சம்மாந்துறை எதிர் பழுகாமம் எதிர் போரைதீவு – ஒரு முக்கோணச்சமர்

- பால்டியசின் குறிப்புகளிலிருந்து..


1611ஆம் ஆண்டு யூன் மாதம். கண்டி மகாராசன் செனரதனின் அரசவை. ஒற்றுச்செய்தி கிடைத்திருந்ததால், வந்து வணங்குபவன் பழுகாம மன்னனின் தூதன் என்பது அரசனுக்குத் தெரிந்திருந்தது. "மன்னா, போரைதீவு அரசனான ஞானசங்கரி, போர்த்துக்கேயருடன் கைகோர்த்திருக்கிறான். தன் ஆளுகைக்குட்பட்ட எல்லாத் துறைமுகங்களையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றான். அவனது படை  தங்களுக்கெதிராகக் கிளம்புவதற்கான இரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இதை எங்கள் அரசரின் ஆணைக்கேற்ப தங்களிடம் முறைப்படி அறிவித்து எச்சரிக்கவே வந்தேன்" தூதன் பணிந்தான். "போரைதீவு மன்னன் ஞானசங்கரி, உங்கள் அரசன் செல்லப்பண்டாரத்தின் கூடப்பிறந்த தம்பி அல்லவா?"  செனரதனின் புருவங்கள் நெறிந்தன. "ஆம் அரசே. ஆனால் அரசியலில் உறவுகளுக்கு எந்த விதமான அர்த்தமும் இல்லை என்பதே இராஜதந்திரத்தின் முதற்பாடம்." தூதன் பணிவாகத்தான் சொன்னான்.

போர்த்துக்கேயர்  ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் திருக்கோணமலையில் வெறியாட்டம் ஆடியிருந்தார்கள். கிழக்கில் பலம்வாய்ந்த ஒரு பின்னணி இருக்காமல் இந்த முயற்சியை அவர்கள் எடுத்திருக்கமாட்டார்கள் என்பதை செனரதனும் ஏற்கனவே ஊகித்திருந்தான். செல்லப்பண்டாரத்தின் தூது அவனது ஊகத்தை உறுதி செய்தது. உடனே பல்லைக்கடித்தபடி அமைச்சரை அழைத்தான் "உடனே போரைதீவுக்கு செய்தி செல்லட்டும். செய்தி கிடைத்த அடுத்த நாளே அரசன் ஞானசங்கரி கண்டி அரசவைக்கு சமூகமளித்தாக வேண்டும்."


சேனரதன் போரைதீவுக்கு செய்தி அனுப்பிய சில நாட்களிலேயே போரைதீவு தூதன் வந்து அவனைப் பணிந்தான். "நான் போரைதீவு மன்னனையே வருமாறு அழைத்தேன். தூதனை அல்ல" என்று முகம் சுழித்தபடி சொன்னான் செனரதன். "அரசே, எங்கள் மன்னர் ஞானசங்கரி தங்களுக்கு வணக்கங்களைச் சொல்கிறார். எந்தக் காலத்திலும் எங்கள் அரசர் கண்டியரசுக்கு எதிரானவர் அல்ல என்பதை தங்களிடம் எடுத்துக்கூறுவது எனக்கு இடப்பட்ட பணி. தன்னைப் பற்றித் தவறாகத் தூதனுப்பிய செல்லப்பண்டாரம், பதவி வெறியில் தன்னுடன் கூடப்பிறந்த மூத்த அண்ணனையே கொன்றொழித்தவன் என்பதை தங்களுக்கு நினைவூட்டுமாறும் அவர் கோரினார். என் தூதின் நோக்கம் அவ்வளவு தான்."  

