தமிழரின் விளக்கொளி விழா (பாகம் 02)
போன தடவை தீபாவளி பற்றிப் பார்த்த உங்களுக்கு, அதற்கும் முன்பிருந்தே தமிழர் மத்தியில் ஒரு விழா புகழ்பெற்று விளங்கியிருந்தது என்றும், தற்போதும் அது கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லியிருந்தோம். சித்திரைப்புத்தாண்டு, தைப்பொங்கல் பற்றிய குறிப்புகள் கூட திருத்தமாகச் சொல்லப்படாத சங்க இலக்கியங்களில், இந்த விழா சொல்லப்பட்டிருக்கின்றது என்பதும், தமிழர் மத்தியில் நீண்ட நாட்கள் கொண்டாடப்படுகின்ற ஒரேயொரு விழா இது மட்டுமே என்றும் சொன்னால், அது பெருமையாகத் தான் இருக்கும். அது வேறொன்றுமில்லை. அந்தத் தமிழரின் திருநாளை நீங்களும் கூடிய விரைவில் கொண்டாடத் தான் போகிறீர்கள். ஆம். அடுத்த கிழமை வரப்போகின்ற கார்த்திகை விளக்கீடே தான். கார்த்திகை மாதத்தில் பூரணை வருகின்ற நாள், அல்லது அதற்கு முன் பின்னான நாள், கார்த்திகை நட்சத்திரமாகவே இருந்து வருகிறது. அதனால் தான் இந்த மாதத்துக்கே கார்த்திகை என்று பெயர். இந்தக் கார்த்திகை கார்த்திகையில் தான் விளக்கேற்றி வழிபாடுகளை நிகழ்த்துகிறோம். வீட்டுச்சுவர், மதில், திண்ணை என்பவற்றில் அகல் விளக்கேற்றியும், வீட்டு வாசல்கள், ஆலய முன்றல்களில் சொக்கப்பனை எரித்தும், வீட்டு வள