பாணமை மன்னன், பலம் வாய்ந்த தமிழரசுகள்
பால்டியசின் குறிப்புகளிலிருந்து 03
போனகிழமை போர்த்துக்கேயருக்கு எதிரான கண்டி அரசின் போரில், யாழ்ப்பாண அரசும், கண்டியின் திறைநாடுகளும் வழங்கிய உதவிகளின் பட்டியலைப் பார்த்திருந்தோம். இந்த எண்ணிக்கையில் எந்தளவு உண்மை இருக்கக்கூடும் என்று தெரியவில்லை. இவற்றில் மிகைப்படுத்தலோ இட்டுக்கட்டல்களோ இருந்தாலும், அங்கு சொல்லப்படும் எண்ணிக்கைகளை, அந்தந்த சிற்றரசுகளின் வலிமையை ஒப்பிடுவதற்கு நாம் பயன்படுத்தலாம்.
எண்ணிக்கை அடிப்படையில் பாணமை அரசும் அதன் துணை அரசுகளும் கொடுத்திருந்த படையுதவியின் எண்ணிக்கை, அப்போதைய தனியரசுகளில் ஒன்றான யாழ்ப்பாண அரசு கொடுத்த படை உதவியை விட சுமார் மூன்று மடங்கு அதிகம். எனவே பாணமை அரசு பலம் வாய்ந்த ஒன்றாக இருந்திருக்கக்கூடும். கிழக்கில் இருந்த அரசுகளில் மட்டக்களப்பும் பழுகாமமும் பாணமை அரசனுக்கு சீதனமாக வழங்கப்பட்டிருந்தன என்ற தகவலும் கவனத்தை ஈர்க்கிறது.
கண்டி அரசுக்குத் திறை செலுத்திய மட்டக்களப்பு அரசும் பழுகாம அரசும், பாணமை மன்னனை கொஞ்சகாலம் கண்டி அரசின் பிரதிநிதியாக ஏற்று இருந்திருக்கின்றன என்பது இதன் மூலம் தெரிகின்றது. போர்த்துக்கேயருக்கு
எதிராக மிகப்பெரும் படையைத் திரட்டிய பாணமை அரசுக்கு மேலும் பல சிங்களச் சிற்றரசுகளின் ஆதரவும் கிடைத்திருக்கக்கூடும்.
பால்டியஸ் கிழக்குக் கரையில் இருந்த நான்கு அரசுகளைக் குறிப்பிட்டுள்ளார். கொட்டியாரம், மட்டக்களப்பு, பழுகாமம் மற்றும் பாணமை. பாணமை தவிர்ந்த மூன்று தமிழ் அரசுகளைப் பொறுத்தவரை அப்போதைய யாழ்ப்பாண அரசின் சுமார் அரைவாசிப் படைப்பலத்துடன் மட்டக்களப்பு அரசு இருந்திருக்கிறது. மட்டக்களப்பை அடுத்து பலம் வாய்ந்ததாக கொட்டியார அரசும், நான்காவதாக
பழுகாம அரசும் விளங்கின.
ஆனால், முன்பொருமுறை பார்த்த வரிகளில் ஐந்தாவது கிழக்கிலங்கை அரசான போரைதீவு பற்றி பால்டியஸ் குறிப்பிட்டுள்ளார். இங்கு சொல்லப்படும் ‘மட்டக்களப்பு’ என்பது, அப்போதைய தலைமை அரசிருக்கையான சம்மாந்துறைப் பகுதி என்று கொள்வதே பொருத்தமானது என்று முன்பு சொல்லியிருந்தோம். விமலதர்மன் காலத்தைய 1594 போர்த்துக்கேயப் போரில் குறிப்பிடப்படாத போரைதீவு அரசு, செனரத் மன்னன் காலத்தில் (1610கள்) சொல்லப்படுகிறது. பழுகாமத்துக்கும் போரைதீவுக்கும் இடையில் அத்தனை பெரிய தூரமும் இல்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது?
அதற்கு இப்படி விடை காணலாம். போரைதீவு அரசின் தோற்றத்துடனேயே சகோதரச்சண்டைகள் பற்றிய குறிப்புகள் கிடைப்பதால், பழைய வடமட்டக்களப்பில் நிலவிய பழுகாம அரசு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, போரைதீவு அரசு உருவாகியிருக்கக்கூடும். ஏறாவூர் வரை நீண்டிருந்த மட்டக்களப்பு வாவிக்கு “பழுகாம ஆறு” என்றும் ஒரு பெயர் இருந்ததையும், “பழுகாம ஆற்றை இரண்டாகப் பிரித்து போரைதீவும் பழுகாமமும் வரி வசூலிப்பதில் சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன” என்று செனரத்தைச் சென்று சேர்ந்த செய்தியையும் வைத்து நாம் இந்த முடிவுக்கு வரலாம்.
இப்படி நிலம் பிரிக்கப்பட்ட காலத்தில் ஏற்பட்ட முரண்பாட்டிலேயே நாம் இத்தொடரின் முதலாம் அத்தியாயத்தில் பார்த்தது போல, தன் மூத்த தமையனை போரைதீவு மன்னன் குமாரபண்டாரம் கொன்றிருக்கக்கூடும். பால்டியசுக்கு மிகக்குறுகிய காலத்திலேயே இந்த மூன்று அரசுகள் மேலும் பிரிந்து பற்றுக்களாகக் குறுகி, கோரளைப்பற்று முதல் அக்கரைப்பற்று வரையான பழைய மட்டக்களப்புத்தேசம் வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதைக் காணலாம்.