"அண்ணனும் தம்பியும் உங்கள் சின்னப்பிள்ளைச் சண்டையைக் காட்டுகின்ற இடமா அரசியல்? புதினமான பாரதக்கதை!" செனரதன் பொறுமையிழந்து சொன்னான்.  "பாரதக்கதை தான் அரசே. ஆனால் தர்மம் வெல்லவேண்டியதே நியதி. எங்கள் அரசர் பக்கமே நீதி உள்ளது. தவிர பழுகாம ஆற்றில் பாதிப்பங்கை உரிமை கோரும் செல்லப்பண்டாரம், சமீபகாலமாக எங்கள் அரசருக்கும் தொல்லை கொடுத்து வருகிறான். முழு பழுகாம ஆற்றுக்கும் தானே சொந்தக்காரன் என்று சொல்லி வருகிறான். அவனால் பழுகாம ஆற்றில் வணிகப் படகுகளில் வரி வசூலிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது தாங்கள் அறியாத செய்தி அல்ல" என்று சொல்லி தூதன் பணிந்தான். செனரதனுக்குக் குழப்பமாகப் போய் விட்டது. பழுகாம ஆற்றில் இடம்பெறும் வரி வசூலிப்பு மாறாட்டங்கள் தொடர்பான செய்திகளை ஏற்கனவே அவன் அறிந்திருந்தான். "நல்லது. நீ கிளம்பலாம். பழுகாம ஆறு விடயத்தில் போரைதீவு, பழுகாமம் இரண்டினதும் சிக்கலுக்கு நான் கூடிய விரைவில் முடிவெடுப்பேன் என்று உன் மன்னனிடம் சென்று சொல்." வணங்கிவிட்டுக் கிளம்பினான் தூதன்.



கீழைக்கரையின் இந்தச் சிக்கலை இப்படியே விட்டால் நன்றாக இருக்காது என்பதை பலவாறு சிந்தித்த செனரதன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான். விரைவில் அங்கு தன் ஆதிக்கத்தை உறுதி செய்யவேண்டும். கூடவே போர்த்துக்கேயருக்கெதிரான வலுவான படை ஒன்றை அமைக்கவேண்டும். செனரதனது ஆணை பொறித்த மடல்கள் அவனது ஆட்சிக்குக் கீழ் அமைந்த அனைத்து சிற்றரசுகளுக்கும் பறந்தன. வரலாற்று முக்கியத்துவம் மிக்க அந்தப் பேரவை 1611 யூலை 16 கண்டியில் கூடியது. கொட்டியாரத்து மன்னன் இடலி, பழுகாம அரசன் செல்லப்பண்டாரம், மட்டக்களப்பு மன்னன் குமார பண்டாரம், போரைதீவு அரசன் ஞானசங்கரி, ஊவா இளவரசன் கரவெட்டி ராலேஹாமி, மீகோணை இளவரசன் மார்செலஸ் டி பொஸ்கௌவர், வெல்லசை இளவரசன் மெதிரி ராலேஹாமி,  கொத்மலை இளவரசன் மேவாதுரு ராலே, நான்குகோரளை  அதிபர் விக் வனசிங்க, உடரட்டை பிரபு கோல ராலே, யாலகொடை இளவரசனின் தமையன் யட்டிநுவர, நானூற்றுப்பற்று ஆளுநர் கேல் ஹெபராட், அஸ்கிரிய ஆளுநர் கொரோப், மாத்தளை ஆளுநர் வனடிகிரி ஆகியோரும் யாழ்ப்பாண அரசின் தூதர் ஒருவரும் இதில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் 50,000 வீரர்களைக் கொண்ட கண்டி அரசின் வலுவான படையொன்றை போர்த்துக்கேயருக்கு எதிராக அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடவே மன்னன் அந்த அவையில்,  "பழுகாம ஆற்றின் எல்லைப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை போரைதீவு மற்றும் பழுகாம அரசர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஏதாவது நடக்கக்கூடாதது நடந்ததென்று கேள்விப்பட்டால் இருவரையுமே வெட்டிக்கொல்வேன்!" என்ற எச்சரிக்கையும் விடுத்தான்.

