“அஞ்சன நிறுக்கும் கண்ணாலம் செய்யும் புத்த தேவர்!”

- பொலனறுவை வேளைக்காரக் கல்வெட்டிலிருந்து

ஹெட்டதாகை, பொலனறுவை.


பொலனறுவை சோழர்களின் தலைநகராக எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கிய நகரம். ஆனால் அங்கு அதற்கு முன்பும் பின்பும் சோழநாட்டினதும் பாண்டிய நாட்டினதும் முழுமையான ஆதிக்கம் நிலவி இருக்கிறது. அதற்கான சான்றுகளைத் தான் நாம் இன்றும் அங்குள்ள சைவக்கோவில்களாகக் கண்டுகொண்டிருக்கிறோம். அப்படி, பொலனறுவையில் கிடைக்கும்
சான்றுகளில் சுவாரசியமான ஒன்று, வேளைக்காரக் கல்வெட்டு.

பொலனறுவை பாலி மொழியில் புலத்திநகரம் என்றும் வடமொழியில் புலஸ்திபுரம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழில் இதை ‘புலைநரி’ என்று அழைத்தார்கள். இராஜராஜசோழன் இலங்கையைக் கைப்பற்றியபோது, இந்நகரின் பெயரை ‘ஜனநாதபுரம்’ என்று மாற்றினான். பின்பு விஜயபாகு மீண்டும் இந்நகரைக் கைப்பற்றி பொ.பி 1055 முதல் 1110 வரை ஆண்ட போது, ‘விஜயராஜபுரம்’ என்று பெயர் பெற்றிருந்தது.

தமிழர், தெலுங்கர், கேரளர் என்று பல நாடுகளை - பல சமூகங்களைச் சேர்ந்த ‘வேளைக்காரர்’ எனும் வீரர்கள், புலத்திநகரின் காவல் பணியில் ரூடவ்டுபட்டு வந்தார்கள். சோழர் காலத்திலும், பின் விஜயபாகு காலத்திலும், பின்பு பராக்கிரமபாகுவின் படையில் கூட வேளைக்காரர் இடம்பெற்றதை மகாவம்சம் வர்ணிக்கிறது. ஒருமுறை விஜயபாகுவிற்கும் வேளைக்காரருக்கும் முரண்பாடு ஏற்பட்டதை மகாவம்சம் பதிவு செய்திருக்கிறது. 

சோழருக்கு வடக்கே கர்நாடகத்தை ஆண்டுகொண்டிருந்த மேலைச்சாளுக்கியருக்கு விஜயபாகு அனுப்பிய தூதர்களை சோழ வீரர்கள் வழிமறித்து அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். அதனால் கோபமுற்ற விஜயபாகு சோழர் மீது போர் தொடுத்திருக்கிறான். ஆனால், அவன் படையிலுள்ள வேளைக்காரர், சோழருக்கு விசுவாசிகளாக மாறி கலகம் செய்ய, விஜயபாகு தப்பி ஓடி கண்டிக்கு அருகே வக்கிரிகலைக்கு சென்று மறைந்திருந்தான். வேளைக்காரர் வணிகத்தோடு தொடர்புடையவர்கள் என்பதால், நாம் அறியாத வேறு காரணங்களும் இந்தக் கலகத்திற்குக் காரணமாக இருக்கவேண்டும்.

பொலனறுவையில் தலதாமுற்றம் என்று அறியப்படும் முக்கியமான தொல்லியல் பகுதியில்,  தூபாராமம், வட்டதாகை, நிசங்கலதா மண்டபம் முதலான கட்டிடங்களுக்கு அருகே வேளைக்காரர்கள் அமைத்த ஒரு கல்வெட்டு அமைந்திருக்கிறது. இக்கல்வெட்டின் அருகே உள்ள கட்டிடத்தின் இன்றைய பெயர், அட்டதாகை. ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதன் பெயர்,  தளதாய்ப்பெரும்பள்ளி. புத்தபிரானின் புனித தந்ததாதுவுக்காக விஜயபாகு எடுத்த கோவில் இது.

