சைவத் திருக்கோயில்களும் இறையியலும்

ஆன்மா இலயப்படும் இடம் ஆலயம். கோவான இறைவன் குடியிருக்கும் இல்லம் கோயில். இத்தகைய ஆலயங்கள் வெறுமனே இறைவழிபாட்டுக்கு மட்டும் கடப்பட்டவை அல்ல. மன்னர்கால செப்பேடுகள், சாசனங்கள், வேறு ஆதாரங்கள் என்பன மூலம், ஆலயங்கள், ஆடல், பாடல், ஓவியம் முதலிய கலைகளை வளர்த்த இடங்களாகவும், வேதம், கல்வி பயிற்றுவிக்கப்பட்ட இடங்களாகவும், ஆதரவற்றோர்க்கு அடைக்கல இடங்களாகவும், மருத்துவமனைகளாகவும், அவ்வளவு ஏன், "கலவி"யைக் கற்பிக்கும் இடங்களாகக் கூட விளங்கியமையை அறிகிறோம்.


இத்தகைய ஆலயங்கள், ஆரம்பத்தில் மண், கல் என்பவற்றாலும், பல்லவர்காலத்தில், கற்கோயில்களாகவும், கட்டப்பட்டு, சோழப்பேரரசு காலத்தில், முற்றான வளர்ச்சி கண்டு இன்றைய நிலையை அடைந்தன. இவற்றில் பொதிந்துள்ள ஆன்மிகத் தத்துவத்தையே இன்று பார்க்கப்போகிறோம்.

"காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக" என்றார் அப்பர் பெருமான். "உள்ளம்பெருங்கோயில் ஊனுடம்பாலயம்" என்றார் திருமூலர்.

ஆண்டவனைப் புறத்தே தேடுவதன்று ஆன்மிகம், நமக்குள் தேடுவது தான் உண்மையான ஆன்மிகம். ஆலயங்களின் அமைப்பும் அதைத்தான் கூறுகிறது. ஆலயங்களில் ஆண்டவனைத் தேடிய நாம், நமக்குள் ஆண்டவனைத் தேடும் பக்குவத்தைப் பெறவேண்டும் என்று குறிப்பாலுணர்த்துவதே ஆலயங்களின் அமைப்பு.

மேற்கே தலைவைத்து கிழக்கே கால்நீட்டி மல்லாந்து படுக்கும் ஒரு மனிதனின் அமைப்பே ஆலயமாகும்.



நீண்டுயர்ந்து ஆலயமொன்று உண்டென்று குறிப்பாலுணர்த்துவது தூலலிங்கமாகிய கோபுரம். இது மனித உடலுக்கு ஆதாரமாகிய பாதங்களைக் குறிக்கிறது. நிருத்த மண்டபம், தம்பமண்டபம் வசந்த மண்டபம் போன்றன இரு கால்களையும் குறிக்கின்றன.

படுக்கும் மனிதன் எழுந்து உட்காரும்போது, அவன் முள்ளந்தண்டு எந்நிலையில் காட்சி தருமோ, அதை நிமிர்ந்துநிற்கும் கொடித்தம்பம் குறிக்கிறது. யோகநெறியில் குறிப்பிடப்படும் ஏழு சக்கரங்களுள் ஒன்றும், முள்ளந்தண்டின் அடிப்புறம் உள்ளதாகக் கருதப்படுவதுமான "மூலாதார சக்கரம்", இதனால் குறிப்பிடப்படுகிறது. இங்குதான், நமக்கு ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் குண்டலினி சக்தி உறங்குகிறது. கொடிமரத்தின் கீழுள்ள "மூலாதாரகணபதி", இக்குண்டலினி சக்தியைக் குறிக்கிறார்.

(குண்டலினி விழித்தெழுந்து மூலாதாரத்தைத் தாண்டி, முள்ளந்தண்டு வழியே மேலேறி, உச்சந்தலையிலுள்ள ஏழாவது சக்கரமான சகஸ்ராரத்தை அடைவதே, ஞானமடைந்தநிலை எனக் கொள்ளப்படுகிறது.)

கொடிமரத்தை அடுத்துள்ள பலிபீடம், மூலாதாரத்துக்கு மேலே, பிறப்புறுப்புகளுக்கு நேரேயுள்ள சுவாதிட்டான சக்கரத்தைக் குறிக்கிறது. ஆசையை அடக்குபவர்களுக்கு மட்டுமே, குண்டலினி சக்தி, இதைத் தாண்டி மேலேறிச் செல்லுமாம். ஆலயத்தில் இறைவனைத் தரிசிக்கச்செல்லும் நாம், மானசீகமாக இங்கு நம் ஆசைகளைப் பலியிட்டு இறைவனைக் காண முன்னேறிச் செல்கிறோம்.

பலிபீடத்தை அடுத்து நந்தி இருக்கும். சிவாலயங்களில் இது நந்தியாகவும், அம்மன் ஆலயங்களில் சிங்கமாகவும், பிள்ளையார் ஆலயங்களில் மூடிகமாகவும், முருகன் ஆலயங்களில் மயிலாகவும் இருக்கும், இது கொப்பூழுக்கு நேரேயுள்ள "மணிபூரகம்" எனுஞ் சக்கரத்தைக் குறிக்கிறது. ஏழாவது சக்கரத்தை நோக்கி குண்டலினி சக்தி முன்னேறிச் செல்வதை நந்தி உருவகிக்கிறது.இது ஆசைகளின் இருப்பிடமான பலிபீடத்தை நோக்கியிராது, மூலவரை நோக்கியிருப்பது, இதையே குறிக்கிறது.

