அறிவியலும் சித்திரையும்


சித்திரையே தமிழர் புத்தாண்டு - பாகம் 03

இந்தப் பாகத்தில் வருவது சற்று ஆழமான அறிவியல் விடயங்கள். தமிழ் நடைக்கேற்ப வழங்கியுள்ளதால் சிலருக்குக் கடினமாக இருக்கலாம். ஒன்றுக்கு இரண்டு தடவை படியுங்கள், இலகுவாகப் புரிந்துவிடும்.

இன்று உலகில் வழக்கிலிருப்பவை இருவகை நாட்காட்டிகள்
1. கதிர்வழி நாட்காட்டி (Solar Calendar)
2. மதிவழி நாட்காட்டி (Lunar Calendar)

கதிர்வழி என்பது சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி. மதிவழி நாட்காட்டிகள் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை.

இந்தியாவைப் பொறுத்தவரை, இன்றைக்கு தமிழகம், மலையாளம், வங்காளம் போன்ற இடங்களில் கதிர்வழியும், இந்தியாவின் ஏனைய பாகங்களில் மதிவழியும் பெருவழக்காக இருக்கின்றன.

பூரணை அன்று சந்திரன் எந்த நாண்மீனொடு (நட்சத்திரத்தோடு) இருக்கிறதோ, அந்த மாதத்தை அந்த நாண்மீனின் பெயரில் அழைப்பது மதிவழிமுறை. சைத்ரம், வைசாகம் முதலானவை மதிவழி மாதப்பெயர்கள்.

தமிழ் நாட்காட்டியானது ஒரு கதிர்வழி நாட்காட்டியே எனினும், அது மதிவழியையும் பயன்படுத்தியிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. தமிழில் நாம் இன்று பயன்படுத்தும் மாதப்பெயர்கள், சைத்ரம், வைசாகி முதலான மதிவழி மாதங்களை ஒத்து, சித்திரை, வைகாசி முதலாக பெயரிடப்பட்டிருப்பதே இதற்கு மிகச் சிறந்த ஆதாரமாகும்.

தவிர மாதம்எனும் பெயரே மதியிலிருந்து வந்ததுதான். திங்கள்என்ற தமிழ்ச்சொல்லுக்கு சந்திரன் என்ற பொருளும் மாதம் என்ற பொருளும் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கதிர்வழியைப் பொறுத்தவரை, பூமியிலிருந்து பார்க்கும்போது, குறித்த வான்மனையில்(இராசிமண்டலத்தில்) சூரியன் இருப்பதுபோல் தென்படும் நாட்கள், கதிர்வழி மாதங்களாகக் கொள்ளப்படுகின்றன.

இம்முறையில், அந்த மாதத்தை, அந்த வான்மனையின் பெயரிலேயே அழைப்பது வழக்கம்.

கதிர்வழி மாதங்கள் மேழம், விடை, ஆடவம்என வான்மனையின் பெயரில் செல்லும். கதிர்வழி நாட்காட்டியைப் பயன்படுத்தும் கேரளத்தில் இன்றும் மேஷம், ரிஷபம் போன்ற பெயர்களே வழக்கத்திலிருக்கின்றன.

தமிழகத்தில் இன்று கதிர்வழி நாட்காட்டியே பயன்படுகின்ற போதும், சிலநூறு ஆண்டுகளுக்கு முன்வரை இங்கு இருவழியிலான பெயர்களும் வழக்கத்திலிருந்திருக்கின்றன. பழைய கல்வெட்டுக்களில், மாதமொன்றைக் குறிப்பிடும் போது இரண்டு பெயரையுமே குறிப்பிட்டிருக்கிறார்கள். மாதமானது, மதிவழியில், “திங்கள்என்றும், கதிர்வழியில் ஞாயிறுஎன்றும் பொறிக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக இன்றைய மார்கழி மாதத்தைக் குறிப்பிடும்போது சிலை ஞாயிறு மார்கழித் திங்கள்என்றும், பங்குனி மாதத்தைக் குறிப்பிடும்போது மீன ஞாயிறு பங்குனித் திங்கள்என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

தமிழ் நாட்காட்டி கதிர்வழி நாட்காட்டியாக இருக்கையில், மாதங்களைப் பழைய மதிவழியில் சொல்வது தவறு என்பதாலேயே, “மேழம், விடைமுதலான தமிழ் வான்மனைப் பெயர்கள் தேவநேயப்பாவாணர், பாவலரேறு போன்றோரால் மீளறிமுகம் செய்யப்பட்டன.

இன்றைக்கும் சிலர் அப்படிப் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. நாம் மேலே கண்டபடி, அப்படி கதிர்வழியில் பயன்படுத்துவோர், அம்மாதங்களை ஞாயிறு என்று குறிப்பிடுவதே சரியானது.

தை ஒன்றில் சுறவத் திங்கள் பிறக்கின்றது.
தை ஒன்றில் சுறவ ஞாயிறு பிறக்கின்றது.” √
= கதிர்வழி
சுறவம் ஒன்றில் தைத் திங்கள் பிறக்கின்றது.” √
= மதிவழி



               
இந்தக் கதிர்வழி நாட்காட்டியில் நாம் முக்கியமாகக் காணவேண்டியவை நான்கு நாட்கள்.

அந்நான்கு நாட்கள் ,

1. பனி உச்சநாள் (winter solstice) = சூரியனைப் புவி சுற்றி வரும் ஒழுக்கில், சூரியனிலிருந்து, புவி அதிகம் விலகிப்போவதால். இந்நாளில் பனி உச்சமாக இருக்கும். தற்காலத்தில், இது டிசம்பர் 21/22 இல் நடக்கிறது.

2. கோடை உச்சநாள் (summer solstice) = இந்த நாளில் சூரியனைப் புவி சுற்றி வரும் ஒழுக்கில், சூரியனைப் புவி அதிகம் நெருங்கி வருகிறது. இதனால் இந்நாளில் அதிகபட்ச வெப்பம் புவிக்குக் கிடைக்கும். தற்காலத்தில் இந்நாள் யூன் 21/22 அன்று வருகிறது.

3. “வேனில் சமநாள்” (vernal equinox) = வேனிற் காலத்தில் இரவும் பகலும் சமனாக வரும் நாள். இந்நாட்களில், மார்ச்சு 21/22இல் வேனில் சமநாள் வருகிறது.

4. கூதிர் சமநாள் (autumnal equinox) = கூதிர் காலத்தில் இரவும் பகலும் சமனாக வரும் நாள். தற்போது செப்டெம்பர் 22/23 கூதிர் சமநாள் ஆகும்.

(மேலதிக விளக்கங்களுக்கு இந்த ஆங்கிலக்காணொளியைப் பாருங்கள்..)

காட்சி அளவையின் அடிப்படையில் அக்காலத் தமிழர், பூமி நிலையாக இருப்பதாகவும், சூரியன், சந்திரன் போன்றவை அதைச் சுற்றி வருவதாகவும் நம்பினர்.

ஆனாலும், ஆண்டின் இரு நாட்களில், இரவும் பகலும் சமனாக வருகிறது என்பதையும், இரு நாட்களில் பனியும் குளிரும் அதிகமாக வரும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனரா என்ற கேள்வி நம்முன் பெரிதாக எழுந்துநிற்கிறது!

ஆம்! மேற்குறிப்பிட்ட நான்கு நாட்களில் தான் பன்னிரெண்டு தமிழ் மாதங்களில், நான்கு தமிழ் மாதங்கள் பிறக்கின்றன! சித்திரை, ஆடி, ஐப்பசி, தை என்பவை அவை!

முறையே மேழம்(மேடம்), கடகம், துலை(துலாம்), சுறவம்(மகரம்) முதலான வான்மனைகளினூடு சூரியன் நகர்வது, இந்த நான்கு மாதங்களின் முதல்நாட்களில்தான் தென்படுகின்றது.

சற்று ஊன்றிப் படிப்பவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு ஐயம் எழலாம். சித்திரை முதலான நான்கு மாதங்களும் இன்று பிறப்பது, முறையே ஏப்பிரல் 14, யூலை 14, அக்டோபர் 14, யனவரி 14 ஆகிய நாட்களில்! ஆனால், கோடை உச்சநாள் முதலான நான்கு நாட்கள் வருவதாகக் குறிப்பிடப்படும் யூன் 21/22 முதலான எந்த நாளும் இவற்றில் இல்லை! பின்பு அந்த நான்கு நாட்களும் தான், நான்கு மாதப்பிறப்பு நாட்கள் என்பது எப்படி?

நியாயமான ஐயம் தான்! இங்கு தான் நமக்குக் கை கொடுக்கிறது வானியல் அறிவு!

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்த இரண்டும் தவிர, பூமிக்கு இன்னொரு சுழற்சியும் உண்டு. அதன் பெயர் கிறுவாட்டம்” (gyration)!

சின்னவயதில் பம்பரம் சுற்றி விளையாடியிருப்பீர்கள் அல்லவா? பூமி, பம்பரம் போலத்தான் சுற்றுகிறது. ஆனால்,பூமி நிலைக்குத்துடன் 23.5’ பாகை சாய்வாக இருப்பதால் அதன் சுற்றுகை எப்போதும் மாறாமல் இருப்பதில்லை. மாறிக்கொண்டே செல்கிறது.

இன்னுமொரு விதத்தில் சொல்லப்போனால், ஒவ்வொரு ஆண்டிலும் நாம் காணும் ஒவ்வொரு நாட்களும் கடந்த ஆண்டுபோல் இருப்பதில்லை! கடந்தவருடம் நாம் கண்ட யனவரி 11, இந்த ஆண்டு நாம் காணப்போகும் யனவரி 11 போல் நிச்சயம் இருக்காது! இதற்குக் காரணம், மேற்சொன்ன கிறுவாட்டம்”!

கடந்த ஆண்டு யனவரி 11 அன்று, சூரியனிலிருந்து புவி எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் நின்றதோ, அந்த இடத்தை, இந்த ஆண்டு, சற்று முன்னதாகவே அடைந்துவிடுகிறது பூமி.

மேலைநாட்டில் கதிர்வழியைக் கணிக்கப் பயன்படும் அயனமண்டல முறைக்கும் (Tropical Method) இந்தியத் துணைக்கண்டமெங்கும் கதிர்வழியைக் கணிக்கப் பயன்படும் உடுவழி முறைக்கும் (Sideral Method) இடையேயுள்ள பிரதான வேறுபாடே இது தான். நமது முறையில், உடுக்கள் நிலையானவையாகவும், மேலைத்தேய முறையில் உடுக்களும் அசைவுள்ளவையாகவும் கருதப்படுவதால், இந்தத் தோற்ற அசைவை, அவர்கள் முக்கியமாகக் கொள்ள, நமக்கோ அவை நிலையான நாட்களாகவே நின்றுவிட்டன. இதனால்,  அயனமண்டல முறையில், புவியின் நாட்கள் முன்னோக்கி நகர்ந்து செல்ல, நமது முறையில் அவை மாற்றமின்றியே இன்றும் தொடர்கின்றன. 

ஆராய்ச்சிக்காக, அண்ணளவாக 2000 ஆண்டுகள் என்ற கால அளவை எடுத்துக்கொண்ட  அயனமண்டல முறை ஆராய்ச்சியாளர்கள், இக்கால இடைவேளையில், பூமியானது, சுமார் 21 நாட்கள் முன்னோக்கிச் சென்றுவிட்டதாகக் கணித்திருக்கிறார்கள்.
இப்படிப் பார்த்தோமானால்,  , இன்று மார்ச்சு 21/ 22இல் நிகழும் வேனில் சமநாள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ஏப்பிரல் 13/14 இல் நிகழ்ந்திருக்கும்! அதேபோல், செப்டம்பர் 22/23இல் இன்று நிகழும் கூதிர் சமநாள் என்றோ ஒருநாள் அக்டோபர் 14/15இல் நிகழ்ந்திருக்கும்.

