வருடம் - ஆண்டு; இவற்றைப் பயன்படுத்தாதீர்!!!

சித்திரையே தமிழர் புத்தாண்டு - பாகம் 02

பண்டிகை என்பதே மகிழ்ச்சிக்காக உருவானது தான்! ஆனால், அதன் நோக்கமே சிதைந்து, இன்று தனிநபர் தாக்குதல் நிகழ்த்தும் – வசவுகளை சர்வசாதாரமாகப் பயன்படுத்தி மற்றவர்களை நோகடிக்கும் நாட்களாக அவை மாறியிருக்கின்றன. எல்லாம் இந்த பாழாய்ப்போன சமூக வலைத்தளங்களும், இணையங்களும் செய்த வேலை!
 
உலகில் மூன்று புத்தாண்டுகள் கொண்டாடும் ஒரே இனம், உலகின் தொன்மையான இனம் என்று தன்னைத் தானே பெருமை பீற்றிக் கொள்ளும் தமிழினம் மட்டுமேதான்! பாரம்பரியமாக வந்த புத்தாண்டொன்று! அதற்கு எதிராக இடையில் தோன்றிய இன்னொன்று! இறுதியாக, தன் இனப்பற்றின்மையை நிரூபிப்பதற்காக, முற்சொன்ன இரண்டையும் விட மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு ஒன்று!

முன்தோன்றிய மூத்தகுடி என்று தற்பெருமை பாடும் இனத்துக்கு இது அவமானமில்லையா? எத்தனை புத்தாண்டு தான் கொண்டாடுவீர்கள்? நமக்கென்று ஒரேயொரு புத்தாண்டு இருப்பதுதானே அழகு!

ஆனாலும் பாருங்கள்! சித்திரை மாதம் வந்தாலே, முட்டாளே! ஆரியன் திணித்த புத்தாண்டைக் கொண்டாடாதே! ஆபாசக் கதையைக் கொண்டாடாதே! தையைக் கொண்டாடி உன் தன்மானத்தைக் காட்டு! என்றெல்லாம் ஒருமையில் திட்டி, தம் “பண்பாட்டை”க் காட்டி வீரமுழக்கம் இடும் தமிழ்ப்பற்றாளர்களை, கடந்த யனவரி முதலாம் தேதியன்று, நானும் பூதக்கண்ணாடி வைத்துத் தேடிக் கொண்டுதான் இருந்தேன்… தேடினேன்.. தேடினேன்… ம்கூம்….! கண்ணிலே மாட்டவில்லை! சிலர் மட்டும் நண்பர்களுக்கு “புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்ச்சியைப் பரிமாறி அடக்கி வாசித்துக் கொண்டிருந்தார்கள்!

ஏனையா! உங்கள் பார்வையில் சித்திரை ஆரியனின் பண்டிகை, யனவரி ஆங்கிலேயனின் பண்டிகை! அதுவும் ஆதிக்கம் தான்! இதுவும் ஆதிக்கம் தான்! ஏனிந்த இரட்டைவேடம்?

ஆரியன் என்றால் மட்டும் கொந்தளிக்கும் நீங்கள், அந்த ஆரியப்பண்டிகையை விட ஆரவாரமாக, ஆங்கிலேயன் பண்டிகையை தமிழர்கள் கொண்டாடுகிறார்களே – ஒரு மூச்சு விட்டீர்களா? அன்று எங்கே போனது உங்கள் தமிழ்ப்பற்று?

இன்றைய தமிழரில், வடமொழிக் காதலர்களை விட, ஆங்கிலக் காமுகர்களே அதிகம் என்பதை அறிந்தும், செத்த பாம்பை அடிப்பதுபோல், சித்திரையைக் கண்டு “ஆரியன், ஆரியன்” என்று மட்டும் அலறிவிட்டு, ஆங்கிலேயன் என்றால் மட்டும் கைகட்டி வாய்பொத்தி நிற்பதுதான் உங்கள் தமிழ் ஆர்வமா? இவ்வளவுதான் உங்கள் தமிழ்ப்பற்றா? ச்சீ! வெட்கக் கேடு!!

இப்படிப் பேசுவதால் எனக்கும் உங்கள் “வழக்கமான முத்திரை குத்தல்”களுக்குத் தயாராவீர்கள் என்பதை அறிவேன்! கொஞ்சம் பொறுங்கள்.. இரண்டு நிமிடம் நேரமெடுத்து நான் என்ன தான் சொல்லவருகிறேன் என்பதை முழுதாகப் படித்துவிடுங்களேன்! பிறகு குத்தவேண்டிய முத்திரையைக் குத்தலாம்… கும்ம வேண்டிய கும்மியை அடிக்கலாம்! :)

சித்திரை பற்றிய எவ்வளவோ புரிதல்களை ஏற்படுத்திய பிறகும், வழக்கமான வாதங்களான அபிதான சிந்தாமணி, மறைமலையடிகளின் 1921 கூட்டம் என்று அரைத்தமாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர்! மிகத்தெளிவான – மிகச் சரியான ஒரு முடிவை, நாளிதழ்கள், வலைத்தளங்கள் வழியாக பலர் சுட்டிக் காட்டியபின்னும், “சிந்திக்காமல் தையை ஏற்றுக்கொண்டுவிட்டோமே!” என்ற தம் இயலாமையை மறைத்து, “ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற கணக்கில் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்னுஞ் சிலர்!