1613இல் மன்னன் நோய்ப்படுக்கையில் வீழ்ந்தபோது, அவசரமாக இன்னொரு முறை கண்டி பேரவை கூட்டப்பட்டது. அதில், 1611இல் கலந்துகொண்டோர் தவிர, பாணமை அரசன் சமரவாகுவும் யாழ்ப்பாண அரசின் தூதர் நமச்சிவாயமும் (?!) கூடக் கலந்துகொள்கிறார்கள். தன் ஆட்சிக்கு உட்பட்ட எல்லோரும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டும் என்ற கோரிக்கை மன்னனால் விடுக்கப்படுகிறது.

ஆனால் அடுத்த ஆண்டு இறுதியிலேயே ஓர் அசம்பாவிதம் நிகழ்கிறது. பழுகாம அரசனின் தூதர்களை மட்டக்களப்பு மக்கள் கொன்றுவிடுகிறார்கள். அதனால் பழுகாம அரசும் மட்டக்களப்பு அரசும் யுத்தமொன்றில் இறங்குகின்றன. ஊவா மன்னன் பழுகாமத்தின் துணைக்கு வருவதால், மட்டக்களப்பு மன்னன் துரோகத்தால் கொல்லப்படுகிறான். அவன் படை தோற்றோடுகிறது. மட்டக்களப்பு அரசு செல்லப்பண்டாரத்தின் பழுகாமத்தோடு இணைக்கப்படுகிறது. 

கீழைக்கரையின் அண்ணன் தம்பி அரசர்கள் அடிபிடிபட்ட விரிவான கதையை இப்படிச் சொல்பவர், ஒரு ஒல்லாந்து மதபோதகர். பெயர் பிலிப்பஸ் பால்டியஸ் (1632 - 1671). பால்டியசால் எழுதப்பட்ட, இந்திய நாடுகள் தொடர்பான நூல், இலங்கை வரலாற்று நூல்களில் சிறப்பிடம் பெற்ற ஒன்று. அதில் அருமையான பல வரைபடங்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களும் கிடைக்கின்றன. அவற்றில் கிழக்கிலங்கை பற்றி அவர் எழுதியிருந்த சம்பவங்களைத் தான் நாம் மேலே பார்த்தோம்.   

யாழ்ப்பாணம் போல கிழக்கில் ஏன் ஒரு தனியரசு அமையவில்லை? அதற்கான காரணம் எளிமையானது. இங்கு வன்னியைப் போல சிற்றரசர்கள் தங்களுக்குள் சிறுசிறு நிலப்பகுதிகளைப் பிரித்துக்கொண்டு ஆண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் சகோதரர்களாக இருந்தார்கள் என்பதை, போரைதீவு மற்றும் பழுகாம அரசர்கள் சகோதரர்கள் என்ற குறிப்பின் மூலம் அறிகிறோம். இயல்பாகவே அரசியல்வாதிகளுக்கு இருக்கும் மண்ணாசை அவர்களுக்கும் இருந்தது, கூடப்பிறந்தவன் என்றுகூடப் பாராமல், ஒருவன் மூத்த சகோதரனைக் கொன்றிருக்கிறான். அப்படி பரிதாபமாக இறந்த மூத்தவன் யாரென்று தெரியவில்லை. 

ஆனால், 1603இல் எழுதப்பட்ட ஒரு ஒல்லாந்தர் குறிப்பில் மட்டக்களப்பை தர்மசங்கரி அல்லது தர்மசிங்கத்துரை (Tamme cangattuarie) எனும் மன்னன் ஆள்வது சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் சிலர் 1603 குறிப்பில் சொல்லப்படும் தர்மசங்கரியும், பால்டியஸ் சொல்லும் ஞானசங்கரியும் (Jane sangatie) ஒருவனே என்கிறார்கள். இருவரும் வேறு வேறு என்ற நம் ஊகம் சரி என்றால், ஞானசங்கரி 1611இல் குற்றம் சாட்டுவதன் படி, செல்லப்பண்டாரத்தால் சொல்லப்பட்ட மூத்த சகோதரன், தர்மசங்கரியாக  இருக்கக்கூடும்.  

