தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 02)

போன தடவை தீபாவளி பற்றிப் பார்த்த உங்களுக்கு, அதற்கும் முன்பிருந்தே தமிழர் மத்தியில் ஒரு விழா புகழ்பெற்று விளங்கியிருந்தது என்றும், தற்போதும் அது கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லியிருந்தோம். சித்திரைப்புத்தாண்டு, தைப்பொங்கல் பற்றிய குறிப்புகள் கூட திருத்தமாகச் சொல்லப்படாத சங்க இலக்கியங்களில், இந்த விழா சொல்லப்பட்டிருக்கின்றது என்பதும், தமிழர் மத்தியில் நீண்ட நாட்கள் கொண்டாடப்படுகின்ற ஒரேயொரு விழா இது மட்டுமே என்றும் சொன்னால், அது பெருமையாகத் தான் இருக்கும். அது வேறொன்றுமில்லை. அந்தத் தமிழரின் திருநாளை நீங்களும் கூடிய விரைவில் கொண்டாடத் தான் போகிறீர்கள்.

ஆம். அடுத்த கிழமை வரப்போகின்ற கார்த்திகை விளக்கீடே தான். கார்த்திகை மாதத்தில் பூரணை வருகின்ற நாள், அல்லது அதற்கு முன் பின்னான நாள், கார்த்திகை நட்சத்திரமாகவே இருந்து வருகிறது. அதனால் தான் இந்த மாதத்துக்கே கார்த்திகை என்று பெயர். இந்தக் கார்த்திகை கார்த்திகையில் தான் விளக்கேற்றி வழிபாடுகளை நிகழ்த்துகிறோம். வீட்டுச்சுவர், மதில், திண்ணை என்பவற்றில் அகல் விளக்கேற்றியும், வீட்டு வாசல்கள், ஆலய முன்றல்களில் சொக்கப்பனை எரித்தும், வீட்டு வளவு முழுவதும் தற்காலிக ஈர்க்கு விளக்குகளை நட்டும் ஒளிமயமாகக் கொண்டாடுகிறோம். அன்று தின்பண்டங்கள் செய்து இறைவழிபாடு செய்வதும், இறந்து போன முன்னோரை நினைவுகூர்வதும் வழக்கமாக இருக்கிறது. எங்கள் ஊரில் எல்லாம், இறந்தோருக்குப் பிரியமான எண்ணெயில் செய்த பலகாரங்களை அன்று படையல் செய்யவேண்டும் என்பதும், பல்லி சத்தமிட்ட பின்னரே அந்தப் படையலை எடுத்து உறவினருடன் பகிர்ந்து மகிழவேண்டும் என்பதும் இன்றும் மரபாக நிலவி வருகின்றது.

முன்பே சொன்னது போல கார்த்திகை விளக்கீட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. சங்க இலக்கியங்களில் அகநானூறு, நற்றிணை முதலான நூல்களில், கார்த்திகையில் விளக்கீடு கொண்டாடப்பட்டதற்கான சான்றுகளைக் காணலாம். அகநானூற்றின் 141ஆம் பாடலில், கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி வானை நோக்குகிறாள். “வானத்தில் மழையைக் காணவில்லை. முயல் என்று நாமெல்லாம் சொல்லும் களங்கம் நிலவில் பளிச்சிட்டுத் தெரிய பூரண நிலவு கார்த்திகை நட்சத்திரத்தை நெருங்குகிறது. எல்லோரும் விளக்கேற்றி வைத்து மாலை தூக்கி தோரணம் கட்டுகிறார்கள். என்னோடு இப்பொழுதைக் கொண்டாடவாவது அவர் வரவேண்டுமே” என்று பெருமூச்செறிகிறாள்.

“கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே” என்ற திரைப்படப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறதா? இன்றைக்குத் தான் காலமே மாறிவிட்டதே! ஆனால் அந்தத் திரைப்படப் பாடல் வரிகள் குறிப்பிட்ட பழைய வழக்கத்தைத் தான் “வானில் மழை வரும் அறிகுறி இல்லை” என்று சொல்கிறாள் தலைவி. கார்த்திகை நட்சத்திரம் இப்பாடலில் “அறுமீன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கார்த்திகைப் பூரணையில் விளக்கேற்றி, மாலை தோரணம் கட்டித் தமிழர் கொண்டாடினர் என்பதற்கான மிகப்பழைய சான்றுகளில் ஒன்று இது.

கோங்கம் மரத்தின் பூக்கள்.
இதன் தாவரவியல் பெயர் Cochlospermum religiosum

நற்றிணையின் 202ஆம் பாடலில் தலைவனும் தலைவியும் வீட்டை விட்டு ஓடிப்போகிறார்கள். அவளது கவலையைப் போக்குவதற்காக பாதை நெடுகிலும் “புதினம்” காட்டிச் செல்கிறான் தலைவன். வீதியோரம் கோங்கு மரங்கள் பூத்துக்குலுங்குகிறது. அதைக்காட்டி “உன் தந்தை பல தருமகாரியங்கள் செய்யும் கார்த்திகைத் திங்களில் வரிசையாகச் செல்கின்ற தீபங்கள் போல பல கோங்க மலர்களைச் சூடி நிற்கும் இக்காட்டைப் பார்” என்கின்றான் தலைவன். கார்த்திகை விளக்கீட்டை இப்பாடலில் “அறுமீன் கெழீஇய அறம்செய் திங்கள்” என்று பாடுகிறார் புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.