எத்தனை சொல்லியும் புரிந்துகொள்ளாமல் “நாங்கள் தை ஒன்றைத்தான் புத்தாண்டாகத் கொண்டாடித் தீருவோம்!” என்று வீராப்பு பேசும், உங்களிடம் ஒரேயொரு கோரிக்கை…….; மன்னிக்கவும் கோரிக்கை இல்லை, உத்தரவு!

தை ஒன்றில் நீங்கள் தொடங்குவதை “புத்தாண்டு” என்றோ “புதுவருடம்” என்றோ, “ஆண்டுத்தொடக்கம்” என்றோ சொல்லக் கூடாது! அகராதியைப் புரட்டி வேறு ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளுங்கள்!

அப்படி நீங்கள் “ஆண்டு”, “வருடம்” முதலான சொற்களைப் பயன்படுத்தினீர்களென்றால், சத்தியமாக உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவுமே இல்லை! ஏனென்றால் அவை சித்திரை ஆண்டுப் பிறப்பைக் குறிக்கும் சொற்கள்!

என்ன? அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம்! அதுதான் உண்மை!

“மை, மேழம், கொறி, வருடை, கடா, யாடு” இவை ஆட்டின் மறுபெயர்கள். (“காகா” எனக் காகுவது காகம்; “மயோ” என மயவுவது மயில்; அதுபோல், “மேமே” என மேழுவது மேழம்! ஒலிக்குறிப்புகளில் பிறந்த தமிழ்ப் பெயர்கள்! இவை நிச்சயமாக வடசொல் மரூஉ அல்ல!)

எப்படி “யானை” “ஆனை” ஆனதோ, அப்படி, “யாடு”ம் “ஆடு” ஆகிவிட்டது. பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்தவர்களுக்கு பல இடங்களில் ஆடு “யாடு” என்றே சொல்லப்பட்டிருப்பது தெரிந்திருக்கும்.
உ+ம்:“யாடுங் குதிரையும்” (தொல்காப்பியம். பொ: 567)

ஆடுபோன்று தென்படுவதால், மேழ வான்மனைக்கும்(மேட இராசி), மேழ வான்மனையில் பிறக்கும் சித்திரை மாதத்திற்கும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்தினார்கள். பழைய நிகண்டுகளில் மேழ வான்மனையின் ஒத்த கருத்துச் சொற்களாக இந்தப் பெயர்களைக் காணலாம்.

“ஆடு” மாதத்தில் தொடங்குவதால், பன்னிரு மாதங்கள் கொண்ட தொகுதி “ஆட்டை” எனப்பட்டது. “ஆட்டை”யில் மூக்கொலி நுழைந்துதான் “ஆண்டு” என்பது உருவானது என்பர் தமிழறிஞர் இராம.கி.

ஆடு = ஆண்டு ஆனதுபோல், யாடு = யாண்டு ஆனது. இந்த வேர்ச்சொல்லிலிருந்தே “எக்காலத்திலும் – எந்த ஆண்டிலும்” என்பதைக் குறிக்க தமிழில் “யாண்டும்” என்ற சொல் உருவானது. “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு “யாண்டும்” இடும்பை இல!” :)

மன்னர் காலக் கல்வெட்டுக்களில் “ஆண்டு” என்ற பதம் “ஆட்டை”, “யாண்டு”, “ஆண்டு” என்றுதான் குறிப்பிடப்படுகிறது.

“இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை”
– உடையார்குடிக் கல்வெட்டு
“காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டன் முக்குறுணி நெற்பொலிசையாக”
– தஞ்சைக் கல்வெட்டு
“உடையார் ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது” – திருவாரூர்க் கல்வெட்டு

இப்போ ஒத்துக்கொள்கிறீர்களா சித்திரைப் புது “ஆண்டை”?? :)

வருடம் என்பதும் அப்படித் தான்! அது “வர்ஷம்” என்ற சங்கதச் சொல்லின் தமிழாக்கம் என்று தான் பலரும் நம்புகின்றனர். அது தவறு! வருடம் தமிழ்ச் சொல்லே தான்!

முன்பு பார்த்த ஆட்டின் ஒத்தகருத்துச் சொற்களில் ஒன்று வருடை.
“தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையை” – பதிற்றுப்பத்து ஆறாம் பத்து
“வரையாடு வருடைத் தோற்றம் போல” – பட்டினப்பாலை 139

பரிபாடலில் நேரடியாக மேழ வான்மனையே வருடை எனப்படுகிறது.
“வருடையைப் படிமகன் வாய்ப்ப’ – பரிபாடல் 11:5
(வருடை – மேழம்; படிமகன் – செவ்வாய்)

ஆக, “வருடை”யில் பிறப்பது தான் “வருடம்”!

இப்போது சொல்லுங்கள்! “ஆண்டு”த்தொடக்கத்தை – “வருடப்” பிறப்பை சித்திரையில் கொண்டாடப் போகிறீர்களா? இல்லை, புதிதாக ஒரு பெயர் வைத்து, தையில் உங்கள் “அதை”க் கொண்டாடப் போகிறீர்களா?

(எச்சரிக்கை! சித்திரைக்குரிய “ஆண்டு, வருடம்” சொற்களைப் பயன்படுத்தத் தடை! :)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)