பாணமை அரசன் கண்டி இளவரசி ஹந்தான அதகாசியை மணந்திருக்கிறான். அவனுக்குச் சீதனமாக மட்டக்களப்பு மற்றும் பழுகாம அரசுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவன் இறக்கும் போது, அவனது இறுதி ஆசை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவனுக்கு இராஜமரியாதையோடே இறுதிக்கிரியைகள் இடம்பெறுகின்றன என்பனவெல்லாம், அவன் கண்டியின் அரச வம்சத்தில் வந்த ஒருவன் என்பதைக் காட்டுகின்றது.
பாணமை மன்னன் ஏன் செனரத்துக்கெதிராக போர்த்துக்கேயருடன் சேரவேண்டும்? ஒரே காரணம் அவன் கண்டி அரசகுலம் என்பதே. செனரத் மன்னன் முறைப்படி கண்டி அரசுக்கு உரிமையானவன் அல்ல என்பதை பல ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். அவன் தன் ஆட்சியுரிமையை உறுதிப்படுத்த முந்தைய மன்னன் முதலாம் விமலதர்மசூரியனின் மனைவி தோனா கதரீனாவை மாத்திரமன்றி, தனக்கு மகள் முறையான இளவரசிகளையும் மணந்து கொண்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டான் என்பது சொல்லப்பட்டிருக்கிறது.
பாணமை மன்னன் மணந்திருந்த ஹந்தான அதகாசி, கண்டி இளவரசி என்பதால், அவனுக்கு கண்டிச்சிம்மாசனத்தில் கூடிய உரிமை இருந்திருக்கக்கூடும். அவனுக்கு ஏனைய கண்டிச் சிற்றரசுகளின் ஆதரவும் இருந்திருக்கிறது என்பது, போர்த்துக்கேயருக்கெதிரான 1594ஆமாண்டு போரில் அவன் விமலதர்மனுக்கு ஆதரவாக வழங்கிய படையுதவியைப் பார்க்கும் போது தெளிவாகிறது. இக்காரணங்களை உளவறிந்திருந்த போர்த்துக்கேயர், விமலதர்மன் இறந்து, செனரத் மன்னனான பின்னர் பாணமை அரசனை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி கண்டியைக் கைப்பற்ற முனைந்திருக்கலாம். அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
கண்டி அரசின் நீதி விசாரணை ஆரம்பகாலத்தில் எப்படி நிகழ்ந்தது என்பதும் பால்டியசின் குறிப்பிலிருந்து நமக்குத் தெரியவருகிறது. நீதிவிசாரணைகளை தனியே மன்னன் நிகழ்த்தவில்லை. பால்டியஸ் “50 பிரபுகள்” என்று சொல்லும், ஐம்பது மூத்தவர்கள் ஆராய்ந்தே நீதி வழங்கினார்கள் என்பது அங்கு சொல்லப்பட்டுள்ளது. மன்னராட்சி என்பது தனியே மன்னன் கைகளில் மாத்திரம் அதிகாரங்களை அள்ளிவைக்கவில்லை. குறிப்பிடத்தக்க அளவு அதிகாரங்கள் குலமூத்தார் கையிலும் இருந்தன என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்.
அரசைப் பிடிப்பதற்காக போர்த்துக்கேயருடன் இணைந்து சூழ்ச்சியில் இறங்கினாலும், பாணமை அரசனின் இறுதிக்கணங்கள் விவரிக்கப்படும் போது அவன் மீது பரிதாபமே ஏற்படுகிறது. இன்னும் கொஞ்சநேரத்தில் நாம் இறந்துவிடுவோம் என்று அறிகின்ற ஒருவன், அதிலும் வாழ்க்கையில் எந்தக் கஷ்டத்தையுமே அறியாத ஒருவன், உல்லாச வாழ்க்கையை அனுபவித்த மன்னர் வம்சாவளியில் வந்த ஒருவன் எத்தனை வேதனைப்படுவான் என்பதை பால்டியசின் வரிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
ஏதோ காரணத்தால் அவனை வெறுத்ததாலோ, அல்லது அவனது தவறுக்காக தாங்கள் தண்டனை அனுபவிக்க்க்கூடாது என்பதற்காகவோ, பாணமை மக்கள் கண்டி அரசிடம் சரணடந்து தங்கள் நாட்டைக் காப்பாற்றி இருக்கிறார்கள். இத்தனைக்கும் பாணமை மன்னன் பெருவீரன் என்பதும், ஏனைய சிங்கள அரசுகளின் ஆதரவும் அவனுக்கு இருந்தன என்பதும் விமலதர்மனுக்கு அவன் செய்த உதவிகள் மூலம் தெரியவருகிறது.
பரிதாபத்துக்குரிய இன்னொரு விடயம் என்னவென்றால், இந்தப் பாணமை மன்னனின் பெயர் என்னவென்றே தெரியவில்லை. அவனை மணமுடித்த கண்டி இளவரசி ஹந்தான அதகாசியிலிருந்து, அவனை அடுத்து பாணமையில் ஆட்சி பீடமேறிய சமரவாகு வரை, சரித்திரம் அவனோடு தொடர்புடையவர்களின் பெயர்களை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது. என்னதான் இலங்கை வரலாற்றில் குறிப்பிடத்தக்கவன் என்றாலும், என்னதான் ராஜமரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டாலும், வரலாற்றில் பெருஞ்சுழியில் பெயரும் அடையாளமும் இல்லாத ஒருவனாக பரிதாபகரமாக மறைந்து போகிறான் அவன். உண்மை தான். வரலாறு என்பதற்கு பெரும்பாலும் இரக்கமே இருப்பதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக