பாணமை அரசனின் இராஜத்துரோகம்
ஒரு சிரச்சேதக் காட்சி (படம்:https://www.gettyimages.com) |
போனவாரம் போரைதீவு, பழுகாமம், சம்மாந்துறை ஆகிய மூன்று அரசுகளையும், அவற்றுக்கிடையே இடம்பெற்ற சகோதரச் சண்டைகளையும் பார்த்தோம். நாம் பால்டியசை மேலும் ஊன்றிப் படிக்கும் போது சுவையான பல தகவல்கள் கிடைக்கின்றன. 1600ஆம் ஆண்டு காலத்தில் கிழக்கில் இருந்த அரசுகளாக அவர் விவரிப்பவை ஐந்து. கொட்டியாரம், மட்டக்களப்பு, பழுகாமம், போரதீவு மற்றும் பாணமை. இவற்றில் பாணமையைப் பற்றியே மிக விரிவாக எழுதியிருக்கிறார் அவர்.
1592இல் கண்டியின் மன்னனாக அரசுக்கட்டில் ஏறினான் விமலதர்ம சூரியன். விமலதர்மனுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையே வளர்ந்த பகையின் பலனாக 1594இல் ஒரு பெரும்போர் இடம்பெற்றது. அதன் போது, கண்டி அரசின் பக்கத்தில் இணைந்திருந்த படையின் விவரங்களை முழுமையாக பதிவு செய்திருக்கிறார் பால்டியஸ். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு படியுங்கள். யாழ்ப்பாண அரசிலிருந்து 19,900 வீரர்கள், 10 போர்யானைகள், 40 கோட்டைகள், 3000 எருதுகள், 2000 முன்னணிவீரர்கள் என்பன கண்டி அரசுக்கு உதவியாக வழங்கப்பட்டிருந்தன. 7,890 வீரர்கள், 600 முன்னணிவீரர்கள், 1000 எருதுகள், 30 போர் யானைகள், 25 சாதாரண யானைகள் என்பன கொட்டியார மன்னனின் உதவி. 5,890 வீரர்கள், 1,000 முன்னணிவீரர்கள், 3 போர்யானைகள், 25 சாதாரண யானைகள் என்பன பழுகாம மன்னனின் உதவி. மட்டக்களப்பு மன்னன் 9,890 வீரர்கள், 2000 முன்னணிவீரர்கள், 2,500 எருதுகள், 4 போர்யானைகள், 30 சாதாரண யானைகள் என்பவற்றை வழங்கியிருந்தான். பாணகை மன்னன் இன்னும் சில இளவரசர்களுடன் இணைந்து, 59,896 வீரர்கள், 2,140 முன்னணிவீரர்கள், 630 யானைகள், 16,000 எருதுகள். ஏனைய சிங்கள மன்னர்களும் இணைந்து கண்டி அரசின் படை, மொத்தம் 1,51,896 படைவீரர்களையும், 75 போர்யானைகளையும், 1000 சாதாரண யானைகளையும், 29,500 எருதுகளையும் கொண்டிருந்தது.
எனினும் இப்போரில் மன்னாரிலிருந்து பெரும்படையுடன் வந்த போர்த்துக்கேயரே வெல்லும்படி ஆனது. விமலதர்மன் பின்வாங்கி வெல்லசையில் மறைந்து வாழ்ந்தான் எனினும் மூன்று மாதங்களில் மீண்டு வந்த விமலதர்மன், போர்த்துக்கேயரைத் தோற்றோடச் செய்து, மீண்டும் கண்டியைக் கைப்பற்றிக் கொண்டான்.
விமலதர்மனுக்குப் பிறகு 1604இல் ஆட்சிக்கு வந்த செனரத் மன்னன், முறையான அரச பரம்பரையில் வந்தவன் அல்ல. அவன் விமலதர்மனுக்கு சகோதரன் முறையானவன் என்றும், பௌத்த பிக்குவாக இருந்தான் என்றும் சொல்லப்படுகிறது. அவன அரசனாக முடிசூடிய பின், விமலதர்மனின் மனைவியான அரசி தோனா கதரீனாவை மணந்துகொண்டான். அவன் போர்த்துக்கேயருக்கு மேலதிகமாக உள்நாட்டில் எழுந்த கிளர்ச்சிகளையும் பெருமளவு சந்திக்க நேர்ந்தது. செனரத்துக்கு எதிராக கிளர்ச்சி கண்ட முதன்மையான சிற்றரசர்களில் ஒருவன் பாணமை மன்னன்.
1612 செப்டம்பரில், பாணமை, கொட்டியாரம் ஆகிய அரசுகளின் மன்னர்கள் கண்டி மன்னனுக்கு எதிராக போர்த்துக்கேயருடன் இணைந்திருக்கிறார்கள் என்ற செய்தி செனரத் மன்னனை சென்றடைகிறது. செப்டம்பர் 23 திகதியிட்ட அவனது கடிதத்தில் பதினாறு நாட்களுக்குள் கண்டி அவைக்கு சமூகம் தரவேண்டும் என்றச செய்தி இருவருக்கும் அனுப்பப்படுகிறது. அப்போது நோய்வாய்ப்பட்டிருந்த கொட்டியார மன்னன் உடனடியாக தன் மாமனை அனுப்பி திடீர் அழைப்பாணைக்கான காரணம் என்னவென்று அறிந்துகொண்டதுடன், ஒக்டோபர் 9ஆம் திகதி தானே வருகைதந்து தான் போர்த்துக்கேயருடன் சேரவில்லை என்று ஆதாரங்களுடன் நிரூபித்துச் சென்றான். ஆனால், உண்மையில் போர்த்துக்கேயருடன் இணைந்திருந்த பாணமை மன்னன் கண்டி அவைக்கு சமூகமளிக்கவில்லை. கண்டி அரசனின் ஆணையின் கீழ் மீகோணை (நீர்கொழும்பு) இளவரசனும் ஊவா இளவரசனும் 1613 ஜனவரி முதலாம் திகதி, 35,000 வீரர்களைக் கொண்ட படையுடன் பாணமை மீது போருக்கு எழுந்தனர்.
பாணமை மக்கள் அந்தப் பெரும்படையை தங்களால் சமாளிக்கமுடியாது என்பதை உணர்ந்துகொண்டார்கள். பாணமைப் பிரதிநிதிகள் சிலர் பரிசுகளுடன் போருக்குத் தலைமைதாங்கிய இரு இளவரசர்களையும் சந்தித்தும் போர்த்துக்கேயர் தொடர்பான பாணமை மன்னனின் எந்தவொரு முடிவிலும் சாதாரண மக்களான தமக்கு எந்தவொரு சம்பந்தமுமில்லை ஆதரவுமில்லை என்பதை அவர்கள் எடுத்துக்கூறியதை இரு இளவரசர்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்தப் படையெடுப்பின் இருமாதச் செலவுக்குச் சமனான 4,57,000 லரினென்கள் பெறுமதியான பணத்தையும் கண்டிக்கான ஆண்டுத் திறையையும் பாணமை மக்கள் கொடுக்கவேண்டி நேர்ந்தது. பாணமை மன்னன் ஆறேழு நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என்ற ஆணையுடன் பணயக்கைதிகளாக சிலரையும் அவர்கள் வழங்கவேண்டி ஏற்பட்டது.
பாணமை அரசன் சரணடைந்தான். அரசவையில் அவன் மீதான குற்றப்பத்திரிகை வாசித்துக்காட்டப்பட்டது. "கண்டி இளவரசி ஹந்தான அதகாசியை மணந்த நீ சீதனமாக மட்டக்களப்பு மற்றும் பழுகாமம் அரசுகளையும் பெற்றுக்கொண்டாய். ஆனால் இப்போது கண்டி அரசுக்கே துரோகமிழைத்திருக்கிறாய். ஐயாயிரம் லரினென்களை கையூட்டாகக் கொடுத்து, அரசனைக் கொல்ல ஒரு முரடனை அனுப்பியிருக்கிறாய். அதைச் செய்து முடித்தால் மேலும் 20,000 லரினென்களும் வேறு பரிசுகளும் தருவதாகச் சொல்லியிருக்கிறாய்" என்ற குற்றப்பத்திரிகையும், ஆதாரமாக அவனே அந்த முரடனுக்கு கைப்பட எழுதிய கடிதமும் அனைவருக்கும் காட்டப்பட்டது.
பாணமை மன்னன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். "நான் செய்தது தவறு தான். என்னை அரசர் மன்னிக்கவேண்டும்" என்று அவன் கோரினான். கூடவே தான் பெருமைக்குரிய அரச வம்சத்தில் வந்தவன் என்பதையும், தன் முன்னோர்கள் கண்டிக்குச் செய்த உதவிகளை நினைத்துப்பார்த்து தான் மன்னிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தான். போர்த்துக்கேயருடனான தொடர்பில் அவனுக்கு உதவிய வேறு 62 பேரும் சிறைகளுக்கு அனுப்பப்பட்டு பின்பு மரணதண்டனை விதிக்கப்பட்டனர். அரசவையின் முடிவின் பேரில், மெத்தம கொனுரையில் இருந்த கோட்டையில் அவன் சிறைவைக்கப்பட்டான். அங்கிருந்து, பாணமை மன்னன் தன் உயிரைக் காப்பாற்றும்படி கோரி கண்டி அரசனுக்கு எழுதிய உருக்கமான கடிதமொன்றை பால்டியஸ் விவரிக்கிறார்.
மார்ச் இருபதாம் திகதி, கண்டி மன்னனால் நியமிக்கப்பட்ட 50 பிரபுக்களைக் கொண்ட அவையில் அவன் மீதான குற்றச்சாட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பாணமை மன்னன் செய்தது மிகப்பெரும் இராஜத்துரோகம் என முடிவெடுத்த அவர்கள், அவனுக்கு மரண தண்டனை விதித்தனர். மார்ச் 24ஆம் திகதி காலையில் அதை நிறைவேற்றுவதற்கான ஒப்பம் செனரத்தால் வைக்கப்பட்டது.
அரசனுக்குரிய வெள்ளை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு கொலைமேடை நிறுவப்பட்டிருந்தது. அருகே கதிரையொன்றில் அமரவைக்கப்பட்டான் பாணமை மன்னன். ஆரம்பத்தில் ஆழ்ந்த அமைதியுடன் விளங்கிய அவன், அவனுக்குரிய தீர்ப்பு வாசிக்கப்பட்டதும், சூழ்த்திருந்த மக்களைப் பார்த்து அரற்றத் தொடங்கினான். தான் உயிர் தப்புவதற்கு ஒரேயொரு வாய்ப்புக் கூட இல்லையா என்று அவன் விம்மி அழுதுகொண்டிருந்தான். அவனோடு கண்ணீர் வழிய நின்றுகொண்டிருந்த அவனது பள்ளியறைக் காவலர்களிடம் அவனது ஆடையை அகற்றுமாறு ஆணை வழங்கப்பட்டது. அவன் மரபுப்படி அவர்களுக்கு நகைகளை அன்பளிப்பாக வழங்கினான். பின்பு தாம்பூலம் தரித்துக்கொண்ட மன்னன் பார்வையாளர்களைப் பார்த்து "அரச குலத்தில் பிறந்த எனக்கு ஈமக்கிரியைகள் அரசமுறைப்படி நடக்கவேண்டும் என்பதே என் இறுதி ஆசை" என்று சொன்னான். பின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தலையறுத்து அவனுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவனது இறுதி ஆசைப்படி, அரச மரியாதையுடன் அவனது இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.
ஏப்ரல் 8ஆம் திகதி, செனரத்தின் மாமன் சமரபாகு, பாணமையின் புதிய அரசனாக அங்கு ஐம்பதாயிரம் வீரர்களுடன் சென்றான். அவனை ஏற்காத மக்களால் கலகம் வெடித்தது. 125 கிளர்ச்சியாளர்களைக் கொன்றே அவன் ஆட்சியில் அமரமுடிந்தது. கொஞ்சகாலத்தின் பின் சூழல் அமைதியான பின், தன்னோடு வந்த படையையும் உரிய திறையையும் கண்டிக்கு அனுப்பினான். அதற்குப் பின்னும் போர்த்துக்கேயர் பாணமை அரசைத் தம் வசம் கொணர முயன்றுகொண்டிருந்தனர். அவர்கள் அனுப்பிய பரிசுகளும் தூதும் எவ்விதப் பதிலும் அளிக்கப்படாமலேயே திருப்பி அனுப்பப்பட்டன.
பாணமை மன்னனின் இந்த சிரச்சேதம், நமக்கு இன்னும் பல வரலாற்றின் கதவுகளைத் திறந்துவிடுகின்றது. அவற்றை விரிவாக அடுத்தவாரம் பார்ப்போமா?
[அரங்கம் 27ஆவது இதழில் (2018.08.24) வெளியான கட்டுரை]
கருத்துகள்
கருத்துரையிடுக