“கார்த்திகை விளக்கீடு” என்ற சொல்லை முதலில் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தியவர் சம்பந்தர். மயிலையில் பூம்பாவையை உயிர்ப்பித்த பதிகத்தைப் பாடும் போது, விளக்கீடு காணாமல் போதியோ பூம்பாவாய் என்று பாடுகின்றார் அவர். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது இதைக் “கார்த்திகைச் சாறு” (சாறு = விழா) என்று பாடியிருக்கிறது. திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டது பற்றி பற்றி சீவக சிந்தாமணி “குன்றில் கார்த்திகை விளக்கீட்டென்ன” என்று பாடுகிறது. இன்னும் தொல்காப்பியத்தில் வருகின்ற  “வேலி நோக்கிய விளக்கு நிலையும்” (பொருளதிகாரம் புறத்திணையியல், 35) என்ற வரிகளுக்கு கார்த்திகை விளக்கு என்று விளக்கம் சொல்கிறார் நச்சினார்க்கினியர். இதெல்லாம் கார்த்திகை விளக்கீட்டின் பழைமையையும் புகழையும் விளக்கப் போதுமானவை.

தீபாவளி தமிழர் மத்தியில் பிற்காலத்திலேயே அறிமுகமானது என்றும், ஆனால் கார்த்திகைக்கு மிக நீண்ட வரலாறு உண்டு என்றும் பல தடவை சுட்டிக்காட்டியிருக்கிறோம். உண்மையில் இவை இரண்டுமே ஒரே மூலத்தைக் கொண்டவை தான். தீபாவளி கொண்டாடப்படவேண்டிய திதி, ஐப்பசி மாத பதினான்காம் தேய்பிறை. கார்த்திகை கொண்டாடப்படவேண்டிய திதி, கார்த்திகை மாத பூரணை. இரண்டு நாட்களுக்கும் கணக்கிட்டால் பெரும்பாலும் பதினைந்து நாள் வித்தியாசமே வரும். ஒரு மாத இடைவெளிக்குள், அமாவாசையில் கொண்டாடப்பட்ட தீபவிழாவும், பூரணையில் கொண்டாடப்பட்ட தீபவிழாவும் முறையே தீபாவளியாகவும், கார்த்திகையாகவும் மாறி வளர்ச்சி கண்டிருக்கின்றன என்பதே உண்மை. இதற்கு இன்னொரு சான்றாக, நமது ஐப்பசி பதினான்காம் தேய்பிறைக்குப் பதில், தமிழகம் தவிர்ந்த அனைத்து இந்தியப்பகுதிகளிலும், ஐப்பசி அமாவாசையிலேயே தீபாவளி கொண்டாடப்பட்டுவருகிறது என்பதைக் காணலாம்.


இரண்டு விழாக்களும் ஒன்று தான் என்பதற்கு இன்னொரு வலுவான சான்றும் உள்ளது. பெரும்பாலான தமிழருக்கு இன்றும் தீபாவளி முன்னோர் வழிபாட்டு நாள் தான். பண்டிகை, கொண்டாட்டங்களுக்கு மேல் அதுவே தீபாவளியன்று முதலிடம் பிடிக்கின்றது. கார்த்திகையும் அதே முன்னோர் வழிபாட்டு நாள் தான் என்பதை நாம் இன்றும் காண்கிறோம். தீபாவளி பற்றிய மிகப்பழைய குறிப்புகளில் ஒன்று இலங்கையிலும் கிடைத்திருக்கிறது. 13ஆம் நூற்றாண்டளவில் இலங்கையில் எழுந்த சரசோதிமாலை நூல். அதில் “பிதிர்கள் இன்பமுறு தீபாவலி” என்று தான் தீபாவளி சொல்லப்பட்டிருக்கிறது. அப்போதும் அது முன்னோர் வழிபாட்டு நாளே தான் என்பதை நாம் ஊன்றிக்கவனிக்கவேண்டும்.

சரி, இரண்டும் ஒரே பண்டிகை தான் என்றால், இரு வேறு தினங்கள் எப்படி வந்திருக்கின்றன? ஒன்று பூரணை, ஒன்று அமாவாசை, ஒரே விழா எப்படி இரு வேறு சம்பந்தமில்லாத நாட்களுக்கான விழாக்களாக உருத்திரிந்திருக்க முடியும்?

