நற்பிட்டிமுனை பாசம்! நிந்தவூர் நேசம்! அக்கரைப்பற்று ஆசம்!
மயிலாடும் மண்ணில் விருந்தோம்பும் வண்ணம்!
- தோமஸ் அந்தோனி ரீடரின் நாட்குறிப்பிலிருந்து..
மட்டக்களப்புக்கு வந்தால் பாயோடு ஒட்டவைத்து விடுவார்கள் என்ற கருத்து இலங்கையின் வெளிமாகாணங்களில் உண்டு. உண்மையில் இங்கே சாப்பிட பாயில் உட்கார்ந்தால் உபசரித்து உபசரித்து எழ விடமாட்டார்கள், நமக்கும் பாயில் ஒட்டிவிட்ட பிரமை உண்டாகிவிடும். அதை, கிழக்கின் தனித்துவங்களுள் ஒன்றான மாந்திரீகத்தோடு இணைத்து சொல்லப்படும் நகையாடல் தான் பாயோடு ஒட்டும் கதை. “ஒருக்கா வந்தால் ஆயுசுக்கும் சோறு போடுறீங்கடா, இனி இங்காலைப்பக்கம் இவன் வரவே கூடாது எண்டு பிளான் பண்ணித்தானே இப்பிடித் தாறீங்கள்?”, “அடேய் பெற்றி அம்பாரைக்கு ட்ரிப் அடிக்கிறண்டா வெறுவயித்தோட போங்கோ! ஒருநாள் ருவர் போனா கிடைக்கிற சாப்பாட்டுக்கே ஒரு கிளமை ரொய்லெற்றில சீவியம் நடத்தோணும்” இதெல்லாம் தீவளாவிய நண்பர் வட்டாரங்களில் கிழக்குத் தொடர்பான நகைச்சுவை உரையாடல்களில் வழக்கமானவை.
பொதுவாகவே இலங்கையின் விருந்தோம்பல் உலகப் புகழ்பெற்றது. இலங்கையின் எந்தப்பகுதிக்கு சுற்றுலா சென்றாலும், அங்கே கூட உணவு விடயத்தில் இதே கவனிப்புத் தான் கிடைக்கிறது. அப்படி இருக்க, குறித்த இடத்தில் மாத்திரமே விருந்தோம்பல் அதிகம் என்று சொல்வது சரியா? மட்டக்களப்பு விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்றது என்பது ஏன் ஒருவேளை மிகைபடக் கூறலாக இருக்கக்கூடாது?
ஒருவேளை ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழரை ஒப்பிட்டு இப்படிச் சொல்கிறார்களா? இயல்பாகவே முஸ்லீம்கள் மத்தியிலும் விருந்தோம்பல் தனிச்சிறப்புப் பெறுவது என்றாலும், மட்டு – அம்பாறை முஸ்லீம்களின் விருந்துபசாரம் கூட குறிப்பிட்டு சிலாகிக்கப்படுகிறதே! உண்மையிலேயே மட்டக்களப்பின் விருந்தோம்பல் தனித்துவமானது தானா?
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பேயே, இந்தக் கேள்விக்கு ஆம் என்று விடையளித்து சான்றிதழ் அளித்துள்ளார் ஒருவர். அதுவும் ஒரு ஐரோப்பியர். “சூதுவாது அறியாத இந்த மாவட்ட மக்களை நான் என்றென்றும் அன்போடு நினைவுகூர்வேன்” என்ற அவரது நாட்குறிப்பு வரியில் அத்தனை நெகிழ்ச்சியும் பாசமும் இழையோடுகிறது. அவர் மருத்துவர் தோமஸ் அந்தோனி ரீடர். 1801ஆம் ஆண்டு பிரித்தானிய இலங்கையின் 51ஆவது இராணுவப்படையின் மருத்துவராகவும் இலங்கை வைத்தியசாலைகளின் மேற்பார்வையாளராகவும் கடமையாற்றியவர். மட்டக்களப்பிலிருந்து தென்காலிக்கு (தங்காலை) அவர் மேற்கொண்ட பயணம் தொடர்பான நாட்குறிப்பேட்டிலேயே மட்டக்களப்பின் விருந்தோம்பலை விதந்து கூறியிருக்கிறார் அவர்.
