புலையனாக வந்த பரமன்

ஒரு சின்னக் கதை....! 

அந்த அரசிக்கு ஒன்றும் புரியவில்லை! தான் கட்டிய ஆலயத்தின் குடமுழுக்கு நாளும் வந்தாயிற்று, எல்லா ஏற்பாடுகளும் கூட பூர்த்தியாயிற்று! ஆனால், இந்த ஆடல்வல்லான் திருவுருவச்சிலை மட்டும் இன்னும் சரியாகவில்லை! சிற்பியும் செய்து செய்து களைத்துவிட்டான்.. ஏதாவது குறை வந்துகொண்டேயிருக்கிறதே!


“சிற்பி.. இறுதியாக எச்சரிக்கிறேன், நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ தெரியாது.. நாளை காலை நடராசன் சிலை தயாராக இருக்கவேண்டும், இல்லாவிட்டால் நீ அரசதண்டனைக்கு ஆளாக வேண்டி நேரிடும்…”
 

அரசியார் வேகவேகமாகக் கிளம்பிவிட்டார்.

சிற்பியின் கண்களில் ஆறாக நீர்!
“எம்பெருமானே, அப்படியென்ன தவறு செய்துவிட்டேன்? இத்தனை நாளும் என் தொழிலில் சிறுதவறு கூட விடாத எனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வந்துவிட்டதே! ஐந்தொழில் காட்டும் உன் நாட்டியக்கோலத்தை மட்டும் என்னால் சரியாக வடிக்கமுடியாமல் போகிறதே.. நான் என்ன செய்வேன்! ஏது செய்வேன்!!”

நேரம் ஓடிக்கொண்டிருந்தது.. சிற்பியின் புலம்பலும் தீரவில்லை. அரசியின் கட்டளையை எண்ணிப்பார்த்து இறைவனை மீண்டும் மீண்டும் பிரார்த்தித்தவாறே ஐம்பொன் குழம்பை அச்சில் ஊற்றி சிற்பம் வடிக்கத் தயாரானான். அப்போது பார்த்து பின்புறமாக தீனமாக ஒலித்தது ஒரு குரல்…
“சாமி..”
“யாரது?”
பின்புறம் திரும்பிய சிற்பியை அருவருப்பும் ஆத்திரமும் கவ்விக்கொண்டன.
                                           

நல்ல திடகாத்திரமான ஒருவன் அழுக்காடையுடன் நின்றுகொண்டிருந்தான். அவனருகில் ஒரு பெண்.. அவன் மனைவி போலும்… மூக்கால் வடிய வீறிட்டு அலறிக்கொண்டிருக்கும் இரண்டுவயதுக் குழந்தையை இடையில் இடுக்கிக்கொண்டு… தலையில் ஒரு குடம்… அதற்குள்?? அது… அது என்ன மணம்..?? ச்சீ கள்ளு! முடை நாற்றம்! புலைச்சேரி நாய்கள் நான்கு வேறு அவர்களது காலைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன…

“அடே புலையனே.. எவ்விடம் வந்தாய்? தெய்வச் சிலைகளை வடிக்கும் இந்த ஆசாரமான இடத்தில் இப்படி நாய்களையும் கட்குடத்தையும் கொண்டுவந்து இதன் புனிதத்தைக் கெடுக்காதே.. சீச்சீ.. போய்விடு வெளியே!”

“மன்னிக்கணும் சாமீ… ரொம்ப தாகமா இருக்கு.. குழந்த வேற அழுதுகிட்டிருக்கான்.. ஊரெல்லாம் சுத்திவர்றேன்… யாருமே ஒருவாய்த் தண்ணி தரலீங்க சாமி”

“பின்னே? உன்னைப் போல் கீழ்சாதிப் புலையனுக்கெல்லாம் யார் நீர் தருவார்? உன்னுடன் பேசவே அருவருப்பாக இருக்கிறது.. போய்விடு இங்கிருந்து!!!”

புலையன் வேதனைப்புன்னகை ஒன்று உதிர்த்தான்…
“ஒரு உயிர விட ஒங்களுக்கு ஆசாரமும் குலமும் முக்கியமா போயிடுச்சில்ல? இன்னொரு மனுசனின் சுகதுக்கங்களக் கூடக் கவனிக்கமாட்டீங்களா சாமி? தாகத்தில் நாங்க செத்தாலும் ஒங்களுக்குக் கவலயில்ல..”

சிற்பி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது
“அடேய்... ஏற்கனவே மனவருத்தத்தில் இருக்கிறேன்.. என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளாதே! வேண்டுமானால் உன் கள்ளையே குடித்துக்கொள்… ஓடி விடு இங்கிருந்து…”

“கள்ளு எப்பவோ தீர்ந்துடிச்சி சாமி… ஒரு வாய்த் தண்ணி தானே கேக்கறேன்?”