சமீபகாலமாக விஜயபாகு காலத்தில் ஏற்பட்ட வேளைக்காரர் கலகத்துக்கும் நாம் பார்க்கப் போகும் வேளைக்காரர் கல்வெட்டுக்கும் தொடர்பு உண்டென்று சொல்லப்பட்டு வருகிறது. இக்கல்வெட்டு விஜயபாகுவின் காலத்திற்குப் பிறகே அமைக்கப்பட்டது என்று கொள்வதற்கான அகச்சான்றுகள் அக்கல்வெட்டில் உள்ளன. அது முழுக்க முழுக்க தலதாப்பள்ளியை வேளைக்காரர் பொறுப்பேற்றுக் கொண்டதற்கான ஒரு ஆதாரம் தானே அன்றி, கலகம் தொடர்பாக எவ்வித தகவல்களும் இதில் பதிவுசெய்யப்படவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும்
.
பொலனறுவையில் தலதாமுற்றம் என்று அறியப்படும் முக்கியமான தொல்லியல் பகுதியில், சுமார் ஏழடி உயரமான வெண்கற்பலகையாக நிற்கிறது வேளைக்காரச் சாசனம். இதில் சமஸ்கிருத சுலோகம் ஒன்றும், கீழே தமிழ் வரிகளும் காணப்படுகின்றன. சமஸ்கிருத சுலோகம்,விஜயபாகு மன்னனின் சேனாதிபதியான நுவர்கல் தேவன் என்பவனால் புலஸ்திபுரத்தில் ‘ஜினதந்ததாது பவனம்’ (தலதா மாளிகை) அமைக்கப்பட்டது என்பதைச் சொல்கிறது.

தமிழ்ப்பகுதியில் அபயகிரி விகாரையின் கீழ், உத்தொருள்மூளையால் நிர்வகிக்கப்படும் ‘தளதாய்ப் பெரும்பள்ளி’யையும் அதன் சொத்துக்களையும் முதலமைச்சர் மகாஸ்தாவிரர் முகலனின் வேண்டுகோளுக்கு ஏற்ப வேளைக்காரர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர் என்ற விபரம் காணப்படுகிறது.
இங்கு சொல்லப்படும் அபயகிரி விகாரை பற்றித் தெரிந்துகொள்ள நாம் அனுராதபுரம் செல்ல வேண்டும்.

அனுராதபுரத்தில் மூன்று பௌத்த சங்கங்கள் அமைந்திருந்தன. மகாவிகாரை, அபயகிரிவிகாரை, ஜேதவனவிகாரை என்பனவற்றை மையமாக வைத்து அவை அமைந்திருந்தன. சமய உட்பிளவுகளால் மகாவிகாரையானது மகாசேனனால் இடித்தழிக்கப்பட்டு அங்கு பிற்காலத்தில் ஜேதவனராம விகாரை அமைக்கப்பட்டது. மகாவிகாரையிலிருந்து வெளியேறிய பிக்குகள் தெற்கே உரோகணத்துக்கும் மலைநாட்டுக்கும் இடம்பெயர்ந்ததுடன், அவர்கள் தக்கிணகிரி எனும் சங்கத்தை அமைத்திருந்தனர். பிற்காலத்தில் அபயகிரி, ஜேதவனராமம், தக்கிணகிரி எனும் இந்த மூன்று மரபிலும் ரூடவ்ழத்துப் பௌத்தம் தழைத்தது.

இவர்களில் அபயகிரி விகாரை பெரும்பாலும் மகாயான பௌத்தத்துக்கு சார்பானதாக இருந்தது. புத்தரின் புனித தந்தாதுவையும் ஐயக்கலத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அபயகிரி விகாரை வசமே இருந்தது. இக்கல்வெட்டு அபயகிரி விகாரையின் அக்ராயதனமான உத்தொருள்மூளை பற்றிச் சொல்கிறது. உத்தொருள்மூளை என்பது உதுருமுல்ல என்ற சிங்களச்சொல்லின் தமிழ் வடிவம். அது பொலநறுவையில், அனுராதபுர அபயகிரி விகாரையின் பிரதிநிதியாக விளங்கிய மடத்தின் பெயர் என்று ஊகிக்கலாம்.

மகாஸ்தாவிரர் (மகாஸ்தாவிரர் என்பது மகாதேரர் என்ற பாலிச்சொல்லின் சமஸ்கிருத வடிவம்;) முகலனின் வேண்டுகோளை, தமது வீரர்களுடன் கலந்தாலோசித்த வேளைக்காரர்கள், வளஞ்செயர் மற்றும் நகரத்தார் எனப்படும் வணிகர் கூட்டங்களின் முன்னிலையில் தளதாய்ப்பெரும்பள்ளியை தம் வசம் வைத்திருக்க முடிவெடுத்திருக்கிறார்கள். அப்பள்ளிக்கு “மூன்றுகைத் திருவேளைக்காறன் தளதாய்ப் பெரும்பள்ளி" என்று பெயர் சூட்டி, தம் ஒவ்வொரு படையிலிருந்தும் அதன் பாதுகாப்புக்காகஒவ்வொருவரை நியமித்து ரூசூ39;சந்திர ஆதித்தர் உள்ள வரை நீடிக்கவேண்டும்” என்று கூறி இக்கல்வெட்டில் உறுதி கூறியிருக்கிறார்கள். புத்தபிரானின் புனித சின்னங்களை, அவர்கள் “மூவுலகுக்கும் சிகாமணியாகிய தளதா பாத்ர தாது சுவாமி தேவர்கள்" என்று மரியாதையுடன் அழைத்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி. ஏன் தலதாப்பள்ளியின் பாதுகாப்பை வேளைக்காரரிடம் ஒப்படைக்க வேண்டும்? அதற்கு அக்கால வரலாறு நமக்கு தெரிந்திருக்க வேண்டும். விஜயபாகு இறக்கும் போது, அவன் மகன் விக்கிரமபாகு உரோகணத்தில் துணையரசனாக ஆண்டுகொண்டிருந்தான். விஜயபாகுவின் தம்பி ஜயபாகு புலத்திநகரில் முடிசூடியிருந்தான். அதே காலத்தில் விஜயபாகுவின் தமக்கையின் பிள்ளைகள் மூவர் புலத்திநகரின் மணிமுடிக்கு ஆசைப்பட்டு அங்கு படையெடுத்தார்கள்.
பொலனறுவை வேளைக்காரக் கல்வெட்டு

