மட்டக்களப்பின் மலபார்கள்

மட்டக்களப்பு கோட்டை -  1721 இடச்சு  ஓவியம்

ஒல்லாந்து அதிகாரியான வான்கூன்ஸ் மட்டக்களப்பு மலபார்கள் அதாவது தமிழர்கள் பற்றி சொல்வதை இந்த வாரம் பார்க்கலாம். பழக்கவழக்கம், சமயம், தோற்றம், ஏனைய இயல்புகள், அனைத்திலும் மட்டக்களப்பின் மக்கள், யாழ்ப்பாணப்பட்டினம் – கொட்டியாரம் – மங்குல் கோரளையின் வடபகுதி உள்ளிட்ட, இங்கிருந்து மேற்கே கல்பிட்டி வரையான பகுதி உள்ளடங்கலாக வாழும் மலபார் மக்களை ஒத்தவர்கள். இப்போதும் மலபார் மொழி பேசும் இவர்கள், மிகப்பழங்காலத்திலிருந்தே இங்கு வாழ்ந்து வருவதுடன், தங்களுக்குரிய உட்பிரிவுகளாகப் பிரிந்துள்ளதுடன், சிங்களவர்களுடனோ வேடர்களுடனோ தங்கள் உட்பிரிவு தவிர்ந்த ஏனையோருடனோ கலந்து வாழ்வதில்லை. ஏனையவர்களும் இவர்களுடன் கலக்க விரும்புவதில்லை. யாழ்ப்பாணப்பட்டினம், கொட்டியாரம் முதலான ஏனைய பகுதி மக்கள் போலவே மட்டக்களப்பு மலபார்களும் சிங்களவர்களிலிருந்து தனிப்பட்டவர்களாக, ஓரளவு சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள். கண்டி மன்னனின் கொடுங்கோன்மையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக மட்டுமே இவர்கள் நமது
கம்பனியுடன் இணைந்திருக்கிறார்கள்.

இந்த அழகான, செழுமையான பூமியானது, தென்னை, மா, பலா முதலான மரங்கள் நிறைந்தது. நன்செய் நிலங்கள், சதுப்பு நிலங்கள், காடுகள் எல்லாமே வெவ்வேறு நதிகளால் செழிக்கின்றன. இந்த நதிகள் உள்நாட்டில் சுமார் 12 ஜேர்மன் மைல் பரப்பில் அமைந்துள்ள
பாரிய ஏரியொன்றில் கலக்கின்றன. பெருமளவு உவர்மீன்களைக் கொண்ட ஏரியில், நாம் நன்கு திட்டமிட்டால் பெருமளவு மீன்களைப் பெறமுடியும். மட்டக்களப்பு என்றும் அறியப்படும் “பெற்றிகலோ”, பல சிறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றை பண்டாரங்கள் அல்லது
திசாவை என்று அறியப்படும் மூன்று ஆளுநர்களின் கீழ் பிரிக்கப்பட்டிருந்தது. வசதிக்காக நாங்கள் இவற்றை ஒருபிரிவாக ஆண்டாலும், இன்றும் அந்த மூன்று பிரிவுகளும் நிலவுகின்றன. கல்லாறு, சம்மாந்துறை, அக்கரைப்பற்று என்பன அவை. இவற்றில் கல்லாறு திசாவைப் பிரிவு மிகப்பெரியது. மண்முனை, போரைதீவு, எருவில் மற்றும் ஏறாவூர் எனும் நான்கு மாகாணங்களைக் கொண்டிருக்கிறது. மண்முனையில் 11, எருவில்லில் 7, போரைதீவில் 4, ஏறாவூரில் 5 என்ற எண்ணிக்கையில் சனத்தொகை கூடிய கிராமங்களும், நெல்வயல்களுக்கிடையே அமைந்த வேறு சிறுசிறு குக்கிராமங்களும் காணப்படுகின்றன. 

இவற்றில் மண்முனைக் கிராமமும், இப்போதும் பிரதானமான கிராமமாக இருக்கும் சம்பாந்துறைக் கிராமமும் குறிப்பிடத்தக்கவை. இங்கிருந்து ஒன்றரை மணித்தியால தூரத்தில் அது அமைந்திருக்கிறது. நல்ல ஆறொன்றுக்கு அருகில் அதுஅமைந்திருக்கிறது. ‘ட்சஞ்பான்’கள் கடலிலிருந்து அந்த ஆற்றுக்கு வருகின்றன. “துறை” என்ற மலபார்ச்சொல்லுக்கு, துறைமுகம் என்று பொருள். எனவே தான் இதற்கு சம்பாந்துறை என்று பெயர் வந்திருக்கிறது. கொட்டியார மாவட்டத்திலும் அதே பெயரில் ஒரு துறைமுகம் இருக்கிறது. வடக்கெல்லையிலுள்ள ஏறாவூர் மாகாணம், வடக்கே தம்பன்கரவத்தையும், வன்லூஸ் குடாவினருகே நட்டூர் ஆற்றின் அருகே எல்லையைக் கொண்டிருக்கிறது. மேற்குப்பக்கம் அதன் கரையானது சித்தாண்டிக்குடியிருப்பை நெருங்கிச் செல்கிறது. அதன் வடக்கே கொக்குவில்பளை இருக்கிறது. எனவே தம்பன்கரவத்தையானது, கொட்டியாரத்துக்கும் ஏறாவூருக்கும் இடையே அமைந்துள்ளது.