சிற்பி முகத்தில் குரூரம் பரவியது“

“உனக்கு குடிக்க ஏதாவது வேண்டும், அவ்வளவுதானே? அதோ கொதித்துக்கொண்டிருக்கிறதே செம்பொன் குழம்பு.. அதை எடுத்துக் குடித்துத் தொலை! எனைத் தொந்தரவு செய்யாதே”
புலையன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“ரொம்ப நன்றிங்க சாமி!” என்று கூறியபடியே மனைவியுடன் வெகுவேகமாக குழம்பை அள்ளிப் பருகலானான்.

சிற்பி பதறியடித்துக்கொண்டு அவனை நெருங்கினார்.. “அடேய்.. என்ன காரியம் செய்கிறாய்!!”

அடுத்தகணம் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.. என்ன அதிசயம்! உலோகக்குழம்பு அவர்களை ஒன்றுமே செய்யவில்லை??!!

இது என்ன ஆச்சரியம்!

புலையன் புன்னகைக்கிறான்!
அவன் புருவங்கள் நெறிகின்றன..
குனித்த புருவம்!
இதழ்கள் விரிகின்றன…
கொவ்வைச்செவ்வாயில் குமிண்சிரிப்பு!
அடர்ந்த முடி நீண்டு விரிகிறது!
பனித்த சடை!
அழுக்கடைந்த அவனுடலில்
வெண்ணிறக்கீற்றுக்கள்!
பவளமேனியில் பால் வெண்ணீறு!
கால் உயர்கின்றது…
எடுத்த பொற்பாதம்!
என்ன நடக்கின்றது இங்கே!
புலையன் சிற்பமாக மாறுகின்றான்!


                   

“இறைவா! என் இறைவா! நீயா புலையனாக வந்தாய்! நடராசன் சிலை மீண்டும் மீண்டும் தடைப்பட்டது உன் இந்த லீலைக்காகத் தானா? உன்னுடனா இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தேன்! உன்னையா இந்தப்பாவி தூற்றிக்கொண்டிருந்தேன்! எம்பெருமானே!”
புலையன் திருவடிகளில் வீழ்ந்து சிற்பி மன்றாடிக்கொண்டிருக்க புலையன் நின்ற இடத்தில் அதே புன்னகையுடன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது முழுவதும் ஐம்பொன்னாலான ஆடல்வல்லான் சிலை!

அம்மையும் அப்பனும் புலையர் வடிவில் வந்து அவன் பார்வையில் உலக உயிர்கள் யாவும் ஒன்றே என்பதை உணர்த்தி சுயம்புவாக ஆடல்வல்லான் திருக்கோலம் பூண்ட அந்தத் தலம் கோனேரிராஜபுரம் என்கிற திருநல்லம்!



இராஜராஜசோழனின் பாட்டியார் செம்பியன்மாதேவியால் கற்றளியாகக் கட்டப்பட்ட - பாடல் பெற்ற தலங்களில் ஒன்று இந்தத் திருநல்லம்.

இங்குள்ள ஆடல்வல்லான் சிலை தான் உலகின் உயரமான நடராஜர் சிலை! எட்டடி உயரமானது! அந்த சிலையின் மார்பிலுள்ள மச்சமும் முடியும், அக்குளில் உள்ள தேமலும், விரல்களிலுள்ள இரேகையும், இது உண்மையில் நடந்த சம்பவம் என்பதற்கான ஆதாரம் என்று பரவசத்தோடு கூறுவர் அடியவர்கள்.

சிற்பி மறுநாள் அரசியாரிடமும் ஊரவரிடமும் நடந்ததைக் கூற, அவர்கள் யாரும் நம்பாமற் போகவே, அவன் சிற்பத்தின் திருப்பாதத்தை உளியால் வெட்ட அதில் குருதி பீறிட்டு எழுந்ததாகவும், பின்னர் யாவரும் உண்மையை உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது. சிற்பி வெட்டிய தடமும் அந்த சிற்பத்தில் உள்ளதாம்!

இது உண்மையிலேயே நடந்த சம்பவமா, வெறும் கதையா! என்ற ஆராய்ச்சியெல்லாம் நமக்குத் தேவையில்லை! இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றே ஒன்றுதான்!

இறைவனுக்கு உலகமாந்தர் யாவருமே ஒன்றுதான்! எல்லோரும் அவனுக்குச் சமனே! உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகள் அவனிடம் கிடையாது! நாயன்மார் கதைகளிலும் பல இடங்களில் இதை ஈசனே வலியுறுத்தியிருப்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்!

புலையனாகத் திருக்கோலம் பூண்டு, குலப்பெருமையில் மூழ்கிக் கிடந்த மாக்களுக்கு இறைவன் புகட்டிய பாடம் இது! சாதி – குலம் போன்ற குறுகிய வட்டங்களிலிருந்து அகன்று, தூய்மையான முழுமனதுடன் அவனது எல்லாக் குழந்தைகளுக்கும் தொண்டாற்றுவதே நம் உண்மையான சிவபக்திக்கு அடையாளமாகும்!

பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கம் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன்
நக்கன் சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே
-அப்பர் தேவாரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)