினாய் என்று சலித்துக்கொள்கிறீர்களென்றால், அது தான் இல்லை. நம் தமிழ் கூறு நல்லுலகைப் பொறுத்தவரை இந்த மூன்று பருவ காலங்களிலுமே மறந்தும் கூட இணையப்பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது. போனாலும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு வந்துவிட வேண்டும். சித்திரை வருடப்பிறப்பின் போது, யாரோ ஒரு பகுத்தறிவுவாதி, அது ஆரியப்புத்தாண்டு. கொண்டாடும் நீங்களெல்லாம் ஆரிய அடிவருடிகள் என்று சபித்துக் கொட்டிக்கொண்டிருப்பார். தீபாவளி வந்தால், யாராவது முற்போக்குவாதி ஒருவர் ஆரியப்பண்டிகையைக் கொண்டாடும் முட்டாள்களே, வீணாக பட்டாசு கொளுத்தி சூழலை மாசுபடுத்தாதீர்கள்; என்று முழங்கிக் கொண்டிருப்பார். தைப்பொங்கல் வந்தாலோ, இன்னொரு மேதாவி வந்து பொங்கல் பொங்குவோரின் அகப்பையைப் பறித்து எறிந்துவிட்டு, "அதையெல்லாம் பிறகு பார்க்கலாம். இன்று தான் தமிழ்ப்புத்தாண்டு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், இதைப் பிடியுங்கள்" என்று பூங்கொத்து கொடுப்பார்.
என்ன நகைச்சுவை என்றால், தமிழ்ப்பண்பாடு எனும்போது, "ஆரியன், ஆரியன்" என்று கதறி அழும் இவர்கள் தான், ஆங்கிலப்புத்தாண்டில் 12 மணி வரை விழித்திருந்து முதல் ஆளாக வாழ்த்துச் சொல்பவர்கள். வெளிநாட்டில் தன் உறவினர் மகன் ஹலோவீன் கொண்டாடும் போது, பெருமையாக சமூக வலைத்தளங்களில் அவனது புகைப்படத்தைப் பகிர்வார்கள். ஆரியன் என்றால் கசப்பது, ஆங்கிலேயன் என்றால் இனிக்கிறதா என்று கேட்டால், அதற்குப் பதில் இருக்காது. இவர்களையெல்லாம் எந்த வகையறாவில் சேர்ப்பதென்றே தெரியாமல் இருக்கும்.
பண்டிகைகளைப் பஞ்சாங்கம் பார்த்தே கொண்டாடும் நாம் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஆயிரம் தான் புராண, சமய நம்பிக்கைகளைச் சொல்லிக்கொண்டாலும், பண்டிகைகளுக்குப் பின் உள்ளது காலநிலையும் புவியியலும் தான். அதனால் தான் பழங்கால காலக்கணிப்புக் கருவியான பஞ்சாங்கத்தை வைத்துக் காலம் கணித்து இவற்றைக் கொண்டாடிவருகிறோம். அதிலும் புவியியல் என்பது மிக முக்கியமானது. இந்தப் புவியியலும் காலநிலையும் சம்பந்தப்படுவதாலேயே இலங்கையின் வேறெந்தப் பகுதியிலும் அனுஷ்டிக்கப்படாத ஆடிப்பிறப்பு, வட இலங்கையில் மட்டும் கொண்டாடப்பட்டது. கிழக்கிலங்கையின் பட்டிப்பொங்கலானது, தைப்பொங்கலை அண்டி அமையாமல், தைப்பூசமன்று கொண்டாடப்பட்டது.
சரி, அப்படி என்றால் இவர்களெல்லாம் சொல்வது போல, தீபாவளி தமிழர் பண்டிகை இல்லையா? அதற்கும் புவியியல் - காலநிலைக்கும் தொடர்பு இருக்கிறதா?