கொக்குவில் பளைக்கும் மாவிலிகங்கைக்கும் இடையில் இரண்டு ஜேர்மன் மைல் தூரமே உள்ளது. அந்த இரண்டு மைல் தூரமும் சதுப்பு நிலமும் புல்வெளியும் தான். எனவே அக்கரைப்பற்றுக்குத் தெற்கே உள்ள ஒருவர், மிகக்குறைந்த வலுவை உபயோகித்து, தன்னிடமுள்ள மரத்தளபாடங்களை தனது பட்டறையிலேயே ஏற்றி, வடக்கே கொட்டியாரம் வரை வந்து விற்க முடியும். இந்த ஏறாவூர் மாவட்டத்திலேயே வெல்லசை வரை, மேற்கே ஏழுகோரளை வரை பரந்திருக்கும் கறுவாக்காடு இருக்கிறது. இந்தக்காட்டில் நல்ல தளபாட மரங்களும் கிடைப்பதால், இதன் வளம் முக்கியத்துவம் கருதி, இலங்கையின் மிகச்சிறந்த இடங்களில் ஒன்றாக இதைச் சொல்லலாம்.  இங்கிருந்து தெற்குப்புறமாக மண்முனை, போரைதீவு, எருவில் ஆகிய கல்லாற்றின் மாகாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து விளங்குகின்றன. நன்செய் நிலங்களும் வளமான பூமியும் நிறைந்த மண்முனைப் பகுதியில் தான் புலியனின் தீவு அமைந்துள்ளது.

இரண்டாவது திசாவைப்பிரிவில் சம்மாந்துறை, கரைவாகு ஆகிய மாகாணங்கள் அடங்கும். கரைவாகு கடலோரமானது. சம்மாந்துறை சற்று உட்புறமானது. இரண்டுமே அருமையான நன்செய் நிலங்கள் கொண்டவை. இவை இரண்டையும் அடுத்து செங்கப்படை ஆற்றின் அக்கரையில் அக்கரைப்பற்று எனும் இறுதி மாகாணம் ஆரம்பிக்கின்றது. அதன் தென்னெல்லையில் சங்கமன்கண்டியில் பாணமை ஆரம்பிக்கின்றது. பாணமையை சிங்களவர்கள் பனோவா என்று அழைக்கிறார்கள். அக்கரைப்பற்றும் சம்மாந்துறைக்கு
குறையாத அளவு பெரிய வளமான மாகாணம். வெல்லசை, வேடர்களின் நாடு வரை இதன் மேற்கெல்லை நீள்கின்றது. நல்ல காடுகளும் நன்செய் நிலங்களும் மக்கள் எண்ணிக்கையும் அதிகமானது. யாரும் இதை வியப்பில்லாமல் காணமுடியாது. எனவே மட்டக்களப்பின் இறுதி திசாவைப்பிரிவான அக்கரைப்பற்றை முதன்மையானதாக சொல்லப்படலாம்.

பாணமைப்பிரிவு செழிப்பிலும் மக்கள் எண்ணிக்கையிலும், மட்டக்களப்பின் பிரிவுகளை விட குறைவானது. எனினும் சங்கமன்கண்டியிலிருந்து அறுகாமம் வரையான பகுதி வளமானது. மக்கள் எண்ணிக்கை கூடியது. அறுகாமத்துக்குத் தெற்கே பெரும்பாலும் விவசாய பூமியாகவும், குறைவான குடியேற்றங்களைக் கொண்டதாகவுமே காணப்படுகின்றது. அதற்குத் தெற்கே அரைமைல் தொலைவில் அப்புறத்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. இந்தப் பாணமைப்பிரிவும் தமக்கென ஒரு திசாவையைக் கொண்டிருக்கின்றது. திசாவையை தங்கள் பிரிவைச் சேர்ந்த சிங்களவரிலிருந்து தெரிவுசெய்யவில்லை என்றால் இவர்கள் கலகம்
செய்வதுடன், அருகிலிருக்கும் அக்கரைப்பற்றுக்கும் தப்பியோடி விடுவார்கள்.

இப்படி பழைய மட்டக்களப்புத் தேசத்தின் திசாவைப்பிரிவுகள் பற்றியும், அவற்றின் புவியியல் அம்சங்கள் பற்றியும் விரிவான விளக்கத்தைத் தந்திருக்கிறார் வான்கூன்ஸ். இந்த விளக்கத்தில் அறுகாமம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிற இடம், இன்றைய பொத்துவில் என்று ஊகிக்கப்படுகிறது. அப்புறத்தோட்டை துறைமுகமே இன்றைய உல்லை அல்லது அறுகம் குடா ஆகலாம். தம்பன்கரவத்தை என்று சொல்லப்பட்டிருப்பது தம்பன்கடுவை பகுதி. இன்றைய பொலனறுவை மாவட்டத்தில் அமைந்திருந்த பழைய நிர்வாகப்பகுதி. அதேபோல் மங்குல்கோரளை என்பது, இன்றைய அனுராதபுர மாவட்டத்தின் தென்பகுதி. இங்கிருந்து மேற்கே கல்பிட்டி வரை மலபார்களே இருந்தார்கள் என்ற வான்கூன்சின் குறிப்பின் பின்னே தான் வரலாறு மறைந்திருக்கின்றது.
(அரங்கம் பத்திரிகையின் 29ஆவது இதழில் [2018.09.14] வெளியான கட்டுரை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)