அதேபோல், இன்று யூன் 21/22இல் நிகழும் கோடை உச்சம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூலை 13/14இலும், இன்று டிசம்பர் 21/22இல் நிகழும் பனி உச்சம், அந்த நாளில் யனவரி 13/14இலும் இடம்பெற்றிருக்கும்!

ஆக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்,
சித்திரை ஒன்று = வேனில் சமநாள்
ஆடி ஒன்று = கோடை உச்சநாள்
ஐப்பசி ஒன்று = கூதிர் சமநாள்
தை ஒன்று = பனி உச்சநாள்

தமிழ் நாட்காட்டி இன்றைவரை மாற்றமின்றி பழைய கணிப்புகளையே கைக்கொள்கின்றது. எனவே, அதன் கணிப்புப்படி, மேழம் முதலான வான்மனைகளூடு சூரியன் நகர்வது இன்றும் ஏப்பிரல் 13/.14 முதலான நாட்களிலேயே நடக்கின்றது. மேலைத்தேய வானியல் படி, அந்நாள் மார்ச்சிற்கு(பங்குனி) நகர்ந்தது பற்றி அது கவலைப்படுவதில்லை.

ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, சமநாள் உச்சநாள் தொடர்பான அறிவியல், அறிந்தோ அறியாமலோ நம் முன்னோர்கள் இந்த நான்கு நாட்களுக்கும் அந்த நான்கு மாதங்களின் பிறப்பிற்கும் பெரும் முக்கியம் கொடுத்திருக்கிறார்கள். அந்த நான்கு மாதங்களின் பிறப்பையும் விழாவெடுத்து வரவேற்றிருக்கிறார்கள். இந்த இரண்டாயிரம் ஆண்டுகால இடைவெளியில், அவற்றுக்கு விழாவெடுக்கும் மரபு, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய நான்கு மாதப்பிறப்புகளையும் நான்கு பண்டிகைகளாகவே மாற்றியிருக்கின்றது!

சரி, சித்திரை ஒன்று புத்தாண்டாகிவிட்டது. தை ஒன்று, தைப்பொங்கலாகிவிட்டது. மற்ற இரண்டுக்கும் என்ன நேர்ந்தது?

ஒன்றுமே நேரவில்லை! இன்றும் நம் பக்கத்தில்தான் வாழ்கின்றன! :)

ஆடி மாத முதலாம் தேதியை - ஆடிப்பிறப்பை பெருவிழாவாகக் கொண்டாடுவது சுமார் 20, 30 ஆண்டுகளுக்கு முன்வரை ஈழத்தில் பெருவழக்கு! இன்றும் அது தொடர்கின்றதெனினும் மிக மிக அருகிவிட்டது.

ஐப்பசிப் பிறப்பும் செத்துவிடவில்லை. அது துலை விழு (துலா விஷூ)வாக இன்றும் மலையாளத்தில் வாழ்ந்துகொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!

முன்னாள் தமிழர்களான மலையாளிகளது புத்தாண்டு மேழ விழு(மேஷ விஷூ)வான சித்திரையிலேயே வந்தாலும், அதைவிடச் சிறப்பாக துலை விழுவைக் கொண்டாடுவது சேரநாட்டவர் வழக்கம்.

ஆகவே ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்! சித்திரை வருடப்பிறப்பு உட்பட ஆடி, ஐப்பசி, தைப் பிறப்புக்கள் தமிழர் நம் பாரம்பரிய பண்டிகை நாட்கள் என அடித்துக்கூறலாம். பலரும் கூறுவதுபோல், நிச்சயமாக சித்திரைப்பிறப்பு ஆரியன் திணித்ததல்ல என்பதற்கு இவை யாவும் போதுமான சான்றுகள்!