மட்டக்களப்பு வாவியில் உலவும் படகுகள், ஒரு பழைய வரைபடம் |
1801 யூலை 10ஆம் திகதி, மாலை ஆறரை மணியளவில் புளியந்தீவிலிருந்து படகொன்றில் கிளம்புகிறார் அவர். படகில் விசேடமான பந்தல் அமைக்கப்பட்டு அதன் கீழ் நிறுத்தப்பட்ட பல்லக்கில், நாப்பட்டிமுனைக்குச் சென்று சேர்கிறார். அங்குள்ள மக்கள் தன் மீது அதிக பாசம் செலுத்தியதையும், கைமாறு கருதாமல் தனக்கும் தன் சேவகர்களுக்கு பரிசில்கள் பல வழங்கியதையும் அவர் வியப்போடு குறிப்பிட்டுள்ளார். “இந்தப் பிரயாணத்தில் நான் வேறெங்கும் பார்த்த மக்களை விட இங்குள்ள மக்களின் முகத்தில் தான் அதிக மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது” என்றும் சொல்கிறார் அவர். (இதைப் படிக்கும் நீங்கள் நற்பிட்டிமுனை என்றால், அல்லது நற்பிட்டிமுனையில் சொந்தக்காரர்கள் இருந்தால், வெள்ளைக்காரனை பொறாமைப்பட வைத்த உங்கள் தாத்தா – பாட்டியை நினைத்து ஒருதடவை பெருமையாக கொலரைத் தூக்கிக்கொள்ளலாம்!)
அடுத்தநாள் பின்னேரம் மூன்றரை மணியளவில் நாப்பட்டிமுனையிலிருந்து புறப்பட்ட ரீடர், மூன்று மணிநேரப் பல்லக்குப் பிரயாணத்தில் வம்மிமடுவை வந்தடைகிறார். வம்மிமடுவின் ஒருபுறம் பரந்த நெல்வயல்களாகவும், மறுபுறம் அடர்ந்த காடாகவும் விளங்குவதையும் அங்கு கூட்டம் கூட்டமாக ஆபத்தான யானைகள் வாழ்வதையும் வம்மிமடுக் கிராமத்தலைவர் கூறி, இரவில் பயணிக்கவேண்டாம் என்று அவரைத் தடுக்கிறார். இனி ரீடரின் வரிகளை நேரடியாகவே வாசிப்போம்.
“யூலை 12ஆம் திகதி, காலை ஆறு மணியளவில் சூரியன் உதிக்கையில் வம்மிமடுவை விட்டுக் கிளம்பிய நான், அதற்கும் கருங்கொட்டித்தீவுக்கும் இடைப்பட்ட பகுதி, வர்ணனைக்கு அப்பாற்பட்ட பேரழகுடன் திகழ்வதைக் கண்டேன். புளோரன்ஸின் கபினோ பகுதியை எனக்கு அது ஞாபகமூட்டியது. எண்ணிலடங்கா பெசண்ட் பறவைகளை அங்கு மட்டும் தான் காணமுடியும். இங்கோ நிறைய மயில்களும் அழகழகான பறவைகளும். நான் துப்பாக்கியுடன் அரைமணி நேரம் அலைந்து திரிந்து இரண்டைச் சுட்டேன். அதில் ஒன்றின் வால் ஒன்றரை யார் நீளமானது. ஒரு ஐம்பது மயிலை நான் இலகுவாக சுட்டுக்கொன்றிருக்கலாம். ஆனால் எனக்குக் கவலையாக இருந்தது. இவை பெறுமதி வாய்ந்தவை....
மட்டக்களப்புக்கும் இந்த இடத்திற்கும் இடைப்பட்ட காட்சிக்கு, இலங்கையின் வேறெந்த பாகத்தையும் ஒப்பிடமுடியாது. இங்குள்ள கிராமங்கள் தூய்மையாகக் காணப்படுகின்றன. மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள். ஒரு வெள்ளைக்காரன் இவ்வீதி வழியாகச் சென்றதை இதற்குமுன் கண்டதில்லை என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஒன்பதரை மணியளவில் தாரை தப்பட்டை முதலான பலவற்றுடன் வந்து கிராமத் தலைவர் என்னை வரவேற்றார். 50 யார் தொலைவுக்கு வெண்ணிறத் துணிகள் அலங்கரிக்கப்பட்டு, நான் நடப்பதற்காக வெண்சீலை விரிக்கப்பட்டிருந்தது. நல்ல கோழியிறைச்சியும் பாலும் பழமும் இன்னும் நிறைய உணவும் எனக்கு வழங்கப்பட்டது. அருமையான சாப்பாடு! இதே விருந்தோம்பல் பண்புடனே நான் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் உபசரிக்கப்பட்டேன். சூதுவாது அறியாத இந்த மக்களை நான் என்றென்றும் நட்போடு நினைவில் வைத்திருப்பேன்.”
