நற்பிட்டிமுனை பாசம்! நிந்தவூர் நேசம்! அக்கரைப்பற்று ஆசம்!
மயிலாடும் மண்ணில் விருந்தோம்பும் வண்ணம்! - தோமஸ் அந்தோனி ரீடரின் நாட்குறிப்பிலிருந்து.. மட்டக்களப்புக்கு வந்தால் பாயோடு ஒட்டவைத்து விடுவார்கள் என்ற கருத்து இலங்கையின் வெளிமாகாணங்களில் உண்டு. உண்மையில் இங்கே சாப்பிட பாயில் உட்கார்ந்தால் உபசரித்து உபசரித்து எழ விடமாட்டார்கள், நமக்கும் பாயில் ஒட்டிவிட்ட பிரமை உண்டாகிவிடும். அதை, கிழக்கின் தனித்துவங்களுள் ஒன்றான மாந்திரீகத்தோடு இணைத்து சொல்லப்படும் நகையாடல் தான் பாயோடு ஒட்டும் கதை. “ஒருக்கா வந்தால் ஆயுசுக்கும் சோறு போடுறீங்கடா, இனி இங்காலைப்பக்கம் இவன் வரவே கூடாது எண்டு பிளான் பண்ணித்தானே இப்பிடித் தாறீங்கள்?”, “அடேய் பெற்றி அம்பாரைக்கு ட்ரிப் அடிக்கிறண்டா வெறுவயித்தோட போங்கோ! ஒருநாள் ருவர் போனா கிடைக்கிற சாப்பாட்டுக்கே ஒரு கிளமை ரொய்லெற்றில சீவியம் நடத்தோணும்” இதெல்லாம் தீவளாவிய நண்பர் வட்டாரங்களில் கிழக்குத் தொடர்பான நகைச்சுவை உரையாடல்களில் வழக்கமானவை. பொதுவாகவே இலங்கையின் விருந்தோம்பல் உலகப் புகழ்பெற்றது. இலங்கையின் எந்தப்பகுதிக்கு சுற்றுலா சென்றாலும், அங்கே கூட உணவு விடயத்தில் இதே கவனிப்புத் தான் கிடைக்கிறது. அப்படி இருக்க, ...