மார்பு, மகாமண்டபத்தைக் குறிக்கிறது. இதயத்தை மருவி அமைந்துள்ள நான்காவது சக்கரமான அநாகதம், அம்மன் சன்னதியால் குறிக்கப்படுகிறது. இதயத் துடிப்பு என்று நிற்கிறதோ, அன்றே உயிரும் நிற்கிறது. நம்மை இயக்குவித்துக்கொண்டிருக்கும் இறைவனின் திருவருளான சக்தி, இதயத்துடிப்பு மூலம் இறைவனின் இருப்பை நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறாள்.

மகாமண்டபத்தை அடுத்த அருத்தமண்டபம், தொண்டையிலுள்ள ஐந்தாம் சக்கரமான விசுத்தியைக் குறிக்கிறது. அதை அடுத்துள்ள கருவறை, நம் தலையோட்டைக் குறிக்கிறது. அதன் மத்தியில் மூலவராக அருளும் சிவலிங்கமே, மூளையின் மத்தியிலுள்ள ஆஞ்ஞை சக்கரமாகும். திரையால் மூடப்பட்டு, கருவறை எப்போதும் இருட்டாகவே இருப்பது, மெய்யறிவு பெறாத நாம், எப்போதும் மாயையால் மறைக்கப்பட்டு, இருட்டில் மூழ்கியிருப்பதைக் குறிக்கிறது.

சிவாச்சாரியார் தீபாராதனை மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தியதும், மூலவர் தென்படுவதுபோல், குருவின் திருவருளால், மாயை அகன்றதும், நாம், அங்கு இறைவனின் திருக்காட்சியைக் காணமுடியும்.

கருவறையிலேற்றப்படும் தீபாராதனையோடு ஆலயப் பூசை முடிந்துவிடுவது போல, பக்குவம் பெற்ற பெரும்பாலானவர்கள், இவ்வாறு ஆஞ்ஞையில் இறைவனைத் தரிசிப்பதோடு நின்றுவிடுவர். அதையும் தாண்டி சகஸ்ராரத்தை அடையும் வாய்ப்பு, தகுதி அடைந்த சிலருக்கு மட்டுமே கிட்டும்.

ஆஞ்ஞைக்கும் மேலே உச்சந்தலையிலுள்ள, சகஸ்ராரம், கருவறை விமானத்தைக் குறிக்கிறது. மூலாதாரத்தில் குண்டலினியை எழுப்பி, ஆஞ்ஞா சக்கரத்தில், இறைவனின் உருவத்திருமேனியைத் தரிசிக்கும் நாம், அதைத்தாண்டி, சகஸ்ராரத்தை அடையும்போது, உருவம், குணங்குறிகளைக் கடந்த பரம்பொருளின் சொல்லிலடங்காத இயல்பைத் தரிசிக்கிறோம். இதுவே மெய்ஞ்ஞானம், பேரின்பம் என்றெல்லாம் அருளாளர்களால் வருணிக்கப்படுகிறது. கருவறை விமானத்தைக் கடந்து எங்கும் பரந்துவிளங்கும் ஆகாயம்போல், பரம்பொருள், நாமாகவும், நமக்கு வேறாகவும், நம் உள்ளும், கடந்தும், எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற இந்த ஞானநிலையை அடைந்தவர்கள், "தெள்ளத்தெளிந்து சீவன் சிவலிங்கமாக" அமர்ந்திருப்பர்.

கேள்விஞானமன்றி மௌனம் மூலமே மெய்யறிவு கிடைக்குமென்பதை, இடது வலது செவிகளின் தானங்களில் அமைந்துவிளங்கும் தென்முகக்கடவுள், சண்டேசுரர் ஆகியோர் குறிக்கின்றனர். பிரமோற்சவத்தில் நிகழும் கொடியேற்றம், முள்ளந்தண்டு வ்ழியே குண்டலினி ஏறுவதையும், பிரமோற்சவம், இறைவனின் பஞ்சகிருத்தியங்களையும் குறிக்கின்றது. இப்படி, ஆலயத்தில் நிகழும் கிரியைகள் முதற்கொண்டு எல்லாவற்றுக்குமே விளக்கமுண்டு. தத்துவப்பொருளுண்டு. அவற்றை ஆற அமரக் கேட்டு சிந்திக்கும் தகுதியோ பக்குவமோ, எல்லாருக்கும் கிடையாது என்பதாலேயே, பெரியவர்களும், முன்னோர்களும், இவற்றை வெளிப்படையாக சொல்லிச் செல்லவில்லை.

இதைப் புரிந்துகொள்ளாத சிலர், இவை எல்லாமே பொருளற்றவை, முட்டாள்த்தனமான மூடநம்பிக்கைகள் என்று கருதி அறியாமையில் மூழ்கிக் கிடப்பதுடன், அரைகுறையாகப் புரிந்தவர்களையும் மூளைச்சலவை செய்து, குழப்பிவிடுகின்றனர்.

இதெல்லாம் தத்துவார்த்தமான உண்மைகள் என்பதை சந்தேகமின்றி நாம் புரிந்துகொள்வதுடன், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் இத்தகையவர்களும் மெய்யுணர்ந்து நல்வழிப்படவேண்டுமென்றும் எம்பிரானைத் தியானிப்போமாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)