பழுகாம அரசும் போரைதீவு அரசும் பழுகாம ஆற்றை (இன்றைய மட்டக்களப்பு வாவி) பாகம் பிரித்து வணிகப்படகுகளிடம் வரி வசூலித்து வந்தன என்பதன் மூலம், இன்றைய மட்டக்களப்பு வாவியின் இருபுறமும் இருந்த நிலப்பகுதிகளை பழுகாம அரசும் போரைதீவு அரசும் இரு பாகங்களாக்கி ஆண்டு வந்திருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகின்றது. ஆனால் மூன்றாவதாக மட்டக்களப்பு மன்னனான குமாரபண்டாரம் பற்றிய குறிப்புகள் வருவதாலும், அவனுக்கும் பழுகாம அரசுக்கும் இடையே நடைபெற்ற சண்டை பற்றிய குறிப்புகள் வருவதாலும், அப்போது மட்டக்களப்பு என்பது பழுகாமமோ போரைதீவோ அல்லாத தனியொரு பகுதி என்பது தெரியவருகிறது. இடச்சு மற்றும் போர்த்துக்கேயக் குறிப்புகளில் மட்டக்களப்பின் தலைநகர் சம்மாந்துறையே என்ற குறிப்பு காணப்படுவதால், குமாரபண்டாரம் ஆண்ட மட்டக்களப்பு, சம்மாந்துறையைச் சுற்றியுள்ள பகுதியே எனலாம்.  

மட்டக்களப்பு மக்கள் ஏன் பழுகாமத் தூதர்களைக் கொன்றார்கள், பழுகாம மன்னன் செல்லப்பண்டாரத்துக்கும், அவனால் கொல்லப்பட்ட மட்டக்களப்பு மன்னன் குமாரபண்டாரத்துக்குமான உறவு என்ன, செல்லப்பண்டாரத்துக்கு ஏன் ஊவா மன்னன் துணை நின்றான், பழுகாமம் மற்றும் ஊவா அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு கண்டி மன்னனின் எதிர்வினை எவ்வாறு இருந்தது என்பன பற்றிய விவரங்களெதுவும் ஐரோப்பியக் குறிப்புகளில் இல்லை. மட்டக்களப்பு மன்னன் துரோகத்தால் கொல்லப்பட்டான் என்று சொல்லப்படுவதால், அவன் செல்லப்பண்டாரத்துக்கு நெருங்கிய உறவினன் என்பது தெரியவருகிறது. அவன் தர்மசங்கரியின் மகனாகவோ அல்லது, செல்லப்பண்டாரத்தின் இன்னொரு தம்பியாகவோ இருக்கக்கூடும். செல்லப்பண்டாரம் ஏற்கனவே போரைதீவு மன்னனோடு முரண்பட்டவன் என்பதைச் சிந்தித்தால், மட்டக்களப்புப் போரும், மண்ணாசையால் இடம்பெற்றது என்ற முடிவுக்கே நாம் வந்து சேர முடியும். 

மட்டக்களப்பு வாவி முன்பு பழுகாம ஆறு என்று அழைக்கப்பட்டதும், பழுகாம அரசு, மட்டக்களப்புப் பகுதியில் வலிமை வாய்ந்ததாக இருந்தது என்பதும் அவ்வரசின் ஆதிக்கத்துக்கு சான்று கூறுகின்றன. அதேவேளை, பண்டுதொட்டே தமிழரிடம் நிலவிவரும் சகோதரச்சண்டைகளுக்கும் நம்பிக்கைத் துரோகங்களுக்கும் நீண்ட கால வரலாறுண்டு என்பதையும் பால்டியசின் இந்தக் குறிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வரலாறு நம்மைப் பார்த்து மீண்டும் மீண்டும் கேட்பது ஒன்றே. எப்போது திருந்தப்போகிறீர்கள்?


(அரங்கம் 26ஆவது இதழில் [2018.08.17] வெளியான ஆக்கம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)