விக்கிரமபாகு உரோகணத்திலிருந்து புறப்பட்டு வந்து, அவர்களைத் தோற்கடித்து புலத்தி நகரில் ஆட்சியில் அமர்ந்தான். புனித தந்ததாது அரசுரிமைச் சின்னம் என்பதால், அதை யாரும் கவர்ந்து சென்று ஆட்சியுரிமை கோரலாம் என்ற இக்கட்டான நிலை இந்த இடைப்பட்ட காலத்தில் நிலவியது. இந்தக் காலத்தில் தான் புலத்திநகரின் ராஜகுருவான மகாஸ்தாவிரர் முகலன் சமயோசிதமாகச் செயற்பட்டு வேளைக்காரர் வசம் தலதாப்பள்ளியின் பாதுகாப்பை ஒப்படைத்திருக்கவேண்டும்.

வேளைக்காரக் கல்வெட்டில் சொல்லப்படும் இன்னொரு செய்தியும் சுவையானது. தளதாய்ப்பெரும்பள்ளியின் புத்தபிரானுக்கு ஆண்டாண்டு தோறும் ‘நயனமோட்சமாகிய அஞ்சன நிறுக்கும் கண்ணாலம்’ நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. கண்ணாலம் என்பது கல்யாணம் என்பதன் மரூஉ. அது ‘மங்கலம்’ அல்லது ‘திருவிழா’ என்று பொருள்படும் சொல். அஞ்சனம் என்றால் மை. நயனமோட்சம் என்பதற்கு ‘பார்வையாலேயே வீடுபேற்றைத் தருதல்’ என்று பொருள் கொள்ளலாம். 

எனவே ஒவ்வொரு ஆண்டும், தளதாய்ப் பெரும்பள்ளியில் வீற்றிருந்த புத்ததேவருக்கு கண்களில் மை தீட்டும் திருவிழா இடம்பெற்றிருக்கிறது.  அதைப் பார்ப்பது மோட்சத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில் பெருமளவு மக்கள் அங்கு கூடியிருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது. தளதாய்ப் பெரும்பள்ளியை நிர்வகித்த அபயகிரி விகாரை பின்பற்றிய மகாயான பௌத்த மரபு, சைவ – வைணவ மரபுகளுக்கு நெருக்கமானது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.


தளதாய்ப் பெரும்பள்ளி இன்று அட்டதாகை என்ற பெயரில் தூண்களும் செங்கற்சிதைவுகளுமாகக் காட்சியளிக்கிறது. புத்தபிரானின் புனித தந்ததாது இதன் மேல் மரத்தால் அமைந்த முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கு ஆதாரமாக சிதைந்த மாடிப்படிகளை இன்றும் இங்கு நாம் காணலாம். பராக்கிரமபாகுவின் காலத்தில் அட்டதாகையின் அருகே புதிதாக அமைக்கப்பட்ட ஹெட்டதாகை, தளதாய்ப் பெரும்பள்ளியாக மாற்றமடைந்ததுடன்,  இதிலிருந்த புனித சின்னங்கள் அங்கு இடம்மாற்றப்பட்டன. அதற்குப் பிறகு அட்டதாகை சாதாரண வழிபாட்டுத்தலமாக மாற்றம் பெற்றிருக்கவேண்டும்.

ஆனால் அதன் நடுவில் அடியவர்களுக்கு நயனமோட்சம் வழங்கிய புத்ததேவர், திருக்கரங்கள் சிதைந்த நிலையில் இன்றும் வீற்றிருக்கிறார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அஞ்சன நிறுக்கும் கண்ணாலம் பண்ணியருளிய மங்கள மகா சிலாமய புத்ததேவர். இத்தனை ஆண்டு கடந்தும் மாறாத அந்தப் புன்னகையில் தான் எத்தனை அர்த்தங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)