சரி, நீ சொல்வதன்படி பார்த்தாலே, தையும் பண்டைய தமிழன் பண்டிகை தானே - அதை நாங்கள் வருடப்பிறப்பாகக் கொண்டாடினால் என்ன கெட்டுப் போய்விடும்? என்று சிலர் கேட்கலாம்.

ஏற்கனவே சித்திரையை ஆண்டுப்பிறப்பாகக் கொண்டாடும்போது, புதிதாக ஒரு "ஆண்டுத் தொடக்கத்திற்கு"(?!) இப்போ என்ன தேவை என்றுதான் நாம் கேட்கிறோம்!

சித்திரையை - மேழ மாதத்தை முதல் மாதமாக ஏற்றுக்கொண்ட அதே முன்னோர்கள் தான் சுறவ மாதப் பிறப்பிற்கு தைப்பொங்கல் என்று பெயரீந்து அதையும் கொண்டாடி வந்திருக்கிறார்களே!

ஏதோ, பல்லாண்டுகளாக தை முதலாம் தேதியை துக்கநாளாக அனுட்டிப்பது போலல்லவா இந்தக் கேள்வி இருக்கிறது?

போகட்டும்! இதற்கு மேலும் உங்களிடம் வாதிப்பதில் எந்தவிதப் பொருளும் இல்லை! எத்தனை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாத உங்கள் வறட்டுக் கௌரவம், இந்தக் கட்டுரையிலும், ஏதாவது இண்டு இடுக்கில் பிழையேதும் இருக்காதா என்று தேடுமே தவிர, ஏதும் உண்மை இருக்கலாமோ என்று மறந்தும் தேடாது!

சொந்தப் பண்டிகையையே ஆரியனுடையது என்று அயலவனுக்குத் தாரைவார்க்கும் நீங்கள், “தன்மானத் தமிழன்என்ற சொல்லை, இனி மறந்தும் சொல்லாதீர்கள்! >:(

இனி, சித்திரை ஆதரவாளரிடம் ஒருசில வார்த்தைகள்:
பொ.பி 2ஆம் நூற்றாண்டே (கி.பி 2 ஆம் நூற்றாண்டு) திருவள்ளுவர் காலமெனவும், மறைமலையடிகள் பொ.மு 31 எனக் கணித்தது தவறென்றும் சிலர் வாதிப்பார்கள். காலக் கணிப்பு எப்படியோ போகட்டும்! ஆனால், நமக்கு காலத்தொடர் ஒன்று இருக்கவேண்டியது அவசியம்! தவறு இருப்பினும் இல்லாவிடினும், திருவள்ளுவராண்டு மேழ ஞாயிறு - சித்திரைத் திங்கள் முதலாம் தேதி பிறப்பதாக எடுத்துக் கொண்டு பயன்பாட்டில் கொணருவோம்.

தமிழருக்கு தனியே ஆண்டுத்தொடர் இல்லை என்பதாலேயே தைப்புத்தாண்டைக் கொணர்ந்தோம் என்போரின் வாதம் இதனால் ஓரளவுக்கேனும் நீர்த்துப்போகட்டும்! பயன்பாட்டில் இது கூடும்போது, அறிஞர் துணை கொண்டு காலத்தைச் செப்பஞ்செய்துகொள்ளலாம்.

மேலும், தமிழ் வருடங்களுக்கு வடமொழிப் பெயர் இருப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல! தமிழ்ப்படுத்திய அறுபதாண்டுப் பட்டியல் ஒன்று இணையத்தில் உலவுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

அதை ஓரளவுக்கேனும் பயன்பாட்டில் விடுவது வரவேற்கத்தக்கது! சமயம் சார்ந்த நடைமுறைகளில் வேண்டுமானால், வடமொழிப்பெயர்கள் வழக்கிலிருந்துவிட்டுப் போகட்டும். எனினும் அழைப்பிதழ்களில், அன்றாடத் தேவைகளில் தமிழ்ப் பெயர்களையே பயன்படுத்த வேண்டியது நம் கடமை!