தீபாவளி மட்டுமல்ல; தமிழர் என்ற இன்றைய வரையறையைத் தூக்கிக்கொண்டு நாம் பழங்காலத்துக்குச் சென்றோமென்றால், பல பண்டிகைகளை நாம் உரிமைகோரவே முடியாது. இன்னும் பல பண்டிகைகளை அந்தக்காலத்தில் காணவே முடியாது. சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் பற்றியோ, சித்திரைப்புத்தாண்டு பற்றியோ, தீபாவளி பற்றியோ, எங்குமே நேரடிக்குறிப்புகள் இல்லை. அதேவேளை சங்க இலக்கியங்களில் நேரடியாகக் குறிப்பிடப்பட்ட தைநீராடல், இந்திரவிழா முதலிய விழாக்களை நாம் இன்று கொண்டாடுவதில்லை. இடைப்பட்ட காலத்தில் சம்பந்தர் குறிப்பிட்ட ஐப்பசி ஓண விழா பற்றியோ, ஆண்டாளும் மணிவாசகரும் குறிப்பிட்ட பாவை நோன்பு பற்றியோ நமக்கு இன்று எதுவும் தெரியாது. ஆக, காலமாற்றத்தோடு ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கிறது. சமயம் கடந்து இன்று கிறிஸ்மஸ் காலத்தில் பலரும் நத்தார் மரம் வைக்கிறோம். கிறிஸ்தவப் பின்னணியில் உருவான ஆங்கிலப்புத்தாண்டைக் கொண்டாடுகிறோம். வடநாட்டுப் பண்பாட்டு வரவால், ஹோலியையும் ரக்ஷாபந்தனையும் கொண்டாடும் வழக்கமும் நம் மத்தியில் பரவி வருகின்றது.இதையெல்லாம் இந்தப் பண்பாட்டுத் தூய்மைவாதிகள் போராட்டம் செய்து தடுத்து விடுவார்களா? அப்படியே தடுக்கத்தான் முடியுமா?
தீபாவளி மட்டுமல்ல; தமிழர் என்ற இன்றைய வரையறையைத் தூக்கிக்கொண்டு நாம் பழங்காலத்துக்குச் சென்றோமென்றால், பல பண்டிகைகளை நாம் உரிமைகோரவே முடியாது. இன்னும் பல பண்டிகைகளை அந்தக்காலத்தில் காணவே முடியாது. சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் பற்றியோ, சித்திரைப்புத்தாண்டு பற்றியோ, தீபாவளி பற்றியோ, எங்குமே நேரடிக்குறிப்புகள் இல்லை. அதேவேளை சங்க இலக்கியங்களில் நேரடியாகக் குறிப்பிடப்பட்ட தைநீராடல், இந்திரவிழா முதலிய விழாக்களை நாம் இன்று கொண்டாடுவதில்லை. இடைப்பட்ட காலத்தில் சம்பந்தர் குறிப்பிட்ட ஐப்பசி ஓண விழா பற்றியோ, ஆண்டாளும் மணிவாசகரும் குறிப்பிட்ட பாவை நோன்பு பற்றியோ நமக்கு இன்று எதுவும் தெரியாது. ஆக, காலமாற்றத்தோடு ஒவ்வொன்றும் மாறிக்கொண்டே இருக்கிறது. சமயம் கடந்து இன்று கிறிஸ்மஸ் காலத்தில் பலரும் நத்தார் மரம் வைக்கிறோம். கிறிஸ்தவப் பின்னணியில் உருவான ஆங்கிலப்புத்தாண்டைக் கொண்டாடுகிறோம். வடநாட்டுப் பண்பாட்டு வரவால், ஹோலியையும் ரக்ஷாபந்தனையும் கொண்டாடும் வழக்கமும் நம் மத்தியில் பரவி வருகின்றது.இதையெல்லாம் இந்தப் பண்பாட்டுத் தூய்மைவாதிகள் போராட்டம் செய்து தடுத்து விடுவார்களா? அப்படியே தடுக்கத்தான் முடியுமா?
இப்படியெல்லாம் கேட்பதால், பண்பாட்டு அடையாளங்கள் வேண்டாம் என்று
சொல்வதாக விளங்கிக்கொள்ளக்கூடாது. புதுப்புதுக் கொண்டாட்டங்கள் அறிமுகமாக, பழைய வழக்கங்கள் அருகியும் மறைந்தும் போகின்றன என்ற புரிதல் நமக்கு இருக்கவேண்டும். அது காலமாற்றத்தில் இயல்பு தான். முடிந்த வரை நாம் காப்பாற்ற முயலலாம். இல்லாவிட்டால் அது அழிந்தொழிந்து போவது இயற்கையின் நியதி என்று பணிந்து பிரியாவிடை கொடுக்கலாம். பல்லாயிரக்கணக்கானோர் பங்கெடுக்கும், ‘பண்பாடு' என்ற பிரமாண்டத்தின் முன்னிலையில், வெறும் ஒற்றை ஆளாக நாம் செய்யக்கூடியது அது மட்டுமே.