போன கிழமைக் கட்டுரையை எப்படி ஆரம்பித்தோம் என்பது நினைவில் இருக்கிறதா? ஒரு விழாவுக்கு புவியியல் பிரதேசம் முக்கியமான காரணியாக அமைகின்றது. சில இந்திய நாட்காட்டிகள் மாதத்தை அமாவாசையிலிருந்து தொடங்க, இன்னும் சில நாட்காட்டிகள் பூரணையிலிருந்தே மாதத்தை ஆரம்பிக்கின்றன. நாம் தமிழில் இது இரண்டின் படியும் இல்லாமல் சூரிய வழியில் மாதத்தைக் கணிக்கின்றோம். என்றாலும், பாரம்பரியமாக நாம் கொண்டாடிவந்த சந்திரன் வழியிலான பண்டிகைகள் இன்றும் தொடர்கின்றன.

அமாவாசையில் மாதம் தொடங்குவோர் அந்நாளிலும், பூரணையில் மாதம் தொடங்குவோர் பூரணையிலும் கார்த்திகை விளக்கீட்டைக் கொண்டாடி வந்திருக்கின்றனர். அல்லது, பாவை நோன்பு போல அது மாதம் முழுவதும் கொண்டாடப்பட்ட நோன்பாகவும் இருந்திருக்கலாம். அப்படி அந்த விழா தொடங்கிய மற்றும் முடிந்த நாட்கள், வடக்கே தீபாவளியாகவும் தெற்கே கார்த்திகை விளக்கீடாகவும் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. தமிழரின் தீபாவளி அமாவாசைக்கு ஒருநாள் முன்பே கொண்டாடப்படுவதால், இதற்கு பழைய முன்னோர் வழிபாட்டுத் தொடர்ச்சியும் இருக்கக்கூடும். 

கார்த்திகை விளக்கீடு, இன்று தமிழரால் மாத்திரமே கொண்டாடப்படும் பண்டிகை. தாய்லாந்திலும் கேரளத்திலும் கூட இவ்விழா கொண்டாடப்பட்டிருக்கிறது என்றாலும், அதுவும் பழந்தமிழ் தொடர்பு காரணமாகவே. தீபாவளி மவுசின் முன்னிலையில் நாம் நம் எஞ்சியிருக்கும் மிக நீண்ட பாரம்பரியத்தை மறுதலித்து வருகிறோம்.

அதற்காக ஏற்கனவே இந்துத்திருவிழாவாக புகழ்பெற்றிருக்கும் தீபாவளியைக் கைவிடுவதோ, புறக்கணிப்பதோ சாத்தியமல்ல. அதற்கும் மேல், ஆரியப்பண்டிகை, திட்டமிட்ட சதி என்றெல்லாம் சொல்லப்படும் மொண்ணைத்தனமான பரப்புரைகளில் எந்த உண்மையும் இல்லை. அதுவும் நம் கார்த்திகையின் திரிந்த வடிவம் தான். கார்த்திகையை, தீபாவளியை விட விமரிசையாகக் கொண்டாடுவது ஒன்றே நாம் செய்யக்கூடியது.

இந்தக் “கார்த்திகை விளக்கீடு” என்ற சொல்லை இன்று நாம் சாதாரணமாகப் பயன்படுத்தி வருகிறோம். இது சம்பந்தர் காலத்தில் புழங்கிய சொல். குறைந்தது, 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சொல் என்று எண்ணிப்பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. சங்க இலக்கியங்கள் என்று செல்லும் போது, அதன் பழைமை இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுமார் 2000 வருடங்கள் என்று செல்கின்றது. சாதாரண மனித ஆயுள் வெறும் 70 – 80 ஆண்டுகள் இருக்குமா? சும்மா கணக்குப் போட்டுப் பாருங்களன், 2000 ஆண்டு என்றால் எத்தனை தலைமுறை தாண்டிச் சென்றிருக்கும்? அத்தனை ஆண்டுகள் முந்தி வாழ்ந்த நம் முப்பாட்டி ஒருத்தியோடு, முப்பாட்டன் ஒருவனோடு நாம் கொள்ளும் உறவு தான் இந்தக் கார்த்திகைத் திருவிழா. அவனும் அவளும் கொண்டாடியது போலவே அகல் விளக்கில் தீபமேற்றி, முன்னோரைப் போற்றிக் கொண்டாடுகிறோம், நாம் அவர்களை இக்கணத்தில் எண்ணிப்பார்ப்பது போலவே, அவர்கள் அவர்களுக்கும் முந்திய முன்னோரை இதே நாளில் எண்ணிப் பார்த்திருப்பார்கள் என்பதை சிந்தியுங்கள். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முந்தி வாழ்ந்த நம் இரத்தசொந்தம் ஒன்றுடன் மானசீகமாக உறவாடுகிறோம்! கண்கள் பனிக்கச் செய்யும் அற்புதமான தருணங்களுள் ஒன்று அது!

இனிய கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)


(அரங்கம் பத்திரிகையின் 39ஆவது இதழில் [2018.11.16] வெளியான கட்டுரை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)