இவற்றின் பெயர்கள் முழுக்க முழுக்க வடமொழியே என்பதால், இவற்றைத் தமிழ் ஆண்டுகள் என்று சொல்லக்கூடாது என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால், இப்படிக் கூறுபவர்கள், தமிழ்நாடு தவிர்ந்த இந்தியாவின் ஏனைய பாகங்களிலோ, வேறு இந்து நாட்காட்டிகளிலோ, இந்த அறுபது ஆண்டுப் பெயர் வழக்கம் பயன்படுத்தப்படுவதே இல்லை என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

கூத்தும் பண்ணிசையும் தமிழகத்தில் வளர்ந்த கலைகள். இன்றைக்கு வடமொழியாலும் ஏனைய தமிழிய மொழிகளாலும் அவை உள்வாங்கப்பட்டு, பரத நாட்டியமென்றும் கருநாடக சங்கீதமென்றும் முற்றாக உருமாறிவிட்டன. அதற்காக, அவை தமிழர் கலைகள் இல்லை என்று வாதாட முடியுமா?

நம்மில் பலரது பெயர், வடநாட்டுச் சாயலில் இருப்பதால் நாம் வடநாட்டார் ஆகிவிடுவோமா? ஆங்கிலம் பேசினால் நான் வெள்ளைக்காரனா? மேற்சொன்னோரது வாதமும் அப்படித்தான் இருக்கிறது. இனத்தைக் காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு, நம் இனம் மட்டுமே பயன்படுத்திவரும் ஒரு காலத்தொடரை ஏனையா எல்லோருக்கும் விட்டுக்கொடுக்கிறீர்கள்?

60 ஆண்டுப் பெயர்கள் நமது சிறப்புச் சொத்து! அபிதான சிந்தாமணிக்கும் இறைமறுப்பர்க்கும் பரிந்துகொண்டு அவற்றை ஒழிக்கவேண்டியதில்லை! பலராலும் மறுப்பதுபோலன்றி, அவற்றாலும் காலம்காட்ட இயலும்.
எப்படி?

அறுபது ஆண்டுவட்டத்தில், இப்போது 26ஆவது நந்தன (தமிழில் நற்குழவி ஆண்டு) ஆண்டைக் கடந்துகொண்டிருக்கிறோம்.
பிறக்க இருப்பது, திருவள்ளுவராண்டு 2044!

எனவே, வட்டத்திற்கு அறுபது என,
2044/60 = 34 சொச்சம் கிடைக்கும்.

இதில் 33 ஆண்டு வட்டம் முடிந்திருக்கும்.
எனவே பிறக்க இருக்கும் விசய வருடம், தமிழில் "34ஆம் உயர்வாகை ஆண்டு!

சமய விடயங்களில் கலியுகத்தையும், இப்படி இத்தனையாம் ஆண்டு என்று குறிப்பிட்டால் ஆண்டுவட்டங்களாலும் காலம் காட்டமுடியும்!

அப்புறமென்ன, இனி வாழ்த்துச் சொல்வதென்றால் மட்டும் கொஞ்சம் நீநீநீ.ட்டி முழக்கிச் சொல்லவேண்டியிருக்கும் என்பது தவிர, குறையொன்றும் இல்லை!

உங்கள் அனைவருக்கும் சுறவ ஞாயிறு - தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

அப்படியே,
உங்களுக்கு முன்கூட்டிய மேழ ஞாயிறு சித்திரைத் திங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

34ஆம் உயர்வாகை ஆண்டு நல்வாழ்த்துக்கள்!

0௪௪ஆம் (2044ஆம்) திருவள்ளுவராண்டு உங்கள் வாழ்வுக்கு எல்லா வளங்களையும் கொண்டுவரட்டும்!


உஸ்ஸ்.. அப்பாடா….!!! :)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 01)