வீரம் விளைஞ்ச மண்ணுரா இது!

போர்வீரன் ஒருவனும் பெண்ணொருத்தியும், மட்டக்களப்பு
1670 பிரெஞ்சு ஓவியம்

“ஸ்ரைல்டா கெத்துடா மாஸ்டா” என்று நம்மை நாமே சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமை இருக்கலாம், தமிழகத்தின் ஆன்மிக அரசியல்வாதியார் போல! அதையே இன்னொருவன் வந்து “அண்ணே நீங்க ஸ்ரைல்ணே கெத்துண்ணே மாஸ்ணே” என்று தமிழ்நாட்டுப் பாணியில் சொன்னால், எப்படி இருக்கும்? புல்லரித்துப் போகும் இல்லையா? அதையே நாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஒரு வெள்ளைக்காரன் சொல்லிவிட்டுப் போனால்? அதுவும் நமக்கு இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தைய அம்மப்பா, அப்பப்பாவைப் பார்த்து சொல்லிவிட்டுப் போயிருந்தால்? “பரம்பரை பரம்பரையாக வீராதி வீரர்கள்டா நாங்க” என்று சொல்லிக்கொண்டு சுவரில் சாய்ந்து தலைகீழாகத் தான் நின்றிருப்போம், அப்படித்தானே?

அப்போது ஏறாவூர்ப்பற்றின் வடக்கெல்லையான நட்டூர் ஆற்றிலிருந்து அக்கரைப்பற்றின் தெற்கெல்லையான சங்கமன்கண்டி வரை வரையறுக்கப்பட்டிருந்தது மட்டக்களப்பு நாடு. அந்த நாட்டில் வாழ்ந்தவர்களைப் பற்றித் தான் இப்படிப் புகழ்ந்து எழுதியிருக்கிறார் வான்கூன்ஸ். வான்கூன்ஸ்...? எங்கோ கேட்ட பெயர் மாதிரி இருக்க வேண்டுமே! இந்த மனிதன் தான் மட்டக்களப்பின் தலைநகரை காரைதீவுக்கு மாற்ற முயன்றவர். ஞாபகம் வந்து விட்டதா? மூன்று மாதங்களுக்கு முன்பு இவரது அந்த அறிக்கை பற்றி பார்த்திருக்கிறோம். இதே அறிக்கையின் ஓரிடத்தில் தான் “வீரம் விளைஞ்ச மண்ணை” புகழ்கிறார் வான்கூன்ஸ்.

மட்டக்களப்பை மூன்று “பண்டாரங்கள்” ஆண்டு வந்தார்கள் என்ற குறிப்போடு இந்நிலத்தை தன் அறிக்கையில் அறிமுகப்படுத்தும் வான்கூன்ஸ், இவர்கள் தமக்கு மேற்கே இருந்த வேடர்களையும் ஆண்டு வந்ததையும், கி.பி 1500 வரை சுயாட்சி அரசுகளாகவே அவர்கள் விளங்கியதையும், கண்டி அரசின் முழுமையான ஆதிக்கம் அவர்கள் மீது இருந்ததில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் கண்டி அரசருக்கு ஆண்டுக்காண்டு அவர்கள் தேன், மெழுகு, வேறு திறைகள் என்பவற்றை வழங்கி வருகிறார்கள் என்பதை வான்கூன்ஸ் குறிப்பிடத் தவறவில்லை.

போர்த்துக்கேயர் கூட புலியந்தீவில் மாத்திரமே தங்கள் அதிகாரத்தை மட்டுப்படுத்தியிருந்தார்கள் என்பதையும், மட்டக்களப்பு வாவியூடாக வந்த ஓரிரு வெளிநாட்டுக் கப்பல்களில் மாத்திரமே சுங்கம் வசூலித்தார்கள் என்பதையும் அதைத்தாண்டி உள்நாட்டுக்குள் நுழைய அவர்கள்
துணியவில்லை என்பதையும் சொல்லும் அவர், கூடவே 1638இல் அக்கோட்டையை போர்த்துக்கேயரிடமிருந்து ஒல்லாந்தரான தாம் கைப்பற்றியபோது நடந்த உருக்கமான சம்பவங்களையும் விவரித்துள்ளார். 

வான்கூன்ஸ் குறிப்பிடும் இன்னொரு விடயம் முக்கியமானது. மட்டக்களப்பின் வேடர்கள்  மலபார் மற்றும் யாழ்ப்பாணப்பட்டினத்து அரசர்களால் வெல்லப்பட்டதைச் சொல்லும் வான்கூன்ஸ், அந்த அரசர்களும் இந்தப் பண்டாரங்களும் ஒரே வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதையும், அவர்கள் 1500களுக்கு முன்பிருந்தே சுயாட்சி அரசாக இருந்து வருகிறார்கள்
என்பதையும் சொல்லியிருக்கிறார்.

