சம்மாந்துறை எதிர் பழுகாமம் எதிர் போரைதீவு – ஒரு முக்கோணச்சமர்
- பால்டியசின் குறிப்புகளிலிருந்து.. 1611ஆம் ஆண்டு யூன் மாதம். கண்டி மகாராசன் செனரதனின் அரசவை. ஒற்றுச்செய்தி கிடைத்திருந்ததால், வந்து வணங்குபவன் பழுகாம மன்னனின் தூதன் என்பது அரசனுக்குத் தெரிந்திருந்தது. "மன்னா, போரைதீவு அரசனான ஞானசங்கரி, போர்த்துக்கேயருடன் கைகோர்த்திருக்கிறான். தன் ஆளுகைக்குட்பட்ட எல்லாத் துறைமுகங்களையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றான். அவனது படை தங்களுக்கெதிராகக் கிளம்புவதற்கான இரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதை எங்கள் அரசரின் ஆணைக்கேற்ப தங்களிடம் முறைப்படி அறிவித்து எச்சரிக்கவே வந்தேன்" தூதன் பணிந்தான். "போரைதீவு மன்னன் ஞானசங்கரி, உங்கள் அரசன் செல்லப்பண்டாரத்தின் கூடப்பிறந்த தம்பி அல்லவா?" செனரதனின் புருவங்கள் நெறிந்தன. "ஆம் அரசே. ஆனால் அரசியலில் உறவுகளுக்கு எந்த விதமான அர்த்தமும் இல்லை என்பதே இராஜதந்திரத்தின் முதற்பாடம்." தூதன் பணிவாகத்தான் சொன்னான். போர்த்துக்கேயர் ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் திருக்கோணமலையில் வெறியாட்டம் ஆடியிருந்தார்கள். கிழக்கில் பலம்வாய்ந்த ஒரு பின்னணி இருக்காமல் இந்த முயற்...