சரி. தீபாவளி உண்மையிலேயே தமிழர் பண்டிகை இல்லை என்றால், அது எப்போது வழக்கத்துக்கு வந்தது? தீபாவளி பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் தமிழகத்தை விட வட இந்தியாவிலேயே அதிகளவு கிடைக்கின்றன என்பது உண்மையே. பதினெட்டுப் புராணங்களின் பட்டியலில் இடம்பெறும் ஸ்காந்தபுராணம், பத்மபுராணம் என்பனவற்றில் தீபாவளி பற்றிய குறிப்புகள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புராணங்கள் பொதுவாக
கிறிஸ்துவுக்குப் பின் ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் முற்றுப்பெற்றவை என்பது ஆய்வாளர் முடிவு. அதே போல, ஏழாம் நூற்றாண்டில் வட இந்தியாவை ஆண்ட ஹர்ஷர் என்ற மன்னரால் எழுதப்பட்ட ‘நாகானந்தம்’ எனும் நாடகத்தில் தீபங்கள் ஏற்றப்படுகின்ற, புதுமணத்தம்பதியர் பரிசுகளைப் பெற்றுக்கொள்கின்ற, ஒரு பண்டிகை பற்றிய குறிப்பு வருகின்றது. அப்பண்டிகையின் பெயர் “தீபப்பிரதிபதோற்சவம்” தமிழில், தலைமை விளக்கேற்று விழா. ஒருவேளை தலைத்தீபாவளியாக இருக்குமோ?
பத்தாம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவை ஆண்ட இராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணரின் செப்பேடு ஒன்றில், தீபோற்சவம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. பதினோராம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த அல்புரூணி எனும் பாரசீக அறிஞர், கார்த்திகை மாத அமாவாசையை இந்தியர்கள் தீபமேற்றி கொண்டாடுவதை விபரித்துள்ளார். தீபோற்சவம் பற்றிக் குறிப்பிடும் பத்தாம் பதினோராம் நூற்றாண்டு சமண சமயக் கல்வெட்டுகளும் வட இந்தியாவில் கிடைத்திருக்கின்றன. பிற்காலத்தில் சமயபேதமின்றி வட இந்தியாவின் சைவர்கள், வைணவர்கள், சாக்தர்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் எல்லோரும் கொண்டாடும் பெரும் விழாவாக தீபாவளி வளர்ந்திருக்கின்றது.
தமிழரைப் பொறுத்தவரை தீபாவளி தொடர்பான மிகப்பழைய சான்று இலங்கையிலே தான் கிடைத்திருக்கிறது. 1310இல் எழுதப்பட்ட சரசோதிமாலையில் "தீபாவலி" கொண்டாடுவது எப்படி என்ற குறிப்பபு சொல்லப்பட்டிருக்கிறது. அதை அடுத்து தீபாவளி பற்றிக் கிடைக்கும் விரிவான சான்றுகள், நாயக்கர் காலக் கல்வெட்டுகள் தான். அதிலும் கி.பி 1623 – 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் காலத்திலேயே தமிழகத்தில் தீபாவளி புகழ்பெறத் தொடங்கியது என்று ஆய்வுலகில் நம்பப்படுகிறது.
என்றால் தமிழர் மத்தியில் தீபாவளி பிற்காலப் பண்டிகையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கு முன் தமிழர் மத்தியில் தீபாவளியை விடப் புகழ்பெற்று விளங்கிய இன்னொரு விழாவைப் பற்றிக் கூறவேண்டும். சங்க இலக்கியங்களிலேயே குறிப்புள்ள, இன்று வரை நீடிக்கின்ற விழா ஒன்று. அது என்னவென்று தெரிந்து கொள்ள அடுத்தவாரம் வரும் வரை காத்திருங்கள்.
(அரங்கம் பத்திரிகையின் 38ஆவது இதழில் 2018.11.10 அன்று வெளியான கட்டுரை)
கருத்துகள்
கருத்துரையிடுக