சரி, வான்கூன்ஸ் எங்கே எப்படி இம்மண் வீரம் விளைந்த மண் என்பதை விவரித்திருக்கிறார்? வீரத்தை மட்டுமல்ல; இம்மண்ணை அணுவணுவாக அனுபவித்துப் புகழ்ந்திருக்கிறார் மனிசன். இலங்கை முழுவதும் சுற்றிப்பார்த்திருக்கக்கூடிய வான்கூன்சுக்கு மட்டக்களப்பே மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்திருக்கிறது என்பதில் நாம் சந்தேகம் கொள்ளவே தேவையில்லை. ஏன்? கீழே அவரது வரிகளை அப்படியே படித்துப் பாருங்களேன்!
Source: Donald Ferguson, 1998, Earliest Dutch Visits to Ceylon, p. 369

“வேட்டையாடுவதற்கு, இலங்கையில் வேறெங்கும் இங்கிருப்பது போன்ற மிருகங்களும் பறவைகளும் இல்லை! இங்குள்ளவர்கள் போல ஏழைகள் என்றாலும், செல்வந்தர்கள் என்றாலும் சோற்றை விரும்பிச் சாப்பிடுபவர்கள் வேறெங்கும் இல்லை!” (இலங்கையின் மேற்குக்கரையில் உள்ள ஏதோ ஒரு கோரளையிலும் இந்த வழக்கம் இருப்பதைக் குறிப்பிடுகிறார்.)

“கறுவா இங்கு மிகப்பெரும் அளவில் விளைகிறது. நாங்கள் இலங்கைக்கு வருவதற்கு பல்லாண்டுகள் முன்பிருந்தே கறுவா இங்கிருந்து பெரும்பாலும் ஆண்டுக்காண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையில் வேறெங்கும் இங்கு கிடைப்பது போல ஏலம், கறுவா, மிளகு, ஏனைய வாசனைத்திரவியங்கள் பெருமளவில் விளைவதில்லை! இலங்கையில் எல்லா இடத்திலும் கிடைத்தாலும், இங்கு கிடைப்பது போல
மரங்கும் வேறெங்கும் பெருமளவில் கிடைப்பதில்லை!”

அடுத்துத் தான் மெய்சிலிர்க்க வைக்கும் அந்த வரியைச் சொல்கிறார் வான்கூன்ஸ்! “பாணமை தவிர்ந்த வேறொரு திசையால் உயர்நில (கண்டி) மக்கள் இவர்களை அணுகமுடியாதபடி, மேற்குப்புறம் வேடர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள். எல்லா உள்நாட்டு - வெளிநாட்டு எதிரிகளையும் எதிர்த்து விரட்டுமளவுக்கு பெரும் எண்ணிக்கையிலான திடகாத்திரமான, வீரம் செறிந்த ஆடவர் இங்கிருப்பது போல் இலங்கைத்தீவில் வேறெங்குமே இல்லை!”

அத்தோடு நிறுத்தவில்லை வான்கூன்ஸ். அவர் தொடர்ந்து சொல்கிறார். “இங்கும் இலங்கையின் வேறு பகுதிகளிலும் வளங்கள் நிறைந்து கொழிக்கின்றன. நம் ஐரோப்பிய எதிரிகளிடமிருந்து குறைந்தது இருபது ஆண்டுகள் தாக்குப்பிடித்தோமென்றால் நாம் இங்கிருந்து பெருமளவு லாபத்தைப் பெறலாம்.” வணிகத்தையே நோக்கமாக இருந்த ஒல்லாந்தரின் அதிகாரியொருவர் இப்படி பேராசையோடு விவரிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால், தங்கள் ஏனைய ஐரோப்பிய எதிரிகளிடமிருந்து இலங்கையையும் குறிப்பாக கீழைக்கரையையும் காப்பாற்ற வேண்டும் என்று விரும்பியிருக்கிறார், பாருங்கள். சுயநலத்துக்கு மேல் அங்கு நமக்கு துலக்கமாகத் தெரிவது நம் மண்ணின் வளமும், மக்களின் செழுமையும் தான்.

வரலாறு சுட்டிக்காட்டும் இறந்தகாலம் அழகாகத் தான் தெரிகிறது. நிகழ்காலம் நம்மை நினைத்து வெட்கிக் கூனிக்குறுகச் செய்கிறது. பெருங்கேள்விகளோடு தூரத்தே தெரியும் எதிர்காலம், ஏக்கப்பெருமூச்சை மட்டுமே எஞ்சச்செய்கிறது.

(அரங்கம் பத்திரிகையின் 2018.09.08 இதழில் வெளியான கட்டுரை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)