நிந்தவூர் வயல்வெளி (படம்:flickr.com) |
இங்கு வம்மிமடு என்று சொல்லப்படும் ஊர் வேறெதுவும் அல்ல; இன்றைய நிந்தவூர் தான் அது. நிந்தவூரின் அருகே இன்றும் நீடிக்கும் மருத நிலத்துக்கு நீண்டகால பாரம்பரியம் உண்டு என்பதை ரீடரின் வம்மிமடு வயல்வெளி தொடர்பான இந்த வரிகள் சொல்லாமல் சொல்கின்றன.
இறுதியாக ரீடர் சொல்லும் இடம் கருங்கொட்டித்தீவு. அதாவது அக்கரைப்பற்று. இன்றைக்கும் கிழக்கிலங்கையின் மிக அழகான காட்சிப் புலங்களில் ஒன்று, நிந்தவூரிலிருந்து அக்கரைப்பற்று வரை, நீடிக்கும் வயல்நிலங்கள். அவை இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் முல்லையும் மருதமும் கைகோர்த்த எழில்பொங்கும் நிலமாகத் திகழ்ந்ததையும், “இலங்கையில் வேறெங்கும் கண்டதில்லை” என்று ஒரு வெள்ளையனை வாய்பிளக்க வைக்கும் வண்ணம், கண்ணுக்கு விருந்தளிக்கும்படி விளங்கியதையும் நாம் ரீடரின் வரிகளில் அறிகிறோம். பறவைகளைக் கண்டதுமே துப்பாக்கியைத் தூக்கிச் சென்ற ஐரோப்பிய களியாட்டப் புத்தியும், மயிலின் தோகையையும் அழகையும் கண்டதுமே “மேலும் மயில்களைக் கொல்வதற்கு வருத்தமாக இருக்கிறது” என்று கசியும் போது வெளிப்படும் சீவகாருணியமும், அந்த மனிதருக்கு ஒரு “சல்யூட்” போடலாம் என்று தோன்றவைக்கிறது.
அவர் முன்பொருமுறை கண்ட இத்தாலியின் புளோரன்ஸ் மாநிலமும் பெசண்ட் பறவைகளும் இங்குள்ள நிலத்தையும் மயில்களையும் கண்டபோது அவருக்கு நினைவில் தோன்றியிருக்கின்றன. நம் மனதில் ஆழமாகப் பதிந்த பழைய காட்சியொன்றை நினைவுகூரத் தூண்டும் நிலம், எப்போதும் மனதுக்கினியதாகவே இருக்கும். அப்படியென்றால், ரீடருக்குத் தன் பிறந்தகத்தை - ஐரோப்பாவை நினைவூட்டிய இந்த மயிலாடும் மண், எத்தனை அழகாக விளங்கியிருந்திருக்கும்?
நற்பிட்டிமுனை மக்களின் பாசம், இரவில் பயணிக்காதீர்கள் என்று சொன்ன வம்மிமடு தலைவரின் அக்கறை, கூரைமுடி, நிலவிரிப்பு, பறைமேள மரியாதைகளுடன் வரவேற்று வயிறுமுட்ட சாப்பாடு போட்ட கருங்கொட்டித்தீவுத் தலைவரின் விருந்தோம்பல். அத்தனையிலும் கவிழ்ந்துவிட்டார் ரீடர். ஊர் பேர் தெரியாதவனை, அதிலும் முதன்முதலாக நம்மைச் சந்திப்பவனை “உங்களை என்றென்றும் அன்போடு நினைவுகூர்வேன்” என்று சொல்லவைப்பது ஒன்றும் அத்தனை எளிமையான காரியம் அல்ல. அதைச் செய்து காட்டியிருக்கிறார்கள் நம் தாத்தா பாட்டிகள். மயிலாடிய அழகுப்பூமி இது, எங்கிருந்தோ கடல் கடந்து வந்தவனை அன்பால் கட்டிப்போட்ட நேசம் வாழ்ந்த தேசம் இது. என்ன தவம் செய்தோம் இந்த மண்ணில் பிறப்பதற்கு!
(அரங்கம் 25ஆவது இதழில் [2018.08.10] வெளியான கட்டுரை)
கருத்துகள்
கருத்துரையிடுக