கதிர்காமப் பெருமாளே!
கதிர்காமம் கட்டுரைத் தொடர் 01 வைகாசி , ஆனி மாதங்கள் வரை “ சாப்பிட்டையா ?” “ குளிச்சியா ?” என்பது போல எப்போதாவது சந்தித்துக்கொள்ளும் போது , கிழக்கிலங்கைத் தமிழ்க் கிராமங்களில் சாதாரணமாகக் கேட்கப்படும் இரு கேள்விகள் இருக்கின்றன . “ எப்பயாம் சடங்கு தொடங்குது ?”, “ எப்பயாம் கதிராமக் கொடியேத்தம் ? நீ நடக்கிறதா ?” முன்னையது கண்ணகி அம்மனோடு தொடர்பு கொண்டது . பின்னையது எதனோடு தொடர்புடையது என்று சொல்லத்தேவையில்லை . கதிர்காமக் கந்தன் ஆலயம் கதிர்காமத்துக்கும் கிழக்கிலங்கைக்கும் உள்ள உறவு எந்த விதத்திலும் மறைக்க முடியாதது . அங்குள்ள பெரும்பாலான புகழ்பெற்ற கோவில்களுக்கும் , அவற்றைச் சுற்றி உருவான ஊர்களுக்கும் காரணமாக இருந்தவர்கள் கதிர்காமப் பாதயாத்திரிகர்கள் தான் . நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலரும் கதிர்காமம் வருகை தந்தாலும் அங்கு செல்லும் யாத்திரிகர்களில் எண்ணிக்கையில் முறியடிக்க முடியாதவர்கள் , கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர்களே . “ கதிர்காமம் நடந்து போதல் ” என்பதை , வருடத்துக்கொருமுறை தவறாமல் செய்யவேண்டிய காரியம் போல நியதியாக வைத்திருப்பவர்களை இங்கே காணலாம் . குறி...